தினமணி பத்திரிகையாளர்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!- பாகம் 1

- சாவித்திரி கண்ணன்

அடுத்தடுத்து தினமணியின் இளம் பத்திரிகையாளர்கள் பகீர் மரணம் அடைகின்றனர். இது விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்! இந்த மரணங்களுக்கான பின்னணியில் மர்மப் புன்னகை சிந்துகிறார் அதன் ஆசிரியராக அறியப்படும் வைத்தியநாதன்!

இலக்கிய மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் பெரிய மனிதராக தோற்றம் காட்டி, தமிழ்த் தாயின் தவப்புதல்வன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்தி திரியும் வைத்தியநாதனுக்கு இவ்வளவு ஆபத்தான இன்னொரு முகம் இருக்குமா..?  அறிவுத் தளத்தில் அராஜக எஜமானத்துவத்துடன் ஒருவரால் எப்படி இயங்க முடிகிறது என்பது வியப்பளிக்கிறது!

தமிழ்நாட்டில் தினமணி நாளிதழுக்கென்று தனி மரியாதை உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியவாதி டி.எஸ்.சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு உதயமாகி, அவரால் பயிற்றுவிக்கப்பட்ட ஏ.என்.சிவராமனால் வளர்த்தெடுக்கப்பட்டு, பின்னர் ஐராவதம் மகாதேவன், கி.கஸ்தூரிரங்கன், இராம.சம்பந்தம் போன்ற நேர்மையும், கம்பீரமும் கொண்ட ஆசிரியர்களால் மெருகூட்டப்பட்ட பத்திரிகையாகும்!

பத்திரிகைத் துறையை தங்கள் லட்சியக் கனவாக கருதி தினமணிக்கு வரும் எந்த நிருபரையும், உதவி ஆசிரியரையும் அவரது சொந்த ஊரிலோ, அல்லது அதற்கு அருகாமையிலோ பணிபுரிய அனுமதிக்கமாட்டார் வைத்தி! இப்போதும் கூட தினமணியில் பணியாற்றும் சுமார் 90 சதமானோர் தங்களுக்கு சம்பந்தமில்லாத பற்பல ஊர்களில் தூக்கி பந்தாட்டப்பட்ட வண்ணம் இருக்கிறார்கள்! மதுரை பேரையூரைச் சேர்ந்தவர் திருவள்ளுர் மாவட்டத்தில், இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் காஞ்சிபுரத்தில் என ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்.

தினமணியில் வேலை பார்ப்பதை பெருமையாகக் கருதி வேலைக்கு சேர்ந்த பத்திரிகையாளர்களில் பலர் வைத்தியநாதனின் வித, விதமான தொடர் டார்ச்சர்களால் விரக்திக்கு ஆளாகி வெளியேறுவதும், மன உளைச்சலுக்களாகி மரணமடைவதும், தொடர்கதையானதால் தான் வேறு வழியின்றி இதை எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். அவர் பதவி வகித்த 15 ஆண்டுகளில் சுமார் 88 பேர் விரக்தியாய் மனம் வதும்பி வெளியேறி உள்ளனர்! ஐந்தாறு பேர் அதிர்ச்சிகரமான மரணத்தை சந்தித்து உள்ளனர்.

விஜயகுமார்

அதுவும் சமீபத்தில் திருநெல்வேலியில் தினமணி போட்டோகிராபர் விஜயகுமார்(48) மிகவும் கலகலப்பானவர். அனைவரோடும் இணக்கமாக பழகுவது, வேலையில் திறமை, துடிப்பானவர். அவர் அநாதை போல லாட்ஜில் மரணமடைந்தும், அவர் மரணத்தையே ஒன்றரை நாள் கழித்தே சென்னையில் இருக்கும் அவர் குடும்பத்தார் அறிய வந்ததும் தினமணியில் வேலை செய்யும் அனைவரையும் உலுக்கி போட்டது!

கார்ப்பரேட் கிரைமின் களப்பலியே விஜயகுமார்!

”கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் என் கணவர் ஒன்பது முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை இதய ஆபரேஷன் செய்யப்பட்டு ஸ்டண்ட் வைக்கப்பட்ட அவர் வெளிச் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமலும், அடிக்கடி ஊர், ஊராக தூக்கி அடிக்கப்படுவது தொடர்பாகவும் பலமுறை உருக்கமாக வைத்தியநாதனுக்கு நேரிலும், வாட்ஸ் அப்பிலும் வேண்டுகோள் வைத்தும், தன் டிரான்ஸ்பர் விளையாட்டை வைத்தியநாதன்  குரூரமாக நடத்தினார். ஊர் ஊராக சமான்களை தூக்கிக் கொண்டு நாங்கள் ஓடி ஒடி அலுத்துவிட்டோம். அதனால், அவர் மட்டுமே சென்று லாட்ஜில் தங்கி அநாதையாக இறந்துவிட்டார். ஒரு மனிதனால் எவ்வளவு தான் தாங்க முடியும் சொல்லுங்கள். நான் கதறி அழுது வேலையை விட்டுவிடுங்கள் என்றேன். குடும்ப பொருளாதாரச் சூழல்களால் வாட்டி வதைத்தெடுக்கும் அந்த ஆசிரியரை அனுசரித்து வேலை செய்தார். அவரது சகிப்புத் தன்மையே அவருக்கு எமனாகிவிட்டது” என்றார், விஜயகுமார் மனைவி.

”என் அப்பாவிற்கு தரப்பட்ட டிரான்ஸ்பர் நெருக்கடிகளே அவர் உயிர் இழந்ததற்கு மிக முக்கிய காரணம் என நாங்கள் நன்றாக உணர்கிறோம். என் அப்பா பெரிய பொறுமைசாலி. குடும்பச் சூழலுக்காக அவர் எல்லா டிரான்ஸ்பர்களையும் ஏற்று ஊரூராக சென்று அலைந்து இறுதியில் அநாதையாக உயிர்விட்டார்! அவர் மட்டுமல்ல, தினமணி அலுவலகத்தில் உள்ள யாருமே குடும்பத்தோடு வாழ்வது அவருக்கு பிடிக்காது போலும்!  இது எப்படி சொல்கிறேன் என்றால், ஒரு முறை என் அப்பா நாகப்பட்டிணத்திற்கு மாற்றலான போது அங்கு வெளிச்சாப்பாடு சரியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டார். அதனால் அம்மா சென்று அவரோடு தங்கி இருக்க வேண்டியதாயிற்று. இது தினமணி ஆசியருக்கு தெரிய வந்ததும் அதிரடியாக அவரை டிரான்ஸ்பர் செய்துவிட்டார். ஒரு வகையில் இது சினிமாவில் வருவது போன்ற  கார்ப்பரேட் கிரைம். மனசு பொறுக்கல அங்கிள்’’ என்று கதறினார், விஜயகுமார் மகன் கார்த்திகேயன்.

சமுத்திரராஜன் சாகடிக்கப்பட்ட வரலாறு

தினமணியின் துடிப்பான நிருபர்களில் ஒருவரான சமுத்திர ராஜன் (45) செய்தி சேகரிப்பதில் திறமையானவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் ஐந்து முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். குடும்பத்துடன் இருக்க முடியாதது ஒரு புறம், வேலூர், நெல்லை,திருச்சி.. கடைசியாக தருமபுரி என ஊரூராக மாறிச் செல்வது ஒருபுறம் என மிகுந்த உளைச்சல் பட்டதை வெளிப்படையாகவே அனைவரிடமும் கூறியுள்ளார். அப்படிச் சொல்லி நொந்தவாறு தினமணி அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையிலேயே அகால மரணம் அடைந்தார் என்பது தான் கொடுமை. அதனால், அவர் மறைவையடுத்து அனைத்து ஊழியர்களும் கண்ணீரோடு தங்கள் கைக்காசை போட்டு அவர் குடும்பத்திற்கு நிதி திரட்டித் தந்தனர்.

கோபி கொடுமைப்படுத்தப்பட்ட வரலாறு;

ஈரோட்டைச் சேர்ந்த கோபி (32) சென்னை, காஞ்சிபுரம், திருச்சி என்று பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டவர். வைத்தியநாதனுக்கு ஒரு பழக்கம் உண்டு. அவர் எந்த ஊருக்கு விசிட் அடித்தாலும் அந்த ஊரைச் சேர்ந்த நிருபர் அந்த ஊரின் பிரபல கோயிலில் ஆசிரியருக்கு மாலை, மரியாதை,பரிவட்டம் முதலானவற்றை செய்து அவரை குளிர்விக்க வேண்டும். அனேகமாக தினமணியின் எந்த ஊர் நிருபரும் இதில் இருந்து தப்பிக்க முடியாது. இன்னும் சொல்வதென்றால் ஆரணி, காஞ்சிபுரம் என்றால், அந்த ஊரின் விலை உயர்ந்த பட்டுப் புடைவையை சால்வையாக அவர் கழுத்தில் போடும்படி செய்ய வேண்டும்.

காஞ்சிபுரத்தில் கோபி தினமணி நிருபராக இருந்த போது அத்தி வரதர் வைபவத்திற்கு வந்த வைத்தியநாதனின் சித்தப்பாவை சிறப்பாக கவனித்து அனுப்பவில்லை என்பதில் வைத்திய நாதனின் முதல் கோபத்திற்கு இலக்கானார். அடுத்து வைத்தியநாதனே குடும்பத்துடன் அங்கு சென்ற போது, அவரை ஸ்வாமி அருகில் நெருக்கமாக கூட்டிச் சென்று மாலை, மரியாதைகள் எல்லாம் பெற்றுத் தந்த போதிலும், அன்று கடும் கூட்ட நெரிசல் மற்றும் வேறு சில வி.வி.ஐ.பிகளின் வருகையால் சிறு தாமதம் நிகழ்ந்துவிட்டது. ஆகவே, சென்னை திரும்பியதும் வைத்தியநாதன் நெற்றிக் கண் திறந்தார். திருச்சிக்கு மாற்றல் நடந்தது. சொந்த ஊர் ஈரோட்டிற்கு மாற்றம் கேட்டார் கோபி. மறுத்துவிட்டார். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட இளம் நிருபர் கோபி அடிக்கடி திருச்சிக்கும், ஈரோட்டுக்குமாக நீண்ட பயணத்தை மேற்கொள்வார். ஒரு நாள் அப்படிப் பயணித்த போது, அவரது வாழ்க்கை பயணமே முடிவுக்கு வந்துவிட்டது தான் சோகம்!

குடும்பத்தோடு வாழ்வாயோ குணசேகரா?

குடும்பத்தோடு ஊழியர்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார் வைத்தியநாதன் என்பதற்கு குணசேகரன் அனுபவம் ஒரு உதாரணம். சொந்த ஊரான திருச்சியில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட குணசேகரன் கோபியைப் போலவே, குடும்ப பாச உணர்வால் மாறுதல் கேட்டு மருகி, உருகி பார்த்தும் முடியாததால், முடிந்தபோதெல்லாம் திருச்சி வந்து செல்வார். அப்படி வந்த போது ஒரு நாள் ஆக்சிடெண்டில் மனைவியை பறி கொடுத்தார். இந்த தகவல் அறிய வந்ததும் அது வரை சொந்த ஊருக்கு மாறுதல் மறுக்கப்பட்ட குணசேகரனுக்கு உடனே கிடைத்தது. ஏனென்றால், இனி அவர் மனைவியோடு வாழ வழியில்லை என்பது உறுதியாகிவிட்டது அல்லவா..?

இது போல விழுப்புரம் மனோகர் இறந்த கதை என பல சோகக் கதைகளை பட்டியலிட்டால் பல வால்யூம்களாக எழுத வேண்டியிருக்கும் என்பதால், இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இது குறித்து ஏதேனும் ஒரு நியாயமான விசாரணை நடை பெற்றால்.., அதில் திரைப்படங்களை விஞ்சும் வகையிலான அதிர்ச்சி தகவல்கள் பல வெளிவரும்!

இப்படிப்பட்ட வைத்தியநாதன் ஆடிட்டர் குருமூர்த்தியின் சிபாரிசால் குறுக்கு வழியில் ஆசிரியரானவர் என்பது கவனத்திற்கு உரியது!  சாவி வார இதழ் நிருபர், பிறகு பிரிலேன்ஸ் ஜர்னலிஸ்ட் என்ற வகையில் அல்லாடிக் கொண்டிருந்தவர்! டெல்லியின் அரசியல் தொடர்புகள், ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் தெரிந்திருந்தது ஆகியவற்றோடு, அதிகாரத்திற்குரியவர்களை அடிவருடி சேவிக்கும் குணம் ஆகியவற்றால் ஆசிரியரானார்.ஆனால், தற்போது குருமூர்த்தியைக் கூட மதிப்பதில்லை வைத்தியநாதன் என சொல்லப்படுகிறது!

நிர்வாகத்தின் செல்லப் பிள்ளை

கம்பீரமான ஆசிரியர்களைத் தவிர்த்து, கைக்கு அடக்கமான கங்காணிகளைத் தான் இன்று பத்திரிகை முதலாளிகள் விரும்புகின்றனர். அந்த வகையில் வைத்தியநாதன் ஆசிரியர் ஆனவுடன் செய்த முதல் வேலை தினமணியில் நீண்டகாலம் பணியில் இருந்த அனைவரையும் நிரந்தர ஊழியர்கள் என்பதில் இருந்து விடுவித்து, தற்காலிக ஒப்பந்த ஊழியர்களாக்கினார்.

வருடா வருடம் அவர்கள் ஒப்பந்தத்தை புதுப்பித்து அவர்கள் வேலையில் இருக்கலாமா? கூடாதா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை நிர்வாகத்திடம் இருந்து வலிந்து பெற்றுக் கொண்டார். இதில் 15 ஆண்டுகள், இருபதாண்டுகள், இருபத்திஐந்து ஆண்டுகள் வேலை பார்த்தவர்கள் தொடங்கி யாரும் விதிவிலக்கில்லை. இதன் மூலம் ஊழியர்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்த கிராஜிவிட்டி, பிராவிடண் பண்ட், இ.எஸ்.ஐ ஆகிய அத்தனை பலன்களும் பறி போனது மட்டுமின்றி, அனுபவத்தின் காரணமாக சம்பள உயர்வு பற்றி எல்லாம் வாய் திறக்கவே முடியாது. மேலும், யார் ஒருவரையும் பல ஆண்டு பணிக்கு பிறகு வெளியே அனுப்பும் போது, ‘வெறுங்கையோடு அனுப்பிவிடலாம்’ என்ற வகையில் அவர்களே எதிர்பாக்காத வகையில் நிர்வாகத்திற்கு பல கோடிகளை மிச்சமாக்கி கொடுத்துவிட்டார். ஏனென்றால், தினமணியில் நிருபர்கள், ஆசிரியக் குழுவினர் என சுமார் 220 பத்திரிகையாளர்கள் உள்ளனர். ஆகவே, அவர் நிர்வாகத்திற்கு மிகப் பெரிய பொருளாதாரப் பலனை உருவாக்கி, நம்பிக்கையை வலுப்படுத்திக் கொண்டார்.

தினமணியின் வலுவான அடித்தளத்திற்கு ஏ.என்.சிவராமனால் உருவாக்கப்பட்ட திறமையான ஆசிரியர், நிருபர் குழுக்களே காரணம். வைத்தியநாதன் ஆசிரியரானதும் அப்படிப்பட்ட திறமையாளர்களை தனக்கான அச்சுறுத்தலாக கருதி, அவர்களை பலவாறு அவமானப்படுத்தி வெளியேற்றினார். அவர்களில் சீனியர் நியூஸ் எடிட்டர் கே.எம்.சந்திரசேகர், தலைமை நிருபர் ஜெகதீசன் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் தினமணியுடனான தங்கள் உணர்வு பூர்வமான நீண்ட நெடிய பிணைப்பு தீடீரென்று அறுபட்ட வெறுமையில் மனம் நொந்து மரணத்தை தழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது!

கே.எம்.சந்திரசேகர்,                      ஜெகதீசன்

பல்லாண்டுகள் நிறுவனத்தோடு பிணைப்பில் உள்ள பல சீனியர்கள் முதல் நாள் இரவு ஒரு மணி வரையிலும் எடிட்டோரியல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அடுத்த நாள் அலுவலகத்திற்கு வரும் போது வாசலிலேயே நிறுத்தி, இண்டர்காமிலே ”வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளீர்கள்’’  என்ற அதிர்ச்சி தகவலை வாய்மொழியாகக் கேட்டு, அப்படியே வெறுங்கையோடு வீட்டுக்கு அனுப்பப்படுவதை ஒரு நடைமுறையாகவே உருவாக்கிவிட்டார் வைத்தியநாதன்.

பண்ணை எஜமானத்துவம்;

இப்படி சீனியர்களையே சீட்டுக் கிழித்து வீட்டுக்கு அனுப்புவதால், திகிலுக்கு உள்ளான அனைத்து ஊழியர்களையும் அடிமையாக நடத்துவது வைத்தியநாதனுக்கு எளிதாகிவிட்டது. வைத்தியநாதன் வெளியூர் புறப்பட்டால், அவர் பெட்டி,சமான்களை தூக்கிக் கொண்டு ரயில்வே ஸ்டேஷன் வரை சென்று வழியனுப்ப யாரேனும் இரு நிருபர்கள் சென்றாக வேண்டும். ரயில் அடுத்த ஊர் வந்து நிற்கையில் அந்த ஊர் நிருபர் ஒரு ஹாட் பேக்கும், பிளாஷ்க்கும் வாங்கி சூடாக இட்லியும், காபியும் எடுத்து வர வேண்டும். அடுத்ததாக  ரயில்வே ஸ்டேசனில் ஒரு நிருபர் சூடான தண்ணீரோடு பிளாஷ்க்கை தந்து செல்ல வேண்டும். அதிகாலை இறங்கும் ஸ்டேஷனில் ஒரு நிருபர் கார் ஏற்பாடு செய்து ஸ்டேசனுக்கு வந்து அவர் பெட்டி, பேக்களை தூக்கி சுமந்து அவர் தங்கும் ஹோட்டல் வரை சென்றுவிட வேண்டும். அவர் ஊரில் இருந்து திரும்பும் வரை உதவிகரமாக இருந்து வழி அனுப்பி வைக்க வேண்டும்.

சில ஊர்களில் அவர் புறப்படும் போது தான் போட்டு களைந்த துணிகளை துவைத்து அயர் பண்ணி வையுங்க. அடுத்த 15 நாட்களில் மீண்டும் வருவேன் என சலவைத் தொழிலையும் சேர்த்து செய்ய வைப்பார். இதையெல்லாம் சம்பந்தப்பட்ட நிருபர்களே மனம் வெதும்பி என்னிடம் பகிர்ந்து கொண்ட போது, ‘அறிவுத் துறையில் கூட இப்படி ஒரு அடிமை ஆதிக்க மனோபாவமா..?’ என திகைத்துப் போனேன்.

சென்னை பத்திரிகையாளர் சங்கம்

தினமணியில் நடைபெற்றுள்ள விரும்பத்தகாத நிகழ்வுகள் மற்றும் வைத்தியநாதனைக் குறித்த புகார்கள் தொடர்பாக மெட்ராஸ் யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் என்ற பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அதன் நிர்வாகிகள் சங்கர், மணிமாறன், ஸ்ரீதர் ஆகியோர், ”இது போன்று பத்திரிகையாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நிச்சயம் ஒரு முற்றுபுள்ளி வைப்போம்” என்றனர். ( இதன் தொடர்ச்சி பாகம் -2 படியுங்கள்)

தினமணி வைத்தியநாதனின் தில்லாலங்கடிகள்!- பாகம் 2

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time