பெண்களின் திருமண வயதை 21 ஆக்குவது ஆகப் பெரிய அராஜகம்!

-பீட்டர் துரைராஜ்

21 வயது வரைக்கும் பெண்ணுக்கு திருமணம் செய்யக் கூடாது என்பது முற்போக்கு முகமுடி கொண்ட படு பிற்போக்கான சட்டம்! காதல் மணத்தை கருவறுக்கத் துடிக்கும் சாதி ஆதிக்க வாதிகளுக்கு இது சாதகமாகலாம்! சட்டவிரோத கரு கலைப்புகளை அதிகப்படுத்தலாம்… இன்னும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்..? அலசுகிறார் மஞ்சுளா!

பெண்களின் திருமண வயதை  உயர்த்த வேண்டும் என்று,  சமதா கட்சியின் ஜெயா ஜெட்லியின் தலைமையிலான பாராளுமன்றக் குழு அரசுக்கு பரிந்துரைத்து உள்ளது. இதுச்  சட்டமானால் 21 வயதுக்கு கீழ் நடைபெறும் திருமணங்கள் குழந்தைத் திருமணம் என்று கருதப்படும். அதற்கேற்றவாறு நடைமுறையில் இருக்கும் பல சட்டங்கள் திருத்தப்படும். இந்தப் புதிய சட்டத்தினால்,  பெண்களின் உயர்கல்வி அதிகரிக்கும்; உடல்நலம் மேம்படும்; பாலின சமத்துவம் ஏற்படும் என்று அரசு  கூறுகிறது. பல மருத்துவர்கள், அறிவு ஜீவிகள், சமூகப் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் இதனை ஆதரித்து வருகின்றனர்.  ஆனால் இடதுசாரி மகளிர் அமைப்புகள்   ‘முற்போக்கான தோற்றத்தை’ இந்த சட்டம் தருகிறது, உண்மையில் இதனால் பெண்களுக்கு பலனில்லை என்று சொல்லி,  ஒருமித்த குரலில் இந்தச்  சட்டத்தை எதிர்க்கின்றன.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் சட்டம் வந்தால் ‘சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகமாகும்’.  பெண்களின் சட்டப்பூர்வ  திருமண வயது இப்போது  18 ஆக உள்ளது. இதனை 21 வயதாக உயர்த்தும் நோக்கோடு ஒரு சட்ட முன்வடிவை, ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில், கடந்த டிசம்பர் 21 ம் நாள்  அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனையில் உள்ளது.

தற்போதே தவிர்க்க முடியாத நிலை!

1978 ஆம் ஆண்டு, ஆண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18 லிருந்து 21 ஆகவும், பெண்களின் திருமண வயதை 15 லிருந்து 18 ஆகவும்  உயர்த்திச் சட்டம் இயற்றப்பட்டது. சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 ஆண்டுகள் கடந்தும், 23 சத பெண்கள், 18 வயது ஆவதற்கு முன்பாகவே  திருமணம் செய்து கொள்கின்றனர். ஒரு சில மாநிலங்களில் 40 சதம் வரை கூட 18 வயது ஆவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களில் யாரும் சட்டரீதியாக தண்டிக்கப்படுவதில்லை. இவர்களில் பெரும்பாலோர் வறுமை நிலைக்கு கீழ் உள்ளவர்கள். சாதிரீதியாக, வர்க்கரீதியாக பின்தங்கி உள்ளவர்கள். அரசுப் பள்ளிகள் கூட இல்லாத இடங்களிலும், வறுமை காரணமாக குழந்தை தொழிலாளர்களாக மாறுவதாலும் கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காதவர்கள். வறுமை, எதிர்காலம் பற்றிய பாதுகாப்பின்மை போன்ற காரணிகளால் பெற்றோர்கள், தங்கள் பெண்களுக்கு  சிறு வயதிலேயே திருமணம் செய்துவிக்க விரும்புகிறார்கள்.

இளவயதில் காதல் ஏற்படுவது இயல்பானதுதான். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி – முருகேசன் சம்பவமானாலும், சமீபத்தில் ஏற்பட்ட கௌசல்யா – சங்கர் சம்பவமானாலும் இவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள பெற்றோரும், சமூகமும் தயாராக இல்லை. காதல் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்தவுடன் படிப்பை இடையிலேயே நிறுத்தி விடுகிறார்கள். விரைவில் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.  இது சட்டமானால் 21 வயதுக்கு கீழே நடைபெறும் திருமணங்கள் சட்டவிரோதமானவைகளாக கருதப்படும்.

திருமணம் செய்துகொண்டவர்களை, உடலுறவு கொண்டார்கள்  என்று சொல்லி, போஸ்கோ போன்ற சட்டத்தின் கீழ் தண்டிக்க  வேண்டிய நிலை வரலாம். இதன் மூலம் சாதி,மத வெறி பிடித்தவர்கள், சட்டத்தின் துணை கொண்டே காதலர்களை தண்டிக்க தவறாக பயன்படுத்துவார்கள்.

21 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் ஒருவேளை கருவுற நேரிட்டால் அதைக் கருக்கலைப்புச் செய்ய முடியாது. 21 வயதுக்கு கீழ்  கருச்சிதைவு கொள்வதை இச்சட்டம் சட்டவிரோதமானவை ஆக மாற்றும். இதனால் பெண்களின் உடல் நலமும், உயிர் பாதுகாப்பும் சிக்கலாக மாறும். ஏற்கனவே ‘ ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்து- முஸ்லிம் காதலர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன்மூலம் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் 33 சத இட ஒதுக்கீட்டை சட்டமாக்க பாஜக அரசு தயாராக இல்லை. கல்வி, சமூக, பொருளாதார வாய்ப்பு கிடைக்கப் பெற்ற  பெண்களின் திருமண வயது அதிகரித்துள்ளது. சட்டம் இல்லாமலேயே, இப்போது பெண்களின் சராசரி திருமண வயது 22 ஆக உயர்ந்துள்ளது.

பேறுகால மரணங்கள்!

24 வயது முதல் 29 வயது வரை கர்ப்பம் அடைந்தால், பெண்களின் உடல்நலத்திற்கும், குழந்தையின் உடல்நலத்திற்கும் நல்லது. இதனால் பேறுகால மரணம் குறையும். திருமண வயதை உயர்த்தினால் பெண்கள் குழந்தைபெறும் வயது உயரும் என்ற வாதத்தைச் சொல்லுகிறார்கள்.

இந்தியாவில் 50 சத கர்ப்பிணிப் பெண்கள் இரத்த சோகையோடு இருக்கின்றார்கள். இதனால் பேறுகால மரணங்கள் அதிகமாகின்றன. கேரளாவில் 10,0000 பிரசவங்கள் நடந்தால் அதில் 43 பேர் இறக்கிறார்கள். இதுவே, அசாமில் 215 ஆக இருக்கிறது. ஊட்டச்சத்து குறைவு இத்தகைய மரணங்களுக்கு முக்கியமான காரணமாகும். 18 வயதில் கர்ப்பிணியாக இருந்தாலும், 24 வயதில் கர்ப்பிணியாக இருந்தாலும் அவர்களுக்கு  ஊட்டச்சத்து கிடைப்பதில்லை. இதைத் தீர்க்க அரசு என்ன செய்துள்ளது ?

காய்கறி விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, இறைச்சி, மீன், பால் போன்ற சத்தான உணவு  வாங்க இயலாமை போன்ற காரணிகளால் பெண்கள் நேரடியாக பாதிக்கப் படுகின்றனர். பொது விநியோக திட்டத்தை வலுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுக்கவில்லை. கடந்த மாதம் பாக்ஸ்கான ஆலையில்  10,000 ரூபாய், 12,000 ரூபாய் சம்பளத்தில் திருவாரூர், வேலூர், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பெண்கள்  பட்ட இன்னல்களை நாம் அறிவோம். அவர்களுக்கு பணி நிரந்தரம், நியாயமான சம்பளம், சங்க உரிமை போன்றவைகளை இந்த அரசுகள் உறுதிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. இந்தச் சட்டம் பெண்ளை இழிவுபடுத்தும் சட்டமாகும்.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவத்திற்காக, பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 21 ஆக உயர்த்துகிறோம் என்று அரசு கூறுகிறது. பல மேலை நாடுகளில் இரண்டு பாலாருக்கும் திருமண வயது 18 ஆக உள்ளது. ஆனாலும் தங்கள் வாழ்க்கையில் நிலைபெற்ற பிறகு, முப்பத்தி ஐந்து, முப்பத்தி ஆறு வயதுக்கு மேல்தான் அவர்கள் திருமணம் செய்து கொள்கின்றனர்.

உலகில் 73 நாடுகளில், சில விதிவிலக்கான சூழல்களில் 18 வயதுக்கு கீழே திருமணம் செய்து கொள்வதற்கு தண்டனை இல்லை. நமது நாட்டில் கூட, 2018 ஆம் ஆண்டு, சட்ட ஆணையம் ஆண்களின் திருமண வயதை 18 ஆக குறைக்க பரிந்துரைத்து இருந்தது. ஆனால் பெண்களின் வயதை உயர்த்துவதை ஏதோ புரட்சிகரமான திட்டம் போல அரசு காட்டுகிறது. 18 வயதானால் வாக்கு உரிமை, சொத்து வாங்க, விற்க உரிமை இருக்கும்போது திருமண உரிமையும் இருக்கலாம்.

பெண்களின் வயது உயர வேண்டும் என்றால்,  விழிப்புணர்வு மூலம்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இதனை சட்டத்தின் மூலம் வெற்றிபெற வைக்க முடியாது. அதனால்தான் அனைத்து இடதுசாரி பெண் அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளன.

கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்புத் திட்டங்கள் மூலமாகவும், உயர்க்கல்விக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாகவும்,  குடும்ப அமைப்பை,  ஜனநாயக படுத்துவதின் மூலமாகவும், ஆணுக்கும், பெண்ணுக்கும் சமக்கூலி தருவதை உறுதிச் செய்வதன் மூலமாகவும்தான் பெண்களை கண்ணியமாக உணரச் செய்ய முடியும்; திருமண வயதை அதிகரிக்கச் செய்ய முடியும். இந்தச் சட்டத்தினால் பெண் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இல்லை. ஒருவேளை இது சட்டமானால் கூட, அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஒருசில உரிமைகளுக்கு எதிராக உள்ளதால், புதிய சட்டத்தை நீதிமன்றங்கள் இரத்து செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார் ஜி.மஞ்சுளா.

பெண்களின் திருமண வயதை 21 ஆக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை, சிந்தனையாளர் பேரவை கடந்த ஜனவரி 8 ஆம் தேதி இணையம் வழியாக நடத்தியது. இதில் கலந்து கொண்டு  இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஜி.மஞ்சுளா உரையாற்றினார். இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த ப.ரேவதி ‘’ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் என்ற நிலை இருக்கின்ற போது, இது போன்ற சட்டம் தேவையற்றது’’ என்று கூறினார்.

தொகுப்பு : பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time