கோவிட் தடுப்பூசிக் குளறுபடிகள், பாதக விளைவுகள்!

-பிரியங்கா புல்லா (பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்)

இந்தியாவில் தடுப்பூசி தொடர்பான புகார்கள் எந்த அளவுக்கு தவிர்க்கப்படுகின்றன, அலட்சியப் படுத்தப்படுகின்றன? ஆனால், உண்மை நிலவரங்கள் என்ன..? என்பதைக் குறித்து புள்ளி விபரங்களுடன் தெளிவாக சர்வதேச அளவில் அம்பலப்படுத்துகிறார் பிரியங்கா புல்லா.

ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் போது பின்பற்ற வேண்டிய கண்காணிப்புடன் கூடிய பாதுகாப்பு வழிமுறைகளை உலகசுகாதார அமைப்பு தெளிவாக தந்துள்ளது. ஆனால், அவை இந்தியாவில் பின்பற்றப்படுவதே இல்லை.

ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தும் முன்பாக அவரது உடல் நிலையை அறிவது,

தடுப்பூசியின் பாதக விளைவுகள் பற்றிச் சொல்லுவது,

ஊசிக்குப் பிறகு பின்பற்ற வேண்டியவை,

தொந்தரவுகள் ஏற்பட்டால் புகார் அளிக்கும் வழிமுறைகள் …

என்று எந்த விதியும் இங்கு பின்பற்றப்படுவதில்லை.

கூட்டம் கூட்டமாக தடுப்பூசி செலுத்துவது, பாதகவிளைவு ஏற்பட்டால் அதனை பதிவு செய்ய மறுப்பது அல்லது சாதாரணக் காரணங்களைச் சொல்லி திருப்பியனுப்புவது உள்ளிட்ட சிக்கல்கள் இந்தியாவில் தொடர்கின்றன. இந்த நடைமுறைக் குளறுபடிகளைக் கடந்து இன்னும் பல ஆழமான சிக்கல்கள் உள்ளன!

”கோவிட்தடுப்பூசித் திட்டத்தில் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட விஷயம் – அதன் பக்க விளைவுகளைப் பதிவு செய்யும் முறையாகும். ஆனால், இந்திய நிர்வாக அமைப்பு அதற்குத் தயாராக இல்லை.

தடுப்பூசியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை குழப்பமடையச் செய்து, மக்களிடம் தடுப்பூசி மறுப்பும், பயமும் அதிகரிக்க துணை நிற்கிறது. பல மதிப்புமிக்க தரவுகள் காணாமல் போகின்றன.

அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் இந்தியத் தடுப்பூசியான கோவிஷீல்டின் முதல்டோசைப் பெற்ற ஒருவாரத்தில் 20 வயதான ரிஜூதாவிற்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. 2021 ஜூன் 2 அன்று அவர் மத்தியப்பிரதேசத்தின் போபாலிலுள்ள ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தீவிரமான பரிசோதனைகளுக்குப் பிறகு அவரது மூளையில் ஒரு ரத்தஉறைவு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் அவரது ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து விட்டது.

மிகவும் கவலையடைந்த ரிஜூதாவின் குடும்பத்தினர் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரை இரண்டாவது கருத்திற்காக அணுகுகின்றனர். அவர் தடுப்பூசியின்  பக்கவிளைவான ரத்தஉறைவு-  ‘த்ராம்போசைட்டோபீனியா’ ஏற்பட்டிருப்பதை உறுதி செய்கிறார்.

ரிஜூதாவின் பெற்றோர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களிடம், கோவிஷீல்டின் பக்கவிளைவாக இருக்கும் என்று சந்தேகம் எழுப்புகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனையின் எல்லா மருத்துவர்களும் இந்த சந்தேகத்தை நிராகரித்த நிலையில், கல்லூரியில் இளங்கலை பயின்று வந்த ரிஜூதா ஜூன் 20 ஆம் தேதி உயிரிழந்தார்.

இப்புகார் குறித்து இந்திய தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பிற்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை. ரிஜூதாவின் குடும்பத்தாருக்கும் தடுப்பூசி கண்காணிப்பு அமைப்பினை அணுகும் வழிமுறை தெரியாததால் எதுவும் செய்ய முடியவில்லை.

ரிஜூதா இறப்பின் மூலம் நமக்கு தெரிய வருவது; ஒன்று – தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் பாதகமான விளைவுகளை இந்திய மருத்துவமனைகள் நிராகரிக்கின்றன. இரண்டு – நோயாளிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் புகார் அளிக்கும் அமைப்பு பற்றியோ, அதன் வழிமுறைகள் பற்றியோ எதுவும் தெரியவில்லை. இந்த இரண்டோடு முடியாமல், இந்திய தடுப்பூசித் திட்டத்தில் இன்னும் பல நிர்வாகச் சிக்கல்கள் இருக்கின்றன.

தடுப்பூசியின் பாதகப் புகார்களின் மீதான நடவடிக்கைகள் மிதமிஞ்சிய அலட்சியத்துடன் உள்ளன! புகார்கள் தந்தவர்களுக்கு எந்த தகவல் தெரிவிக்கப்படாதது உட்பட இன்னும் பலசிக்கல்களை இத்திட்டம் கொண்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பெரும் குழப்பத்திற்கு தள்ளப்படுகின்றனர். இது  மரணம் அல்லது நீண்டகால மருத்துவச் சிகிச்சையை பரிசாகத் தருகிறது. இத்தகைய சூழ்நிலை தடுப்பூசி தயக்கத்தையே தூண்டும் என்கிறார் டாக்டர் ககன்தீப்காங். இவர் வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் பொது சுகாதார நுண்ணுயிரியலாளராக உள்ளார். “இறந்த குழந்தையின் பாதிப்பிற்கான காரணங்களை மருத்துவர்கள் ஒப்புக் கொள்ளாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது” என்று இவர் கூறுகிறார்.

தடுப்பூசி பாதுகாப்பு அமைப்பு சந்திக்கும் சவால்கள்

இந்திய கோவிட் தடுப்பூசி பாதுகாப்பு கட்டமைப்பு சந்திக்கும் சிக்கல்களில் முதன்மையானது  இது வரை குழந்தைகளுக்கு என்று மட்டுமே இருந்த தடுப்பூசி திட்டத்தை பெரியவர்களுக்கானதாக மாற்றியமைப்பதில் உள்ள குளறுபடிகள்.  2021 ஜனவரிக்கு முன்பு வரை தடுப்பூசி திட்டங்கள் அனைத்துமே குழந்தைகளை இலக்காகக்கொண்டது. ஜனவரியில் திடீரென பெரியவர்களுக்கான தடுப்பூசியைத் துவங்கியபோது, தடுப்பூசிக்குப் பிந்தைய பாதுகாப்பு கண்காணிப்புத் திட்டத்தை வயது வந்தோருக்கானதாக மாற்றியமைக்க வேண்டியிருந்தது.

இந்த கண்காணிப்பு அமைப்பு மாவட்ட அளவிலான குழு,  மாநிலஅளவிலான குழு தேசியக் குழு என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது. தடுப்பூசிக்குப் பிறகான பாதக விளைவு பற்றி அது தொடர்பான தரவுகளைச் சேகரித்து, புகாரை சரி பார்த்து, அது தடுப்பூசி தொடர்புடையதா என்பதை ஆராய்ந்து கூடுதல் தரவுகளுடன் மாநிலக்குழு தேசியக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். தேசியக் குழுவின் சரிபார்ப்பிற்குப் பிறகு புகாரளித்தவர்களுக்கும், அது தொடர்புடைய மருத்துவருக்கும் அதற்கான சரியான  தகவல் சொல்ல வேண்டும். இந்த பின்னூட்ட வளையம் மிகவும் முக்கியமானது. இவை எதுவுமே சரியாக செயல்படவில்லை.

இந்திய அரசு மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மூலம் தடுப்பூசி விளைவு புகார்களைக் கேட்டு மருத்துவமனைகளுக்கு கடிதம் அனுப்பியிருந்தாலும்,”இந்தியத் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகக்குறைவான புகார்களே வருகின்றன”என்று தடுப்பூசி பாதகவிளைவுகளை விசாரிக்கும் தேசியக் குழுவை வழிநடத்தும் சதீந்தர் அனேஜா கூறுகிறார்.

இந்த தரவு இடைவெளி மிக முக்கியமானது. ஏனென்றால், இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளையே அணுகுகிறார்கள்.

சிக்கலோ சிக்கல்!

இதற்கெல்லாம் மேலாக ஒருசிக்கல் இருக்கிறது. இந்த நோய்த்தடுப்பு திட்டத்தினை செயல்படுத்தும் அதே துறை தான் – பாதக விளைவுகளை விசாரிக்கும் பாதுகாப்பு அமைப்பினையும் கொண்டுள்ளது. உதாரணமாக பாதுகாப்பு அமைப்பின் தேசியக்குழு உறுப்பினர்கள் தான் பாதக விளைவுகளையும் மதிப்பீடு செய்ய வேண்டும். அதோடு கோவிட் தடுப்பூசிக் கொள்கை தயாரிப்பிலும் ஈடுபட வேண்டும். அதேபோல மாவட்ட மருத்துவ அலுவலர்கள் தான் பாதக விளைவுகளை விசாரிக்க வேண்டும். அதே நேரத்தில் தடுப்பூசியின் இலக்கு எண்ணிக்கையை அடையும் வேலையையும் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் பாதகவிளைவுகள் பற்றிய புகார்களைப் பெற அழுத்தம் தந்து, அதற்கான தரவுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.இதனால் புகார்களை பெறுவதில் தொடங்கி நடவடிக்கைகள் வரை அனைத்தும் குளறுபடிகள் தாம்!

பதிவு செய்ய மறுக்கப்படும் புகார்கள்!

2021 நவம்பர் 30 நிலவரப்படி நாடாளுமன்ற மேலவையில் சுகாதார அமைச்சக  பதிலின்படி தேசியக்குழு  49,819 பாதக விளைவுகளைப் புகார்களையே பெற்றுள்ளன. ஆனால், அது வரை இந்தியாவில் சுமார் 123 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தன.

மேற்கண்ட கணக்குகளின்படி, ஒவ்வொரு ஒரு லட்சம் டோசுக்கும் 4 பாதக விளைவுகளை மட்டுமே பதிவு செய்துள்ளனர். ஆனால், கனடா பாதுகாப்பு அமைப்பு ஒருலட்சம் டோஸ்களுக்கு 48 புகார்களைப் பதிவு செய்துள்ளது.  இங்கிலாந்து  ஒரு லட்சம் டோஸ்களுக்கு 300 முதல் 700 புகார்களைப் பெற்றுள்ளது. ஒப்பீட்டளவில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு மிகமிகக் குறைவான புகார்களையே பதிவு செய்துள்ளது.

இரத்த உறைதல் எனும் பாதகவிளைவு பற்றிய புகார்கள் மொத்தம் 26 மட்டுமே தேசியக் குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசியக் குழுவிற்கு வந்து சேரும் புகார்களும் மிக மெதுவாகவே விசாரிக்கப்படுகின்றன. நவம்பர் 2021 வரை பதிவாகியுள்ள  946 உயிரிழப்பு புகார்களில் 89 புகார்களை மட்டுமே குழு விசாரித்துள்ளது. இரத்த உறைவு பற்றிய 26 புகார்களில் இப்போது வரை 6 மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை பக்க விளைவுகளுக்கு கோவிஷீல்டு தான் காரணமாக இருக்கிறது.

மருத்துவப் பதிவுகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை அனுப்புவதற்கு மாநிலங்கள் செய்யும் தாமதம் விசாரணையின் வேகத்தை தடைப்படுத்துவதாக அனேஜா கூறுகிறார்.  இதில் அதிநவீன மருத்துவ ஆய்வுகள் தேவைப்படுகின்றன. அவை, எப்போதும் மருத்துவமனைகளால் செய்யப்படுவதில்லை.

அமைப்பை சரி செய்தல்

ஒவ்வொரு 1,00000 குழந்தைகளுக்கும் குறைந்தபட்சம் 10  பாதக விளைவுகளுக்கான அறிக்கைகள் என்ற உலகளாவிய அளவுகோலுக்கு எதிராக, நம்நாடு அப்போது வெறும் 4.2  பாதக விளைவுகளை மட்டுமே பதிவு செய்திருக்கிறது.

இந்திய கமிஷன் என்ற  அரசு அமைப்பில் தடுப்பூசி குறித்த எதிர்விளைவுகளைப் புகாரளிக்கலாம். ஆனால், இந்த சேவை குறித்த அறியாமை காரணமாக புகார்கள் பதிவாவதில்லை.  2021 ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதியில் 49,819 புகார் அறிக்கைகளில் 225 அறிக்கைகளை மட்டுமே  இந்த கமிஷன் பெற்றுள்ளது என்று அந்த அதிகாரி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலிடம் தெரிவித்தார்.

தடுப்பூசியின் பாதகவிளைவுகளில் இரத்த உறைவு  மற்றும் மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் போன்ற அரிய நிகழ்வுகளை அடையாளம் காண ஒரு தீவிரமான செயல்திறன் மிக்க கண்காணிப்பு அமைப்பு தேவை.

ஒரு வலுவான பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்ட வயதினருக்கு தடுப்பூசியின் நன்மை-ஆபத்து விகிதத்தின் நுணுக்கமான கணக்கீடுகளை தரும்.  உதாரணமாக நாற்பது வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான இளம் வயதினருக்கு இரத்தஉறைவு ஆபத்து அதிகம் என்பதையும் கடுமையான கோவிட்-19 ஆபத்து குறைவாக உள்ளது என்பதையும் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இரத்த உறைவு எனும் தடுப்பூசி பாதகவிளைவு ஏற்படும் போது சரியான சிகிச்சை தந்தால் மட்டுமே இறப்பைக் குறைக்கலாம்.

இருளில் தவிக்கும் குடும்பங்கள்!

ஜூலை 2021 இல், தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் வேணுகோபாலன் கோவிந்தன் தனது 20 வயது மகள் காருண்யாவை இழந்தார். அது அவரது முதல் கோவிஷீல்ட் தடுப்பூசியை தொடர்ந்து நோய்வாய்ப் பட்டதால் ஏற்பட்டமரணம் ஆகும்.  டேட்டா சயின்ஸ் முதுகலைப் பட்டம் படித்துக் கொண்டிருந்த காருண்யா  மல்டிசிஸ்டம் இன்ஃப்ளமேட்டரி சிண்ட்ரோம் நோயால் இறந்தார் என்று கண்டறியப்பட்டது. இந் நோய் உலக சுகாதார அமைப்பின் கோவிட் தடுப்பூசிகளுக்கான சிறப்பு பாதகமான விளைவுகளின் பட்டியலில் உள்ளது.

காருண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கோவிந்தன் தனது மகளின் உடல் நலக்குறைவுக்கு தடுப்பூசியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தார். ஆனால், அதை எங்கு புகாரளிப்பது என்று அவருக்கு தெரியவில்லை.விரக்தியில் கோவிஷீல்டின் உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவைத் தொடர்பு கொண்டார்.  இந்த தகவலை உற்பத்தியாளர்களுக்கான பார்மகோ விஜிலன்ஸ் திட்டத்திற்கு தெரிவித்ததாக நிறுவனம் கூறுகிறது. அவ்வமைப்பு தகவலை கோவிட் தடுப்பூசி பாதுகாப்பு அமைப்புக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அப்படிஎதுவும் நடக்கவில்லை.

விரக்தியடைந்த கோவிந்தன் தனது மகளின் கதையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தினார்.  காருண்யாவின் மருத்துவப் பதிவுகளை மீண்டும் சேகரித்த பாதுகாப்பு அமைப்புடன் தொடர்புடைய மூத்த அதிகாரி அவரது முறையீடுகளை விசாரித்தார்.  இறுதியில் 29 அக்டோபர் 2021 அன்று அதிகாரி கோவிந்தனிடம் அவரது மகளின் மரணத்திற்கு தடுப்பூசிதான்  காரணம் என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

வேணுகோபாலன் கோவிந்தன், காருண்யா

கோவிந்தனைப் பொறுத்தவரை முழு நிலைமையும் மோசமானது. ஏனெனில், இந்திய அரசாங்க அதிகாரிகள் கடந்த ஆண்டில் கோவிட் தடுப்பூசிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து அடிக்கடி தவறான தகவல்களையே தெரிவித்தனர். தடுப்பூசியை ஊக்குவிக்கும் ஆர்வத்தில், அரசாங்க அதிகாரிகள் கோவிட் தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்று அடிக்கடி கூறினர்.

இந்த முழு அனுபவமும் கோவிந்தனையும் அவரது குடும்பத்தினர் பலரையும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுக்க விரும்பாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.  “முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட  நானும் என் மனைவியும் தடுப்பூசியில் இருந்து முற்றிலும் விலகியே இருக்கிறோம்.  மேலும் என் சகோதரனுக்கும் அவனுடைய மனைவிக்கும் கூட இதே நிலைப்பாடுதான்” என்று அவர் கூறுகிறார்.

பிரியங்கா புல்லா;

சுயாதீனப் பத்திரிகையாளர்.

அறிவியல், மருத்துவம்,விவசாயம் தொடர்பான கட்டுரைகளை தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் எழுதி வருபவர். பெரும்பாலான ஊடகங்களால் அலட்சியப்படுத்தப் படும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை துணிச்சலாக வெளிப்படுத்து பவர்.

கோவிட் சிகிச்சைகல், தடுப்பூசி குளறுபடிகள் தொடர்பான நிறைய விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.

மொழியாக்கமும், தொகுப்பும் :

சி.பேரின்பராஜன்.உமர்பாரூக்

Source : British Medical Journal

https://www.bmj.com/content/376/bmj.n3146 (Jan 7 – 2022)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time