கோவில் குடமுழுக்கை தமிழில் செய்ய தயக்கம் என்ன அரசுக்கு?

- மாயோன்

”தமிழில் அர்ச்சனை, கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகியவை திமுக ஆட்சியிலும் திரிசங்கு நிலையில் தான் தொங்குகிறது… ஏன் இந்த தடுமாற்றம்..? எதற்கிந்த ஊசலாட்டம்..?” என சீறுகிறார் ‘சிகரம்’ ச.செந்தில்நாதன்.

“அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற பலகையை தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில்கள் அனைத்திலும்  “பளிச்” என பார்க்கலாம்.

தி.மு.க முதன் முதலாக ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது, அ.தி.மு.க ஆட்சியிலும் இதுபோன்ற விளம்பர பலகைகள் கோவிலில் வைக்கப்பட்டிருந்தன.

2021 தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையில்  தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அமைச்சர் சேகர்பாபு,  தமிழில் அர்ச்சனை, தமிழில் குடமுழுக்கு மற்றும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது ஆகியவற்றில் ஆர்வம் இருப்பது போல  பேசி வருகிறார். ஆனால், ”தமிழக கோவில்களில் அரசால் நடத்தப்பட உள்ள குடமுழுக்கை தமிழில் நடத்துவீர்களா..? அல்லது வைதீக நிர்பந்தங்களுக்கு அடிபணிவீர்களா..?” என்ற கேள்விக்கு இந்த அரசிடமிருந்து இது வரை தெளிவான பதில் இல்லை.

எந்த மொழியிலும் இல்லாத பக்தி இலக்கியங்கள் தமிழில் குவிந்துள்ளன. ஆனால், தமிழால், சொந்த மண்ணில் உள்ள கோயில்களில் கூட  வழிபாட்டு மொழியாக  முடிவில்லை.

தமிழில் அர்ச்சனை செய்விப்பது என்பது  கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசின் முயற்சியாக மட்டுமே தொடர்கிறது! அதன் பலன் இப்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்ப்போம்.

தமிழை ஆலயங்களில் ஒலிக்க செய்ய சத்தியவேல் முருகனாருடன் இணைந்து  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிகரம் ச. செந்தில்நாதனை சந்தித்தோம். மூத்த வழக்கறிஞரான செந்தில்நாதன் நீதிமன்றங்களிலும் இதற்காக வாதாடிக் கொண்டிருப்பவர். எழுத்து ,பேச்சு என்று பல தளங்களில் இப்பிரச்சினைக்காக இயங்கி கொண்டிருப்பவர்.

சிகரம் செந்தில்நாதன்

நம்முடைய “அறம்” இதழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து….

“தமிழில் அர்ச்சனை , தமிழில் குடமுழுக்கு , கோவில் கருவறைகளில்  திருமுறைகள் ஒலித்தல், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் நடவடிக்கை ஆகிய செயல்பாடுகள் மனநிறைவு கொள்ளும் வகையில் இல்லை. இதற்கு முக்கிய காரணம் தமிழக அரசு முழு அளவிலும் மனப்பூர்வமாகவும்  இப்பிரச்சினையை அணுகவில்லை என்பதுதான்.

வருகிற 23-ஆம் தேதி வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவை நடத்தப்போவதாக இந்து சமய அறநிலையத் துறை அறிவித்ததுள்ளது.

நீங்கள் எழுப்பிய வினாவுக்கு அந்த விழாவின் மூலமாக உரிய விடையை நீங்களே அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழ் மொழி கோவில்களில் ,குடமுழுக்கு விழாக்களில் முக்கிய அங்கம் வகித்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள், தங்களுடைய  ஆயுதமாக  ஆகமவிதிகளை பயன் படுத்துகிறார்கள்.

வேதத்தின் தாக்கத்துக்கு ஆளான  ஆகம விதிகள், தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஏழை  மக்களை கோயிலுக்குள் மட்டுமல்ல ,கோவில் இருக்கும் தெருவுக்குள்ளே கூட  வரக்கூடாது என்று தடுத்தன.

தற்போது உள்ள ஆகமநூல்கள் காலத்தால் மிகவும் பிந்தியவை. ஒன்றிரண்டு தவிர மற்றவை வடமொழியில் உள்ளன.  ஆகமங்களின் மூலம் தமிழ் மொழியில்தான் இருந்துள்ளது. ஆரிய-வேத வழி வந்தவர்கள் -தமிழில் இருந்த ஆகமங்களை வடமொழியாக்கம் செய்து, தங்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் அதில் சேர்த்தபிறகு மூல நூலை அழித்து விட்டார்கள்!

இவர்களுடைய இப்படிப்பட்ட செயல்பாடு வரலாறு முழுவதும் காணப்படுகிறது. சிங்கள மொழியில் முதலில் எழுதப்பட்ட பவுத்த மூலநூல்களை பாலியில் மொழிபெயர்த்து விட்டு அதை எரித்து விட்டார்கள். ராஜராஜசோழன் கொஞ்சம் தாமதித்து இருந்தாலும் தேவாரப் பாடல்கள்  நம் கைக்கு வந்திருக்காது.

வடமொழி ஆகம நூல்கள் காலத்தால் மிகவும் பிந்தியவை என்பதற்கு புத்த ,சமண சமயங்களுக்கு எதிரான கருத்துக்கள் இவற்றில்  இடம் பெற்றிருப்பது  சான்று ஆகும்.

பல்லவ மன்னர்களின் பேராதரவுடன் தொடங்கிய  வேத வர்ணாஸ்ரம செல்வாக்கு,  மக்களை சாதி ரீதியாக கூறு போட்டு விட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு  மனித மாண்புகளுக்கு எதிராக இருந்த ஆகம விதிகளை  உச்சநீதிமன்றம் தடை செய்தது.

அரசியல் சட்டத்தை கொண்டு உச்ச நீதிமன்றம் ஆகமத்தை உடைப்பதற்கு முன்பே பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செய்த மன்னர் களுக்காகவும் பல்வேறு காரணங்களுக்காகவும்  ஆகம விதிகளில் மாற்றம் ஏற்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. பதினோராம் நூற்றாண்டில் தோன்றிய ராமானுஜர் ஆகம விதிகளில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்தார்.

எனவே, ஆகமம் மாறாத ஒன்று என்பது போல ஒரு சாரார் சொல்வதை ஏற்க முடியாது. கால மாறுதலுக்கு ஏற்ப அதுவும் மாற்றத்திற்கு உட்பட்டது தான்.

ஆனால், இந்த விவகாரத்தில்  நீதிமன்றங்களின் செயல்பாடுகள் பொதுவாக மனநிறைவைத் தரவில்லை.

ஆகமங்களை பாதுகாக்க  நீதிமன்றக் கதவுகளைத் தட்டுபவர்கள், கோவில்களில் தாங்களே ஆகம விதி மீறல்களை செய்கிறார்கள்!. ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதி நள்ளிரவு 12 மணிக்குமேல் கோவில்கள் திறந்து வைக்கப்பட்டு, பூஜைகள் நடக்கின்றனவே! இது ஆகம விதிக்கு எதிரானது இல்லையா?

ஸ்மார்த்த சமயத்துக்கு உருவ வழிபாடு கிடையாது. அந்த சமயத்தைச் சேர்ந்த பிராமணர்கள் சைவ, வைணவ கோவில்களில் அர்ச்சனை செய்யக் கூடாது. ஆகம விதிகளுக்கு எதிராக  சாமி சிலைகளுக்கு அவர்கள் பூஜை செய்வது சரியா?

ஆகமத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றத்துக்கு வருபவர்கள், ஆகமத்திற்கு மொழியும் கிடையாது. சாதியும் கிடையாது என்ற கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்.  அப்படி என்றால் தமிழ் மொழியில்  குடமுழுக்கு மற்றும் வழிபாடு செய்வதை  ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

ஆகமத்தின் அடிப்படையில் எழுந்த தமிழ்நூல் திருமந்திரம். இதை எழுதிய திருமூலர்,

“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு”

என்கிறார்.

அண்மையில்  தஞ்சைப் பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. இது  தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மணியரசன் போன்றோர் முன் வைத்தனர். என்னையும் அவர் அழைத்தார்.

இப்பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின்  நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு ஒரு உறுதியான தீர்ப்பைத் தராமல் வடமொழி, தமிழ் இரண்டிலும் குடமுழுக்கு விழாவை நடத்துங்கள் என்று சொல்லிச்சென்றது.

1972 ல் வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பில், இனிய தமிழ் வழிபாட்டு பாடல்களான தேவாரம், திருவாசகம் முதலானவற்றை கோவில்களில் பாட ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் இன்று வரை ஏன் நடைமுறைப்படுத்த முடியவில்லை. உயர்நீதிமன்றம் தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்”என்பது நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை. கேரள அரசு இதை செம்மையாக நிறைவேற்றி காட்டியுள்ளது.

ஐம்பது அர்ச்சகர்கள் கொண்ட கோவிலில் அனைத்து சாதியினர் குறைந்தது 20 பேராவது இருந்தால் மட்டுமே அவர்கள் குரலுக்கு மதிப்பு  இருக்கும். தமிழில் அர்ச்சனை நடைபெறுவதும் சாத்தியமாகும்.

பிராமணர்களுக்கு மத்தியில் பிற சாதியினர் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே நியமிக்கப்பட்டால் அந்தக் கோவிலில் எடுபிடி வேலை செய்வதற்கு மட்டுமே அவரை பயன்படுத்திக்கொண்டு ஓரங்கட்டி விடுவார்கள்.

சில கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயரை பலகையில் எழுதி போட்டு, அவர்களுடைய செல்போன் எண்களையும் குறித்து வைத்திருக்கிறார்கள். தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்களில் எத்தனை பேர் இந்த அவசர உலகில் , போன் செய்துவிட்டு காத்திருப்பார்கள்?.இதுபோன்ற நடவடிக்கைகளால் உரிய பலன் கிடைக்காது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களில் எத்தனை பேர் தமிழில் அர்ச்சனை செய்ய விரும்புகிறீர்கள் என்ற ஒரு கணக்கெடுப்பை பழ.நெடுமாறன் நடத்தினார். தமிழில் அர்ச்சனை செய்ய 98% பக்தர்கள் விரும்புவது அப்போது தெரிய வந்தது. தமிழக அரசு இதை கருத்தில் கொள்ள வேண்டும். அதோடு, சத்தியவேல் முருகனார்  சொல்லும் முக்கிய தகவலையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

” தமிழக எல்லையை தாண்டி வடக்கே போகப் போக அங்குள்ள கோயில்கள் எந்த ஆகமத்தின் படியும் அமைக்கப் பட்டவை அல்ல .இந்துக்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு மிக முக்கியமான நகரமாக கருதப்படும் காசியிலுள்ள விசுவநாதர் கோயில்கூட ஆகமப்படி அமைக்கப்பட்ட கோயில் அல்ல.

திருமுறை ஆசிரியர்கள் குறிப்பாக நால்வரில் யாருமே  காசிவிசுவநாதரை பாடாததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார் சத்தியவேல் முருகனார்.

எனவே,  ஆகம கோயில்களில் பெரும்பாலும் தமிழ்நாட்டுக்குள் இருப்பதால் இந்த விவகாரத்தில் மற்ற  மாநிலங்களைவிடவும்  உரிய முடிவை உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதில் உறுதி வேண்டும்.

கோவில்களின்  எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து சாதிகளில் இருந்தும் அர்ச்சகர்களை தேர்வு செய்து , அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறப்பான பயிற்சி கொடுத்து நியமனம் செய்ய வேண்டும்.

1979 ஆம் ஆண்டு தமிழக அரசு அமைத்த நீதியரசர் மகராஜன் தலைமையிலான குழு, 2006ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு கோவில்களில் விரிவான ஆய்வுகள் நடத்தி தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்ததுள்ளன.

பெரும்பாலான கோவில்களில் ஆகம விதிமுறைகள்  சர்வசாதாரணமாக மீறப்பட்டுள்ளதை அக்குழுக்கள் சுட்டிக்காட்டி, காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

எனவே, தமிழக அரசு இனியாவது இந்த விவகாரத்தில் முழு ஈடுபாடு காட்டவேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாகவிரைவில் நடைபெறவுள்ள வடபழனி முருகன் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும்” என்றார் சிகரம் ச.செந்தில்நாதன்.

நேர்காணல் ; மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time