ஜல்லிக்கட்டு உயிர் இழப்புகளும், படுகாயங்களும்!

- சாவித்திரி கண்ணன்

வீரம் செறிந்த விளையாட்டுத் தான்! ஆனால், இதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களை உயிர்பலிகளை, படுகாயமுற்று வாழ்க்கையை தொலைத்து முற்றிலும் நடைபிணமாகப் போகிறவர்களைக் குறித்து ஏன் மூச்சுவிட மறுக்கிறார்கள்..?

வீர விளையாட்டு என பெயர் சூட்டி விபரீதங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று கூட தோன்றுகிறது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த மாடுபிடி விளையாட்டு தற்போது திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக ஊர்களிலும் கூட நடக்கிறது. தமிழகத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கின்றன. ஆனால், இந்த வீர விளையாட்டு நெற்களஞ்சியமான தஞ்சை, திருவாரூர், நாகை மாவடங்களிலோ, வீரத்திற்கு பேர் போன நெல்லை சீமையிலோ நடப்பதில்லை. ஏரி பாசனம் மிகுந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் கிடையாது. இது போன்ற இடங்களில் மாடுகளை பொதுவாக மைதானங்களில் கட்டவிழ்த்திவிட்டு ஓட வைப்பதோடு சரி!

இது ஒரு ஆபத்தான விளையாட்டு! எத்தனையோ விதிமுறைகள், சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் அவற்றை சரியாக அமல்படுத்த முடியாத விளையாட்டு. ஒவ்வொரு ஆண்டும் பல உயிர்பலி கேட்கும் விளையாட்டு. நூற்றுக் கணாக்கானவர்கள் படுகாயம் அடையும் விளையாட்டு. ஆனாலும், இதில் சிலருக்கு மோகம் குறைந்தபாடில்லை.

இந்த ஆண்டு மதுரை அவனியாபுரத்தில் முதலில் ஆரம்பித்தது. அதில் 39 மாடுபிடி வீரர்கள், 24 மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் ஏராளமானோர் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் வேடிக்கை பார்க்க வந்த 18 வயது இளைஞர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயம் அடைந்தவர்களில் 17 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்றும் சிலர் தனியார் மருத்துவமனைகளைக் கூட நாடி இருக்கலாம்!

பாலமேடு ஜல்லிக்கட்டிலோ மொத்தம் 36 பேர் காயமடைந்துள்ளனர். இதில் கோபிநாத் என்ற காவலர் படுகாயமடைந்துள்ளார். மாட்டை அழைத்து வரும் வழியிலே யாரோ பயங்கரமான சரவெடிகளை வெடிக்க, பயந்து மிரண்ட மாடு சாலையில் தறிகெட்டு ஓடி எதிர்ப்படுவர்களை எல்லாம் முட்டி தள்ளியுள்ளது. அவர்களில் பலர் ராஜாஜி மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர்.

சிவகங்கை சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் நடந்த ஜல்லிக்கட்டில் சேது, மகேஷ், அஜித்குமார், மருது என நான்கு பேர் பலியாகியுள்ளனர். 94 பேர் காயமடைந்து உள்ளனர். இதே மாட்டம் கண்டுப்பட்டி புனித அந்தோணியர் ஆலய கண்மாய்பொட்டல் பகுதியில் நடந்த மாடுபிடி விளையாட்டில் 80 பேர் காயம். 19 பேர் கவலைக்கிடமாக சிவகங்கை மருத்துவமனையில்! ஒருவர் சாவு! சிவகங்கை சீராவயல் மாடுபிடி விளையாட்டிலும் பலர் படுகாயமுறுவது வாடிக்கையாகும்!.

புதுக்கோட்டை திருமயம் அருகே வீராச்சிமலை பகுதியில் நடந்த மாடுபிடி விளையாட்டில் 63 பேர் காயம் அடைந்துள்ளனர். கருப்பையா என்பவர் பலியாகியுள்ளார்.

திருச்சி நாவலூர் குட்டுப்பட்டு கிராமத்தில் நடந்த மாடுபிடி விளையாட்டில் மாட்டு உரிமையாளர்கள் 13 பேர் உள்ளிட்டு 45 பேர் படுகாயம். வினோத்குமார் என்ற ஒருவர் பலியாகியுள்ளார். இதே மாவட்டத்தின் சூரியூர் மாடுபிடி விளையாட்டிலோ மீனாட்சி சுந்தரம் என்பவரை அவரது சொந்தக் காளையே குத்திக் கொன்றுள்ளது.

சென்ற ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் உயிர்பலி இருந்ததைப் போல இந்த ஆண்டு தகவல்கள் இல்லை. ஆனாலும் படுகாயம்பட்டு பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆரணி கண்டமங்கலம் பகுதியில் அனுமதி இல்லாமல் மாடுகளை சாலையில் தறிகெட்டு கட்டவிழ்த்துவிட்டதில் சாலையில் குடும்பத்துடன் பயணித்த ஒரு ஸ்ட்டரின் பின்பகுதில் இருந்த பெண் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். ஏராளமானோர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகினர்.

மேற்குறிப்பிட்டவை எல்லாமே சில சாம்பிள்கள் அவ்வளவே! இது போல தமிழகம் முழுமையும் நடந்த, நடந்து கொண்டுள்ள, இன்னும் சில நாட்களில் நடக்கவுள்ள அனைத்தையும் சேர்த்து விலாவாரியாக எழுதினால் இறந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை முறையாக தெரிய வரலாம். சில இடங்களில் படுகாயம் அடைபவர்களை, இறப்பவர்களை குறித்த தகவல்கள் வெளியில் வராமல் செய்கிறார்கள்.

பொதுவாக இதில் காயமடைபவர்கள், பலியாகிறவர்கள் குறித்து அரசோ, அல்லது இந்த போட்டிகளை நடத்துபவர்களோ பெரிய அக்கறை காட்டுவதில்லை. இவர்களின் சிகிச்சைக்கோ, இறப்புக்கோ எந்த உதவிகளும் சரியாக கிடைப்பதில்லை.

இறந்தவர்கள் ஒரேடியடியாக போய் சேர்ந்த புண்ணிய ஆத்மாக்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் படுகாயம் அடைந்தவர்கள் நிலைமைகள் மிக பரிதாபகரமானதாகும். பெரும்பாலும் அவர்கள் நடை பிணங்களாகிவிடுகின்றனர். இதில் மாடுகுத்தி குடல் சரிந்து வருபவர்கள் அதிகம். இவர்களின் மண்ணீரல், கல்லீரல் போன்றவை சீர்படுத்த முடியாத அளவு சேதாரமடைவதுமுண்டு.

கழுத்துப் பகுதியில் குத்துப்பட்டு மூச்சுக்குழாய் சேதாரமானவர்கள் காலம் முழுக்க மூச்சுவிட சிரமப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். முகத்திலே குத்துப்பட்டு முக அழகை இழந்தவர்கள் உண்டு. தூக்கு எறியப்பட்டத்தில் பின் மண்டை ஓட்டில் சேதாரம் ஏற்பட்டவர்கள் உண்டு. முதுகு தண்டுவடம் இழந்தவர்கள் உண்டு. இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டவர்கள் உண்டு. நெஞ்சில் நேரடியாக குத்துவாங்கியவர்கள் நிலைமை பரிதாபம். விலா எலும்பு போனவர்கள் வாழ்க்கை வினாக்குறியானதும் உண்டு. ஆண்களின் பிறப்புறுப்பில் குத்துப்பட்டவர்கள் கல்யாணத்திற்கு தகுதியின்றி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். இப்படி படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மிக எளிய குடும்ப பின்னணி உள்ளவர்கள் தாம்! இவர்களின் சிகிச்சைக்கு நிச்சயம் அரசோ, நிறுவனங்களோ பொறுப்பு ஏற்க வேண்டும்.

இந்தப் போட்டிகளை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் 77 விதிமுறைகளை வகுத்து தந்துள்ளது. ஆனால், அவை நடைமுறையில் பெரும்பாலும் மீறப்பட்டு விடுகின்றன.பொதுவாக எல்லா மாடுகளுமே சாதுக்கள் தாம்! அவற்றைத் தூண்டிவிட்டால் மட்டுமே அவை கோபம் கொண்டு சீறிப்பாயும்! அதனால் தான் வாடிவாசல் வந்தவுடன் வெளியில் ஆர்பரித்து நிற்கும் கூட்டத்தை பார்த்து பெரும்பாலான மாடுகள் மிரண்டு அப்படியே நின்றுவிடுகின்றன. அல்லது திரும்ப முயற்சிக்கின்றன. இப்படி வெளியே வர மறுத்து முரண்டு பிடிக்கும் மாடுகளை குச்சிகளைக் கொண்டு குத்தி தள்ளித் தான் பெரும்பாலும் வெளியே அனுப்புகிறார்கள்!

அந்தக் காலத்தில் மாடுகளுக்கு கோபம் வர சில தகாத செயல்களை செய்தார்கள். தற்போது சட்டம் கடுமையாக இருப்பதால் செய்வதில்லை. எனினும், மாடுகள் மனிதர்களை சண்டைக்கு அழைப்பதில்லை என்பது தான் சர்வ உண்மை.

பல இடங்களில் மாட்டின் உரிமையாளர்களே சொந்தக் காளைகளால் தாக்கப்படுவதை பார்க்கும் போது, தங்களுக்கு விருப்பமில்லா ஒன்றில் நிர்பந்தப்படுத்தப்படுவதால் அவை எரிச்சலடைகின்றன என புரிந்து கொள்ளலாம்! காளைகளுடனான நமது விளையாட்டை நேசம் கலந்த ஒன்றாக நடத்த திட்டமிட்டால் என்ன?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time