உதறவும் முடியல! உடனிருக்கவும் முடியல! பாஜக – அதிமுக உறவு!

-சாவித்திரி கண்ணன்

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜகவிடையே இணக்கம் உருவாகவில்லை. ”பாஜக அதிகம் எதிர்பார்க்கிறது” என அதிமுகவும், ”அலட்சியப் படுத்தினால் அனுபவிக்க வேண்டும் தயாரா..?” என பாஜகவும் சொல்கின்றன! என்ன நடக்கிறது?

நகர்புற உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக அதிமுக, பாஜக இடையேயான பேச்சுவார்த்தை நான்கு மணி நேரம் நீடித்தும் நல்ல முடிவுக்கு வர முடியவில்லை.

பாஜகவை பொறுத்த வரை உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றினால் தான் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த முடியும். கட்சியில் வசதி படைத்த தொழில் அதிபர்கள், வியாபாரிகள் உள்ளூர் முக்கியஸ்தர்களை திருப்திபடுத்த அந்தந்தப் பகுதிகளில் அவர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் கிடைத்தால் மட்டுமே கட்சி ஸ்திரப்படும் என்ற நிர்பந்தம் அவர்களுக்கு உள்ளது. அதே சமயம் அண்ணாமலைக்கும் தான் பொறுப்பில் இருந்த காலத்தில் தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என நினைக்கிறார்.எனவே உள்ளாட்சிகளில் பாஜக பலமாக உள்ள குமரி, கோவை, ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 30 சதவிகித இடங்களையும் மற்ற பகுதிகளில் 20 சதவிகித இடங்களையும் எதிர்பார்க்கிறது பாஜக!

அதிமுக அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், சுதாகர் ரெட்டி, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் மிக அழுத்தம் தந்து பேசியுள்ளனர்.

ஆனால், அதிமுகவை பொறுத்த வரை கட்சியின் அடித்தள நிர்வாகிகளை திருப்திபடுத்த வேண்டியுள்ளது. அவர்கள் தலைமைக்கு கட்டுப்படாமல் தனித்து நிற்கக் கூட தயங்காதவர்களாக உள்ளனர். இருப்பதை எல்லாம் பாஜகவிற்கு தாரை வார்த்தால் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாகக் கூட ஆங்காங்கே பலர் களம் காண வாய்ப்பு உள்ளது. ஆகவே, ”வெற்றி வாய்ப்புள்ள சில குறிப்பிட்ட இடங்களில் நில்லுங்கள். கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற வைக்கிறோம். அதிகமாக வாங்கி உங்களுக்கும் இல்லாமல், எங்களுக்கும் இல்லாமல் திமுகவிற்கு தூக்கி கொடுத்தது போல ஆகிவிடக் கூடாது” என வலியுறுத்தி உள்ளனர்.

இது மட்டுமின்றி, பாஜக தரப்பில் அந்து மாநகராட்சி மேயர் பதவி கேட்கப்பட்டு உள்ளது. கோவை, ஈரோடு,சேலம், நாகர்கோவில், ஓசூர் ஆகியவற்றின் மேயர் தங்களுக்கு கேட்டு உள்ளனர். உண்மையில் அப்படி மேயர் பதவியை பாஜக கேட்கும் என அதிமுக தலைவர்கள் எதிர்பார்க்கவில்லை.மேயர் பதவியை அவர்களுக்கு தருவது என்பது ஒட்டுமொத்த மாநகராட்சியையே அவர்களிடம் ஒப்படைத்தது போலாகிவிடும்…என்பதால், ”அது வெற்றி பெற்று வந்த பிறகு முடிவு எடுக்கலாம்” என தட்டிக் கழிக்க முயன்று உள்ளனர். ஆனால், ”சரி, ஒத்துக் கொள்கிறோம். ஆனால், ஒரு கமிட்மெண்ட் தான் கேட்கிறோம்” எனக் கூறியுள்ளனர். ஆனால், அதிமுக அசைந்து கொடுக்கவில்லை.

”சென்னை மாநகராட்சியில் நாங்கள் அதிகம் கேட்கவில்லை. ஒரு நாற்பது சீட்டுகள், அதாவது 20 சதவிகிதம் தான் எதிர்பார்க்கிறோம்.’’ என பாஜக கூறியுள்ளது. ஆனால், 10தில் ஆரம்பித்து 15 இடங்கள் வரையில் அதிமுக இறங்கி வந்துள்ளது.

இதே போல நகராட்சிகளில் 70 நகராட்சித் தலைவர் பதவிகளை பாஜக கேட்டு உள்ளது. இதற்கும் அதிமுக பிடி கொடுக்கவில்லை.

பாஜகவை பொறுத்த வரை பேச்சுவார்த்தை மிகுந்த அதிருப்தியை தந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ‘நாம் ஒரு பெரிய தேசியக் கட்சி. அதுவும் ஆளும் கட்சி..அந்த மரியாதைக்கு குந்தகம் வரும்படி அதிமுக நடந்து கொள்வது போல உள்ளது’ என தங்களுக்குள் பேசி உள்ளனர். பாஜகவில் உள்ளாட்சியில் தனித்து களம் காண்போம் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

கமலாலயத்தில் நிர்வாகிகள் பேசும் போது, ”தற்போது அதிமுக ஆளும் கட்சி கூட கிடையாது. அவங்க மீது ரெய்டுகள், வழக்குகள் என்று திமுக அரசு டார்ச்சர் செய்கிறது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள நம்ம தயவு அவங்களுக்கு நிச்சயம் தேவைப்படுகிறது என்பதை தெரியாதவர்கள் அல்ல அவர்கள். அவர்கள் இறங்கி வர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை காப்பாற்ற அந்த ஆண்டவனாலும் முடியாது. திமுக அரசு அவர்களை கும்மி எடுத்துவிடும்” எனப் பேசியுள்ளனர்.

இது ஒரு வகையில் உண்மை என்றாலும், ‘திமுகவை எதிர்கொள்ள இனி பாஜக தயவு நமக்கு தேவையில்லை. பாஜகவிற்கு பணிந்து போவதைவிட, திமுகவிற்கு தருவதைத் தந்து சரி கட்டிவிட்டு போய்க்கிட்டே இருக்கலாம்’ என்பதே பல அமைச்சர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

மற்றொரு முக்கிய பிரச்சினை தற்போது எந்த மாநகராட்சியில் பாஜகவிற்கு எத்தனை இடம் என்பதை அதிமுகவின் தலைமைகளான எடப்பாடியோ, பன்னீர்செல்வமோ தீர்மானிக்க முடியாது என பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ”அதை எங்களிடம் விட்டுவிடுங்கள். எங்களிடம் பேசிக் கொள்ளச் சொல்லுங்கள். அவங்க யோக்கியதை லோக்கலில் என்ன என்பது எங்களுக்கு தான் தெரியும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்கிறார்கள். அதாவது, அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட தயாரில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது. மேலும் வேட்பாளர் தேர்வில் கூட தலைமை தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை என தெரிய வருகிறது. அதிமுகவில் இப்படியான ஒரு நிலைமை இதற்கு முன்பு இருந்ததில்லை. ஆகவே, ‘பாஜகவை சமாளிக்க இந்த வழியை கடைபிடிப்பது தங்களுக்கு சாதகமானதே..’ என்றும் தலைமைக்கு ஒரு எண்ணம் உள்ளது.

அப்படி ஒரு சூழல் உருவானால் அதுவும் நல்லதே! என தமிழக பாஜக நினைக்கிறது. ஏனென்றால், தற்போது உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கே கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. திமுக தலைமையும், அமைச்சர்களும் பணத்தை அள்ளி இறைக்க தயாராக உள்ளனர். ஆனால், அதிமுகவில் பெரும்பாலான இடங்களில் சோர்ந்து உள்ளனர். ஆகவே, உள்ளூர் மாவட்ட செயலாளர்களையும், நிர்வாகிகளையும் நன்றாக கவனித்து கொடுப்பதைக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என திட்டமிடுகின்றனர்.

அதிமுகவை பொறுத்த அளவில் ஒ.பி.எஸ் கூட தன் மாவட்டத்தைக் கடந்து செலவழிக்கத் தயார் இல்லாத நிலையே உள்ளது. அதே போல, மேற்கு தமிழகத்தில் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி ஆகியோரும் வட தமிழகத்தில் சி.வி சண்முகம் போன்றவர்களும் மட்டுமே செலவழிக்க தயாராக உள்ளனர். எப்படிப் பார்த்தாலும் இந்த தேர்தலில் திமுக ஆளும் கட்சி என்பதால் அசூர பலத்துடன் வெற்றியை கைப்பற்றும். தலைமையும் தங்களுக்கு உதவாது என்பதால் பாஜக திட்டப்படி லோக்கல் அதிமுகவினர் பாஜக தரும் ‘ப’ விட்டமின்களை பெற்றுக் கொண்டு, வேலை செய்யும் நிலையே உள்ளது! அதிமுக கரைந்து கொண்டு உள்ளது. பாஜக பலமடைந்து கொண்டு உள்ளது.

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time