ஆணையிடுவது நாங்கள்! அடிபணிய வேண்டியது நீங்கள்!

-சாவித்திரி கண்ணன்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…!

சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக் கொள்ளும் அதிகாரத்தை 1954-இன் இந்திய ஆட்சிப் பணி விதி 6-இன் புதிய திருத்தம் வழங்குகிறது.

நவீன இந்தியாவை கட்டமைத்த நமது முன்னோர்கள் மத்திய அரசுக்கு இணையான அதிகாரத்தோடு கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வண்ணம் மாநில அரசுகளை நடத்தினார்கள். ஆனால், தற்போதைய பாஜக அரசோ மாநில அரசை, மாமன்னர்களிடம் மண்டியிட்ட சிற்றரசர்களாக நடத்த நினைக்கிறது!

இந்திய ஆட்சிப் பணி விதி 6-இல் திருத்தம் செய்யும் முடிவை மத்திய பாஜக அரசு எடுத்ததற்கு ஒரு முக்கிய பின்னணி உண்டு. மேற்குவங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாயா முதல்வர் மம்தா பானர்ஜியின் நிர்வாகத்திற்கு மிக உறுதுணையாக இருக்கிறார். மம்தாவின் செல்வாக்கிற்கு இவரது நிர்வால ஆளுமை மிக முக்கிய காரணம். ஆகவே அவரை அந்தப் பதவியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால் மம்தா கையை ஒடித்தது போலாச்சு என திட்டமிட்டனர். ஒரு நாள் அதிரடியாக அவர் மாநில அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு மத்திய அரசு பணிக்கு நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதை சற்றும் எதிர்பார்க்காத மம்தா அதிர்ந்து போனார்.திடீரென்று அவரை இழந்தால் மாநிலத்தின் பல வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் அவரை நாங்கள் விடுவிக்க மாட்டோம் என்றார். ஐ.ஏ.எஸ் பணிவிதிகள் சட்டத்தில் மத்திய அரசு மாநில அரசை இந்த மாற்றம் தொடர்பாக கலந்து பேசியிருக்க வேண்டும். மாநில அரசு  ஆட்சேபனை இல்லை என்றால் தான் மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியும் என உள்ளது. ஆகவே, தலைமைச் செயலாளருக்கும் இது பழி வாங்கும் நடவடிக்கை என தெரிய வந்ததால் அவரும் மத்திய அரசு பணியில் சேர மறுக்கவே இன்னும் அந்த பஞ்சாயத்து முடிந்தபாடில்லை.

ஐ.ஏ.எஸ் என்பதான இந்திய ஆட்சிப் பணி என்பது ஒரு ஆட்சியின் முதுகெலும்பு போன்றது. ஆட்சியாளர்கள் எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும், திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை அமல்படுத்தி நடைமுறையில் சாத்தியப்படுத்துபவர்கள் இந்த அதிகாரிகளே!

அப்படி ஒரு இணக்கமான வகையிலே மாநில அரசு நிர்வாகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளை திடீரென்று பிரித்து எடுத்து தூக்கி அடிப்பது நிர்வாக நடைமுறை சிக்கல்களை உருவாக்கும். அது மட்டுமின்றி ஒரு அதிகாரியை எப்போது வேண்டுமானாலும் நம்மை மத்திய அரசு தூக்கி அடிக்கும் என்ற அச்சத்திலேயே உழல வைப்பது ஒருவித சைக்கோத்தனமாகும்!

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கசப்புணர்வுகளை இந்த அணுகுமுறை ஏற்படுத்தும். மாநில அரசுகளுடனான உறவில் விரிசல் நிகழ வழிவகுக்கும். இதுபோன்ற முயற்சிகளை ஆளும் பாஜக அரசு விட்டொழிக்க வேண்டும். மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா,கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள சூழலில், தமிழக அரசும் இத்திருத்தத்திற்கு தற்போது தன் எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை மட்டுமின்றி ஐ.பி.எஸ் அதிகாரிகளையும், ஐ.எப்.எஸ் அதிகாரிகளையும் கூட இப்படி நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மாநிலங்களிடம் இருந்து பறித்துக் கொள்வேன் என்பது தான் இந்த சட்டத் திருத்தத்தின் ஆபத்தான அம்சமாகும். உதாரணத்திற்கு தமிழக டிஜிபியை மத்திய அரசு திடீரென்று பணியிட மாற்றம் செய்யுமானால், அது நிச்சயம் மாநில நிர்வாகத்தில் பாரதூர விளைவுகளை உருவாக்கிவிடும். ஒரு மாநில அரசின் பலம், பலவீனம் உள்ளிட்ட பல ரகசியங்களை தெரிந்து பக்குவமாக இயங்குபவர்கள் இந்த காவல்துறை உயர் அதிகாரிகள்! இவர்களையும் அச்சத்தில் ஆழ்த்த நினைக்கிறது மத்திய அரசு. இதே போல வனத்துறை அதிகாரிகளான ஐ.எப்.எஸ் அதிகாரிகள் தூக்கி அடிக்கப்படும் போது சுழலலியல் பிரச்சினைகள் எழும்.

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள சட்ட திருத்தம் சொல்வதாவது;

# மாநில அரசை கலந்து பேச வேண்டியதில்லை.

# ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் அதிகாரிகளை விடுவிக்க, மாநில அரசின் தடையில்லா சான்று அவசியமில்லை.

# மத்திய அரசு கூறியுள்ள காலக் கெடுவிற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிட்டாலும் கூட, அவர் குறிப்பிட்ட தேதியில் இருந்து மத்திய அரசு அதிகாரியாக கருதப்படுவார்.

# மத்திய அரசின் பணியிட மாற்றத்தில் மாநில அரசுக்கு கருத்து வேறுபாடு இருந்தால், இறுதியில் மத்திய அரசு முடிவை ஏற்பதன்றி மாநில அரசுக்கு வேறு வழியில்லை!

இவை எல்லாமே மாநில அரசு நிர்வாகத்தை மத்திய அரசு ஒரு செல்லாக் காசாகக் கருதுகிறது என்பதையே உறுதிபடுத்துகிறது. ”மாநில அரசாவது, மண்ணாங்கட்டியாவது, நசுக்குபுடுவேன், நசுக்கி! ஜாக்கிரதை.” என்பதே இந்த பணிவிதிகளில் செய்துள்ள சட்டதிருத்தம் சொல்லும் செய்தியாகும்! காலப் போக்கில் இந்த அணுகுமுறை வலுப்பெற்று, வருங்காலத்தில் மாநில அரசு என்பவை மாநகராட்சி என்ற அளவுக்கான அதிகாரத்தோடு இயங்கினால் போதுமானதாகும் என்ற எல்லையை பாஜக அரசு நிலை நாட்டும் என்று தான் தோன்றுகிறது.

இப்படி எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகள் ஆட்சி செய்வதால் எதிர்த்தார்கள் என்று சொல்லி கடந்துவிட முடியாது. இது பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் இந்த எதிர்ப்பை வெளிப்படையாக சொல்ல முடியவில்லையே தவிர மனதிற்குள் நிச்சயம் புழுங்கவே செய்வார்கள்! அவர்களும் விரைவில் எதிர்ப்பார்கள் என நம்பலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time