இராஜராஜ சோழனின் “சாவா மூவா பேராடு” திட்டம்!

-மாயோன்

உள்ளாட்சி நிர்வாகத்திலும், நீதி விசாரணையிலும் சோழர்கள் முன்னோடியாக விளங்கினர். கிராம  பொருளாதார மேம்பாட்டிற்காக நிலமில்லா விவசாயிகளுக்கான “சாவா மூவா  பேராடு” திட்டத்தை நடைமுறைப் படுத்தினான் இராஜராஜ சோழன். இந்த திட்டம் சுவாராசியமானது

பேரரசன் இராஜ ராஜனின் வியத்தகு வரலாற்று உண்மைகளை உள்ளடக்கிய ” பொன் மான் பயந்த புலி” என்ற நூலை முனைவர் பா. இறையரசன், வரலாற்றறிஞர் தஞ்சை கோ.கண்ணன் இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இந்த நூலுக்கு முனைவர் பொற்கோவும், முனைவர் மு.ராஜேந்திரனும்  அணிந்துரை தந்துள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழா ஜனவரி 16 ல் நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக இணையதள சந்திப்பில் தமிழ் அறிஞர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையாளரும் வரலாற்று ஆய்வறிஞருமான மு. இராசேந்திரன்  ஐ.ஏ.எஸ்., இந்நிகழ்வில் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகையில் பேசியது:

” நான்கு பக்கங்கள் எழுதுவதே  கடினம். அதற்காக நிறைய படிக்க வேண்டும். பேரரசன் இராஜராஜனின் பெருமைகளை  விளக்கும் அருமையான நூலை முனைவர் இறையரசன், கோ.கண்ணன் இருவரும் படைத்துள்ளார்கள். நூலுக்கு  “பொன்மான் பயந்த புலி” என்ற அருமையான பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இராஜராஜனின் தாயாராகிய  பொன்மான் (வானவன் மாதேவி) பெற்ற புலி என்ற பொருளை இது தருகிறது.

முந்தைய காலத்தில் வேறு பொருளில் அழைக்கப்பட்ட சொற்கள் இப்போது வேறு பொருளைத் தாங்கி நிற்கின்றன. “புடவை”என்று அழைக்கப்பட்ட சொல் 200 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டியை குறித்தது. இப்போது “நாற்றம்” என்றால் நாம் முகம் சுழித்துப் பார்க்கிற சொல் “மனங்கமழ் வாசனை ” என்ற அர்த்தத்தில் பண்டைகாலத்தில் பயன்படுத்தப் பட்டதை காண்கிறோம்.

பேரரசன் ராஜராஜனின் தாயார் மற்றும் தந்தை வழியாக அத்தனை நற் குணங்களையும் பெற்று திகழ்ந்திருக்கிறான்.

இராஜராஜனின் பெருமைகளை ஒருபக்கம்  நாம் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறோம். அவனைப் பற்றிப் பேசவும் எழுதவும் நிறைய இருக்கிறது. இன்னொரு பக்கம்  விமர்சனம்  செய்பவர்களையும் பார்க்கிறோம்.

இந்திய நாட்டிலேயே முதன்முதலாக அவனுடைய கப்பல்  படைகள்தான் கடல்கடந்து சென்று வெளிநாடுகளை வென்றது.‌ அதற்காகவே அவன் பெருமைகளை பேசலாம்.

முதன்முதலாக  நில அளவை செய்து திறமையாக பணியாற்றிய சிறப்புக்கு உரியவன். கோவில்களில்  நிர்வாகம் நன்கு நடைபெறுவதற்கு  வழிவகை செய்தவன். விலைவாசி உயராமல் இருப்பதற்காக அவன் எடுத்த நடவடிக்கைகள் பெரும் சிறப்புக்கு உரியவை.

கிராம மக்கள் பொருளாதாரத்தில் மேம்படுவதற்காக நிலமில்லா விவசாயிகளுக்காக “சாவா மூவா  பேராடு”திட்டத்தை நடைமுறைப்படுத்தினான் இராஜராஜ சோழன். சாவா மூவா பேராடுகள் என்றால், சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். இது ஒரு அருமையான  திட்டம். இதன் மூலம் இளமையும், வலிமையும் நிறைந்த ஆடுகளை நிலமில்லாத விவசாயிகள் பெற்று வருவாய் ஈட்டினர்.

நூறு  ஆடுகளை இத்திட்டப்படி பெறும் விவசாயி , ஆடுகளின் எண்ணிக்கையை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் எண்ணிக்கையில் அதிகரிக்கும் ஆடுகளை விற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தின்படி ஆடுகளைப் பெறும் விவசாயி தினசரி தவறாமல் ஆழாக்கு நெய்யை அரசுக்கு தந்துவிட வேண்டும். அப்போது மின்சாரம் இல்லாத காரணத்தால் திருக்கோயில்களில் இரவும்,பகலும் எரியும் நந்தா விளக்கிற்கும், அரண்மனையின் விளக்கிற்கும் இந்த நெய் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவனுடைய சிந்தனை- நிர்வாகம் எப்படி இருந்தது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

அவன் நம்முடைய மண்ணின் மைந்தன். நமது மொழியை பேசியவன் .இங்குள்ள காற்றை சுவாசித்தவன். அவனுடைய பெருமைகளைப் பேசும் நாம் சிறு கூட்டத்தினர் தான் ,ஆனாலும் “மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பார்கள்” அதுபோல,  நாம் செயல்பட்டு வருகிறோம்.

நூல்  வெளியிடுபவர்களுக்கு அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள வரவேற்பு இங்கு கிடையாது. எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலான  வாசகர்கள் அங்கு அதிகம். குறைந்தபட்சம் 5000  காப்பிகள் வெளியிடுவதற்கு ஏதுவான சூழல் அங்கு உள்ளது. இங்கு ஆயிரம் காப்பிகள் வெளியிடுவதே சிரமமாக இருக்கிறது.

நம் மாநிலத்திலும்  எழுத்தாளர்கள் ஊக்கம் பெறும் நிலைமை  வரவேண்டும்.  இந்த அருமையான நூலை தமிழ் கூறும் நல் உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு நம்மால் இயன்ற ஆதரவை அளிப்போம்,” என்று பேசினர் மு. இராசேந்திரன் ஐ.ஏ.எஸ்.

நூல் ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் இறையரசன் பேசியது:

”  சிந்துவெளி நாகரிகம் நம்முடையது. அதற்கு முன்பே 5 ஆயிரம் 10 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றுத் தொன்மை நம் இனத்திற்கு உண்டு. மு.இராசேந்திரன ஐஏஎஸ், தனவேல் ஐஏஎஸ் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றிய போது, அவர்களுடைய உதவியால் தஞ்சைப் பெரிய கோயில் உச்சியில் ஏறி அங்குள்ள ஓவியங்களையும் நடன சிலைகளையும் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் தொடர்ச்சியாக நானும் கோ .கண்ணனும்  சோழப் படைகள் பயணித்து வெற்றி கொண்ட சிங்கபுரம் (சிங்கப்பூர்) ,கடாரம் (மலேசியா) மற்றும் கம்போடியா நாடுகளுக்குச் சென்று வந்தோம்.

கம்போடியாவில் உள்ள கோயில் நம்முடைய தஞ்சை பெரிய கோயிலை விட 10 மடங்கு பெரியது .அதையும் நேரில் பார்த்து விட்டு திரும்பினோம்.  தொடர்ந்து கோ. கண்ணன் ஜப்பான் நாட்டுக்கும் சென்று ஆய்வுகள் செய்து விட்டு திரும்பினார்.

எங்களுடைய நேரடி பயணத்தின் விளைவாக உருவானதுதான் மாமன்னன் இராஜராஜனின் பெருமைகளை பறைசாற்றும் இந்த நூல். பேரரசன் இராஜராஜனுக்கு  மேலும் சிறப்பு சேர்க்கும் இந்நூலுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் உரிய அங்கீகாரம் வழங்கும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

வருமானவரித்துறை முன்னாள் ஆணையர் செந்தாமரைக் கண்ணன், நடிகர் ‘யார்’ கண்ணன், கவிஞர் மங்கையர்க்கரசி, குவைத் கவிஞர் வித்யாசாகர் மருத்துவர் உதயசங்கர், தமிழ் வணிக அமைப்பு தலைவர்  சோழ நாச்சியார் ராஜசேகர், உடையாளூர் ஸ்ரீதரன், புலவர் பொன்னுசாமி, ஆரூர் தமிழ்நாடன், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் சீதாராமன் சந்திரகாசன் முதலானோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியை தமிழடியான் தொகுத்து வழங்கினார். நூலின் மற்றொரு நூலாசிரியர் தஞ்சை கோ. கண்ணன் நன்றியுரை நல்கினார்.

” பொன் மான் பயந்த புலி”

கோ.கண்ணன், பா.இறையரசன்

பக்கங்கள்; 80.

விலை ரூ 80 ( தபால் செலவு தனி)

முகில் நிலா பதிப்பகம்

தொடர்பு எண்; 9790875548

நிகழ்ச்சி தொகுப்பு; மாயோன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time