உண்மையில் இது யாரும் பேசத் துணியாத கதை! இது வரையிலான இந்திய சினிமாவில் திருநங்கையை கதாநாயகியாக்கும் துணிச்சலோ, திருநங்கையின் காதல் உணர்வையும், வலியையும் சொல்லும் கண்ணோட்டமோ ‘சண்டிகர் கரே ஆஷிக்கி’ யைப் போல வந்ததில்லை!
சென்ற வாரம் ஸ்ருதி சித்திரா என்பவர் உலக அளவிலான திருநங்கை அழகு போட்டியில் முதன்முதலாக இந்திய அளவில் வெற்றி பெற்றவராக கவனம் பெற்றார்.
திருநங்கை காதலை மையக் கருவாகவும், அந்தக் காதலை இந்த சமூகம் எதிர் கொள்ளும் அணுகுமுறையை யதார்த்தமாக, கலைநயத்துடனும் தந்துள்ளார் இயக்குனர் அபிசேக். திருநங்கையாக படம் முழுக்க நடிப்பதற்கு ஒத்துக் கொண்ட வாணிகபூரின் துணிச்சலை பாராட்டத் தான் வேண்டும்.
ஆயுஷ்மான் குரானா நடித்த இந்திப் படமான ‘சண்டிகார் கரே ஆஷிகி’ (Chandigarh kare Aashiqui- சண்டிகரில் காதல்) நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது. வாணிகபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்தக் காதல் படத்தை அதன் கதைக்காக பார்க்கலாம்.
ஆயுஷ்மான் குரானா வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர். article- 15 படத்தில், தலித் சிறுமிகளின் மீதான வன்முறையை விசாரிக்கும் காவல் அதிகாரியாக நடித்திருப்பார். இப்படம் தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் உதயநிதி நடிப்பில் வரவிருக்கிறது.
கதையின் நாயகனான மனு ஜிம் எனப்படும் நவீன உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறான். பாடி பில்டராக இருக்கிறான். . ஆணழகன் போட்டிக்கு தயாராகி வருகிறான். மனைவியை இழந்த அவனது அப்பாவும், இரு தங்கைகளும், தாத்தாவும் அவனை திருமணத்திற்கு வலியுறுத்தி வருகின்றனர். குர்காவனில் நடத்திவரும் அந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பெரிதாக வருமானம் இன்னமும் வரவில்லை.
அந்தக் கூடத்திற்கு பயிற்சி ஆசிரியராக மான்வி ( வாணி கபூர் ) வருகிறாள். இதனால் நிறைய பேர் பயிற்சிக்கு வரத் தொடங்குகிறார்கள். மனுவுக்கும், மான்விக்கும் இடையில் காதல் ஏற்படுகிறது. உடலுறவில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தக் காட்சிகள் மிக நெருக்கமாக காட்டப்படுகின்றன.(ஒருவேளை, கதைக்கரு இதற்கான தேவையை உருவாக்கி இருக்கலாம்).இது முதல் பாதி.
இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அப்போது மான்வி, தான் ஆணாக இருந்து, அறுவை சிகிச்சைக்கு பின்பு பெண்ணாக மாறியவள்’’ என்கிறாள்.
உண்மை தெரிந்த பிறகு, மான்வி மீது , கதாநாயகனுக்கு கோபம் வருகிறது. அவளை வேலையை விட்டு அனுப்பவும் முடியவில்லை. இவனை அனைவரும் எள்ளி நகைக்கிறார்கள். மான்வி அவமானப்படுத்தப்படுகிறாள். பள்ளி, கல்லூரி, வீட்டில் அம்மா என தொடர்ந்து புறக்கணிப்புகளையும், அவமானங்களையும் அவள் சந்தித்தவள் தான். எனவே, களத்தில் நின்று பிரச்சினையை எப்படி எதிர் கொள்கிறாள் என்பதே கதை. இந்த படம் இந்திய சமூகத்திற்கு திருநங்கைகள் குறித்த ஒரு கண் திறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களின் உணர்வுகளை, முக்கியமாக வலிகளை பிரதிபலிக்க வேண்டிய பொறுப்பு கலைகளுக்கு உண்டு. அந்த வகையில் இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது. இருவரும் சேர்ந்தார்களா ! பிரிந்தார்களா ! என்ன ஆனது? என்பது மீதிக் கதை. அபிஷேக் கபூர் திரைப்படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார்.
திரைக்கதை இரண்டாம் பாதியில் நிதானமாக செல்கிறது. போட்டியில் மனு வெற்றி பெறுவானா? ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை கேள்வி கேட்க மற்றவர்களுக்கு என்ன அவசியம்? அவர்கள் இருவரும் சேர்ந்திருப்பதால் அவர்கள் சகோதரிகள் வெட்கப் படுவானேன் ? தனது பிள்ளைகளுக்குத் தெரியாமல், ஒரு பெண்ணிடம் உறவு வைத்திருக்கும் தந்தைக்கு இதைப் பற்றி கேள்வி கேட்க உரிமை உள்ளதா ? இப்படிப் பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழுப்பும் இந்தப் படம் இரண்டு மணி நேரம் ஓடுகிறது.
Also read
தன் பாலின உறவு, சேர்ந்து வாழ்தல், மூன்றாம் பாலின உரிமை குறித்த விழிப்புணர்வு மெல்ல, மெல்ல சமூகத்தில் ஏற்பட்டு வருகிறது. தொழிலாளி என்ற வரையறையில் மூன்றாம் பாலினத்தவரையும் இப்போது சட்டத்தில் சேர்த்துள்ளனர். நீதிமன்றங்களும் சாதகமான தீர்ப்புகளைத் தந்து வருகின்றன. பால் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாக நடந்து வருகிறது. எனவே இதுபோன்ற சமூகப் பிரச்சினைகள் கலைப் படைப்பின் விவாதத்திற்கு வராதா என்ன ? இந்த மனநிலைகளை நல்ல முறையில் பிரதிபலிக்கும் வகையில் திரைப்படங்கள் உருவாக வேண்டும்.( தன்பாலின உறவு கொண்ட ஒருவனை குற்றவாளியாக ‘வேட்டையாடு விளையாடு படத்தில் சித்தரித்து இருப்பார்கள்) இந்தப் படம் வரவேற்பைப் பெறும். இதற்கு ஐ.எம்.பி தரவரிசையில் 7.1 புள்ளிகள் கொடுத்துள்ளனர்.
பாடல்களை ரசிக்க நமக்கு மொழி தெரியாது இருக்கலாம். ஆனால், பேசப்படும் கதைக் களனுக்காக இதனைப் பார்க்கலாம். மற்றபடி, இது ஒரு சாதாரண காதல் கதைதான். பேரா.அ.மார்க்ஸ் சொல்லுவது போல, இது ‘பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்’ கதை.
சினிமா விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply