நீண்ட கால ஆசிரியர்களின் பணியிட மாற்றக் கோரிக்கைகளை ஆட்சிக்கு வந்து இத்தனை நாள் ஆறப் போட்டுவிட்டு தற்போது அவசரம் காட்டினால் ஏற்படப் போகும் விபரீதங்களுக்கு யார் பொறுப்பேற்பது..?
விருப்பப்பட்ட இடங்களுக்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு ஏதுவாக வெளிப்படையான கலந்தாய்வு அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முன்னெடுப்பால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
கணவன் ஓரிடத்தில், மனைவி ஓரிடத்தில் என குடும்பங்களை பிரிந்து பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிட மாறுதல்கள் கேட்பதும், அந்தச் சூழ்லைப் பயன்படுத்தி கையூட்டு ஆதாயம் அடையும் அற்பர்களும் கல்வித் துறையில் கோலோச்சிய காலம் ஒன்று இருந்தது! மற்ற துறைகளில் இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் ஒரு காலத்தில் சிபாரிசும், அரசியல் குறுக்கீடும் மற்றும் பெரும்பணம் புழக்கமும் இருந்து வந்தன. வெளிப்படையான கலந்தாய்வு முறை தொடங்கிய பிறகு ஊழலுக்கு இடமளிக்காமல் நேர்மையாக பணி மாறுதல் நடைபெற்று வருவது ஆசிரியர்கள் மத்தியில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அளித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு பிரச்சனைகளால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற வில்லை.
இந்தக் காரணத்தினாலும், பணி ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய காரணத்தினாலும் பதவி உயர்வு பெறுபவர்களின் வாய்ப்பு இரண்டு ஆண்டுகளாக தள்ளிப்போனது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் ஆசிரியர் பணி மாறுதல் நடைபெறும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற அரசும் இதை ஆண்டுதோறும் நடத்துவோம் என்று சட்டசபையில் அறிவித்தது. இதனால் பொது மாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் கடந்த ஜூலை மாதத்திலிருந்தே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ஒருவழியாக 2021 டிசம்பர் 31ஆம் தேதி அன்று ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த ஆண்டுக்கான இடமாறுதல்,பணி உயர்வு ம்ற்றும் பணி நிரவல் கலந்தாய்வு ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18 வரை நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒருபுறம், பணி மாறுதல் எதிர்பார்த்திருந்த ஆசிரியர்கள் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மற்றொருபுறம், அரசு பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். பொது முடக்க காரணங்களால் பள்ளிக்கு நேரடியாக சென்று பயில முடியாத தங்கள் பிள்ளைகள் தற்போது தான் பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றனர். தற்போது அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதலில் சென்று விட்டால், புதிதாக அந்தப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மாணவர்களை புரிந்து கொண்டு கற்பிப்பதற்குள் பொதுத்தேர்வு வந்துவிடும் . கண்டிப்பாக மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தங்கள் பிள்ளைகளின் கற்றல் பாதிக்கப்படுமோ என்று அவர்கள் அஞ்சுவதில் நியாயம் உள்ளதாகவே தோன்றுகிறது. இந்த மாதத்தில் கலந்தாய்வு நடைபெற்றால் வரும் மே மாதம் ஓய்வு பெறும் நிலையில் உள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலி பணியிடமாக காட்டப்படாது. தற்போது கலந்தாய்வு நடைபெற்றால் மீண்டும் அடுத்த ஆண்டுதான் மீண்டும் நடைபெறும். மே மாதத்தில் காலியாகும் பணியிடங்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு காலியாகவே இருக்கும். இதனால் பள்ளிகளும் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதை காரணம் காட்டி மே மாதம் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்துவதே ஆகச் சிறந்ததாக இருக்கும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
இந்த முறை கலந்தாய்வு அறிவிப்பை வெளியிடும் போதே டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதியில் இருந்து ஜனவரி 7ஆம் தேதி வரை பணி மாறுதல் வேண்டுவோர் எமிஸ் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஆனால் ஜனவரி 5ஆம் தேதி வரை எமிஸ் இணையதளத்தில் அதற்கான வழிமுறைகளை காட்டப்படவில்லை. இது ஆசிரியர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. விண்ணப்பம் அளிக்க கடைசி ஒருநாள் இருக்கும் நேரத்தில் அதுவரை இணைய தளம் செயல்படாதது அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவேற்ற முடியாவிட்டால் நேரடியாக பழைய முறையிலேயே விண்ணப்பமாக அளிக்கலாம் என ஆசிரியர்கள் முடிவு எடுத்தாலும் அதை பெற்றுக்கொள்வதற்கு கல்வி அலுவலர்கள் முன்வரவில்லை.
பிறகு அதற்கான இணைய தளம் சிறிது சிறிதாக செயல்பட தொடங்கினாலும் இந்த நிமிடம் வரை அது முழுமை பெறவில்லை. சிலருக்கு பணியில் சேர்ந்த தேதி தவறாக உள்ளது சிலருக்கு பணி வரன்முறை தேதி தவறாக இருந்தது. அதில் திருத்தம் செய்ய முடியாத வகையில் அமைந்திருந்தது. பழைய மாறுதல் உத்தரவுகளை பதிவேற்றம் செய்வதிலும் இடர்பாடுகள் நீடித்தன. ஒவ்வொரு முறையும் தவறுகளும், இடைஞ்சல்களும் சுட்டிக் காட்டிய பின் ஒவ்வொன்றாக சரி செய்து வருகின்றனர். ஒருபக்கம் மாவை அரைத்துக் கொண்டே இன்னொரு பக்கம் வடை சுடுவது போல இருக்கின்றது என்று ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர்.
ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெறுவதாக இருந்த பணி மாறுதல்கலந்தாய்வு கொரோனா பரவலை காரணம் காட்டி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதற்கு வாய்ப்பு இருப்பதாக நாளிதழ்களில் ஹேஷ்யமாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணி மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி சனவரி 7 ஆம் தேதியில் இருந்து சனவரி 10ஆம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விற்கான இணையதளம் உருவாக்கலில் இவ்வளவு அலட்சியமும் காலதாமதம் ஏற்படுவது அந்த துறையின் செயல்பாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.
கடந்த பத்தாண்டுகளாக கல்வித்துறையில் நாளொரு அறிவிப்பை வெளியிடுவதும் பின்பு அதை வாபஸ் பெறுவது என பல குளறுபடிகளை கொண்டிருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகாவது நிலைமை சீரடையும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நிலைமை அதைவிட மோசம் ஆனது போல் தற்போது நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அரசு எப்போது வேண்டுமானாலும் பொதுமாறுதலையோ அல்லது எந்த நிகழ்வையோ அறிவிக்கட்டும். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து உயர்நிலை அலுவலர்களின் பொறுப்பாகும். அந்த பொறுப்பை அவர்கள் உணர்ந்து செயல்படாததன் வெளிப்பாடே இந்த குளறுபடிகள் என ஆசிரியர் சங்கங்கள் கருதுகின்றன.
Also read
தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பல ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற ஐயப்பாட்டில் உள்ளனர். எனவே அவர்களுக்கு போதிய அவகாசம் தந்து மே மாதம் பொதுத் தேர்வுகள் முடிந்த பின்பு ஆசிரியர்கள் பொதுமாறுதலை நடத்துவதே சாலச் சிறந்ததாக இருக்கும்.
நாட்டின் எதிர்காலத்தை சீரமைக்கும் முக்கியமான கல்வித் துறையில் முறையான திட்டமிடலையும், அதற்கான பணிகளையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது கல்வித் துறைக்கு பெருமை சேர்க்கும்.
கட்டுரையாளர்; நாகை பாலா
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து பணியிடங்களின் பணிமூப்பு மாவட்ட அளவிலேயே இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கல்வி இயக்குனர் பதவியில் இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால்தான் பள்ளிக் கல்வியின் தரம் உயரும். அல்லது அரசியல்வாதிகளின் பை பணத்தால் நிறையும். அதற்கு சில அதிகாரிகள் துணை நிற்று தங்களையும் வளப்படுத்திக் கொள்வர்.