பாஜக ஆட்சியில் விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு உரியவிலை நிர்ணயிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைத்தனர் ஆனால்,உச்சபட்ச கொடுமையாக விவசாயிகளையே முதலாளிகள் விலை பேசிவிட தோதாக மூன்று மசோதாக்களை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.
எதிர்கட்சிகளோடு பாராளுமன்றத்தில் விவாதிக்கவோ, தவறுகளை திருத்திக் கொள்ளவோ மத்திய அரசு முற்றிலும் விரும்பவில்லை! மாநிலங்களவையில் 12 கட்சிகள் பதறின..,கதறின..எதுவும் நடக்கவில்லை! சஸ்பெண்டானவர்கள் வெளியில் அமர்ந்து இரவுபகலாக போராடினர். தற்போது 18 கட்சிகள் ஜனாதிபதிக்கு இந்த மசோதாக்களை ஏற்காமல் பாராளுமன்றத்திற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை வைத்துள்ளனர். அதுவும் நடப்பதற்கு வாய்ப்பு குறைவு தான்!
ஆக, இனி மக்கள் மன்றம் தான் ஒரே தீர்வு என்று பஞ்சாபிலும்,ஹரியானாவிலும் போர்க்கோலம் பூண்டுள்ளனர் விவசாயிகள். பெரும் நகரங்கள் மட்டுமின்றி,அனைத்து ஊர்களிலும் விவசாயிகள் ரயில்மறியல், சாலை மறியலில் இறங்கி களம் கண்டனர்.பெண்களும் கணிசமாக பங்கேற்றனர் என்பது தான் சிறப்பு! இத்துடன் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து வியாபாரிகளும் கதவடைப்பு செய்து தங்கள் பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர்.
பஞ்சாபிலும்,ஹரியானாவிலும் ஏற்பட்டுள்ள எழுச்சி சாதரணமானதல்ல, இது எந்த கட்சிகளின் தூண்டுதலுமின்றி,விவசாயிகளும்,மக்களும் தன் எழுச்சியாக செய்து வரும் போராட்டமாகும்! இதில் சுமார் 31 விவசாய அமைப்புகள் ஒன்றுபட்டு களத்தில் இறங்கியுள்ளனர். ’’எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என எந்த அரசியல்கட்சிகளின் தலைவர்களும் வர வேண்டாம்’’ என அவர்கள் கூறிவிட்டனர்.
பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் கறுப்புக் கொடியோடு தான் வலம் வருகின்றனர்.எல்லோர் பேச்சிலும் அங்கு பாஜக அரசின் விவசாய மசோதா மீதான ஆற்றமாட்டாத கோபம் வெளிப்பட்டவண்ணம் உள்ளது. இது ஏன் என்றால்,பஞ்சாபிலும்,ஹரியானாவிலும் விவசாய சந்தை கட்டமைப்பு மிகவும் சக்தி வாய்ந்தது! இது விவசாயிகளுக்கு மிகுந்த பாதுகாப்பை வழங்கி வருகிறது. மிக நீண்டகால அனுபவத்தில் உருவான இந்த சிறந்த கட்டமைப்பு மாநில அரசுக்கும், உள்ளாட்சிகளுக்கும் நல்ல வருவாயையும் ஈட்டித் தருகிறது.உதாரணத்திற்கு பஞ்சாபில் சந்தையில் அரசு மண்டியிலோ,அல்லது தனியாரிடமோ எது விற்கப்பாடாலும் அதற்கான ஒரு மிகச் சிறிய கமிஷனாக பஞ்சாப் அரசு பெறும் வருவாயே சுமார் நாலாயிரம் கோடியாகும்! இதே போல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரு வருமானம் வருகிறது.இதற்கான சேவையாக விளைபொருளுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயித்து தருகிறது.விவசாயிகள் ஏமாற்றப்படாமல் பாதுகாக்கிறது.
Also read
எனவே தான், பஞ்சாபை ஆளும் கட்சியும் இந்த மசோதாவை ஏற்கவில்லை.பாஜகவுடன் நீண்டகால கூட்டாளியாக இருந்த சிரோன்மணி அகாலிதள் தங்கள் அமைச்சர் பதவியையே தூக்கி எறிந்துவிட்டது.அப்படி அவர்கள் தூக்கி எறிந்திருக்கவில்லையெனில்,அவர்களையே விவசாயிகள் தூக்கி எறிந்திருப்பார்கள்.அவர்களின் அரசியல் எதிர்காலமே சூனியமாகியிருக்கும்.
ஆனால்,தமிழகத்தில் உள்ள அதிமுக அரசின் முதல்வர் பழனிச்சாமி, ’’இந்த மசோதாவை நல்ல மசோதா,விவசாயிகளுக்கு பயனுள்ளது’’ என்கிறார்.ஆனால்,தமிழக அரசின் கீழ் இயங்கும் விவசாயத்துறை ஊழியர்களும்,அதிகாரிகளும் இந்த மசோதாவினால் மிகவும் அதிருப்தியில் உள்ளனர்.காரணம் தமிழக அரசின் விவசாய சந்தைப்படுத்தும் துறையானது இந்த மசோதாவால் முற்றிலும் அதிகாரமிழந்தும்,சுமார் 15,00 கோடியளவுக்கு வருவாய் இழந்தும் நிற்கிறது.தற்போது சந்தை விற்பனையில் தமிழக அரசு தலையிடமுடியாது.அதற்கு அதற்கு இருந்த அதிகாரத்தை தான் இந்த மசோதா அபகரித்துவிட்டது.அத்துடன் எந்த பொருள் விற்கப்பாடாலும் ஒரு ரூபாய் அரசுக்கு வருவாயாக வந்து கொண்டிருந்தது.அது தான் இந்த துறை ஊழியர்களுக்கான சம்பளமாகவும் இருந்தது.தற்போது மத்திய அரசின் மசோதா அந்த மாநில அரசு வருமானத்தை இல்லாமலாக்கிவிட்டது.
எந்த வியாபாரி என விற்றாலும் அதற்கான தகவல்களைக் கூட தமிழக அரசு கேட்க கூடாது என்கிறது மசோதா! இதனால்,அதிகாரமிழந்து,உரிமை இழந்து,வருமானமும் இழந்துள்ளனர் மாநில விவசாயத்துறையினர். இது குறித்த கோபத்தையும்,ஆதங்கத்தையும் கூட தமிழக அரசு வெளிப்படுத்தாமல் எப்படி இதை ஏற்றது என்பதே துறையில் உள்ள அனைவரின் கேள்வியாக உள்ளது.
ஆகவே, தமிழகத்தில் விவசாயிகள் இன்னும் வேகமாக கிளர்ந்து எழுந்து போராட வேண்டும் என்பதே தமிழக விவசாயத்துறை ஊழியர்களின் எண்ணமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் தலைமை அலுவலகத்தில் தீப்பந்தம் ஏந்தி போராடினார்கள்! மேலும் இந்த மசோதாவிற்கு எதிராக இரண்டு கோடி மக்களை சந்தித்து பேசி கையெழுத்து வாங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். ’’இந்த மசோதாவானது நிலத்தின் உரிமையாளர்களாவுள்ள விவசாயிகளை அந்த நிலத்தின் கூலிகளாக கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மசோதா’’ என பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.
கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் எழுச்சியுடன் போராடியுள்ளனர். ஏராளமானோர் கைதாயினர்.உண்மையில் இது விவசாயிகள் மட்டுமே போராட வேண்டிய பிரச்சினையல்ல. அனைவருமே போராட வேண்டிய பிரச்சினையாகும். ஏனெனில்,விவசாயச் சந்தையை கார்ப்பரேட்டுகள் சுவாஹா செய்துவிட்டால், இனி சிறிய மார்க்கெட் வியாபாரிகளும் காணாமல் போய்விடுவார்கள். விவசாயிகள் தங்கள் விலை பொருளனைத்தையும் ஒப்பந்தப்படி கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே கொடுத்துவிட்டால் மார்க்கெட்டில் சிறிய வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு எதுவும் கிடைக்காது. எல்லாவற்றையும் இனி நாம் ரிலையன்ஸ் ப்ரஸில் மட்டும் தான் வாங்கமுடியும். அப்போது அவன் வைக்கும் விலையை தான் கொடுத்தாக வேண்டும். லாபகரமான காய்கறிகளை மட்டுமே அவன் வாங்கி விற்பான்.அதனால், பணப்பயிர் மட்டுமே பயிரிட விவசாயி கட்டாயப் படுத்தப்படுவான். பல நல்ல சத்துள்ள காய்கறிகள் காலப் போக்கில் கண்ணிலிருந்தே மறைந்துவிடும். ஆகவே, இது நம் ஆரோக்கியத்தையும் அழிக்கும் முயற்சியாக உள்ளதால் அனைவரும் எதிர்க்க வேண்டும்.
அருமை… சார்… மிகத் தெளிவான கண்ணோட்டம்