தமிழகத்தின் ‘நாஸ்ட்ரடாம்ஸ்’ நெல்லை வசந்தன்!

பி.ராஜேந்திரன்

இப்படியும் ஒரு ஜோதிடர் இருக்க முடியுமா? என்று வியக்கும்படி மனித நேயத்துடன் வாழ்ந்தவர் நெல்லை வசந்தன். தெய்வீகத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல், ஜோதிட அறிவை பணம் பண்ணும் கருவியாக எண்ணாமல், மற்றவர்கள் பலன் பெற உபயோகித்தவர்!

உலக அளவில் ஜோதிடத்தின் அடையாளமாக கருதப்படுபவர் பிரான்ஸ் நாட்டில் பதினாறாம் நூற்றாண்டில் பிறந்த நாஸ்டர்டாம்ஸ்! அவரின் கணிப்புப்படியே உலகில்  பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன என இன்றும் நினைவு கூறப்படுகிறார்.

அதே போல, நாம் வாழும் இந்த காலத்தில் அப்படிபட்ட ஒரு மிகப்பெரிய கணியர், நமது தமிழகத்தில் வாழ்ந்துள்ளார் என்றால், அவர் ஜோதிட ஞானி நெல்லை வசந்தன் என்றால், அது நான் பார்த்த வகையில் நெல்லை வசந்தன் தான்!

தம்மிடம் ஜோதிடம் பார்க்க வரும் யாரிடமும், இவ்வளவு பணம் வேண்டும் என்று அவர் ஒருபோதும் கேட்பதில்லை. அவர்கள் ஒரு ரூபாய் கொடுத்தாலும் சரி, ஒரு லட்ச ரூபாய் கொடுத்தாலும் சரி. அதேபோல், பலருக்கு தன்னுடைய சொந்த பணத்தை அனுப்புவதும் உண்டு. இதை எல்லாம் நானே நேரடியாக பார்த்திருக்கிறேன்.

அதே போல், இத்தனை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் என்று யாருக்கும் கொடுப்பதில்லை. அவர் அலுவலகத்தில் இருக்கும்போது, யார் வந்தாலும் பார்த்து பலன் சொல்லுவார்.

தெய்வங்களை விட கிரகங்களுக்கு அதிக வலிமை உண்டு என்பதே அவரது நம்பிக்கை. அதனால், எந்த கால கட்டத்தில் எந்த கோயிலுக்கு போக வேண்டுமோ, அந்த நேரத்தில் அந்த கோயிலுக்கு சென்றால் மட்டும் போதும். அது தெரியவில்லை என்றால் போகாமல் இருப்பதே நல்லது என்றும் சொல்வார். பல நேரங்களில் அவர் ஆன்மீகவாதியா அல்லது நாத்திகரா என்று கூட யோசிக்க தோன்றும்.

நாஸ்ட்ரடாம்ஸ்

முக்கிய பிரமுகர்கள்

தேசிய கட்சிகளின் தேசியத் தலைவர்கள், திராவிட கட்சிகளின் தலைமைகள், இன்னும் அமெரிக்க குடியரசுக் கட்சி அதிபர் என அரசியல் தளத்தில் உள்ள சகலரும் அவரிடம் ஜாதகம் அனுப்பி பலன் கேட்டுள்ளார்கள்! திரையுலகை பொறுத்த வரை இசை ஞானி இளையராஜா, இயக்குனர் விசு,எஸ்.வி.சேகர் தொடங்கி இந்த நாள் விஜய் சேதுபதி, நடிகை சமந்தா வரை முன்னாள் – இந்நாள் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் பலரும் இவரது வாடிக்கையாளர்கள். இதையெல்லாம் அவரோடு நெருக்கமாக இருந்ததால் மட்டுமே நான் தெரிந்து கொண்டேன். மற்றபடி இப்படி முக்கியஸ்தர்கள் தன் வாடிக்கையாளர்களாக இருப்பது குறித்து அவர் பெருமைபடுவதோ, தம்பட்டமடிப்பதோ இல்லை.

ஜோதிடம் – மனிதன் – உலகம்

பனிரெண்டு ராசிகள், ஒன்பது கிரகங்கள், இருபத்தேழு நட்சத்திரங்கள். உலகில் உள்ள சுமார்  750 கோடி மக்களும் இதற்குள் அடக்கம். ஆனால், கால, தேச, வர்த்தமானம் என்ற வேறுபாடுகளுக்கு ஏற்றார் போல, அலசி ஆராய்ந்து பலன் சொல்வதே ஒரு ஜோதிடனின் திறமை.

இதை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பலன் சொல்லலாம். ஒரு நாட்டின் எதிர்காலம் குறித்தும் பலன் சொல்லலாம்.

நாஸ்டர்டாம்ஸ் உலகத்திற்கு பலன் சொன்னார். நெல்லை வசந்தன் தனி மனிதர்களுக்கும், சொன்னார், நாடுகளுக்கும் சொன்னார்.

நெல்லை வசந்தன் சொன்னது எல்லாம் பலித்தன. அவரோடு பழகியவர்கள்,  பயணித்தவர்கள், ஏதாவது ஒரு சில சந்தர்ப்பங்களில் சந்தித்தவர்கள் என அனைவருக்கும் இந்த உண்மை விளங்கும்.

அதற்கு முன், நெல்லை வசந்தன் யார்?. அவர் எப்படி ஜோதிடத்திற்குள் நுழைந்தார் என்பது பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நெல்லை வசந்தன் யார்?

 

பொதுவுடமை கட்சியின் கோட்டை என்று சொல்லப்படும் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி என்ற ஊரில் 15-10-1954 ம் ஆண்டு நெல்லை வசந்தன் பிறந்தார்.

தந்தையார் பெயர் கந்தசாமி, தாயார் ஆவுடையமாள். மனைவி மீனாட்சி. மகள் சந்திரகாந்தாவுக்கு திருமணமாகிவிட்டது. மகன் மாருதி ராஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திரைப்பட துறையில் இருக்கிறார்.

நெல்லை வசந்தன் சிறு வயதிலேயே பொதுவுடமை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அதற்காக, ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றை எதிர் நிலையில் விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கில், அது தொடர்பான நூல்களை எல்லாம் தேடிப் படிக்க ஆரம்பித்தார்.

அதில் அவருக்கு கிடைத்த ஞானமே, அவர் ஜோதிடத் துறையில் மிகப்பெரிய சாதனையாளராக ஜொலிக்க வழிவகுத்தது. அதற்காக, அவர் பொதுவுடமை கொள்கைகளுக்கு எதிரான பாதையில் திரும்பவில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில், இறுதிவரை அவர் ஒரு பொதுவுடமைவாதியாகவே சுயநலமற்று வாழ்ந்தார்.

வசதியானவர்கள், ஏழைகள், உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற அணுகுமுறையை ஒருபோதும் அவரிடம் காண முடியாது. அடுத்தவரின் மனம் நோகும் அளவுக்கு, ஒரு வார்த்தையை கூட உதிர்க்க மாட்டார். இந்த குணாதிசயங்கள், அவரின் மறைவு வரை தொடர்ந்தது!

ஜோதிடத்தில் அவர் செய்த சாதனைகள் என்று ஒரு நீண்ட பட்டியலே கொடுக்க முடியும். ஆனாலும், ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

 செலவில்லா பரிகாரங்கள்

ஏழை எளியவர்கள் எந்தவித சிக்கலும் இன்றி, பரிகாரத்தை செய்து கொள்ளும் வகையில், அவரவர் ஜாதகத்திற்கும், கால நேரத்திற்கும் (கோச்சாரம்) ஏற்ப, ஒவ்வொரு நிறத்திலும் உள்ள ரிப்பன்களை, கத்தரிக் கோலால் துண்டு துண்டாக வெட்டிப் போட சொல்வார்.

அதேபோல், அஞ்சறை பெட்டியில் உள்ள, நவதானியங்களை, கால நிலைகளுக்கு ஏற்ப இடித்து போட சொல்வார். சில நேரங்களில் கண்ணாடிகள், பல்புகளை உடைக்க சொல்வார். இனிப்பு பொருட்களை வாங்கி உண்ண சொல்வார் அல்லது மற்றவர்களுக்கு விநியோகிக்கச் சொல்வார்.

மேற்கண்ட பரிகாரத்திலேயே, நெருக்கடியில் உள்ளவர்களின் பிரச்சினைகள் தீர்ந்து போகும்.

அந்தக் கோயிலுக்கு போய் அதை செய்யுங்கள், இந்த சாமிக்கு இந்தப் பரிகாரம் செய்துவிடுங்கள் என சொல்லமாட்டார்! நூற்றி எட்டு தேங்காய் உடைப்பது, ஆயிரத்து எட்டு விளக்கு போடுவது, உடலை வருத்தி விரதம் இருப்பது, கோயில் கட்டுவது, குடமுழுக்கு செய்வது, சுவாமிக்கு வேண்டிக் கொள்வது, பிராமணர்களுக்கு தானம் செய்வது எல்லாம் அவரது பரிகார லிஸ்ட்டிலேயே இருக்காது.

நெல்லை வசந்தன் பரிகார முறையில், தனி நபர்களின் நெருக்கடி தீர, சமையல் அறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியும், பல வண்ண ரிப்பன்களும் போதுமானவை.

அதேபோல், பலன் சொல்லும்போதும், பரிகாரம் சொல்லும்போதும், அதற்கான காரணங்களையும் மறைக்காமல் சொல்வார். இதுதான் அவருடைய தனிச்சிறப்பு.

உலகியல் ஜோதிடம்

தனி நபர்களின் ஜாதகத்தை போல, உலகத்தை, உலக நாடுகளை,  இந்தியாவை,  தமிழகத்தை தனித்தனி ராசி மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதையும் அவ்வப்போது கூறி வந்துள்ளார். அவை அனைத்தும் அவ்வப்போது நடந்து வந்தன. அதனால், நெல்லை வசந்தனை உலகியல் ஜோதிடத்தின் முன்னோடி என்றும் பலர் கூறுவார்கள்.

அதன் படிப்படையில், சுனாமி, நிலநடுக்கம், மழை, வெள்ளம், இயற்கை சேதங்கள், வெட்டுக்கிளி தாக்குதல் போன்றவற்றையும் அவர் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார்.

கொரோனா பாதிப்பு

கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை, மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலில், ஒரு யாகம் நடத்தினார். அப்போது, மகர ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக சேருகின்றன. அதனால், உலக அளவில் ஏதோ ஒரு மிகப்பெரிய பாதிப்பு வரப்போகிறது. அது என்னவென்று தெரியவில்லை. அதனால், உலக நன்மைக்காக முன்கூட்டியே இந்த ஹோமத்தை செய்வோம் என்று கூறினார். அதன் பிறகுதான் கொரொனா தொற்று உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தது.

நாடுகளின் ராசி மண்டலம்

உலகத்தை, உலக நாடுகளை, இந்தியாவை, தமிழகத்தை, தனித்தனியே  பணிரெண்டு ராசிகளாக பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த பகுதிகள், என்னென்ன மாற்றங்களை சந்திக்கும் என்பதையும் அவ்வப்போது, பல்வேறு  பேட்டிகள் மற்றும் முகநூல் பதிவுகள் வாயிலாக சொல்லிக் கொண்டே இருந்தார். அவை அனைத்தும் நடந்து கொண்டே இருந்தன.

ஒரு தேர்தலில், எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெறும். எந்த கட்சி ஆட்சி அமைக்கும். எந்த கட்சி தோல்வியை தழுவும். எந்தெந்த பெயரில் உள்ளவர்கள், எந்தெந்த தொகுதியில் வெற்றி பெறுவார்கள். எந்தெந்த பெயரில் உள்ளவர்கள், எந்தெந்த தொகுதிகளில் தோல்விகளை சந்திப்பார்கள் என்பதை எல்லாம் பாரபட்சமின்றி சொல்லுவார். எந்த வி.வி.ஐபியையும் சந்தோஷப்படுத்துவதற்காக உண்மையை மறைக்க மாட்டார்.

தமிழ் பற்று

அனைத்துக்கும் மேலாக தமிழின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அளப்பரிய பற்று கொண்டவர். திருக்குறளில் ஜோதிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அதை பலரும் சொல்ல மறுக்கின்றனர் என்று, அதையும் தமது ஆராய்ச்சி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

“கோளில் பொறியில் குணமிளவே எண்குணத்தான் தாளை வங்கா தலை” என்ற குறளுக்கு அவர் பின்வருமாறு விளக்கம் கூறினார்.

மொத்தமுள்ள ஒன்பது கோள்களில் எட்டு கிரகங்கள் மட்டுமே ஒன்று சேரும். ராகு – கேது ஆகிய கிரகங்கள் எப்போதுமே எதேரெதிர் திசைகளில் நிற்கும். இதை அறிந்த வள்ளுவர்,  சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு அல்லது கேது ஆகிய கிரகங்களில் எட்டு கிரகத்தை எண் குணத்தான் என்று கூறுகிறார். கோளில் என்பது கிரகத்தில், பொறி என்பது ஜாதகம் என்னும் “கோள் சக்கரம்” என்பது அவரது விளக்கம்.

அதேபோல், மொத்தமுள்ள பணிரெண்டு ராசிகளையும் சரம், ஸ்திரம், உபயம் என்று மூன்று விதமாக பாகுபாடு செய்வார்கள். அதன்படியே, திருக்குறள் அனைத்தையும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளில் திருவள்ளுவர் அடக்கியுள்ளார் என நெல்லை வசந்தன் கூறுவார்.

குமரிக்கண்டம்

தமது இறுதிக் காலத்தில் கூட, லெமூரியா என்னும் குமரி கண்டத்தின் வான்வழி ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகளை வழங்கி உள்ளார். நோய்கள்,  மருத்துவம், மரபணு, தொழில் வகைகள், சினிமா  என ஜோதிடத்தில் அவர் சொல்லாத கருத்துக்களே இல்லை. அந்த கருத்துக்கள் அனைத்தும் ஏதோ மேம்போக்காக சொன்ன கருத்துக்கள் அல்ல. அவை அனைத்துக்கும் அவர் கிரகரீதியான காரண காரியங்களையும் சொல்லிவிடுவார்!

என்னைப் போன்ற நெருக்கமான பத்திரிகையாளர் பலரிடமும் அவர் எப்போதும் சொல்லும் ஒரு செய்தி, இந்த உலகில் பனை மரங்கள் இருக்கும் வரை தமிழினம் வாழ்ந்து கொண்டே இருக்கும். யாராலும் அழிக்க முடியாது என்பதுதான்.

மிகக் கடுமையான வறட்சியை தாக்கு பிடித்து வளரும் தன்மையுள்ள பனை மரங்களே வாழ முடியவில்லை என்றால், அங்கே மனித சமூகமே வாழ முடியாது என்று ஐயா நம்மாழ்வார் சொன்னதை நான் அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

சொந்த அனுபவம்

அவருடனான முதல் சந்திப்பில், என்னுடைய ஜாதகத்தை பார்த்த அவர், அச்சு ஊடகத்தில் இருந்து நீங்கள் இனி காட்சி ஊடகத்திற்கு சென்று விடுவீர்கள். உங்கள் முகம் திரையில் வரும். உலகம் முழுவதும் உங்கள் முகத்தை பார்ப்பார்கள் என்றார். எந்த தொழிலில் இருந்தாலும், உங்களுக்கு பெரிய அளவில்  ஜோதிடம் கைகூடும். ஆனால், தொழில் ரீதியாக ஜோதிடம் பார்க்க மாட்டீர்கள் என்றார்.

அவர் சொன்னது போலவே, அடுத்த இரண்டு வருடங்களில், நான் சன் டிவியில், உதவி செய்தி ஆசிரியராக பணிக்கு சேர்ந்து விட்டேன். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், சன் நியூசில் செய்தி வாசிப்பாளராகவும் ஆகிவிட்டேன். அதன் பிறகு பிரபலமான சேனல்கள் பலவற்றிலும் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக, நேரலையில் விவாத நிகழ்ச்சிகள்  நடத்துபவராகவும் இருந்து விட்டேன்.

நெல்லை வசந்தனின் ஜோதிட நுணுக்கத்திற்கு, இது ஒரு சின்ன சாம்பிள். இதுபோல, ஒவ்வொரு துறையிலும், பல்லாயிரக் கணக்கானவர்கள் சொல்லும் செய்திகளை கேட்டால் பல வால்யூம்களில் நூல் வெளியிட வேண்டி இருக்கும்.

 எதிர்காலத்தில்…

இவ்வாறு, ஜோதிட துறையில், ஐக்கிய நாடுகளின் உயர் அதிகாரி தொடங்கி, தமிழ் நாட்டில் சாமானியன் வரை அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக இறுதி வரை பழகியவர் நெல்லை வசந்தன். மிகச்சிறந்த மனிதாபிமானி.

உலக அளவில் புகழ்ந்து பேசப்படும் நாஸ்டர்டாமஸ், தமது வாழும் காலத்தில் கொண்டாடப் படவில்லை. அவருக்கு நிகராக பல்வேறு அறிய பொக்கிஷங்களை தந்து சென்றுள்ள நெல்லை வசந்தனும், வாழும் காலத்தில் பெரிதாக கொண்டாடப் படவில்லை. உண்மையில் அதை அவர் எதிர்பார்த்தவரும் அல்ல.

நிச்சயம், நெல்லை வசந்தன் என்ற தமிழனின் படைப்புகள், வரும் காலத்தில் உலகம் முழுவதும் கொண்டாடப்படும், அவர் போற்றப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்; பி.ராஜேந்திரன்

மூத்த பத்திரிகையாளர், காட்சி ஊடக நெறியாளர்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time