உள்ளாட்சியில் உதாசீனப்படுத்தப்படுகின்றவா கூட்டணி கட்சிகள்?

-சாவித்திரி கண்ணன்

க.செபாஷ்டின், வேலூர்

எட்டி உதைக்கும் பாஜகவின் பாதங்களை தட்டிவிடத் தைரியமின்றி தவிக்கிறதே அதிமுக தலைமை?

களவாணிகளை எப்படி நடத்துவது என்பது காவல்துறைக்கு கைவந்த கலை!

கையூட்டுக் பெற்றாலும், காவல்துறை அதன் புத்தியை காட்டும் என்பதால், களவாணிகளுக்கும் தெரியும் தங்கள் நிலை!

வேறொன்றும் சொல்வதற்கில்லை.

அ.அறிவழகன், மயிலாடுதுறை

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதாசீனப்படுத்துகிறதே திமுக?

உள்ளூர் கட்சிக் கட்டமைப்பில் பலவீனமாக உளுத்துப் போய் கிடக்கும் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் கூட தனித்து களம் காண முடியாத நிலையில்…,

‘உதாசீனப்படுத்தப்பட்டாலும் கூட ஓடிப் போய்விடமாட்டார்கள்’ என்பது திமுகவுக்கும் தெரியும்.

‘சகித்துக் கொள்வதைத் தவிர வழியில்லை, இயன்ற வரை சமரசம் செய்து தருவதை பெறுவதே சர்வைவல்லுக்கு வழி’

என்பது கூட்டணிக் கட்சிகளுக்கும் தெரியும்.

எம்.ரகுமான்கான், சேலம்

பத்ம பூசண் விருதுகள் மார்க்சிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சாரியாவிற்கும், காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டது சர்ச்சையாகி உள்ளதே?

புத்ததேவ் பட்டாச்சாரியா,                      குலாம்நபி ஆசாத்

சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குள் சர்ச்சையும் , சலனத்தையும் உருவாக்கத் தானே இந்த அறிவிப்புகளே!

மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை விருதை மறுதலித்துவிட்டது. புத்ததேவ்வும் விருதை புறம் தள்ளி விட்டார்.

சொந்தக் கட்சித் தலைவர்களின் கொந்தளிப்புக்கு பிறகும் குலாம் நபி ஆசாத் தன் அமைதியின் மூலம் அம்பலப்பட்டுள்ளார்.

ஆர்.தணிகாச்சலம், திருக்கோவிலூர், விழுப்புரம்

சமந்தாவின், ‘ஓ சொல்றியா மாமா…’ பாடல் சர்ச்சை குறித்து?

தூ… கர்மம்! கிட்டதட்ட ப்ளு பிலிம் லெவல்.

இந்த நாட்டில் சென்சார் ஒன்று இருக்கிறதா தெரியவில்லை.

கலாச்சார காவலர்களாக தங்களை காட்டிக் கொண்ட பாஜக, இந்துத்துவ அமைப்புகள் இதற்கு கம்மென்று இருக்கிறார்களே!

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

உத்திர பிரதேச தேர்தலில் யோகிக்கு யோகம் உண்டா?

ம்கூம். சோகம் தான் உண்டு எனத் தெரிய வருகிறது!

அதிர்ஷ்டம் அகிலேஷ் பக்கம் அடித்துப் போகிறது!

எஸ். ராஜலட்சுமி, மதுரவாயில்

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நின்று ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மரியாதை தர மறுத்தது பற்றி?

ஆரியத் தாயின் மைந்தர்களாக இருப்பார்களோ! சங்கரமடத்து பக்தர்கள் போலும்.

விஜயேந்திரர் எவ்வழியோ, அவர் விசுவாசிகளும் அவ்வழியே!

எஸ்.கோபிநாத், ஆத்தூர், சேலம்

பாஜக, இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக நீதித் துறையை தமிழ்நாட்டில் தவறாக பயன்படுத்துகிறார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற பரவலான குற்றச்சாட்டு குறித்து?

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து தீர்ப்பு எழுத வேண்டியவர் மீதே தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது!

நீதிக்கு அரசராக இருக்க வேண்டியவர், அநீதிக்கு அனுசரணையாக இயங்குவது போல் தோற்றம் தருவது கவலையளிக்கிறது!

எல். ஞானசேகரன், ஈரோடு

அரியலூர் மாணவி விவகாரத்தில் பாஜகவின் ஆட்டத்தை கவனித்தீர்களா?

‘ஆடுவது தப்பாட்டம்’ என்று தெரிந்தும், அச்சமில்லாமல் துணிந்து ஆடி முன்னேறுகிறார்கள் பாஜகவினர் ! ‘அப்பப்பா…’ படு மிரட்சியாய் உள்ளது.

‘ஆடப்பட்டுக் கொண்டிருப்பது தப்பாட்டம்’ என்ற போதிலும், ஆட்சியாளருக்கு இருக்க வேண்டிய ஆத்ம பலம் தொலைந்து, அதை அடக்கவோ, அம்பலப்படுத்தவோ திரானியின்றி அடக்கி வாசிக்கிறார் ஸ்டாலின்! ‘ஐயையோ..’ படு அவலம்!

மு.ரத்தினவேல், விருதாச்சலம்

ஏர் இந்தியா டாட்டாவிற்கு விற்கப்பட்டு உள்ளது குறித்து..?

விற்கப்பட்டதா..? தாரை வார்க்கப்பட்டு உள்ளது! – மிக, மிக அடிமாட்டு விலைக்கு!

டாட்டாவிடம் விலை போயிருப்பது, ஏர் இந்தியா மட்டுமல்ல. ஆட்சியாளர்களும் தான்!

கோமதி நாயகம், கோவை

சமீபத்தில் உங்களை உலுக்கிய சம்பவம்..?

ஒன்றல்ல, இரண்டு!

மனைவியே கணவனை சுத்தியாலால் தாக்கி கொன்றாள்- தன் மகளை கணவனின் பாலியல் வல்லுறவில் இருந்து காப்பாற்ற!

வயதான பெற்றவர்களே வாலிபனான தங்கள் மகனைக் கொன்று எரிக்க முயன்றார்கள் – சகித்துப் போயும், பொறுத்துப் போயும் மகனின் தொல்லைகளை தாங்க இயலாமல்!

இரண்டும் மது வெறியால் நிகழ்ந்தவை! இதில் உண்மையான குற்றவாளிகள் மது போதைக்கு அடிமையான அந்தக் கணவனும், மகனும் என்று சமூகம் தீர்ப்பு எழுதும். ஆனால், உண்மையான குற்றவாளிகள் ஆட்சியாளர்களே!

குடி போதையாளர்களை குடும்பத்தினரே கொன்றது போல, மது விற்பனையால் கிடைக்கும் பண போதை உள்ள ஆட்சியாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் காலமும் வரலாம்!

ஆர்,ரமேஷ், பெங்களுர்

நியோகோவாம், அடுத்தடுத்து புதுப்புதுசாக வைரஸ் வந்த வண்ணம் உள்ளதே?

அந்த காலத்தில் நில எல்லைகளை விரிவுபடுத்த விரும்பும் வல்லாதிக்க ஆட்சியாளர்கள் வலிந்து போர் நடத்தியதால் பல்லாயிரம், பல லட்சம் உயிர்கள் அழிந்தன.

இந்தக் காலத்தில் அறிவியலின் பெயரால் மருத்துவ வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வதற்கு பல லட்சம் மனித உயிர்கள் பலியாகின்றன!

வேல்முருகன், சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம்

சமீபத்தில் ரசித்த கவிதை ஒன்றை சொல்ல முடியுமா?

ஒன்றல்ல, நிறைய ரசித்தேன். ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக்,பராக்’ என்ற கவிதை தொகுப்பில்;!

எழுதியவர், கவிஞர் ப. நடராஜன் பாரதிதாஸ்.

அதில் ஒன்று;

எங்க நாட்டாமை

சவரம் செய்யப் போகும் போது

நாவிதன் என்பார்.

சோறெடுக்கப் போகும் போது

பரியாரி என்பார்!

விசேச நாட்களில் மங்களம் இசைக்கையில்

வித்துவான் என்பார்!

ஈமச் சடங்கு செய்கையில்

தொழிலாளி என்பார்.

கோவம் வருமாறு ஏதாவது செய்துவிட்டால்

அம்பட்டா என்பார்.

என் சாதியின்

அனைத்துப் பெயர்களையும்

தெரிந்து வைத்திருந்த அவர்

என்னை மனிதன் என்றோ

எனக்கும் பெயர் இருக்கிறது என்றோ

நினைத்ததுமில்லை.

சொல்லி அழைத்ததுமில்லை.

எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

திமுக ஆட்சி திருப்திகரமாக போகிறதா?

இல்லை. ஆட்கள் மாறியுள்ளார்கள்! ஆனால், அதே பழைய ஆட்சியே தொடர்கிறது!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time