நியாய விலைக் கடைகளான ரேஷனில் சிறுதானியங்கள் விநியோகம் என்பது உணவு கலாச்சாரத்தில் நிகழ உள்ள உன்னத மாற்றத்தின் ஆரம்பம்! மறைந்து போன நமது உணவு பாரம்பரிய கலாச்சாரத்தையும், ஆரோக்கியத்தையும் விவசாயத்தையும் மீட்டெடுக்கும் நீண்ட நாள் கனவு!
சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, குதிரைவாலி, சாமை, சின்னசோளம், பனிவரகு ஆகிய எட்டு தானிய வகைகள் மட்டுமே சிறுதானியங்களாகும்! அரிசி என்பது முன்பெல்லாம் ஒரளவு வசதி படைத்தவர்கள்,மேல்சாதிக்காரர்களின் உணவாகவே பெரும்பாலும் அறியப்பட்டு இருந்தது! சிறுதானியங்களே பெரும்பாலான உழைக்கும் மக்களின் உணவாக இருந்தது. அவர்களின் கடின உழைப்புக்கும்,ஆரோக்கியத்திரற்கும் சிறுதானியங்களே அடிப்படையாகத் திகழ்ந்தன.இடையில் அரசாங்கத்தால் வலிந்து பரப்பட்ட பசுமைப் புரட்சி என்ற பகட்டு ஆர்ப்பாட்டத்தால் சிறுதானிய புழக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள அரிசி உணவே அனைவருக்குமான உணவாக அடையாளப்படுத்தப்பட்டது.
ஆகவே தான் உடல் ஆரோக்கியத்திற்கு மாத்திரமின்றி பன்னோக்கு விவசாய அணுகுமுறையை மீட்டு எடுக்கவும் சிறுதானிய பயன்பாட்டை மீட்டெடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரி வந்தனர்.
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க அங்கன்வாடி, மதிய உணவுத்திட்டங்களில் சிறுதானிய உணவுகள் வழங்கிட வேண்டும். நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்களை வழங்கிட வேண்டும், சிறுதானியங்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்திட, மாவட்ட அளவில் சிறுதானியக் கொள்முதல் மையம் அமைத்திட வேண்டும். சிறுதானியங்களுக்கும் காப்பீடு வழங்கிட வேண்டும்” என்ற கோரிக்கைகள் கடந்த பத்தாண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தன.
ஆகவே,ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை தான்! இந்த கோரிக்கையை முதன் முதலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் முன்னெடுத்தார். பிறகு பெண்கள் இணைப்புக் குழு,களஞ்சியம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தியும்,போராடியும் வந்தனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் மூலம் நெல் மூட்டைகளை, அரசே கொள்முதல் செய்வதைப் போல சிறுதானியங்களையும் நேரடியாகக் கொள்முதல் செய்திட வேண்டும் என மானாவாரி விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். ஏனென்றால்,சிறுதானியங்கள் என்பவை மானாவாரிப் பயிர்கள்! அதாவது, தண்ணீர் வசதி போதுமான அளவில் கிடைக்காத மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுபவை. வறட்சியைத் தாங்கி வளர்பவை! ரசாயன உரங்களின் தேவையின்றி வளரக் கூடியவை!
தமிழகத்தின் மொத்த விவசாய நிலங்களில் சுமார் 60 சதவீதம், மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. அதிலும் கம்பு, சோளம், கேழ்வரகு, வரகு, சாமை, தினை, காடைக்கன்னி, குதிரைவாலி என சிறுதானிய வகைகள் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகின்றன. தென் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பரவலாக சிறுதானியங்களை சாகுபடி செய்து வருகிறார்கள் விவசாயிகள். இதே போல தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய பகுதிகளிலும் சிறுதானியம் பயிரிடப்படுகின்றன.
தமிழகம் மட்டுமல்ல, ஆந்திரா,கர்நாடகா,மாகார்ஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் சிறுதானியங்கள் பரவலாக பயிரிடப்படுகின்றன.
2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது ரேஷன் கடைகள் வாயிலாக சிறுதானிய விநியோகம் செய்ய ஒரு முன்னெடுப்பு நடந்தது! பின்னர் ஏனோ அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அதன் பிறகு மத்திய பாஜக அரசு ரேஷன் கடைகளில் சிறுதானியங்களை வழங்க மாநிலங்களுக்கு ஏப்ரல் 2018ல் அரசாணை வெளியிட்டு அறிவுறுத்தியது. ஆனால், இது நடைமுறைக்கு வர தமிழகத்திற்கு நான்காண்டுகள் தேவைப்பட்டுள்ளது போலும்!
தற்போது இவற்றை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அதோடு, சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு! மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் ஒரு குழு அமைக்கவும், இந்த சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 34,774 நியாய விலைக் கடைகள் உள்ளன! 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரம் கார்டுதார்கள் உள்ளனர். முதல்கட்டமாக சிறுதானியங்கள் விநியோகத்தை சென்னை,கோவை போன்ற பெரு நகரங்களில் ஆரம்பிக்க போவதாக அரசு சொல்லியுள்ளது. பிறகு விரைந்து இவற்றை தமிழகம் முழுக்க தர வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு சிறுதானியங்களை மக்கள் உட்கொள்கிறார்களோ அவ்வளவுக்கு ஆரோக்கியமாக இருப்பார்கள்!
சிறுதானியங்களை கொள்முதல் செய்வதற்கு முன்பு இதில் கவனிக்க வேண்டியது. நமது விஞ்ஞானிகள் சிறுதானியங்களையும் விட்டு வைக்காமல் அதிலும் ஹைபிரிட் வகைகளை கண்டுபிடித்து புழக்கத்தில் விட்டுவிட்டனர். அவற்றை முடிந்த வரை தவிர்த்து, நாட்டு வகைகளை கொள்முதல் செய்யுங்கள்! அவைதாம் ருசியாகவும் இருக்கும், சத்தும் அதிகம்!
சிறுதானியங்கள் பொதுவாக நார்ச்சத்து அதிகமானவை! ஆகவே, மலச்சிக்கலை தவிர்க்க உதவும். கேழ்வரகில் கால்சியம் அதிகம். கம்பு உடல் வெப்பம் தணித்து தெம்பு தரும். இரும்பு சத்து நிறைந்தது! தினை உடலுக்கு நல்ல பலம் தரும்.சிறுதானியங்களில் அனைத்திலும் புரதம்,விட்டமின்கள்,மினரல்கள் அதிகம். கார்போ ஹைட்ரேட்டும், பைட்டிரிக் அமிலமும் குறைவு! சாமை, குதிரைவாலி ஆகியவை எளிதில் ஜீரணமாகும். சத்து நிறைந்தவை!
Also read
சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்வதால் இனி சென்னை போன்ற பெரு நகரங்களில் அவற்றை அதிக விலைக்கு மட்டுமே வாங்க முடியும் என்பதும், ஆர்கானிக் கடைகள் வைத்ததே விலை என்பதும் ஒரு முடிவுக்கு வரும்! சிறுதானியங்கள் நியாயமான விலையில் கிடைக்க வேண்டும்.பெருநகரத்து ஆர்கானிக் கடைக்காரர்கள் சிறுதானியங்களை விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கி அதை மிக அதிக விலை வைத்து விற்பது முடிவுக்கு வந்தால் தான் அவை அனைவருக்குமான உணவாகும்.
அதே சமயம் அரிசியை முற்றிலும் விலையில்லா உணவு பொருளாக நியாய விலைக் கடைகளில் தருவது நிறுத்தப்பட்டால் தான் விளைவிக்கும் விவசாயிகளுக்கும் மரியாதை! வாங்கும் மக்களுக்கும் மதிப்பு. ஆகவே, நியாயவிலை கடைகள் என்ற பெயருக்காவது அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயித்து நியாயம் செய்யுங்கள்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அரசு நியாயவிலைக் கடைகளில் சிறுதானிய விற்பனை குறித்தான ஆலோசனைகள் அருமை. அரசு கடைபிடிக்க வேண்டும்.
பகிறவெண்டியச் செய்தி, நன்றி