இந்தியாவின் சமூக அரசியலைப் புரிந்து கொள்வது எப்படி?

- பீட்டர் துரைராஜ்

சுதந்திர இந்தியா எவ்வாறு கட்டமைக்கப்பட்டது? நேருவின் ஆளுமை எப்படிப்பட்டது? இந்திரா காந்தி செயல்பட்டவிதம், இந்திய அரசியல் கட்சிகளின் இயங்கு தன்மை, இந்தியாவை மற்றொரு மதவாத பாகிஸ்தானாக்க துடிக்கும் பாஜகவின் செயல்பாடுகள் என அலசுகிறார் சுனில் கில்நானி.

சுதந்திர இந்தியாவின் ஐம்பது ஆண்டு வரலாற்றை, ஒரு புதிய கோணத்தில் அணுகியுள்ளார் சுனில் கில்நானி. தற்போது அசோகா பல்கலைக் கழகத்தின் அரசியல் வரலாற்றுத்துறை பேராசிரியராக உள்ளவரான சுனில் கில்நானி, லண்டன் கிங்ஸ் கல்லூரியின் இயக்குனராக இருந்தவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர் மற்றும் விமர்சகர்.

இந்த நூலை மேலோட்டமாக படிப்பது கடினம். பொருட்செறிவு மிக்க, ஆழமான நூல் இது. ‘ஜனநாயகம்’ என்ற முதல் அத்தியாயத்தில் இந்தியா குறித்து பெருமிதம் கொள்கிறார்.

சுனில் கில்நானி

“எழுச்சியூட்டும், சீற்றம் மிகுந்த, உள்முகப் பார்வை கொண்ட படைப்பு… சமகால இந்திய வரலாற்றை, விடுதலைக்குப் பின் இந்தியாவின் வளர்ச்சியை உயரிய முறையில் கில்நானி படைத்திருக்கிறார்” என்ற இந்த நூல் குறித்து பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் குறிப்பிடுகிறார்.

இந்தியா 1997 ல், சுதந்திரம் அடைந்த பொன்விழாவைக் கொண்டாடியபோது வெளிவந்த நூல் ‘Idea of India’. இலண்டன் அரசர் கல்லூரி, பேராசிரியரான  சுனில் கில்நானி ( Sunil Khilnani) இதனை  எழுதியுள்ளார். புத்தகம் வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு,   ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற பெயரில், தமிழில் வெளிவந்துள்ளது. காந்தி கல்வி நிலையம், இந்த நூல் குறித்து ஒரு அமர்வை நடத்தியுள்ளது. குடியரசு தின நாளில்  இந்த நூலைப் பற்றி  பேசுவது பொருத்தமாக இருக்கும்.

”பிராமண அமைப்பு முறை என்பது நிச்சயமாக, அடக்குமுறை வழியிலான பொருளாதார உற்பத்தி முறையே’ என்று சொல்லும் சுநில் கில்நானி,  ‘இந்த சமுதாயத்தை ஆட்சி செய்வது சுலபம், ஆனால் மாற்றுவது கடினம்’ என்கிறார். ‘பன்முகத்தன்மையின்  குறியீடாக இந்தியாவின் அரசியல் கட்சிகள் இருக்கின்றன: அவை, மதரீதியான தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்டவை (பாரதிய ஜனதா கட்சி); சாதி சார்ந்தும், வர்க்கம் சார்ந்தும் உருவானவை (லோக் தல்); சாதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை (பகுஜன் சமாஜ் கட்சி); மலை ஜாதியினர் ( ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா); மத அடிப்படையிலான பிரிவினைவாதிகள் (அகாலி தல்), கலாச்சார அடையாளத்தின் அடிப்படையில் திரண்டவை (தமிழகத் திராவிட கட்சிகள்); பிரதேச அடையாளம் பேணும் அமைப்புகள் (சிவ சேனை) ஆகியன’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

அதே வேளையில், ‘தேசத்தை திடப்படுத்தும், நோய் தீர்க்கும் மருந்தாக ஒருகாலத்தில் பார்க்கப்பட்ட அரசியலும், அரசும் இப்போது ஒரு நோயாக பார்க்கப்படுகின்றன’ என்று கவலையும் கொள்கிறார். இப்படி இந்த நூல்  வரலாறும், அரசியலும், தத்துவமுமாக  பின்னிப் பிணைந்துள்ளது. அரசியல் குறித்தும், வரலாறு குறித்தும் ஓரளவு பரிச்சயம் உள்ளவர்கள் இந்த நூலை கொண்டாடுவார்கள்.

நேரு மீது  ஆதர்சம் கொண்டு இந்த நூலை எழுதியுள்ளார் சுனில் கில்நானி.  1947 முதல் 1964 வரை –  அதாவது நேரு இறக்கும்வரை,  இந்தியாவின் இலக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படையை நேரு உருவாக்கிச் சென்றுள்ளார்.  இந்த நூல்,  நேருவின் ஆகிருதி எப்படி பிரமாண்டமானது என்று சொல்கிறது . காந்தியின் அறநெறி சார்ந்த எளிமை எப்படி அரசியலில் பங்காற்றியது என்கிறார்.

‘பனியா இரத்தத்தின்’ காரணமாக ஒவ்வொரு அணாவையும் கணக்கில் கொண்டுவர வேண்டும்’ என்றவர் காந்தி. நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் ஜனநாயகத்தை பார்க்கும் பார்வையில் உள்ள முரண்பாட்டை, கேரளாவின் கம்யூனிஸ்டு – நம்பூதிரிபாடு  அரசாங்கத்தை கலைத்தபோது, ஒரு நிருபருக்கு இருவரும் ஒருசேரப்  பேட்டிக் கொடுத்த சம்பவத்தின் மூலம் விளக்குகிறார்.

ஒரு சில சம்பவங்களை இந்த நூலில் ரசித்துப் படிக்கலாம். ‘காரசாராமான கேள்விக் கணைகளை தொடுத்து மற்றவர்களை சங்கடத்தில் ஆழ்த்தும் தொலைக்காட்சி பேட்டியாளர்கள் இவர் முன்னால் அசடு வழிந்து சிரித்தனர்’ என்று இந்த நூலின் 2003 ம் ஆண்டு பதிப்பிற்கான முன்னுரையில் சொல்கிறார். இதில் இவர் என்று சொல்வது ‘பில் கேட்சை’.!

‘தங்களது திறமைகள் மீதும், திருமதி இந்திரா காந்தியின் குணங்கள் மீதிருந்த நம்பிக்கையால்’  சிண்டிகேட் தலைவர்கள் அவரை  தலைவராக தேர்ந்தெடுத்தனர். ஆனால்  ‘சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கும்  பெண்மணியாகத் திருமதி காந்தி மாறினார்’. விடுதலைக்கு  முன்பு ஆட்சி அதிகாரிகள் மீது நேருவுக்கு பெரிய மதிப்பு இல்லை. அவர்கள் காலணி ஆட்சியின்  கருவிகள் என்று நினைத்தார். ஆனால் விடுதலைக்குப் பின்பு தன் சொந்தக் கட்சிக்காரர்கள் கொடுக்கும் நெருக்கடியைச் சமாளிக்க, அதே ஆட்சியாளர்களை நேரு பயன்படுத்தினார் என்கிறார் நூலாசிரியர்.

ஜனநாயக இயங்கியலைச் சொல்லுகிற இந்த நூலை அக்களூர் இரவி சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார். இதன் ஆங்கில மூலத்தின், ஓரிரு பக்கங்களைப்  படித்தேன். படிக்க கடினமான சொற்றொடர்கள், சிக்கலான வாக்கியங்களாக இருந்தன. சவாலான  இந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். இந்த நூலை சிறந்த முறையில் மொழிபெயர்த்தமைக்காக அக்களூர் இரவிக்கு ‘திசை எட்டும்’ விருது வழங்கப்பட்டது.

‘இந்தியாவின் சாதனை நிலச்சீர்திருத்த திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய ஜப்பான், தென் கொரியா, தைவான், சீனா போன்ற நாடுகளுக்கு இணையாக இல்லை’.’கோரிக்கைகள் கட்சி அமைப்பின் மூலமாக விவாதிக்கப்பட்டு தீர்வு காண்பது நிறுத்தப்பட்டது. ஆனால், அவை அரசின் மீது நேரடியாக வைக்கப்பட்டன’  என்று கவலைப்படுகிறார். ‘ஜனநாயக உரிமைகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டதால், பிரிட்டிஷ் இந்தியாவின் திகிலூட்டும் அனுபவமான பஞ்சம் மீண்டும் வருவது தவிர்க்கப்பட்டது’.

‘அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சட்டம் இயற்றுவதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது’ என்ற  தாகூரின் மேற்கோளோடு ‘இந்தியன் யார் ?’ என்ற நான்காவது அத்தியாயம் தொடங்குகிறது. ‘காலனியம் இழிவானதுதான். ஆனால், அது நவீனத்துவத்தின் நறுமணத்தையும் சுமந்து வந்தது’. ‘பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்  இந்தியத் துணைக்கண்டத்தில் வசித்தவர் எவரும் தங்களை இந்தியனாக அடையாளப்படுத்திக் கொண்டிருக்க வாய்ப்பில்லை’. ‘மக்களை, அவர்கள் சார்ந்த இனங்கள், வசிக்குமிடங்கள், குழுக்களின் அடிப்படையில் அவை வகைப்படுத்தின’. பன்மைத்துவம் என்பது இயல்பானது

‘பாஜகவின் சிந்தனை முற்றிலும் அந்தக் கட்சிக்கே சொந்தமானது. எனினும் இந்தியாவின் கடந்த கால வரலாற்றைச் சார்ந்த எதனிடமிருந்தும் அது முற்றிலும் அந்நியமானது’ என்கிறார்.

‘மேற்கில் பாகிஸ்தான், வடக்கில் சீனா, கிழக்கில் பர்மா என்று ஜனநாயகம் நடைமுறையில் இல்லாத தேசங்களால் அரைவட்ட வடிவில் சூழப்பட்டு, அரசியல் அடிப்படையில் தனித்த ஜனநாயக நாடாக இந்தியா இருந்து வருகிறது’ என ‘நவீனத்துவம் என்கிற துகில்’ எனும் இறுதி அத்தியாயத்தில் சொல்லுகிறார்.

நரேந்திர மோடி பிரதமராக வருவதற்கு முன்பாக எழுதிய நூல் இது. ஆனால், இந்தக் காலக்கட்டம்  எப்படி இருக்கும் என்பதற்கான இவரது முன் அவதானிப்புகளை அப்போதே ஆங்காங்கே, நூலில் சொல்லி யிருக்கிறார்.

‘இந்தியா, நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டது’ எனலாம். ஆனால், அந்த வெற்றி முரண்பாடுகள் நிறைந்தது. ஹிந்து தீவிரவாதிகள் தங்களது கொள்கைகளுக்கு ஆதரவைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். ‘இந்தச் சூழலால், ‘ஹிந்து- பாகிஸ்தானாக’ இந்தியா மாறக்கூடும்’ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது’.  இந்தியா குறித்த பெருமிதமும், அதே நேரத்தில் இது நிலைக்குமா என்ற கவலையையும் தெரிவிக்கும் ஒரு கலைஞனின் நிகழ்கால நிதர்சனங்களைச் சொல்லும் படைப்பு இது.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

சந்தியா பதிப்பகம், சென்னை -40

355 பக்கங்கள், ரூ.315

தொலைபேசி- 044- 24896979.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time