சென்னைக்குள்ளும் இரண்டு காடுகள் உள்ளன…!

-செழியன்.ஜா

சென்னையில் வார இறுதி நாட்களில் பெரும்பாலான குடும்பங்கள் மெரினா கடற்கரை, சிட்டி சென்டர்,  சினிமா தியேட்டர் என்று செல்வது வழக்கம்..  காடுகளைப் பார்க்க வேண்டும் என்றால் பல நூறு கிலோமீட்டர் கடந்து முதுமலை செல்லவேண்டும் என்பதால் 90 சதவிகிதம் மனிதர்கள் கடைசிவரை காடுகளுக்கு செல்வதும் இல்லை, பார்ப்பதும் இல்லை.  மற்றும் வீட்டுச் சிறுவர்களுக்கும் காடுகளை அறிமுகப்படுத்துவதில்லை. ஆனால்,  காடுகள்  மிகச் சிறந்த இடமாகும். ஒரு முறை காடுகளுக்குச் சென்று வந்தால் மீண்டும் மீண்டும்  அங்குச் செல்லத்  தூண்டும்.  சிறு வயதிலேயே உங்கள் வீட்டு சிறுவர்களை காடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்காக  பல நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டாம்! இதோ நம் சென்னை நகரத்திலேயே இரண்டு காடுகள் உள்ளன!

சென்னை மாநகரத்தில் பேருந்து, விமானம், இரயில் இவற்றின் சத்தத்திற்கு நடுவில்  இரண்டு காடுகள்  தன் இயல்பான அமைதியுடன் இருப்பது ஆச்சரியமே.

கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்ததே. ஆனால் அவற்றை ஒட்டி தொடங்கும் காடு பற்றி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மான், நரி, இரலை, அலங்கு, கீரி எண்ணற்ற உள்நாட்டு-வெளிநாட்டுப் பறவைகள், சிறு  உயிரினங்கள், குளம்  என்று அனைத்தையும் அதன் வாழ்விடத்தில் பார்ப்பதற்கு ஏற்ற இடம்  இந்த சிறு காடாகும்!

குளிர் காலம் தொடங்கும் பொழுது வலசை பறவைகள் வரும்! அந்த நேரமாக  கிண்டி காட்டிற்குள்  சென்று பார்க்கலாம்!  நாங்கள் முறையாக அனுமதி பெற்று எட்டு பேர் கொண்ட குழுவாக ஒரு காலைப்பொழுதில்  காட்டிற்குள்ளே சென்றோம். மழையும் எங்கள் கூடவே  வந்ததால் மழைக்காட்டில் வலம் வருவதுபோல் இருந்தது. நம்முடன்  ஒரு வழிகாட்டி வருவார் அவர் முன்னே செல்ல நாம் அவர் பின்னால் சென்றால் போதும். அனைத்தையும் காட்டிவிடுவார்.

கிண்டி காட்டில் என்ன உள்ளது – மிகப் பெரிய குளம், பரந்த புல்வெளிகள், உயர்ந்த-அடர்த்தியான மரங்கள்,  ஆங்காங்கே மான்கள் செல்லும் வழித்தடம், நரி செல்லும் வழித்தடம் என்று வழிகாட்டி பலகைகள் காணப்படுகிறது. அது ம்மை மான், நரி இங்குச் செல்கிறதா என்று உன்னிப்பாகப் பார்க்கவைக்கிறது. உயரத்தில் சென்று  பார்ப்பதற்கு ஏற்றாற்போல் உயர் கோபுரமும் உள்ளது. இக்காடு முழுமையான, மனநிறைவுடன் நடந்து சுற்றி வருவதற்கு ஏற்ற இடமாகும்!

உள்ளே நம்மை வரவேற்கும் பலகை

ஒரு இரலை(Blackbuck) தூரத்தில் மேய்ந்து கொண்டிருப்பதை வழிகாட்டி காண்பித்தார். பைனாகுலர் வழியாக உற்று நோக்கினால், அவையும் எங்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எவ்வளவு  எச்சரிக்கையாக உள்ளது என்று நினைத்துக் கொண்டோம். இரலை என்பது மான் வகை அல்ல! ஆனால், மான் போலவே இருக்கும். இதன் கொம்புகள் விழுந்து, மீண்டும் வளராது. மிக அழகான விலங்கு தான் இரலை.

புள்ளி மான்கள் கூட்டமாக மேய்ந்து கொண்டு இருந்தது. சில மான்கள் நம் அருகில் வருகிறது. எந்த விலங்கையும் தொடக்கூடாது. தூரம் நின்றே ரசிக்க வேண்டும். நாம் கொண்டு செல்லும் எந்த உணவையும் கொடுக்க கூடாது. மனிதர்கள் உணவு நிச்சயம் விலங்குகளுக்குக் கெடுதலே உண்டு செய்யும். நம் உணவை விலங்கு,  பறவைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்போம். முதுமலை, பந்திப்பூர் காடுகளில் ஆங்காங்கே விலங்குகளுக்கு உணவு கொடுக்காதீர்கள் என்று பலகை எழுதி வைத்து இருப்பார்கள்.

தொடர்ந்து பறவைகள் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பதால், அதன்  குரல்களை கேட்டுக்கொண்டே சென்றோம். ஒரு வால்காக்கைக் குரல்தான் முதலில் எங்களை வரவேற்றது. ஒரு பெண் குயில் எங்களுக்கு மிக  அருகிலிருந்த மரத்திலிருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஆண் குயிலை பார்ப்பது போல் பெண் குயிலை பார்ப்பது சிறிது கடினமே. வேண்டும் அளவுக்குப் பார்த்து நகர்ந்தோம். பச்சைக்கிளிகள் தன் குடும்பத்துடன் அங்கும் இங்கும் பறந்து ஒரு கொண்டாட்டமாகவே வாழ்க்கையை நடத்துவது தெரிந்தது.

காட்டில் செல்லும்பொழுது கவனமாக ஒவ்வொரு அடியையும் வைக்கவேண்டும். இல்லையென்றால், நிறையச் சிறு உயிரினங்கள் நம் காலடியில் மிதி பட்டு இறக்க வாய்ப்புண்டு. அப்படி ஒரு இடத்தில் கால் வைக்க முற்பட்டபொழுது, மிக நீண்ட மண்புழு மெதுவாக நகர்ந்து சென்று கொண்டிருந்ததை பார்த்து காலை பின்னால் வைத்தோம். குனிந்து அவற்றின் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எந்த வித பர பரப்பும் இல்லாமல்  நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலையில்லாமல் ஊர்ந்துகொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் நத்தை அதே போல் எங்கள் வழித்தடத்திலிருந்தது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால்,  நாங்கள்தான் அதன் வழித்தடத்தில் இருந்தோம். கையில் எடுத்து பார்த்து, பிறகு கீழே அதன் போக்கிலே விட்டுவிட்டோம்.

நீண்ட மண்புழு

கிண்டி காட்டில், நிறை பறவைகளைப் பார்க்கலாம். நீங்கள் பறவை ஆர்வலர் என்றால், உங்களுக்குக் கிண்டி காடு சொர்க்கம் என்றே சொல்லவேண்டும். நூறு பறவை இனங்களுக்கு மேல் பார்க்கமுடியும். குக்குறுவான் பறவை, பார்க்க மிக அழகான நிறத்தில் இருக்கும். பச்சை நிற உடல், கருப்பு அலகு, சிகப்பு, மஞ்சள் நிறம் என்று ஒரு கலவையான நிறத்தில் இவற்றைப் பார்க்கலாம். அதே போல் அரசவால் ஈபிடிப்பான் பறவையைப் பார்க்கும் பொழுது இந்த கேள்விகள் உங்களுக்கு கண்டிப்பாகத் தோன்றும், எப்படி இந்த நீண்ட வாலை வைத்துக்கொண்டு எப்படி பறக்கிறது மற்றும் மரத்தில் அமர்கிறது என்று ஆச்சரியப்படுவீர்கள். நிறைய இரை கொல்லி பறவைகளை  பார்ப்பதற்கு ஏற்ற இடம் கிண்டி காடு. இரை கொல்லி பறவைகள் அனைத்தும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தெரிந்தாலும் நிறை வேறுபாடுகள் அவற்றுள் உள்ளன!

மழை கொஞ்சம் அதிகம் வந்தபொழுது, ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டோம். அருகிலிருந்த ஒரு மரத்தில் வல்லூறு ஒன்று மழையில் ஆனந்தமாக அமர்ந்து இருந்தது. மழையைப் பார்த்து ஒதுங்கவில்லை, முழு மழையிலும் நனைந்த பிறகே தன் சிறகைப் பட படவென அடித்து நீரை வெளியேற்றியது. உடம்பை சுழற்றி ஒரு திருப்பு திருப்பி  சுறுசுறுப்பு அடைந்ததை அருகிலிருந்து பார்த்ததில் எங்களுக்கும் சுறுசுறுப்பு வந்துவிட்டது.

காட்டில் விலங்கு, பறவை மட்டும் இல்லாமல் மரங்கள் நமக்கு நிறை பாடங்கள் சொல்லித்தரும். சீதாப்பழ மரங்கள் அதிகம் உள்ளே உள்ளன. உயர்ந்த மரங்கள், குட்டையான மரங்கள், சிறு செடிகள் என்று பள்ளியில் தாவரவியல் பாடம் படித்த நினைவு வருகிறது. நிறை மனிதர்கள் நிறை வுகளுடன் இங்கு வருகிறார்கள். சிலர்  பறவைகளைப் பார்க்க. சிலர் வண்ணத்துபூச்சிகளை பார்க்க, சிலர் மரங்களைப் பார்வையிட, சிலர் விலங்குகளைப் பார்க்க, இன்னும் சிலர் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்க என்று வருகிறார்கள்.

நடந்து செல்லும் பாதை

என்னுடன் வந்த நண்பர் குடும்பத்தின் ஐந்து வயது சிறுவன் காட்டைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினான். அத்துடன் காட்டின் இருந்து வீட்டிற்குச் சென்றவன் அடுத்த வாரமும் காட்டை பார்க்க வேண்டும் என அப்பாவிடம் கேட்டுள்ளான்! ஆக, காடு சிறுவர்கள் விரும்பும் சிறந்த இடம் என உணரமுடிந்தது!

ஈ அளவேயுள்ள ஒரு தவளை, தாவித் தாவிச் செல்வதைப் பார்த்தபொழுது, ஈயை பெரியதாகவே பார்த்து பழகிய நம் கண்கள், இவற்றை மிக உன்னிப்பாகப் பார்க்க வைக்கிறது. சிறு உயிரினங்கள் இந்த உலகுக்கு எவ்வளவு முக்கியம். இந்த பூவுலகை இவை எந்த அளவுக்கு இவை உயிர்ப்புடன் வைக்கின்றன என்று தெரியவருகிறது. உதாரணம்- பூச்சிகள், வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வன என்று ஒரு தனி உலகமாகவே கிண்டி காடு உள்ளது.

காடு என்பதால் உள்ளே எதுவும் சாப்பிடக் கிடைக்காது. அதனால் தண்ணீர், பிஸ்கட் எடுத்துச் சென்று விட்டால் நன்றாக இருக்கும். நம்மைப் பயமுறுத்தும் விலங்கு எதுவும் இல்லாததால் ஜாலியாக சுற்றிவரலாம். வாய்ப்பு இருந்தால் மான், அலங்கு, இரலை, நரி என்று அனைத்தும் பார்க்க முடியும். கடந்த முறை சென்றபொழுது நரி ஒன்று எங்கள் வழித்தடத்தில் படுத்துக்கொண்டிருந்தது. நாங்கள் மெதுவாக ஒதுங்கி அவற்றைப் பார்த்து படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நரி எங்களைப் பார்த்துவிட்டதால் ஓடி மறைந்துவிட்டது.

உள்ளே மிகப் பெரிய குளம் உண்டு. அங்கே நின்றுவிட்டோம்.

நாங்கள் பறவைகளை பார்த்துக் கொண்டு இருந்தபொழுது பூச்சிகளை மட்டும் பார்த்த சிறுவன் அதன் பெயர்களை அவன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

சென்னையில் இப்படி ஒரு காடா? அதுவும் மையமான முக்கிய இடத்தில்! என்று குழுவில் புதிதாக வந்தவர்கள்  ஆச்சரியப்பட்டார்கள்! இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுக்குக் கூட இப்படி ஒரு காடு இருப்பது தெரியாமல் உள்ளது. கிண்டி பூங்கா செல்ல என்ன டிக்கட்டோ அதே தொகைதான் இந்த காட்டை சுற்றிப் பார்க்கவும்.

இரண்டாவது நன்மங்கலம் காடு. வேளச்சேரி அடுத்து இந்த காடு தொடங்குகிறது. தாம்பரம் செல்லும் வழியில் காட்டிற்கு உள்ளே செல்லும் வழி உண்டு. ஆந்தைகளைப் பார்க்க இந்த காட்டிற்குச் செல்வோம்.. மாலை வேலை சென்றால், கொம்பன் ஆந்தை நன்றாகப் பார்க்கலாம். உருவில் மிகப் பெரிய ஆந்தையை கிண்டி சிறுவர் பூங்காவில்  கம்பிக் கூண்டுக்குள் இருப்பதைப் பார்க்கும் போது அதன் கம்பீரம் தெரிவதில்லை! நன்மங்கலம் காட்டில் அதன் வாழிடத்தில் பார்க்கும்பொழுது சுதந்திரமாகச் சுற்றித் திரியும் ஆந்தை நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இறக்கையை அடிக்கிறது, பறக்கக் கிளம்பப்போகிறது, நம்மைப் பார்க்கிறது, அதோ இன்னொரு ஆந்தை வருகிறது என்று பேசிக் கொண்டே ஆந்தையைப் பார்க்கும்பொழுது அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் குறிப்பேட்டில் அதன் செயல்பாடுகளையும் குறிக்கும்பொழுது போன முறை ஆந்தை இப்படி செய்யவில்லையே என்று நமக்கு நாம் கேள்வி கேட்டுக் கொள்வோம்..

இந்த காடும் மிக பரந்துவிரிந்து. நீண்ட நடை சென்று வரலாம். சிறு விலங்குகள் நமக்கு அவ்வப்பொழுது தென்படும். நாம் தூயகாற்றை சுவாசிக்கக் காடுகள் அவசியம் இயற்கையுடன் ஒன்றி வாழும் கலையை காடுகள் கற்றுக் கொடுக்கும்.

அரசவால் ஈபிடிப்பான்

இரண்டு காடுகளுக்கும் முறைப்படி அனுமதி பெற்றுச் சென்று வரலாம். இரண்டு காடுகளின் அருகிலும் அலுவலகம் உண்டு. அங்குச் சென்று ஒரு தாளில் இயற்கை நடை செல்வதற்கு என்று எழுதி நம்முடன் எத்தனை நபர்கள் வருகிறார்கள்  என்பதைக் குறிப்பிட்டுச் செல்லும் தேதியும் சொன்னால் நமக்கு சில நாட்களில் அனுமதி கடிதம் வந்துவிடும். யார் சிபாரிசும் தேவை இல்லை.  அனுமதி வந்தவுடன் செல்லவேண்டிய நாளில்  காலை 6 மணிக்கு அங்குச் சென்றுவிடுங்கள். உங்களை வரவேற்க வழிகாட்டி காத்திருப்பார். அவருடன் முழுவதும் சுற்றி வரலாம். காலை 9 மணி அளவில் திரும்பிவிடலாம்!  அன்றைய நாள் மிக உற்சாகமாக இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.

மன அழுத்தம் நிறைந்த இன்றைய வாழ்கையில், வார இறுதியில் எங்கேயாவது போவதற்கு பதில் கிண்டி காட்டிற்கு,  நன்மங்கலம் காட்டிற்கு  சென்று வாருங்கள். ’’புதிய மனிதா பூமிக்கு வா’’ என்பது போல் புதிய மனிதர்களாகத் திரும்பி வருவீர்கள். பெரியவர்கள் மட்டும் இல்லாமல் சிறுவர்களையும் அழைத்துச்  செல்லுங்கள்.  செல்போன், தொலைக்காட்சி தொல்லையிலிருந்து சிறுவர்களுக்கு நல்ல மாற்றமாக இருக்கும்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time