காலனி ஆதிக்கத்தின் மறு வடிவமா..? கவர்னர் ஆர்.என்.ரவி!

- சாவித்திரி கண்ணன்

பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு கேட்டாலும், அதை ஒற்றை மனிதனாக தடுக்க முடியும் என்றால், ஒன்றிய அரசின் காலனியாதிக்கத்தின் கீழ் தமிழகம் உள்ளதா..? ஆடம்பர மாளிகை, அளவில்லா சலுகைகள்,செலவுகள்.. கவர்னருக்கு எதற்காக..?

நீட் தேர்வை தமிழகத்தில் திணிக்கக் கூடாது என இன்று தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், பாஜக நீங்கலாக வலியுறுத்தி உள்ளன! நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு ஆளுநர் அனுப்பாமல் இருப்பது சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது மாநில உரிமையும்,சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரமும் தற்போது கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது. ஆக, நீட் விலக்கிற்கு ஆதரவான தமிழக அனைத்துக் கட்சி கூட்டம் சிறப்பாகவே நடந்துள்ளது

தமிழகத்தில் 16 மாணவச் செல்வங்களின் உயிரைப் பறித்த, தமிழக ஏழை,எளிய குடும்பத்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கிய நீட் தேர்வு முறை  கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும், அவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால், இம் முறைக்கு மாற்றாக அனைவரும் பயன் பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கைக்கான சாத்தியக் கூறுகள், சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து, அரசுக்குப் பரிந்துரைகளை அளித்திட ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக் குழுவை ஜீன் மாதம் 10 ஆம் தேதி அரசு அறிவித்தது.

இக்குழுவில் 86,000க்கும் மேற்பட்ட கருத்துகள், பொதுமக்கள், ஆசிரியர், மாணவர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலதரப்பட்டோரால் தெரிவிக்கப்பட்டன.

ஏ.கே.ராஜன் குழு பல முறை கூடி ஆய்வு செய்து, அறிக்கையை இறுதிப்படுத்தி 34 நாட்களுக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலினிடம்  சமர்ப்பித்தது. குழுவின் 165 பக்க அறிக்கையில்  கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கான பாதிப்புகள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாதிப்புகள், பயிற்சி மையத்தில் பயிற்சி பெறுவோரே நீட் தேர்வில் வெல்லும் நிலை, பெற்றோர், ஆசிரியர், மாணவர் தரப்பில் உள்ள பிரச்சினைகள்,  உள்ளிட்ட பலவற்றை ஆலோசித்து அதன் சாராம்சங்கள் அரசுக்கு  பரிந்துரையாக  அளிக்கப்பட்டது.

இவ்வளவு மெனக்கிடல்களும் நடந்த ஒரு விவகாரம் – தமிழக இளம் தலைமுறை மற்றும் மக்களின் நல வாழ்வு தொடர்பான விவகாரம் தமிழக ஆளுநருக்கு செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர் படித்தாரா? அதில் அவருக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா..? அல்லது சம்மதா? என எதுவும் இது வரை தெரியவில்லை. அதை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவிட வேண்டியது அவரது கடமை. அதற்குப் பிறகு உள்துறை அமைச்சகமாச்சு, தமிழக அரசாச்சு.. அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்’ என கடமையாற்றி இருக்க வேண்டும்.

ஆனால், அவர் வாங்கி வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் கமுக்கமாக காலம் கடத்துகிறார். அவரை நேரில் சந்தித்து முதலமைச்சரும் வலியுறுத்திவிட்டு வந்தார். அதற்குப் பிறகாவது அவருக்கு ஒரு குற்றவுணர்வு தோன்றி இருக்க வேண்டாமா? தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் நீட் தேர்வு விலக்கிற்காக சட்டமன்றத்தில் ஒரு மசோதா நிறைவேற்றிய பிறகு, ஒற்றை மனிதரான கவர்னர் அதற்கு முட்டுக் கட்டை போடுவது எப்படி ஜனநாயகமாகும்?

ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனமும் ஆளுநர் மீது குவிந்திருக்க, அவர் சொகுசாக மாளிகையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதும், உல்லாசமாக குடும்பத்துடன் தமிழகத்தின் முக்கிய இடங்களில் சுற்றி களிப்பதும் எந்த விதத்தில் நியாயம்?

டெல்லி பத்திரிகையாளர்கள் நேர்காணலில் திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர்.பாலு, ”தமிழக அரசுக்கும், மக்களுக்கும் எதிராக செயல்படும் கவர்னர் பதவி விலகி வெளியேறட்டும்” என மனம் வெதும்பிச் சொன்னார்.

ஒரு கவர்னர் தமிழகத்தில் தங்கி இருக்க தமிழக அரசு எவ்வளவு செலவழிக்கிறது எனத் தெரிய வந்தால் அதிர்ச்சியடைய வேண்டி இருக்கும்.

சென்னை கிண்டியில் 156 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் 6,000 மரங்கள்,ஏராளமான செடி,கொடிகள் கொண்ட பிரம்மாண்ட மாளிகை, அவருக்கு உதவியாக பணியாற்ற ஒரு ஐ.ஏ.எஸ் படித்த செயலாளர், இரண்டு துணை செயலாளர், ஒரு கூடுதல் செயலாளர்கள், ஏராளமான அலுவலர்கள், தோட்டக்காரர்கள், சமையல்காரர்கள், பணியாளர்கள் என நூற்றுக்கணக்கான வர்கள் இவர்களுக்கான கார்கள், வாகனங்கள், டிரைவர்கள், பெட்ரோல்…இத்தியாதி என எவ்வளவு செலவுகள் தெரியுமா?

ஊட்டியில் கவர்னரின் ஆடம்பர மாளிகை

இது தவிர கவர்னர் கோடைக் காலத்தில் தங்க ஊட்டியில் ஒரு பங்களாவும் உள்ளது. ஆக, இந்த மாநில மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு வெளியாள் – ஒரு முதல்வருக்கு கூட இல்லாத வசதிகளுடன் – தனி ராஜா போல எந்த கடமையையும் செய்யாமல் அனுபவித்து செல்வார் என்றால், இது காலனியாதிக்க முறையின் மற்றொரு வடிவமாகத் தான் தெரிகிறது.

ரோசய்யா தமிழக கவர்னராயிருந்த போது கவர்னர் மாளிகைக்கு தினசரி பூக்கள் விநியோகித்த ஒரு நிறுவனம் தங்களுக்கு பணம் செட்டில் செய்யப்படவில்லை என கோர்ட்டில் வழக்கு போட்டது. அதில் தெரிய வந்த விவகாரம் என்னவென்றால், ஆறு மாத காலகட்டத்திற்கு கவர்னர் மாளிகை பூக்களுக்காக செலவழித்த பணம் என்பது 2,82,000 ருபாயாகும்! இது ஒரு சின்ன சாம்பிள். இது போலத் தான் கவர்னர் மாளிகை செலவுகள் தாறுமாறாக உள்ளன.

இந்தப் பதவியில் ஒரு ஆள் வந்து உட்கார்ந்து கொண்டு, எந்தவித மனித நேயமோ, கமிட்மெண்டோ இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு நிர்வாகத்தையும், மக்களையும் வதைப்பார் எனில், அந்த பதவி உருவாக்கப்பட்டது மாநில அரசுகளின் மாண்புக்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும், கூட்டாட்சி கொள்கைக்கும் எதிரானதல்லவா?  இது ஜனநாயகத்திற்கே அவமானமல்லவா..?

இதைத் தான் இன்று அனைத்து கட்சி கூட்ட முடிவில் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இப்படி கூறினார்; நீட் தேர்வு, மாணவர்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக உள்ளது. இது 12 ஆண்டு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக்குகிறது. மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை உரிமையை மத்திய அரசு பறித்து விட்டது. நீட் விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’

இப்படியாக கல்லூளி மங்கனான ஒரு கவர்னரை, நாகலாந்து பழங்குடிகளை நச்சாக வதைத்த ஒருவரை தேர்ந்தெடுத்து, மத்திய பாஜக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நியமித்து தங்கள் சித்து விளையாட்டை நடத்துகின்றனர்.

சரி, கவர்னர் அனுப்ப மறுக்கிறார். நாமாவது உள்துறை அமைச்சரை பார்த்து விபரம் சொல்லாம் என தமிழகத்தின் ஏழு கட்சி எம்.பிக்கள் மூன்று முறை முயற்சித்தும் அமித்ஷா பார்க்கவோ, பேசவோ மறுக்கிறார் என்றால் என்ன பொருள்? பாதிக்கப்பட்ட ஒரு மாநில மக்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்கவோ, கன்சிடர் பண்ணவோ கூட அவர்கள் தயாராக இல்லை என்று தான் பொருள்.

மக்களுக்கு எதிரான சட்டங்களை திட்டங்களை நாங்கள் கொண்டு வருவோம், அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை என்பதை பாஜக அரசு சொல்லாமல் சொல்கிறது என்று தான் பொருள். முழுச் சோற்றில் பூசணிக்காயை மறைத்தது போல நீட் தேர்வால் சமூக நீதி எள் முனையளவும் பாதிப்படையவில்லை என கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளி வந்து பாஜக வானதி சீனிவாசன் பேசுகிறார் என்றால், இந்த மனசாட்சியற்ற கூட்டத்திற்கு மக்கள் தான் பாடம் புகட்ட வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்