கோவை காவல்துறைக்குள் கோட்சேயின் ஆதரவாளர்களா..?

-சாவித்திரி கண்ணன்

காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30-ல் மத நல்லிணக்கத்துக்கான  ‘மக்கள் ஒற்றுமை காக்கிறோம், வன்முறையை வேரறுக்கிறோம்’ எனும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால்,கோவையில் மட்டும் அதற்கு காவல்துறை கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது..!

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்பது பல கட்சிகள், பொது அமைப்புகளின் சேர்வையாகும்! இதன் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு ‘மதநல்லிணக்கம் காக்க ஒன்றுபடுவோம்’ எனும் துண்டறிக்கை ஒரு கோடி பிரதிகள் தமிழகத்தில் விநியோகிக்கப்பட்டன!

மகாத்மா காந்தி மதநல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டவர். இந்து-முஸ்லிம்- கிறிஸ்தவ ஒற்றுமைக்காக உழைத்தவர். இந்தியாவின் வாழ்வுக்கும், வளத்துக்கும் மக்கள் ஒற்றுமையே அஸ்திவாரமாகும். காந்தி அகிம்சாமூர்த்தி. மத நல்லிணக்கம் சிதைந்து வரும் தற்காலத்தில் அதை மீட்டு எடுக்கும்விதமாக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தமிழகத்தின் பல பகுதிகளைப் போலவே கோவையிலும் நடைபெற்றது

கோவை சிவானந்தா காலானியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது காவல்துறை பலத்த கெடுபிடி செய்ததாக இந்த அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். .இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழக கு.ராமகிருஷ்ணன் மற்றும் விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாநகரில் மகாத்மா காந்தி நினைவு நாளில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் பொருநை மக்கள் இயக்கம் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினமான இன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, பொருநை மக்கள் இயக்கம் சார்பாக மதவெறி எதிர்ப்பு – மக்கள் ஒற்றுமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நெல்லை டவுணில் நடைபெற்றது. இதே போல காங்கிரஸ் கட்சி தலைமை தாங்க புதுக்கோட்டை உள்ளிட்ட நடந்தது! எல்லா இடங்களிலும் என்ன உறுதி மொழி ஏற்பு வாசிக்கப்பட்டதோ அது தான் கோவையிலும் வாசிக்கப்பட்டது!

நெல்லையில் நடந்த நிகழ்வு

ஆனால், அந்த உறுதி மொழி ஏற்புக்கு கோவை போலீசார் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியை நடத்தவிடாமல் நீண்ட வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட காணொலி தற்போது தமிழகம் முழுக்க வைரலாகி பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

கோவையில் என்ன நடந்தது என மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஏ.ஆர்.பாபு கூறியதாவது, ”என்னவென்றே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தருவதற்கே காவல்துறை பலவாறாக இழுத்தடித்து கடைசியில் கூட வாய்மொழி உத்தரவாகத்தான் நடத்திக் கொள்ள அனுமதித்தனர். அதிலும் கூட, இடத்தை மாற்றச் சொல்லி கடைசி நேரத்தில் கட்டளை இட்டனர். அதையும் ஏற்றே செயல்பட்டோம்.

பேனரில் இந்து மதவெறிக்கு பலியான மகாத்மா காந்தி என இருந்ததை சுட்டிக் காட்டி அதில் உள்ள இந்து என்ற வாசகத்தை நீக்கச் சொல்லி காவல்துறை அழுத்தம் தந்தது. ஆகவே, அந்த வாசகத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தோம். அப்படியெல்லாம் நாங்கள் ஒத்துழைத்தும் கூட தோழர் ஜி.ராமகிருஷ்ணன் பேசிய போது கோவை மத்திய காவல்துறை உதவி ஆணையர் சுகுமாரும், ரத்தினபுரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கன்னாவும் இடையில் நுழைந்து நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடை செய்தனர்” என்றார்.

இது குறித்து தோழர் ஜி.ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்ட போது, ”நான் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி உறுதி மொழி வாசித்த போது, அதில் காந்தியைக் கொன்ற கோட்சே என உச்சரித்த அடுத்த நொடியில் புயலென பாய்ந்த உதவி ஆணையர் சுகுமார், ”கோட்ஸே பெயரை சொல்லக் கூடாது” என்றார். ”நான் பொய் சொல்கிறேன் என்றால், என்னை கைது செய்யுங்கள், வழக்கு போடுங்கள். தடுக்காதீர்கள்” என்றேன். ஆனால், காவல்துறை பிடிவாதமாக வாக்குவாதம் செய்தது! இதற்கு நான், ”கோட்ஸே கொல்லவில்லை என்றால் வேறு யார் கொன்றார்கள்? என்று தெரிவியுங்கள். கோட்சேதான் கொன்றதாக நீதிமன்றம் உத்தரவிட்டு தண்டனையே விதித்தது உங்களுக்கு தெரியாதா? என கேள்வி எழுப்பினேன். ஆனால், ”இதெல்லாம் எங்களுக்கு தெரியவேண்டியதில்லை. கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது” என உதவி ஆணையர் சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.

கோட்ஸே மீது இவர்களுக்கு என்ன அப்படி ஒரு பற்று இவர்களுக்கு என்று எனக்கு புரியவில்லை. ஆனால், ஐந்து நிமிடத்தில் நாங்கள் உறுதி மொழி வாசித்து கலைந்து சென்று இருக்க வேண்டிய நிகழ்வை மணிக்கணக்கில் தடை செய்து கடைசியாகத் தான் அனுமதித்தனர். இந்த நிகழ்ச்சி அனைவருக்கும் கடுமையான மன உளைச்சலை தந்தது’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கோட்சே என்ற பெயர் உச்சரிக்கப்பட்டதை எதிர்த்த அந்த காவல்துறை இதே காந்தி நினைவு தின நிகழ்வில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ”கோட்சேயின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் இடமில்லை” என பேசியது தெரியவில்லை” போலும்.

கோவையின் தெற்கு தாலுகா அலுவலகம் அருகே காந்திபுரத்தில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை மதமாற்றக் குற்றச்சாட்டு வைத்து பாஜக நடத்திய பெரிய கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறை, தேசப்பிதா நினைவு நாள் நிகழ்ச்சிக்கு மட்டும் இத்தனை இடையூறு செய்வது ஏன் என்பதே கோவைவாசிகள் பலரின் கேள்வியாக உள்ளது.

”காந்தி ஒரு இந்து மதவெறியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று இந்திய மக்களுக்கு காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது உடனடியாக வானொலி வாயிலாக அறிவித்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு தான்! அதற்கு முக்கிய காரணம், ”இந்து மதவெறியால் நாம் தேசத் தந்தையையே பறிகொடுக்க நேர்ந்தது. இனி ஒரு போதும் அந்த தவறை செய்யக் கூடாது எனப் பெரும்பான்மை இந்துக்களின் இதயத்தை உலுக்கும்படி சொல்ல வேண்டிய தேவை இருந்தது” என்றார் நேரு.

அது தான் இந்து மதவெறி தலை தூக்க நேர்ந்துள்ள இந்த தருணத்திலும் மக்களின் மனசாட்சியை தட்டி உலுக்கி அவர்களை மதவெறியின் கொடூரத்தை உணர வைக்க தேவைப்படுகிறது. இந்த உன்னத நோக்கத்தை தடுப்பது மதவெறிக்கு மறைமுகமாக உதவி செய்வது போலாகிவிடும் என்பதை கோவை காவல்துறை புரிந்து கொள்ள முன் வருவார்களா..?

பொதுவாக கோவை போலீசார் கண்ணியமானவர்கள். ஆனால், அதற்குள் சிலர் கோட்ஸேவுக்கு ஆதரவு நிலை எடுப்பது கோவை காவல்துறைக்கு நீங்காத பழியைப் பெற்றுத் தரும். ‘தமிழகத்தில் பாஜகவின் தாக்கம் காவல்துறைக்குள்ளும் ஊடுருவியுள்ளதோ’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இந்த நிகழ்வு!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time