ஏன் இவ்வளவு குளறுபடிகளை செய்துள்ளது தமிழக காவல் துறை? உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தலை குனிய நேர்ந்தது எதனால்..? ராஜேந்திர பாலாஜியை தண்டிக்கும் நோக்கம் உண்மையில் தமிழக அரசுக்கு இருக்கிறதா? இல்லை தண்ணிகாட்டி விட்டுவிடுவது தானா?
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பலரிடமும் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்ற ராஜேந்திர பாலாஜி மீது ஆகஸ்ட் மாதம் தொடங்கி சுமார் 32 மோசடிப் புகார்கள் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்துள்ளது! இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக அரசும், காவல்துறையும் அசமந்தமாக இருப்பதாகவே தெரிகிறது.
‘வழக்கு பதிவதில் தாமதம், எப்.ஐ.ஆர் போடுவதில் தாமதம், கைது விவகாரத்தில் அசட்டை…’ என பல கட்டங்களில் அலட்சியம் காட்டியது தமிழக காவல்துறை! இது போல இன்னும் பல குளறுபடிகளையும் அவரது கைது விவகாரத்தில் அரங்கேற்றி உள்ளது என்பது இன்றைய உச்ச நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதை தமிழக அரசே சுலபப்படுத்தி தந்திருப்பதாகத் தான் நம்பத் தோன்றுகிறது.
அதே சமயம் நீதிபதிகள் ராஜேந்திர பாலாஜி தொடர்பாக காட்டிய விஷேச அக்கறையும் குறிப்பிடத் தக்கது.
”ராஜேந்திர பாலாஜி கைதில் தமிழக அரசுக்கு ஏதேனும் உள் நோக்கம் உள்ளதா..? அவரது முன் ஜாமின் மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில் ஏன் அவசர அவசரமாக கைது செய்தீர்கள்? தமிழ்நாடு அரசு இதில் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறதா ?” என்று நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ”ராஜேந்திர பாலாஜியை பொறுமையாகவே கைது செய்தோம். அவர் மீது பல புகார்கள் வந்தன. அடுத்தடுத்த புகார்கள் காரணமாக அவரை கைது செய்ய முயன்ற போது அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்தார். அதனால், அவரை கைது செய்யவில்லை. அவரை தொந்தரவும் செய்யவில்லை. அதன்பின் ஜாமீன் கிடைக்கவில்லை என்றதும், கைது நடவடிக்கை தொடங்கியது. அதற்குள் அவர் தலைமறைவானார். இதனால், விசாரணையை கருத்தில் கொண்டு அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த நபருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதம் வைத்தார்.
இதற்கு நீதிபதிகள் தரப்பு, ”அவர் தானே தலைமறைவானார்? அவரின் குடும்பம் என்ன செய்தது? எதற்காக அவரின் குடும்பத்தில் இருப்பவர்களை மற்றும் வழக்கறிஞர்களை ஏன் காவல்துறையினர் தொல்லை செய்தனர்? அப்படி இந்த வழக்கில் அவசரம் என்ன? காவல்துறை நடந்து கொண்ட விதம் சரியாக இல்லை. ஏன் இந்த வழக்கில் அவசர அவசரமாக செயல்பட்டீர்கள்.” என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஆனால், ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் காட்டப்பட்ட விஷேச அக்கறையில் துளியேனும் ப.சிதம்பரம் மற்றும் கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் வெளிப்பட்டதில்லை என்பது நியாபகத்திற்கு வந்து தொலைகிறது.
இது ஒரு புறமிருக்க ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதலே அதிக புகார்கள் குவிந்தன. ஆவின் நிறுவனத்தை சூறையாடி ஏப்பம் விட்டவர் ராஜேந்திரபாலாஜி என்பது மத்திய தணிக்கைதுறை ஆடிட்டர் ரிப்போர்டிலேயே வெட்ட வெளிச்சாகியும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இது வரை முறையாக புகார்களை எடுத்துச் சென்று விசாரிக்க தமிழக அரசு ஆணையிட்டதாகத் தெரியவில்லை. துறைரீதியாக ஒப்புக்குசப்பான விசாரணை மற்றும், ஒரு சில அதிகாரிகள் மட்டத்தில் டிரான்ஸ்பர் என்பதோடு விஷயம் தேங்கிவிட்டது. அதைவிடக் கொடுமை ஆட்சியை விட்டு இறங்கும் தறுவாயில் அவர் 236 தேவையில்லாத புதிய பணி இடங்களை ஆவினில் உருவாக்கி பெரும் பண வசூல் செய்து வேலைக்கு எடுத்தார். அதையும் இந்த ஆட்சியாளர்கள் ரத்து செய்யவில்லை. இதை நாம் ஏற்கனவே அறம் இணைய இதழில் எழுதி உள்ளோம்.
ராஜேந்திர பாலாஜியுடன் ரகசிய பேரமா? என்ன நடக்கிறது?
தற்போதைய கைது விவகாரத்தை எடுத்துக் கொண்டால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 32 புகார்கள் குவியத் தொடங்கியும் ராஜேந்திர பாலாஜி மீது நவம்பர் மாதம் தான் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அப்படி எப்.ஐ.ஆர் பதிவு செய்த பிறகு அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்து விசாரித்திருக்க வேண்டும். அதை ஏன் நீங்கள் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் கேட்ட போது தமிழக அரசிடம் பதில் இல்லை.
அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியை மட்டும் தேடிக் கொண்டிருந்தது தமிழக காவல்துறை. அவரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து தந்த நல்லதம்பியையோ, அல்லது இந்த பண விவகாரங்களில் டீலிங் நடத்திய அவரது மூன்று உதவியாளர்களையோ கைது செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக விட்டு வேடிக்கை பார்த்தது. இதை எப்படி புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.இவர்களை கைது செய்திருந்தாலே கூட வழக்கில் கணிசமான முன்னேற்றம் கிடைத்து இருக்கும். வழக்கை வலுப்படுத்தி இருக்கலாம். ஆனால், ஏன் செய்யவில்லை.
Also read
அடுத்ததாக ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் சோதனை போட்டதை உச்ச நீதிமன்றம் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டு சீறியுள்ளது. அதற்கு காரணம் எந்த ஒரு வழக்கறிஞர் வீட்டில் சோதனை போடுவதாக இருந்தாலும் அதற்கு சம்பந்தப்பட்ட ஜீரிஸ்டிசனில் உள்ள நீதிமன்றத்தில் வாரண்ட் வாங்கி பண்ண வேண்டும் என்பது விதி. இந்த விதியை மீறுவது கடும் கண்டணத்தை பெற்றுத் தரும் என்பது சாதரண காவல்துறை கடை நிலை ஊழியருக்கு கூட தெரிந்த ஒன்று தான்! அப்படி இருக்க, ‘ஏன் அந்த வழிமுறையை தவிர்த்தனர்? வேண்டுமென்றே நடந்ததா..?’ என்ற சந்தேகம் வலுக்கிறது. அத்துடன் உயர்நீதிமன்றம் ஜாமீன் தள்ளுபடி செய்த போது காவல்துறை சூழ ராஜேந்திர பாலாஜி பொது வெளியில் நின்று இருந்தார். அதன் பிறகு சாவகாசமாகத் தான் அவர் அங்கிருந்து தப்பித்து உள்ளார். இதற்கும் இன்று வரை விடை இல்லை. மேற்படி விவகாரங்களை எல்லாம் ஒன்று சேர்த்து பார்க்கையில், ”நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ அழுவது போல நடி” என சொல்லி வைத்து விளையாடுகிறார்களோ என்று தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
வழக்கு பதியும் அரசும் அரிச்சந்திரன் இல்லை. வழக்கு உள்ளனவரும் தர்மபிரபு இல்லை.
ஆக ஆக எல்லாம் ஒரு வித கணக்குதான்