பலவீனப்பட்டு வரும் பாஜக! பலம் பெறும் அகிலேஷ், பிரியங்கா!

- சாவித்திரி கண்ணன்

உத்திரப் பிரதேசத் தேர்தல் உக்கிரமடைந்து கொண்டுள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி வருவதற்குத் தான் வாய்ப்பு உள்ளது என பல ஊடகங்களும் சொல்லி வந்தன. ஆனால், தற்போதோ, பாஜக கூடாரமே காலியாகி, பலத்த பின்னடைவை கண்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

உத்திரபிரதேச அரசியல்;

சுதந்திரமடைந்து முதல் 40 ஆண்டுகள் காங்கிரசின் கோட்டையாகத்  திகழ்ந்தது உத்திரபிரதேசம். 1990 களுக்கு பிறகு உ.பி மாநிலக் கட்சிகளின் கோட்டையானது. சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மட்டுமே பலம் பொருந்திய கட்சிகளாக இருந்தன. ஆனால், 2014 முதல் பாஜக தலைதூக்க ஆரம்பித்தது. 2017 தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 303 ல் பாஜக வென்றது. தேர்தலில் போட்டியிடாத யோகி ஆதித்தியநாத் முதல்வராக வலிந்து திணிக்கப்பட்டார். சாதி ஆதிக்கம் சதிராடும் மாநிலம். மத ஆதிக்கத்தில் மனிதம் தொலைந்து வரும் பிரதேசம்.

கலவர பூமியான உ.பி;

யோகி முதல்வரானது முதல் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போனது. ஏகப்பட்ட கொடூரமான கற்பழிப்புகள் அரங்கேறின. முஸ்லீம் விரோத போக்கை பகிரங்கமாக முன் எடுத்தார். சந்தேகத்தின் பெயரில் இஸ்லாமியர்களை கைது செய்வது, அவர்களை பொது மைய நீரோட்டத்தில் இருந்து தனிமைபடுத்துவது ஆகியவை அதிகரித்தன. தாக்கூர் எனப்படும் மேல்சாதியினர் கை ஒங்க்கியது.வன்முறை தலைதூக்கியது.இந்து இயக்கங்களும் சாமியார்களும் இஸ்லாமியர்களை இந்தியாவில் இல்லாமல் ஒழிக்க வேண்டும் என பகிரங்கமாக மேடை போட்டு பேசினர். எல்லாவற்றுக்கும் சிகரமாக தற்போது யோகியே இந்த சட்டமன்ற தேர்தல் 20 க்கும்,80க்குமான தேர்தல் என பகிரங்க்கமாக பேசி அதிர வைத்தார். உ.பியில் இஸ்லாமியர் 19%, கிறிஸ்துவர் 1% என 20% உள்ளனர். இந்துக்கள் 80% உள்ளனர். அதைத் தான் யோகி இப்படி பேசியுள்ளார்.

நிர்வாக திறமையற்ற யோகி

கொரனா பிரச்சினையை அணுகிய விதம் யோகியின் நிர்வாகத் திறமை இன்மைக்கு சான்றானது. மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். ஆக்சிஜன் ஏற்பாடு செய்ய திரானியின்றி ஏராளமான உயிர்கள் போயின.கங்கையில் சடலங்கள் மிதந்தன.கொரானாவில் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் ,பல்லாயிரம் கோடி செலவில் ராமர் கோயில் கட்டும் பணி துரிதம் பெற்றது. அதிலும் கர்ண கடூர ஊழல் நடப்பது அம்பலமானது. பக்தர்கள் பக்தி பரவசத்தில் கொட்டிக் கொடுத்த பணம், பகல் கொள்ளையர்கள் கையில் சேர்ந்தது போக மீதி தான் பகவானுக்கு என்பது தெளிவாகத் தெரிய வந்தது.விவசாய சட்டம் கொண்டு வந்து போராட்டத்தில் தள்ளிய பாஜகவை விவசாயிகள் மன்னிக்க தயாரயில்லை. லக்கிம்ப்பூர் படுகொலைகள் மறக்க முடியாத வடுவாக மக்கள் மனதில் பதிந்துவிட்டது. குஜராத்தை சேர்ந்த மோடியும், அமித்ஷாவும் உ.பியை ஆட்டிவைக்கிறார்கள் என மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

யோகி என்ற பெயர் கொண்டவர் முற்ற முழுக்க முரடராக, மூர்க்கமானவராக வெளிப்பட்டது, பாரபட்சமாக நடந்து கொண்டது ஆகியவற்றால் விரக்தியிலும், அதிருப்தியிலும் இருந்த அமைச்சர்களும்,எம்.எல்.ஏக்களும் தற்போது அணியணியாக பாஜகவில் இருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பிற்பட்ட சாதியைச் சேர்ந்த அமைச்சர்களான சுவாமி பிரசாத் மெளரியா, தாரசிங்க் செளகான், தரம் சிங்க் சைனி போன்ற செல்வாக்கானவர்கள் பாஜகவில் இருந்து வெளியேறி சமாஜ்வாடியில் அகிலேஷ் முன்னிலையில் சேர்ந்தனர்.சுமார் 10 பாஜக எம்.எல்.ஏக்களும் வெளியேறி உள்ளனர். வெளியேறிவர்கள் மீது பழைய வழக்குகளை தோண்டித் துருவி கைது செய்யப் போவதாக மிரட்டி வருகிறார் யோகி. அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தாங்கள் தொலைந்தோம் என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால், ”யோகி மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை” என இவர்கள் அடித்துச் சொல்கின்றனர்.

மவுசு இழந்த மாயாவதி;

உ.பி முதல்வராகும் பொன்னான வாய்ப்பு மாயாவதிக்கு வாய்த்தும், அவர் தன் கட்சியை வளர்க்கவில்லை. தன் அகம்பாவத்தைத் தான் வளர்த்துக் கொண்டார். ஆடம்பரத்தில் திளைத்தார். தொண்டர்களை அடித்தளமாக கொண்டிருந்த பகுஜன் சமாஜை, சொகுசு கட்சியாக மாற்றினார்.பெரும் திரளான ஏழை,எளிய தலித் மற்றும் ஜாட் மக்களுக்கான தலைவியாக இல்லாமல் அவர்களின் புரவலராக மாறி, அவர்களை கையேந்துபவர்களாக ஆக்கினார். பொது வெளிக்கு வருவதை மிகவும் குறைத்துக் கொண்டார். பொது பிரச்சினைகளுக்கு போராடும் குணத்தை முற்றிலும் இழந்தார். மிதமிஞ்ச்சிய ஊழல் செய்துள்ளதால் பாஜகவின் மிரட்டல் காரணமாக அவர் அடங்கிவிட்டார் என பரவலாகப் பேசப்படுகிறது.

அவர் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் சமாஜ்வாடிக்கு தாவி வருகின்றனர். சென்ற தேர்தலில் 22% வாக்கு வங்கி கொண்டிருந்த பகுஜன்சமாஜ் அதில் தற்போது பாதி இருந்தாலே ஆச்சரியம் தான் என சொல்லப்படுகிறது.

பிரயத்தனப்படும் பிரியங்கா;

கடந்த ஐந்தாண்டுகளில் அகிலேஷ் யாதவை விட, மாயாவதியை விட உயிர்ப்பான அரசியலை முன் எடுத்து முழு அர்ப்பணிப்புடன் இயங்கியவர் பிரியங்கா காந்தி தான். ஹாத்ராசில் இளம் பெண் கற்பழித்து எறிக்கப்பட்டது தொடங்கி எண்ணற்ற பல பிரச்சினைகளுக்கு நேரடியாக களம் கண்டார் பிரியங்கா. லக்கிம்பூர் சம்பவத்திலும் களம் கண்டார். இதனால் பிரியங்காவின் தனிப்பட்ட செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது.

காங்கிரஸ் மதிப்பும் மக்களிடம் கூடியுள்ளது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு அங்கு வலுவாக இல்லை. உள்ளுர் தலைவர்கள் சரியாக ஊக்குவிக்கப்படவில்லை. இதனால் காங்கிரஸ் மீட்க முடியாத தொய்வான நிலைக்கு போய்விட்டது. பிரியங்கா தன்னை முதல்வர் வேட்பாளராக பிரகடனப்பாடுத்தினால் கூட ஒரளவு செல்வாக்கு கூடும். ஆனால், அவரோ, போட்டியிடுவாரா என்பதற்கே உரிய விடை கிடைக்கவில்லை.

சக்தி பெற்று வரும் சமாஜ்வாடி;

தற்போதைய நிலவரப்படி 40 % பிற்பட்ட சாதி மக்களை நம்பியும், 19% இஸ்லாமியர்களை நம்பியும், கணிசமான தலித் மற்றும் பிராமண வாக்கு வங்கியை நம்பியும் கணக்கு போட்டு களம் கண்டு வரும் அகிலேஷ் யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே பலரும் கணிக்கின்றனர். நாளுக்கு நாள் பல கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைவர்கள் சமாஜ்வாடியில் சேர்ந்து வருகின்றனர். ”போதும், வராதீர்கள். இனி இங்கு இடமில்லை. புதியவர்களுக்கு ‘அக்காமடேஷன்’ தந்தால் நீண்ட நாள் கட்சியினர் பாதிக்கப்படுவர்” என அகிலேஷ் கூறியும் வந்து குவிகின்றனர். இது பாஜகவின் தோல்வியை முன் கூட்டியே பட்டவர்த்தனமாக சொல்வது போல உள்ளது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time