தினமணி வைத்தியநாதனின் தில்லாலங்கடிகள்! – பாகம் 2

- சாவித்திரி கண்ணன்

தகுதியற்ற நபர்கள் பெரிய பதவிகளில் வந்து அமரும் போது தங்கள் மீது மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை கட்டமைத்துக் கொள்வதில் தான் கண்ணும், கருத்துமாக இருப்பார்கள். அவர்களிடம் எப்போதும் ஒரு இன்செக்யூரிட்டி பீலிங் ஓடிக் கொண்டே இருக்கும். அதை மறைத்துக் கொள்ளவே அதிக கெத்து காட்டுவார்கள்..! அந்த வகையில் அனுதினமும் வளைய வந்து கொண்டிருப்பவரே தினமணி வைத்தியநாதன்!

திறமையான இளைஞர்களை தீர்த்துக்கட்டி, வெளியனுப்பு;

தினமணி என்றாலே கார்ட்டூனிஸ்ட் மதி தான் அனைவர் நினைவுக்கும் வருவர். தனக்கு மிஞ்சி மதிக்கு பேர் வருவதாக கருதிய வைத்தியநாதன் ”ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது மதி இருக்க வேண்டும்” என நிர்வாகத்திற்கு நெருக்கடி தந்து மதியை வெளியேற்றினார். மிகச் சிறப்பான வகையில் வளர்ந்து வரும் நிருபராக அறியப்பட்ட சமஸ்க்கு வாழவே வழியில்லாத ஊதியத்தை நிர்ணயித்து, (ரூ11,500) பொருளாதார நெருக்கடி தாங்க முடியாமல் அவர் வேறு நிறுவனத்திற்கு செல்லும் சூழலை உருவாக்கினார். தமிழ் மகன், ரங்காச்சாரி என திறமையான ஆளுமைகளை தினமணிக்கு பங்களிக்க முடியாமல் வெளியேற வைத்துவிட்டார். செங்கோட்டை ஸ்ரீராம், கோலாகல ஸ்ரீனிவாசன், பத்மன்.. என அவர் கருத்தியலுக்கு ஒத்தவர்களிடமே கூட இணக்கமில்லாமல் இம்சித்து வெளியேற்றினார்! இது போல தினமணி தலையங்கங்களை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொருவர் எழுதித் தந்தார்கள் வைத்தியநாதனுக்கு! அப்படி மிகச் சிறப்பாக எட்டாண்டுகள் தலையங்கங்கள் எழுதியவர் ஆர்.சோமசுந்தரம் என்பது வெளியில் கசிந்தவுடன் அவரையும் வெளியேற்றிவிட்டார்.

பாலியல் பலாத்காரங்கள்

பேரக் குழந்தைகளை பார்த்துவிட்ட வைத்தி தினமணியில் வேலை செய்யும் பெண் பத்திரிகையாளர்களை கண்ணியமாக நடத்தமாட்டார். தேவையில்லாமல் அவர்களை தன் அறைக்கு அழைத்து ஏதாவது பேச்சு அளப்பார். பணி நேரம் முடிந்தாலும், அவர்களை புறப்படவிடாமல் இரவு பத்து மணிக்கும் மேல் வேலை வாங்குவார். இரவு 12 மணி வாக்கில் சம்பந்தப்பட்ட ஒரு சில பெண்களுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி, டிஷ்டர்ப் செய்வார். இதில் கலவரமாகி வேலையைத் துறந்து சென்ற பல பெண்கள் உண்டு!

ஒரு முறை கணவனை இழந்த ஒரு சக பெண் பத்திரிகையாளர் குடியிருப்புக்கு இரவு ஒரு மணிக்கு வைத்தி சென்ற போது, நாய்கள் பலமாக கத்தி குலைத்ததால்,  அக்கம்பக்கத்தவர்கள் அதிர்ந்து ஓடிவந்து,  நிலைமை ரசாபாசமான சம்பவங்கள் உள்ளிட்டு இது சம்பந்தமாக சொல்லப்பட்ட பல மேலதிகத் தகவல்களை இங்கு பதிவிடுவதை நாகரீகம் கருதி தவிர்க்கிறேன்.

சுயவிளம்பர மோகி;

தினமணிக்கான ஆசிரியர் வேலை என்று எதுவுமே செய்யாமல் வெறும் மேய்ப்பர் வேலையை மட்டுமே செய்து, தன்னை ஒரு மேதாவியாக வெளியில் காட்டிக் கொள்ளும் வைத்தியநாதன் தன்னை சிறப்பு விருந்தினராக அழைக்கும் நிகழ்வுகளை செய்தி, புகைப்படத்துடன் பிரசுரிப்பார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப அவர் பேசுவதற்கான உரைகளை எழுதி தரும் உதவி ஆசிரியர்கள் உள்ளனர். தாங்கள் எழுதித் தந்த அந்த உரையை தினமணி வைத்தியநாதனே சுயமாக பேசியதாக அடுத்த நாள்  தினமணியில் செய்திகளைப் போட வேண்டியதும் அவர்கள் தான்!  நிகழ்ச்சியில் போட்டோ,செய்தி வருவதால் பல நிகழ்ச்சிகளுக்கு அவரை விரும்பி அழைக்கும் போக்கும் அதிகரித்தது. அந்த வகையில் தினமணியில் இந்த 15 ஆண்டுகளில் வைத்தியநாதன் புகைப்படங்களே பல்லாயிரம் முறை தினமணியில் இடம் பெற்றுள்ளது. சென்னை எடிசனில் நிர்வாகத்தின் கண்களில் பட்டு விடும் என்பதால் ஒரு புகைப்படத்தை போட்டுக் கொள்வார். ஆனால், வெளியூர் எடிசனிலோ ஐந்தாறு புகைப்படங்களை போட வைத்திடுவார். நிர்வாக முதலாளிக்கு தமிழும் தெரியாது. வைத்தியநாதன் செய்யும் தகிடுதத்தங்களும் தெரியாது. காந்தி 150 நிகழ்வு தொடர்பாக, தான் சம்பந்தப்பட்ட எட்டு புகைப்படங்களை அவர் பிரசுரித்துக் கொண்டார். இது போன்ற விவகாரங்களில் குற்றவுணர்வே இன்றி, தான் செய்வது என்னவோ, அது, அவரது பிறப்புரிமை போல செயல்படுவார்.

அரசியல் பேரங்கள், தரகு வேலைகள்;

தினமணி ஆசிரியர் என்ற ஹோதாவில் அரசியல் தலைவர்களை நெருங்கி தரகு வேலைகள் செய்து, ஆதாயம் பார்ப்பதில் வல்லவர் வைத்தியநாதன். இந்த வகையில் டெல்லி மயூர்விகாரில் ஆடம்பர பிளாட்டும், சோழிங்க நல்லூர் அருகில் தாழம்பூரில் 16 கிரவுண்ட் வீட்டுமனையும், புழல் அருகே ஒரு பெரிய வீட்டுமனையும் தினமணி காலத்தில் அவர் வாங்கியவையாகும். அரசியல் ரீதியாக டி.டி.வி.தினகரன், சசிகலா, ஒ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியவர்களோடு அதிக நெருக்கம் உள்ளவர். இவர் அடிக்கடி விசிட் செய்யும் இடம், பெசண்ட் நகர் டி.டி.வி.தினகரன் பங்களா! ஜெயலலிதா இறந்த போது வைத்தியநாதன் இவ்வாறு தினமணியில் எழுதி இருந்தார்;

”ஜெயலலிதாவின் நிழலாகவும், மனசாட்சியாகவும் இருந்தவர் சசிகலா. மற்றவர்களால் மிகவும் தவறாக சித்தரிக்கப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட ஒரு பெண். இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா இருக்கும் போதே கட்சியை வழி நடத்தி வந்திருப்பவர் சசிகலா தான்! அதனால், அதிமுகவின் கட்சித் தலைமை என்பது இயற்கையாக சசிகலாவைச் சேரும். கட்சித் தலைமைக்கு சசிகலாவும், நிர்வாகத் தலைமைக்கு ஒ.பன்னீர் செல்வமும் என்ற இந்த ஏற்பாடே ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” என எழுதினார். அப்படி வைத்தி எழுதிய சில நாட்களில் சசிகலா சிறைக்கு சென்றார்!

சரிந்து போன சர்குலேஷன்

ஒரு தினசரியில் பகல் பொழுது முழுவதும் ஆசிரியர் அலுவலகத்திற்கே வராமல் இருக்க முடியுமா..? ஓவ்வொரு நொடியும் வந்து கொண்டுள்ள செய்திகள் பற்றிய பிரக்ஜை இல்லாமல் வெளியில் பிரபலங்களைத் தேடி சுற்றிக் கொண்டிருக்க முடியுமா..? அது வைத்தியால் மட்டுமே முடியும். இரவு பத்து மணிக்கு தான் அலுவலகமே வருவார். இரவு 2 மணிக்கு புறப்பட்டு விடுவார். திறமையும், அனுபவமும் உள்ள ஆசிரியர் குழுவினர் ஆசிரியர் துணையின்றி இயங்கிவருவது தான் தினமணியின் பலம், பலவீனம் இரண்டுமாகும்!

அதிமுக, பாஜகவோடு நெருக்கம் பாராட்டி பல பலன்களை அனுபவித்த வகையில் திமுக என்றால், அவருக்கு எட்டிகாய்! திமுகவிற்கு எதிரான எது ஒன்றையும் பூதாகரமாக்கி வெளியிடுவார். ஆனால், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் தடால் பல்டி அடித்து, ”அண்ணாவிற்கு அடுத்த பெரும் தலைவர் ஸ்டாலின் தான்” என வெட்கமில்லாமல் துதி பாடினார்.

ஆண்டாள் – வைரமுத்து விவகாரத்தில் ஜீயரின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்தார்! இந்த மாதிரி எல்லாம் இதழியல் அறமின்றி தாறுமாறாக எழுதியும், தன்னை முன்னிலைப் படுத்தி செயல்பட்டும் தினமணியின் தரத்தையே தாழ்த்திவிட்டதால் வைத்தி ஆசிரியர் பொறுப்பு எடுக்கும் போது 2,20,000 ஆக இருந்த சர்குலேஷன் தற்போது 77,000 ஆயிரமாக சரிந்துவிட்டது.

தினமணி வைத்தியா? திருட்டு வைத்தியா?

தினமணிக்கு நூல் விமர்சனங்களுக்காக ஏராளமான புத்தகங்கள் வரும். அந்த புத்தகங்களில் ஒன்று விமர்சனம் எழுதுபவருக்கு தரப்படும். மற்றொன்று அலுவலகத்தில் வைக்கப்படும் என்பது தான் நடைமுறை. வந்து குவியும் அனைத்து புத்தகங்களையும் விமர்சனம் எழுதுவது நடைமுறை சாத்தியமல்ல. மேலும், விமர்சனம் செய்யாத புத்தகங்களும் பல்லாயிரக்கணக்கில் அலுவலகத்தில் இருக்கும். இவற்றை பள்ளி, கல்லூரி நூலகங்களுக்கு தருவது சில அலுவலக வழக்கம். ஆனால், தினமணிக்கு வரும் அத்தனை நூல்களையும் வைத்தியநாதன் தன் வீட்டிற்கு அள்ளிச் சென்று விடுவார். இப்படி ஏறத்தாழ சுமார் ஒரு லட்சம் புத்தங்களை அவர் அள்ளிச் சென்றதாக தினமணி அலுவலகத்தில் சொல்லப்படுகிறது. இதைப் போல அவர் அலுவலகத்தில் செய்யும் சில திருட்டுகளைக் கேட்கும் போது சிரிப்புத் தான் வருகிறது! தீபாவளி வந்தால் காவல்துறையை நிர்பந்தித்து நூறு பட்டாசு பெட்டிகளையாவது ஓசியில் பெறுவார். இதே போல பெரும் நிறுவனங்களிடமிருந்து ஏகப்பட்ட ஸ்வீட் பாக்ஸ் ஓசியில் பெறுவார்! அத்தனையும் தன் வீட்டிற்கே அல்பத்தனமாக எடுத்துச் செல்வாராம்!  3.75 லட்சம் சம்பளம், இது தவிர வீட்டு வாடகை, கார், டிரைவர் ,பெட்ரோல் எல்லாம் கொடுத்து நிர்வாகம் மதித்தாலும், அற்பர்கள் என்றும் அற்பர்களாகவே இருப்பர் என்பதற்கு வைத்தியே உதாரணம்! பாவம், தினமணி நிர்வாகத்திற்கு இதெல்லாம் தெரியாது போலும்!

கப்சா வைத்தியநாதன்;

வைத்தியநாதன் தினமணிக்கு வருவதற்கு முன்பு ‘நியூஸ் கிரைப்’ என ஒரு சிறிய நியூஸ் ஏஜென்சி நடத்தினார். தமிழக செய்திகளை வட இந்திய இந்திய பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய வகையில் ஒரு சொற்ப தொகை கிடைத்து வந்தது. அப்போது ‘சூர்யா’ என்ற இந்தி பத்திரிகைக்கு ஜெயலலிதா பேட்டியை சுவைபட எழுதி அனுப்பி இருந்தார். அது ஜெயலலிதாவின் கவனத்திற்கு போனதும், கொதித்து போய், ”இந்த நபர் என்னை சந்திக்கவும் இல்லை, நான் பேட்டி தரவும் இல்லை.” என சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு கடிதம் அனுப்பினார். அவ்வளவு தான்,  வைத்தியின் வண்டவாளம் வட இந்திய பத்திரிகை வட்டாரத்தில் சந்தி சிரித்தது. அத்தோடு மூட்டை கட்டிக் கொண்டு முழித்தவருக்கு, ‘குரு’ பார்வைபட, தினமணிக்கு ஆசிரியரானார். தற்போதும் அவர் ‘பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்’ என்ற ஒரு தொடரை 10% உண்மை,   90% கப்சாவுடன் எழுதிக் கொண்டிருக்கிறார். பிரணாப் முகர்ஜி உயிரோடு இல்லாதது இவருக்கு மிகவும் செளகரியமாகிவிட்டது. பத்திரிகையாளர் என்ற வாய்ப்பை அதிகார மையத்தை அடிவருடி சுகம் பெறும் வாய்ப்பாக கருதும் இப்படிப்பட்ட இழிகுண, கழிசடைகளால் தான் இதழியல் துறையின் மதிப்பே அதள பாதாளத்தில் வீழ்கிறது.

சர்வாதிகார சாடிஸ்ட்

வைத்தியநாதனின் பூர்வீகம் பாலக்காடு. தந்தை கிருஷ்ணன் குட்டனுக்கு நெல்லை மதுரா கோட்ஸில் வேலை கிடைத்ததைத் தொடர்ந்து தமிழகம் வந்ததே அவரது குடும்பம்! மலையாளம் தாய்மொழி. தற்போது கூட , வீட்டில் பேசு மொழி மலையாளம் தான். இவர் எந்த ஒரு மொழியிலுமே எழுத்தாற்றல் கொண்டவரல்ல. தமிழில் எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் எழுதியவரல்ல. ஆனால், தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் தன்னை ஒரு பேராளுமையாக காட்டிக் கொள்ள தினமணி ஆசிரியர் பொறுப்பு அவருக்கு ஒரு கருவியாகிவிட்டது. அவர் தமிழராக இல்லாததோ, இலக்கிவாதியாய் இல்லாததோ, சிறந்த பத்திரிகையாளராய் இருக்க முடியாதிருப்பதுவோ கூட குறையில்லை. முற்றிலும் மனித நேயம் தொலைத்த ‘சாடிஸ்டாக’ இருப்பது தான் வேதனை.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

தினமணி பத்திரிகையாளர்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time