மாணவி மரணம்! மனித உரிமை மீறலா? மதமாற்ற முயற்சியா..?

இந்தியா முழுமையிலும் தஞ்சை மாணவி மரணம் ஒரு விவாத பொருளாகியுள்ளது. மதமாற்ற நிர்பந்தம் நடந்துள்ளதா? அல்லது தனிப்பட்ட டார்ச்சர் எனும் மனித உரிமை மீறலா ? பொய்யைப் பரப்பி பாஜக தூண்டுகிறதா..? உண்மையில் நடந்தவை என்ன?

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழியின் மகள் லாவண்யா (17) தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தூய இருதய மேல் நிலை பாடசாலை என்ற உண்டு உறைவிட பள்ளியில் படித்து வந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலின் நிர்வாகி சகாயமேரியின் மனிதாபிமானமற்ற  நடவடிக்கைகள் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி பூச்சி மருந்து குடித்து இறந்துள்ளார். இந்த சாவு இந்திய அளவில் இன்று பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

முருகானந்தத்தின் முதல் மனைவி கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது மனைவி தன் மகளை கொடுமைப்படுத்துவதில் இருந்து தவிர்க்கவே தன் மகள் லாவண்யாவை உண்டு, உறைவிட பள்ளியான மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலை பள்ளியில் சேர்த்தார் என சொல்லப்படுகிறது. எட்டாம் வகுப்பில் இருந்தே லாவண்யா அந்த பள்ளியில் தான் படித்து வந்தார். தற்போது 12ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் லாவண்யா தங்கியிருந்தார்.

இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் மாணவி லாவண்யா மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ”என்னை சகாயமேரி ஹாஸ்டல் பில்களை கணக்கு எழுத வேண்டும் உள்ளிட்ட நிறைய வேலைகள் தந்து  டார்ச்சர் செய்தார்.  விடுமுறைகளுக்கு வீட்டிற்கு அனுப்பமாட்டார். என்னை குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் அடித்தும் இருக்கிறார். விடுமுறைக்கு கூட வீட்டுக்கு அனுப்பமாட்டார். என் வீட்டார் கேட்டாலும் கூட, ‘அவள் இங்கு இருந்தால் தான் நன்கு படிப்பாள்’ என சொல்லி சமாளித்துவிடுவார். இதனால் தான் நான் மருந்து சாப்பிட்டு விட்டேன். என்னுடைய இந்த நிலைமைக்கு அவர்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கணும். இதுவே என் வேண்டுகோள்.” என்று கூறியுள்ளார்.

மாணவி அளித்த மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் என்ற வார்த்தையே இல்லை. ஆக, மாணவி புத்திசாலியாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருந்துள்ளார். அவரது ஏழ்மையைப் பயன்படுத்தி அந்த கிறிஸ்த்துவ சகோதரி அதிகமாக வேலை தந்து இம்சை செய்துள்ளார். இது ஒரு வகை குழந்தை உழைப்புச் சுரண்டலாகும்!

தங்கள் பெண் மரணம் தொடர்பாக பெற்றோர் காவல்துறைக்கு அளித்த புகாரிலும் இந்த கருத்து மட்டுமே சொல்லப்பட்டு உள்ளது. மதமாற்ற நிர்பந்தம் குறித்த புகார் இல்லை.

மருத்துவர், செவிலியர், மாஜிஸ்திரேட் தவிர வேறு யாரும் இல்லாத சமயத்தில் மாணவியிடம் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் ”தன்னையும், தன் குடும்பத்தாரையும் இரண்டு வருடத்திற்கு முன்பு மதம் மாறச் சொன்னார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம்” எனக் கூறியுள்ளார். அதிலும் கூட மாணவி அதற்காக நிர்பந்தம் செய்யப்பட்டதாக சொல்லவில்லை. அதாவது இரண்டு வருடத்திற்கு முன்பு ஒரு முறை கேட்கப்பட்டு உள்ளது. பிறகு அப்படியாக மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டதாக சொல்லவில்லை. என்று தான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அதுவும், அந்த வீடியோ எடுத்தவர் வலிந்து அப்படி ஒரு கேள்வி கேட்டு இருக்காவிட்டால், அந்த பெண்ணுக்கு அதை சொல்லி இருக்க தோன்றி இருக்காது என்றும் கருத இடமுள்ளது. எப்படி இருந்தாலும், இதை அடிப்படையாக வைத்து அந்த பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களை தீர விசாரித்தால், அப்படியான அணுகுமுறை அந்த நிர்வாகத்திற்கு இருந்திருந்தால் கண்டிப்பாக அது வெளிப்பட்டுவிடும். அல்லது வலிந்து அந்த பெண் அப்படி சொல்ல நிர்பந்திக்கப்பட்டாளா? என்றும் தெரிந்துவிடும். ஆக, முழுமையான விசாரணை நடந்து உண்மை வெளி வரும் வரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

வீடியோ வெளியானதையடுத்து பாஜகவினர் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடி உள்ளனர். ”மதமாற்றத்திற்கு தூண்டிய பள்ளிக்கூடத்தை இழுத்து மூட வேண்டும். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, ”மாணவியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திலும், அவரது பெற்றோர் அளித்த முதல் புகாரிலும் மதமாற்றம் குறித்து தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வெளியாகியுள்ள வீடியோ எங்களுக்கே புதிராகத் தான் உள்ளது. இது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம்.” என விளக்கம் அளித்தார்.

இந்த வீடியோ எடுத்தவர்கள் அதை உடனே காவல்துறை கவனத்திற்கு கொண்டுவராமல் ஏன் பொது வெளியில் விட்டு வைரல் ஆக்கினர் என்பது விவாதமாகியுள்ளது.

இந்த விவகாரத்தை பொறுத்த அளவில் அந்த மாணவி ஜனவரி 9 ந்தேதி பூச்சிமருந்து உட்கொண்டு உள்ளார். அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இருந்தால் காப்பாற்றப்பட்டு இருப்பார். அவ்வாறு டிரிட்மெண்ட் தராமல் அந்த மாணவியின் தந்தையிடம் ஒப்படைத்து உள்ளனர். அவருக்கும் தன் மகளின் உடல் நிலை குறித்த சீரியஸ்னெஸ் இல்லாமல் வீட்டில் அதிகமாக வாந்தி எடுக்கவே மருத்துவமனை சேர்த்துள்ளார். மிகக் காலதாமதமாகவே அந்த மாணவி தான் பூச்சி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். தனக்கான மன அழுத்ததையும், உடல் துன்பத்தையும் அவள் தன் வீட்டில் கூட தைரியமாக பகிர முடியாதவளாக இருந்துள்ளாள்.சுமார் ஏழு நாட்கள் சரியான சிகிச்சையின்றி அந்த சிறுமி 15 ஆம் தேதி மருத்துவமனை சேர்க்கப்பட்டு 16 ஆம் தேதி இறந்துள்ளாள்.

சம்பந்தப்பட்ட பெண்ணின் வீடியோ பொதுவெளிக்கு வந்து விவாத பொருள் ஆன பிறகு தான் அவளது பெற்றோரும் இந்த மதமாற்ற புகாரை தந்து உள்ளனர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ பாஜகவினர் இதில் நுழைந்து பெற்றோரை அவ்விதம் பேசும்படி நிர்பந்தித்தார்களா,,?’ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இது தொடர்பாக எஸ்.எப்.ஐ என்ற ஒரு மாணவர் அமைப்பு பெற்றோரை தொடர்பு கொண்டு உண்மை அறிய முயன்ற போது பாஜகவினரால் அவர்கள் தடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போது தான் நாங்கள் எங்கள் மகளின் சடலத்தை வாங்குவோம் என பெற்றோர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ”இது குறித்து திருக்காட்டு பள்ளி காவல்துறையினர் தீர விசாரித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தரக் கேட்டுள்ளார். அதே சமயம் இந்த வீடியோ எடுத்தவர் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்கி, அப்படி எடுத்தவரின் நோக்கம் என்ன என்ற கோணத்தில் காவல்துறை செல்லக் கூடாது” என நீதிபதி கூறினார்.

நீதிபதி இவ்வாறு கூறியதானது இந்த வழக்கை சகல பரிமாணங்களிலும் ஆய்வு செய்து விசாரிக்க வேண்டிய காவல்துறையின் கைகளை கட்டிப் போட்டது போல உள்ளது என நம்மிடம் ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தூய இருதய மேல் நிலை பள்ளியானது மிக நீண்ட நெடிய காலமாக தஞ்சை மாவட்டத்தில் இயங்கி வருகிறது. இது வரை அந்த பள்ளி குறித்து இது போன்ற மதமாற்றப் புகார்கள் வரவில்லை. ஆனால், இவ்விதம் தற்போது வந்த நிலையில் மற்ற மாணவர்கள், பெற்றோர் தரப்பிலும் இது போல நிர்பந்தம் தரப்பட்டு உள்ளதா? என விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கப்படும் போது சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும். எந்த பாரபட்சமும் இல்லாமல்- எந்த அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் கொடாமல் – இந்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டு அதன் விவரங்கள் நீதிமன்றத்திலும், அரசிடமும் தெரிவிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மதமாற்ற நிர்பந்தம் செய்திருக்கும் பட்சத்தில் சட்டப்படி அதற்கான தண்டனை தரவேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் இது போன்ற வதந்தியை கிளப்பியவரை குண்டர்சட்டத்தில் சிறையில் தள்ள வேண்டும். ஒரு  மோசமான பொய் பல ஆயிரம் மனித படு கொலைகளை விட வலியதாகும். தமிழகத்தில் பல ஆண்டுகளாக நல்ல உள்ளத்துடன் தூய கல்வித் தொண்டு செய்யும் கிறிஸ்தவர்களை இந்த பொய் கடுமையாக பாதிப்பதோடு, அதில் பலன் பெறும் லட்சக்கணக்கான இந்துக்களையும் கூட பாதித்துவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உண்மை வெளிவரட்டும்! அந்த உண்மையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையட்டும்!

இந்த விவகாரத்தில் மாணவியைக் கொடுமைபடுத்திய சம்பந்தப்பட்ட சகாயமேரி என்பவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அவருக்கு முட்டுக் கொடுத்து காப்பாற்ற கிறிஸ்த்துவ அமைப்புகள் முன் வரக் கூடாது. மனித நேயமில்லாமல் பள்ளிக் குழந்தையின் மன உளைச்சலுக்கும், சாவுக்கும் காரணமானவரை மதத்தின் பெயரால் காப்பாற்றக் கூடாது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time