செந்தில்பாலாஜியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..!

-சாவித்திரி கண்ணன்

கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை செந்தில் பாலாஜி தான் திமுகவின் ஒற்றை முகம்! முடிசூடா மன்னன். அவர் வைத்ததே சட்டம்! இங்கே ஒட்டுமொத்த திமுகவும், ஆட்சி நிர்வாகமும் அவர் விரலசைவுக்கு கட்டுப்படும் போது, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மட்டும் மண்டியிட மறுப்பதா..?

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நடந்து வருகின்றன!

தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.  இதன்படி, கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன! வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டம் சார்பாக திமுகவில் பேச்சுவார்த்தையை நடத்தி முடிவெடுக்கும் அதிகாரம் செந்தில் பாலாஜிக்கு தலைமையால் தரப்பட்டு உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அலுவலகம் சென்ற காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியை செந்தில் பாலாஜி திடீரென்று, ”எழுந்து வெளியில் போ” என்று ஆத்திரமாக பேசியுள்ளது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

இதனால் கொந்தளித்து போன ஜோதிமணி, ”உங்கள் அலுவலகம் தேடி வந்தது விருந்துக்கு அல்ல, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு. நீங்க எப்படி எழுந்திருச்சு வெளியே போ..” என்று சொல்லலாம் என்று சத்தமிட்டவாறு வெளியே வந்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் கரூர் எம்.பி. ஜோதிமணியை தொடர்பு கொண்டு பேசிய போது, ”சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்து எவ்வளவு மரியாதையுடன், பண்புடன் பேசுகிறார். ஆனால், இங்கோ, செந்தில் பாலாஜி கொடுக்கிறதை வாங்கிட்டுப் போ, பேச்சுக்கே இடமில்லை என்ற ரீதியில் என எடுத்தெறிஞ்சு பேசுகிறார்.

மாவட்ட திமுக அலுவலகத்திற்கு நானும், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சின்னசாமியும் சென்றோம். இத்தனைக்கும் நாங்கள் அதிகம் கேட்கவில்லை. கரூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 48 இடங்களில் 7 கேட்டு ஐந்துக்கு இறங்கி வந்தோம். ஆனால், அவரோ ‘இரண்டுக்கு மேல வாய்ப்பில்லை’ என கறார் காட்டினார். ‘அரவக்குறிச்சி பேரூராட்சியில் 16 க்கு இரண்டு தான் கேட்டோம்.ஒன்றுக்கு மேல் இல்லை’ என்றார். பள்ளப்பட்டி நகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன. அதில் இரண்டு மட்டுமே தரமுடியும் என்றார். எந்த நெகிழ்வு தன்மையும் இல்லாமல் பேசியது ஒருபுறமென்றால், ‘உங்க கட்சியில் ஆளே இல்லை…’ என எகத்தாளமாக பேசி, ”இல்லை நீங்க போய் உங்க தலைமை கிட்ட சொல்லுங்க” என்றார்.

”எங்க தலைமை எப்படி இவ்வளவு குறைவான இடங்களை ஏற்றுக் கொண்டீர்கள் என்று தானே எங்களை கேட்பார்கள்? நல்ல முடிவு சொல்லுங்க” என்று பேசிக் கொண்டே வரும் போது ”இல்ல, இவ்வளவு தான், ஏற்க முடியாவிட்டால் எந்திருச்சு வெளியே போ..” என நாகரீக குறைவாக பேசிவிட்டார். ஜோதிமணி என்பவர் தனி மனிதராகவோ, சொந்த நலன் கருதியோ அவரிடம் பேசப் போகவில்லை. ஒரு தேசிய கட்சியின் பிரதிநிதியாகத் தான் நான் சென்றேன். தருவதும், மறுப்பதும் அவர்கள் விருப்பம். ஆனால், கண்ணியத்துடன் பேச வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு” என்றார்!

கரூர் மாவட்ட ஊடக நண்பர்களிடம் பேசிய போது, ”செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் நாடாளுமன்ற தேர்தலின் போது நல்ல நட்புடன் தான் இருந்தனர். செந்தில் பாலாஜி ஜோதிமணி வெற்றிக்காக நிறைய செலவு செய்தார். ஜோதிமணி வெற்றியில் செந்தில் பாலாஜியின் பங்களிப்பு சாதாரணமானது அல்ல! வெற்றி பெற்று வந்த பிறகு ஜோதிமணி சுறுசுறுப்புடன் மக்கள் பணியாற்றக் களத்தில் இறங்கிவிட்டார். ஆனால், செந்தில் பாலாஜி ஜோதிமணி தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என நினைத்தாரோ என்னவோ! மெல்ல, மெல்ல ஜோதிமணியை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார்.

அந்தம்மா எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் முகம் கொடுத்து கூட பேசமாட்டார். அத்துடன் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு ஜோதிமணி எந்த கோரிக்கைகள் கொண்டு வந்தாலும் செய்ய வேண்டாம் என வாய்மொழி உத்தரவு போட்டு இருப்பார் போல. இந்தம்மா தொகுதி மக்கள் சார்பாக எது கேட்டாலும் அரசு நிர்வாகம் அலட்சியம் காட்டுவது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. இதனால் தான் ஒரு முறை ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் உட்கார்ந்து தர்ணா செய்ய வேண்டியதாகிவிட்டது. இப்ப அதன் தொடர்ச்சியாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் அவமானப்படுத்திவிட்டார்’’ என்றனர்.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக வட்டாரத்தில் பேசிய போது, செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகள் குறித்து கட்சிகாரர்களே குறைப்பட்டுக் கொண்டனர். ”கொங்கு மண்டலத்தை பொறுத்த அளவில் திமுகவின் ஒற்றை முகமாக தான் மட்டுமே தெரிய வேண்டும். தன்னை மீறீ அணுவும் அசையக் கூடாது என்ற அளவுக்கு சர்வாதிகாரம் செய்கிறார். இவர் கட்சிக்கு வந்தே இரண்டரை ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால், இங்கு காலம்,காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் எல்லாம் அவருக்கு கைக்கட்டி சேவகம் பண்ண வேண்டும் என நினைக்கிறார். மேலிடத்தில் அவருக்கு இருக்கும் நெருக்கம் தந்த தைரியத்தில் கொங்கு மண்டலத்தின் முடிசூடா மன்னனாக தன்னை கருதிக் கொண்டு வளம் வருகிறார்.

சமீபத்தில் கோவை மாவட்ட உள்ளாட்சி தொடர்பாக அவர் அங்குள்ள யாரையும் கலந்து பேசாமல், தன்னிச்சையாக திமுகவுக்கான இடங்களை எல்லாம் தூக்கி கூட்டணிக் கட்சிகளுக்கு தாரை வார்த்துவிட்டார். இது எல்லோருக்குமே அதிர்ச்சியாகிவிட்டது. இது தொடர்பாக கட்சிக்காரர்களின் ஆதங்கங்களைக் கேட்கக் கூட அவர் தயாராக இல்லை. இதன் விளைவாக அவர் கோவை வந்த போது அவர் காரை வழிமறித்து செல்லவிடாமல் சொந்த கட்சிக்கார்களே முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்!

மொத்தம் மூன்று வாயில்கள்! எந்த வழியில் அவர் செல்லப் போனாலும் திமுகவினர் முற்றுகையிட்டு இறங்கி பதில் சொல்லிவிட்டுப் போங்க என்றனர். ஆனால், கடைசி வரை அவர் பேசவே தயார் இல்லாமல் காவல்துறையைக் கொண்டு கட்சிக்கார்களை அப்புறப் படுத்திவிட்டு போனார். இது தான் கொங்கு மண்டல திமுகவினர் நிலைமை! இதெல்லாம் தலைமைக்கு தெரியுமோ தெரியாதோ..! ஆனா ஒன்று, திமுகவில் தலைவருக்கு அடுத்த நிலையில் நான் தான் என அவர் அளவுக்கு அதிகமாகவே ஆட்டம் போடுகிறார். இது காலப்போக்கில் கட்சிக் கட்டமைப்பையே காணாமல் ஆக்கிவிடும்” என்றனர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time