பொங்கல் தொகுப்பு குளறுபடிகள்! பேராசையால் பெயர் கெட்டது!

-சாவித்திரி கண்ணன்

பொங்கல் தொகுப்பான 21 வகை உணவுப் பொருட்கள் விவகாரத்தில் இவ்வளவு கெட்ட பெயர்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? மூன்று துறைகள் சம்பந்தப்பட்ட செக்கிங் ஆபீசர்ஸ் விங் இருந்தும் தரக்குறைவு, எடை குறைவு, பற்றாகுறை ஆகியவை ஏற்பட்டதன் பின்னணி என்ன?

ரேஷன் உணவு பொருட்கள் சப்ளை விவகாரத்தில் குற்றம், குறைகள் இருந்தால் அது எவ்வளவு சென்சிடிவ்வான விளைவுகளை உருவாக்கும். சேர்த்து வைத்த நல்ல பெயர் அனைத்தையும் நிமிடத்தில் தரைமட்டமாக்கிவிடும் என்பது தெரியாமல் இதில் சிலர் விளையாடியுள்ளனர். அதை தடுக்க நினைத்தும் முடியாமல் பலரும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்க வேண்டியதாகிவிட்டது என்பது தான் துரதிர்ஷ்டம்!

”முதலாவதாக பொங்கலுக்கு தேவைக்கும் மீறி 21 வகையான பொருட்களை தர முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இவை எல்லாவற்றையும் அரசாங்கம் தராவிட்டால் பொங்கல் கொண்டாட முடியாத நிலையில் தான் தமிழகத்தின் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களும் உள்ளனவா? இதை அரசிடம் கையேந்த வேண்டிய நிலையில் தான் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பிச்சைக்காரகளாக உள்ளார்களா? இதன் மூலம் ஆட்சியாளர்கள் தங்களை எஜமானர்களாக பாவித்துக் கொள்கிறார்களா…?” என்பதை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு இதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.

முதலில் முதல்வர் பொங்கல் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டவுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர், துறை அதிகாரிகள் கொண்ட உயர்மட்டக் குழு இதை எப்படி எல்லாம் சிறப்பாக திட்டமிட்டு வழங்குவது என ஆலோசனை நடத்தினார்கள். ஆர்டரின் மதிப்பு 1,297 கோடிகள் என சொல்லப்படுகிறது.

பச்சரிசி எப்போதுமே நமது ரேஷனில் சிறப்பாகவே இருக்கும். அப்படியே அது போதாது என்றால், கூட துறை மூலமாகவே நெல் கொள்முதல் செய்து அரவை மிஷினில் கொடுத்து வாங்க முடியும். ஆனால், அப்படி செய்யாமல் அந்த விநியோகத்தைக் கூட வெளிநிறுவனத்திற்கு தந்ததை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை. இந்த பொங்கல் தொகுப்பில் ஒரே ஆறுதல் நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டது தான்!

பச்சரிசி , வெல்லம், ரவை, கோதுமை ஆகியவை தலா ஒரு கிலோ, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், நெய் ஆகியவை தலா 100 கிராம், பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு,உப்பு தலா  500 கிராம், கடலைப் பருப்பு 250 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம்,  பொருட்களுடன் துணிப்பை  ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள முந்திரி மற்றும் திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், 6 அடி முழுக்கரும்பு ஆகியவை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் வினியோகிக்கப் பட்டதாக சொல்லப்பட்டது. ஆம், சொல்லப்பட்டது, அவ்வளவே!

இது போன்ற பிரம்மாண்ட ஆர்டர்களை தரும் போது ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களாகப் பார்த்து தான் அதை கொடுப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ள ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அந்தப்படி இந்த ஆர்டர்களை எடுக்கும் நிறுவனத்தினர் 15 பேரை உள்ளட்டக்கிய கூட்டம் ஒன்றை அமைச்சர் சக்கரபாணியின் உதவியாளர் தலைமையில் சென்னை பிரசிடென்ஸி டவரில் நடத்தினார்கள். அதில் சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சார்பாக வழங்கப்படும் பொருள்களுக்கு யார்,யாருக்கு என்ன ஆர்டர் எவ்வளவு சப்ளை,என்ன விலை கோட் பண்ணுவது எல்லாம் முடிவானது. ஆனால், இதை எல்லாம் ஓவர்டேக் பண்ணி மேலிடத்தில் ஒரு முடிவு எடுத்து சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்கப்பட்டு உள்ளது. இது தான் பிரச்சினைக்கு மூல காரணம்!

அதே போல கூட்டுறவு துறை சார்பாக வழங்கப்படும் பொருட்கள் தொடர்பான முடிவையும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமியால் எடுக்க முடியவில்லை. ஆனால், இவற்றை எப்படி வழங்கலாம், எப்படி விவசாயிகளிடமே நேரடியாக கொள்முதல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்கள் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தரப்பில் அலோசனை கூட்டம் எல்லாம் நடத்தப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. இவை எல்லாம் புறம் தள்ளப்பட்டு கரும்பு விநியோகம் திருவள்ளுர் மாவட்ட திமுக பிரமுகர் சுதர்சனத்திற்கும், கரூர் மாவட்ட திமுக பிரமுகர் ஒருவருக்கும் தரப்பட்டு உள்ளது. ஒரு கரும்புக்கு ரூ 33 என தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இவர்களோ விவசாயிகளுக்கு 13 முதல் 15 வரை பேரம் பேசி மொத்தமாக வாங்கி, லாபம் பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களை திடீரென்று திணித்ததும் ‘முதல்வர் குடும்ப லாபி’ என்கிறார்கள். இதனால் அப்செட்டான அமைச்சர் ஐ.பெரியசாமி அமைதியாக தன் ஊருக்கு சென்றுவிட்டார்.

வழக்கமாக இப்படி வழங்கும் போது தரத்தை சரிபார்க்க உணவு வழங்கல் துறையில் இன்ஸ்பெக்‌ஷன் செய்வதற்கு என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு உள்ளது. இந்தக் குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விசிட் அடித்து வழங்கப்பட்ட உள்ள பொங்கல் தொகுப்பை பிரிக்க சொல்லி எண்ணிக்கை, எடை, தரம் அனைத்தையும் சரி பார்ப்ப்பார்கள். இதில் தவறு இருந்தால் சம்பந்தப்பட்ட சப்ளையர் அந்தக் குறையை உடனே நிவர்த்தி செய்தே ஆக வேண்டும். அந்தக் குழு ஏன் செயல்படவில்லை? ஒரு வேளை இது மேலிடத்து ஆர்டர் ஆகவே, இதில் நாம் தலையிட்டால் வினையாகிவிடும் என பயந்தார்களா,,? அவர்களை முடக்கியது எந்த சக்தி எனத் தெரியவில்லை.

சாலை மறியல் போராட்டம்

மிளகிற்கு பதில் பருத்திக் கொட்டை, மிளகாய்த் தூளில் செங்கல் கலவை, மஞ்சள் சீரகம் மற்றும் மல்லியில் மரத்தூள்..வெல்லம் உருகி ஓடியது, பச்சரிசி, ரவையில் வண்டு மற்றும் பூச்சி.., சில பொருட்கள் விடுபட்டது பல இடங்களில் பற்றாகுறை…என ஏகப்பட்ட குளறுபடிகளால் ரேஷன் கடை ஊழியர்கள் மக்களை சமாளிக்க முடியாமல் திணறிப் போனார்கள். சில இடங்களில் மக்கள் சாலைக்கு வந்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

மக்களின் வசவை, அதிருப்தியை, கோபத்தை எதிர் கொண்டவர்கள் ஊழியர்களே! இத்தனைக்கும் மொத்த கார்டுதார்களில் 10 முதல் 15 சதவிகிதத்தினர் ரேஷன் பொருட்கள் வாஙக் ஆர்வம் காட்டமாட்டார்கள். அப்படி இருந்து பற்றாகுறை ஏற்படுகிறது என்றால், சப்ளை செய்தவர்களின் யோக்கியதை மட்டுமல்ல, அவர்களுக்கு ஆர்டர் தந்தவர்களின் யோக்கியதையும் சேர்ந்து வெளிப்பட்டு உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

நடந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே பொறுப்பாவார். அரசு நிர்வாகத்தில் குடும்பத்தார் தலையீடுகளை தவிர்க்காவிட்டால், பல நேர்மையான அதிகாரிகள் புடை சூழ இருந்தாலும் நல்ல நிர்வாகத்தை அவரால் ஒரு போதும் தரமுடியாது.எல்லாம் வெடித்து குமுறல் நிலைக்கு சென்ற பிறகு தான் அவருக்கு தெரிய வருகிறது என்றால், அவருடைய நிர்வாகத் திறமையின்மை, நேர்மையின்மை தான் இதில் பட்டவர்த்தனமாக தெரிய வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time