வ.உ.சி நடத்தியது, பிரிட்டிஷாருக்கு எதிரான பொருளாதாரப் போர்!

-ரெங்கையா முருகன்

குடியரசுதின சிறப்புக் கட்டுரை

சங்க காலத்திலேயே வெளி நாட்டில் வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் பயணித்த பாரம்பரியம் தமிழர்களுக்குண்டு. சோழர் காலத்திலேயே பிரம்மாண்ட கப்பற்படைகள் இருந்தன. இடைகாலத்தில் நாம் இழந்த பெருமைகளை மீட்டெடுக்க வ.உ.சி கொண்ட பெரு முயற்சிகளும், பெருந்துயரங்களும் காவியத் தன்மை கொண்டவை!

ஆங்கிலேயருக்கு எதிராக, அழிந்து கொண்டிருந்த இந்திய கடல் போக்குவரத்து தொழிலுக்கு  புத்துயிர் அளித்தவர். இந்திய கடல்சார் வர்த்தகம் இழந்த புகழினை மீட்டெடுக்க,  வ.உ.சி. ஆற்றிய சேவை அவரது சம காலத்திலும், முன்னெப்போதும் நிகழாத மாபெரும் முன்னெடுப்பு!

பிரிட்டீஷ் இந்திய நீராவி கப்பல் நிறுவனம் தூத்துக்குடியில் ஏகபோகமாக தனது செல்வாக்கைச் செலுத்தி வந்த வேளையில் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்பதாக நம்முடைய வர்த்தகர்கள் கீழான முறையில் நடத்தப்பட்டனர். இதன் காரணமாக பல்வேறு தொந்தரவுக்கு உள்ளான சில வர்த்தகர்கள் தங்களுடைய  மனக்குமுறலை வ.உ.சி. யிடம் கொட்டித் தீர்த்தனர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக பிரம்மாண்டமாக சிந்தித்து அவர்களது பொருளாதாரச் சுரண்டலை ஒழிக்க கப்பல் என்ற அடையாளக் குறியீட்டைக் கொண்டு அந்நியர்களின் அடிவயிற்றை கலக்க முடிவெடுத்தார் வ.உ.சி.

தூத்துக்குடியில் வக்கீல் தொழிலில் பெரும் புகழுடனும், வருவாயுடனும் இருந்த வ.உ.சி. சுதேசி கப்பல் முயற்சிக்காக இரண்டாம் நிலை பிளீடர் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு, முழு முயற்சியில் இறங்குகிறார்.   ஆங்கிலேய பிரிட்டீஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக களத்தில் இறங்குகிறார்.  ஆங்கிலேய முதலாளிகளை எதிர்த்து கோரல் மில்லில் சுரண்டப்பட்ட எளிய தொழிலாளர்களை எழுச்சி கொள்ள வைத்து பெரும் போராட்டங்கள் நடத்தி ஆங்கிலேயர்களின் இறுமாப்பினை சிதைத்தார்.

ஆங்கிலேய நிர்வாகத்தை எதிர்த்து  தேசாபிமான சங்கம், தர்ம நெசவு சங்கம், ஜன சங்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கி சாமான்ய, பாமர மக்களை அரசியல்படுத்துகிறார். இந்திய வரலாற்றில் ஆங்கிலேயர்களை  எதிர்த்து எல்லா முனைகளிலும் எதிர்ப்பினை வலுவாக  முன் எடுத்து சென்றவர் வ.உ.சி. அதனால்தான் ஆங்கிலேயர்களுடைய பெரும் கோபத்திற்கு ஆளானார். வ.உ.சியின் அரசியல் ஆளுமையை முதன்முதலாக மிகச் சரியாக தமிழக மக்களுக்கு சொன்னவர் பாரதியார் தான்!

இந்திய கடல்சார் வணிகம் எவ்வாறு ஆங்கிலேயர் காலத்தில் சுரண்டப்பட்டது என்பதை காணச் சற்று வரலாற்றை பின் நோக்குவோம்.

பழங்காலத்தில் ஆசியா மற்றும்  மத்திய தரைக்கடல் மேற்குப் பகுதியில் அமைந்திருந்த நாடுகளுடனும் இந்தியா அதிக கடல் சார் வர்த்தக தொடர்பு வைத்திருந்தது. நீராவி சக்தி சார்ந்த துறையிலும், உற்பத்தி துறையிலும் பெரும் புரட்சியை அறிவியல் ஏற்படுத்துவதற்கு முன்பாகவே கடல் வர்த்தகத்திற்கான கப்பல்கள் இருந்தன.

மதராஸ் மாகாணம்தான் மிக நீண்ட கடற்கரையை பெற்று இருந்தது., உள்நாட்டு மரக்கலங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் 656  துறைமுகங்கள் இருந்தன! கப்பல் கட்டும் தொழிலைப் பொறுத்த வரை இங்கிலாந்தில் கட்டப்படும் கப்பல்களை விட பம்பாயில் கட்டப்படும் கப்பல்கள்தான் நீடித்து உழைக்கக் கூடியவையும், தரமானதும்  என்று நம்பப்பட்டது..

மகாராஷ்டிரத்தில் கப்பல் கட்டும் தொழிலை முதன் முதலாக ஊக்குவித்தவர் சிவாஜி. மராட்டியர்களால் கட்டப்பட்ட மரக்கலங்கள் 4000 டன் சரக்குகளை சுமக்கக் கூடியவை. கிரேட் பிரிட்டனில்  தயாரான கப்பல்கள் ஆறு கடற்பயணங்களுக்கு மேல்  பயணித்த ஐரோப்பிய கப்பல் பாதுகாப்பான பயணத்திற்கு இலாயக்கற்றது. ஆனால், இந்தியாவில் தேக்கு மரத்தில் கட்டப்பட்ட மரக்கலங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து உழைக்கக் கூடியன. ஐரோப்பிய கப்பல்களை விட வலிமை மிக்கதாகவும் இருந்தது. இந்தியாவில் கட்டப்பட்ட கப்பல்கள் லண்டன் துறைமுகத்திற்குள் நுழைந்து நங்கூரமிட்டால் அங்குள்ள கப்பல் கட்டும் தொழிலாளர்கள் வாயைப் பிளப்பார்களாம். தங்களது தொழிலுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது என்று அச்சப்படுவார்களாம்.

வ.உ.சியின் இளமை கால தோற்றங்கள்!

கப்பல் கட்டுவதற்கு தேவையான சிறந்த தரமான மூலப்பொருட்கள் அனைத்தும் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. இந்தியாவின் மூலப் பொருட்களினை கொண்டு இங்கிலாந்தில் கட்டும் தளங்களில் கப்பல்கள் உருவாக்கப்பட்டன!.

இந்தியாவில் உற்பத்தியாகும் பெருமளவு தானியங்கள், பருப்பு வகைகள், பருத்தி, சணல், தோல், சர்க்கரை ஆகியன அடங்கிய மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு  ஐரோப்பிய கப்பல்கள்  மூலமாகவே கொண்டு செய்யப்பட்டன.

மிகவும் வருத்தம் தரக் கூடிய விசயம் என்னவெனில், இந்தியாவின் அந்நிய வர்த்தகம் மட்டும் வெளிநாட்டுக் கப்பல்களை  நம்பியிருந்த நிலையில் உள்நாட்டு வர்த்தகம் கூட உள்ளூர் துறை முகத்திலிருந்து  ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாண துறைமுகத்திற்கு அனுப்புவதற்கும் நாம் வெளிநாட்டு கப்பல்களை நம்பி இருந்தோம்.

இந்திய வர்த்தகத்தை இந்திய கப்பல்கள் கொண்டு நடத்தப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். சுதேசி இயக்கங்கள் மூலமாக உள்நாட்டு கடல் வர்த்தகம் வளர்ப்பதில் முயற்சிகள் மேற்கொண்டன. இதில் முக்கியமானது இரங்கூனைச் சார்ந்த வங்காள நீராவி கப்பல் போக்குவரத்து நிறுவனம், தூத்துக்குடியைச் சார்ந்த வ.உ.சி.யின் மேற்பார்வையிலான சுதேசி கப்பல் போக்குவரத்து நிறுவனம், வங்காளத்தைச் சேர்ந்த பாக்யாக்குள் கிழக்கு வங்காள நதிப் போக்குவரத்து நிறுவனம் ஆகியன.

வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே சுதேசி கப்பல் சேவை ஆரம்பிக்க எத்தனிக்கிறார். கப்பல் இறக்கும் முன்பாகவே  சில கப்பல்களை ஒப்பந்தத்தின் பேரில் வாடகைக்கு வாங்கி இயக்குகிறார். சுதேசி கப்பல் வாங்குவதற்காக அழகான திட்டம் ஒன்று வகுக்கிறார். 40, 000 பங்குகள், ரூ 25/- வீதம் மொத்தம் 10,0000/- தொகை திரட்ட முடிவெடுக்கிறார்.

1906 ம் ஆண்டு விவேகபானு இதழில் சுதேசி ஸ்டீமர் விக்ஞாபானம் என்றபேரில் தனது திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

#  சுதேசம் விருத்தியடைந்து முன்னாளின் மேலான நிலைமைக்கு வருவதற்கு சகல தொழில்களிலும், வியாபாரங்களிலும் மிக்க லாபத்தை கொடுப்பதான கப்பல்கள் நடத்தும் தொழிலை நாம் கைக் கொள்வதே  முக்கிய சாதனமாகும்.

# தூத்துக்குடியில், கொழும்புக்கும் மற்ற சுதேசிய ஸ்டீமர்கள் நடைபெறாத துறைமுகங்கட்கும், பிரயாணத்தையும், வியாபாரத்தையும்  சவுகரியப்படுத்தவும், சகாயப்படுத்தவும் தக்க ஸ்டீமர்கள் நடைபெறும்படி செய்தல்!

# இந்தியர்களையும், இலங்கையர்களையும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியர்களையும் கப்பல் நடத்தும் தொழிலில் பழக்குவித்து அதன் மூலம் வரும் லாபத்தையடையும்படி செய்தல்.

# இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியர்களுக்கும் கப்பல் நடத்தும் தொழிலையும் கப்பல் நிர்மாணம் செய்யும் தொழிலையும் செய்து காட்டி கற்பித்தல்.

# இந்திய இலஙகை மாணவர்க்கும் மற்றும் ஆசியா கண்டத்து மாணவர்க்கும் கப்பலோட்டும் தொழிலையும், கப்பல் நிர்மாணம் செய்யும் தொழிலையும், சாஸ்திர சம்பந்தமாக  கற்பிக்கும் கலாசாலைகள் ( Marine Institute)  ஏற்படுத்துதல்

# கப்பல் நடத்தும் தொழிலில் வியாபார முறையில் இந்தியர் இலங்கையர்கள்  முதலிய ஆசியா கண்டத்துவாசிகளுக்குள் ஐக்கியபாவனையயுண்டு பண்ணி ஒற்றுமையாக உழைக்கச் செய்தல்.

அவரது திட்டப்படி 1906 அக்டோபர் மாதம் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாளன்று இந்திய கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்கிறார். வ.உ.சி. திட்டப்படி இந்தியர்கள் முதலீடான சுதேசி நிறுவனம் நாட்டின் பிற பகுதிகளிலும் தோன்றுவதற்கு வழிவகுக்கும் என்று நம்பினார்.

இந்தியா முழுமையும் சென்று பொதுமக்களின் ஆதரவை திரட்டுகிறார். இரவும் பகலுமாக கப்பல் கம்பெனி நிறுவனத்தாருக்கு தந்தி மூலம் தொடர்பு கொள்கிறார். வட இந்தியாவில் கல்கத்தாவில் 15,000 பங்குகளும், பம்பாயில் 10,000 பங்குகளும்,  தமிழகம், ஆந்திரா, பர்மா மற்றும் இலங்கையும் சேர்த்து மீதியுள்ள 25,000 பங்குத் தொகையைத் இரண்டு வார காலத்திற்குள் சுதேசி நிறுவன முகவர்களால் திரட்டப்பட்டது. இதற்கான அலுவலகம் சென்னை பிராட்வே 42, மண்ணடி தெருவில் சீனிவாசன் என்பவர் பொறுப்புடன் பார்த்துக் கொண்டார்.

பம்பாய் சென்று கப்பல் வாங்கும் முன்பாக மனத்திடத்துடன் சூளுரைக்கிறார். வந்தால் கப்பலோடு வருவேன். இல்லையெனில், என் பிணம்தான் வரும் என்று சூளுரைக்கிறார். பம்பாய் சென்று கப்பல் வாங்கும் முயற்சியில் ஈடுபட்ட போது மூத்த பாலகன் உலகநாதன் உடல் நோயால் துன்புறும் வேளையில் தந்தி அடித்து உடனே புறப்பட்டு வீட்டுக்கு வரச் சொல்கின்றனர். என் மனைவியையும், மகனையும் கடவுளிடம் ஒப்புவித்து விட்டேன். அவர்களை கடவுள் பார்த்துக் கொள்வான் என்று பதில் தந்தி அனுப்புகிறார். அதன்படி 1907ம் ஆண்டு ஜூன் மாதம் முன் பின் காலியா, லாவோ இரு கப்பல்களுடன்  இறக்கி தனது சபதத்தை அந்நியர்களுக்கு வெற்றிகரமாக முடித்தார்.

 

பிரிட்டீஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு சுதேசி கப்பல் வர்த்தக ரீதியாக மிகப் பெரிய சவாலை கொடுத்தது. பொதுமக்களும் ஏராளமாக சுதேசி கப்பலுக்கு ஆதரவு அளித்தனர். சுதேசிய போட்டியாளர்களிடமிருந்து பி.ஐ.எஸ். என். கம்பெனி பயணிகளைக் கவர பல குறுக்கு வழிகளை கையாண்டு, சுதேசிய கப்பல் கம்பெனியை பல வகையில் ஒடுக்க சதி செய்து அதில் வெற்றியும் கண்டனர்.

சுதேசிய பங்குதாரர்களாலேயே வ.உ.சி.க்கு பல நெருக்கடிகளை கொடுத்தனர். கலெக்டர் ஆஷ் என்பவரை கொண்டு கப்பல் கம்பெனியை ஒழிக்க எல்லா வேலைகளும் செய்து இராஜ நிந்தனை வழக்கில் சதி செய்து  வ.உ.சி. க்கு இரட்டை ஆயுள் தண்டணை வழங்கி சிறைக்கு அனுப்பி வைத்தது பிரிட்டிஷ் அரசு!

’’வ.உ.சி வெறுக்கதக்க ராஜதுவேசி. அவருடைய எலும்புகள் கூட சாவுக்குப் பிறகு ராஜதுவேசத்தை ஊட்டும்’’ என பிரிடிஷ் நீதிபதி பின்ஹே சொன்னது நினைவு கூறத்தக்கது.

ஆங்கிலேயர்கள் நினைத்த மாதிரி அதன் பங்குதாரர்களாலேயே  வ.உசி உருவாக்கிய சுதேசி கப்பல் நிறுவனம் ஆங்கிலேயர்களிடம் விற்கப்பட்டதன் மூலம் படு தோல்வி அடைந்தது.

இந்த தோல்வி தவிர்த்திருக்கப்பட வேண்டியது. அதற்கு தடை நிதி சார்ந்தது. ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு பங்குக்கான ரூ 25/- மட்டுமே அனுப்பியிருந்தால் சுதேசி கப்பல் நிதிக்கடன் சுமையிலிருந்து தப்பித்திருக்கலாம். நிறுவனத்தின் தோல்வியை மீட்டெடுத்திருக்கலாம்.

ஒருவகையில் சதி செய்து வ.உ.சி.யை சிறைக்குள் தள்ளி ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றாலும், இது நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் ஏற்பட்ட தோல்வி. என்பதே உண்மை! இது வரலாற்றில் ஒரு தேசியப் பேரழிவாக நினைவு கொள்ளத்தக்கது!

இதே காலக்கட்டத்தில் வங்காள நீராவிக் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கும் சுதேசி கப்பல் கம்பெனிக்கு கொடுத்த இடையூறுகள் மாதிரி இருந்த போதிலும் அந்த நிறுவனத்தை வங்காள மக்கள் தங்கள் சுயமரியாதையாக கருதி வெற்றிகரமாக காப்பாற்றி விட்டனர். ஆனால் தமிழகத்தில் பங்குதாரர்களே ஆங்கிலேயர்களுடைய அடக்கு முறைக்கு பணிந்து சென்றனர்.

தற்போதைய அரசு வ.உ.சியின் சுயநலமற்ற தேசிய விடுதலை அர்ப்பணிப்புக்காக சென்னையில் இயங்கும் உத்தண்டி கடல் சார் பல்கலை கழகத்திற்கு அவர் பெயரைச் சூட்டினால்  அரசுக்குப் பெருமை சேர்க்கும். அவருடைய 150 ம் ஆண்டு பிறந்த நாளில் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்! இந்தியாவின் – குறிப்பாக தமிழ் நாட்டின் – தொழிற்துறை மீளுருவாக்க நாயகராக வரலாற்றில் வ.உ.சிக்கு என்றென்றும் ஒரு இடம் உண்டு!

கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

எம். கிருஷ்ணசாமி அய்யர். 1909. வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கைச் சரித்திரம். ஹரிஹர அச்சகம்

குருசாமி மயில் வாகனன். 2021. கப்பலோட்டிய கதை. நீந்தும் மீன்கள் வெளியீடு.

கட்டுரையாளர்; ரெங்கையா முருகன்

வ.உ.சி ஆய்வாளர்.

வ.உசி பற்றிய ஆய்வுகளையும்,

அவர் புகழ் பரப்பலையும்

தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருப்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time