இன்னும் எத்தனை காலம் தொடரும் இந்த கொரானா நாடகம்…?

- சாவித்திரி கண்ணன்

எம்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம் , சென்னை

ஒரே ஆண்டில் 157 கோடி தடுப்பூசி போட்டுவிட்டதாக ஒன்றிய அரசு பீத்திக் கொள்வதை கவனித்தீர்களா…?

முதன் முதலாக ரசாயன உரங்களையும், வீரிய விதைகளையும் அறிமுகப்படுத்திய போது, இதே போல ஒரே ஆண்டில் …செய்த சாதனையின் தொடர்ச்சி தான் இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை மலடாக்கிவிட்டது. நாட்டு மக்களை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது.

தற்போது நாட்டு மாட்டுக்கு வெளி நாட்டு ஜெர்ஸியோட சினையை ஊசியில செலுத்தி, கம்பீரமான மாடுகளை ஒழித்து பதிலாக கலப்பின மாடுகளை உருவாக்குவது போல நம்முடைய இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை சிதைவுறச் செய்யவே தடுப்பூசியை தருகிறார்கள். இதன் விளைவுகள் இன்னும் சில ஆண்டுகள் கடந்து தெரிய வரும் போது பீத்தியவர்கள் எல்லாம் பிதற்ற வேண்டியதாகிவிடும்.

க.செபாஷ்டின், வேலூர்

கோயில் அலுவலர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் போன்றோருக்கு புத்தாடைகளை தமிழக அரசு வழங்கி வருகிறதே?

பக்தி பித்து சற்று அதிகமாகவே தொற்றிக் கொண்டதோ…! பெரியார் வாரிசுகள் பெரியவாளை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளனர். தமிழில் அர்ச்சனை, தமிழில் குடமுழுக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர்..ஆகிய அனைத்திலும் காட்டாத அக்கறை வேறு எது, எதிலோ…!

ஆர்.தணிகாச்சலம்,திருக்கோவிலூர்,விழுப்புரம்

நாடாளுமன்றத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரானாவாமே..?

சோ வாட்? உடம்புன்னு இருந்தால், அதில் மலம்,சிறு நீர், சளி ஆகியவை எப்போதுமே இருந்து கொண்டு இருக்கும். அந்த லிஸ்டில் கொரானாவும் வந்து போக கூடிய ஒன்று தான்.

கொரானா சோதனை என்பதே தேவையற்றது. இப்படி தொடர்ந்து கொரானா சோதனைகளை வலிந்து செய்வதும், அறிவிப்பதும் கவைக்கு உதவாதவை!

வாழ்க்கையை, உலக இயக்கத்தை நாளடைவில் முடக்கிவிடும். எச்சரிக்கை! நாடகத்தை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் மக்கள் சலித்து போவது மட்டுமல்ல. சகிப்புத் தன்மையும் இழப்பார்கள்.

மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை

ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி உள்ளதே பார்த்தீர்களா?

பேஷ், பேஷ்! ஆனால், ஜல்லிக் கட்டு நடக்கும் ஊர்களில் உள்ள எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குத்துயிரும், குலை உயிருமாக ஏகப்பட்ட பேர் ஹாஸ்பீட்டலைஸ்டு ஆனதையும், சிலர் உயிரிழந்தையும்  சேர்த்தே கேள்விப்பட்ட போது பதபதைத்துப் போனேன்.மாடுகள் உடனான நம் விளையாட்டை முரட்டுத்தனம், காட்டாமல், அதன் மூர்க்கத் தனத்தை தூண்டாமல் நேசத்துடன் எப்படி நடத்தலாம் என பார்க்க வேண்டும்.

சோ. ராணி, மேலூர்,மதுரை

சார் நான் எப்போதும்,எதையாவது நினைத்த வண்ணம் எண்ணங்களோடு வாழ்கிறேன். இந்த எண்ணங்களைத் தொலைத்து, நிகழ்கால மனிதனாக வாழ்வது எப்படி?

என் சொந்த அனுபவம் உங்களுக்கு தீர்வு தருமா பாருங்கள். ஏதாவது உடல் உழைப்பு சார்ந்த பணிகளில் நம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்வது, நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் உயிர்ப்புடன் கவனம்செலுத்துவது,மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடுவது…,சிறிது தியானம் செய்வது..ஆகியவை நிகழ்கால நிதர்சனத்துடன் நம்மை வைத்திருக்க உதவும்.

எஸ்.கண்ணப்பன்,சேத்தியா தோப்பு, கடலூர்

உ.பி.தேர்தல் எப்படி இருக்கும் என நினைக்கிறிர்கள்..?

சமாஜ்வாடியின் விஸ்வரூபம் பாஜகவை வெலவெலக்க வைத்துள்ளது.  பாஜக தன் பலவீனத்தை உணர்ந்ததால்  தற்போது குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, பீகாரில் இருந்து ஆட்களை இறக்குமதி பல்லாயிரக் கணக்கில் உபிக்குள் இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலேயே 23 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட உ.பியில் அதுவும் ஆளும் கட்சியாகவுள்ள பாஜகவிற்கு வேலை செய்ய ஆள் இல்லை என்பது எவ்வளவு அவமானம். இந்த ஆட்கள் இறக்குமதி அராஜக வன்முறைக்கு அடித்தளமா என பலருக்கும் சந்தேகம் வலுத்துள்ளது.

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம்.

பெரியாறு அணையை கட்டி எழுப்பி தென் தமிழக மக்கள் வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக திகழ்ந்த கர்னல் பென்னிகுக் பற்றி முதல்வர் ஸ்டாலின் வரலாற்றுக்கு இல்லாத மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை சொல்ல வேண்டாம் என கவிஞர் வெண்ணிலா எழுதியுள்ளாரே..?

 

சிறுமைத் தனம்! எந்தப் பிரதிபலனும் பாராமல் தன் வாழ்க்கையே அர்ப்பணித்து தென் தமிழகத்தில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டுள்ள, வாழப் போகிற கோடானுகோடி மக்களுக்கு மாபெரும் நன்மையை செய்த ஒரு மாபெரும் ஆளுமை குறித்து முதல்வர் சற்று மிகைபட பேசினால் தான் என்ன குறைந்து போயிற்று…? இப்படியான அளவுகோலை கொண்டு வருபவர்கள் எல்லாம் மற்ற பல ஆளுமைகளுக்கு வரலாற்றில் அளவுக்கு மீறி முக்கியத்துவம் தரப்பட்ட போது எங்கே போனார்கள்..?

எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா,புரட்சித் தலைவர்களா?

கருணாநிதி ஆகச் சிறந்த படைப்பாளி தான். ஆனால், முத்தமிழ் அறிஞரா..?

இப்படி எல்லாம் பற்பல விவாதத்திற்குரிய நிகழ்கால விவகாரங்களை எல்லாம் மெளனமாக கடந்து போக முடிந்தவர்கள் பென்னிகுக் போன்றவர்களை புகழ்ந்தால் அதில் குறை காண்பதை எவ்வாறு புரிந்து கொள்வது?

பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்

நன்மை கடலிற் பெரிது.   என்பார் வள்ளுவர்.

எஸ்.கோபிநாத், ஆத்தூர், சேலம்

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இந்த அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறதே..?

சாதாரண அதிர்ச்சியல்ல. பேரதிர்ச்சி. அரசு வழக்கறிஞர்களுக்கான 201 இடங்களில் 6 இடங்கள் மட்டுமே தலித்,பழங்குடிகளுக்கு தரப்பட்டு உள்ளது. சமூக நீதி அப்பட்டமாக அத்துமீறப்பட்டு உள்ளது.இது போல பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இல்லை என்கிறார்கள். சமூக நீதியை தூக்கி பிடித்த இயக்கத்தின் ஆட்சியில் சனாதன சிந்தனையுள்ள ஆதிக்கம் எப்படி நுழைந்தது!

மு.ரத்தினவேல், விருதாச்சலம்

உங்கள் மனம் கவர்ந்த வரலாற்று நாயகர்கள் யார் யார்?

நிறையவே உள்ளனர். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர்கள் தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார், பாரதியார், ஜே.சி.குமரப்பா. இந்திய அளவில் காந்தி, அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா.

க.அப்துல் நாசர், ஹைதராபாத்

தடுப்பூசி கட்டாயம் இல்லை . எந்த சேவை அல்லது சலுகை பெறவும் தடுப்பூசி அவசியமில்லை என ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் சொல்லி உள்ளதே..?

உச்ச நீதிமன்றத்தில் சொல்வதை மக்கள் மன்றத்தில் சொல்ல வேண்டும். சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தம் இல்லாத ஆட்சியாளர்கள்! ஆனால், இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை நாம் கையில் எடுத்துக் கொண்டு நிர்பந்திப்பவர்களை நிராகரித்து செல்ல பயன்படுத்த வேண்டும். கொரானா நாடகம் இன்னும் எத்தனை நாட்கள் தொடருமோ..?

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time