உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்கிறதா? அமெரிக்கா ஆபத்பாந்தனா?

ச. அருணாச்சலம்

உக்ரைன் நாட்டைச் சுற்றி ரஷியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன! ”ரஷியாவிடம் இருந்து உக்ரைனை பாதுகாப்போம், ரஷ்யா அத்துமீறினால் வரலாறு காணாத போர் மூளும்!” என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன. போர் மூளுமா? உண்மையான கள நிலவரம் என்ன?

குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் உக்ரைனுக்காக உருகி பேசுகின்றன! .  மேற்கத்திய நாடுகளும், நேட்டோ அமைப்பும் தொடர்ந்து ரஷ்யாவை எச்சரிப்பதன் மூலம் ஐரோப்பாவில் யுத்தம் எப்பொழுது வெடிக்குமோ என்ற பதற்றம் உருவாகியுள்ளது. உண்மையில் நடந்து கொண்டிருப்பது என்ன?

ஏன் இந்த பதற்றம்?  உண்மையில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்துமா? எதற்காக தாக்க வேண்டும்? என்பன போன்ற பல கேள்விகள் நம் மனதில் தோன்றுவது இயற்கைதான்.

ரஷியா இந்த விவகாரத்தில் என்ன கூறுகிறது;

நாங்கள் உக்ரைன் நாட்டை தாக்கப்போவது இல்லை. ஆனால், உக்ரைன் நாட்டிற்குள் நேட்டோ படைகளோ மற்ற நாட்டுப்படைகளோ நுழைந்தாலோ, அப்படி எத்தனித்தாலோ நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’’ என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறுகிறது.

எங்களது நாட்டிற்கும் அதன் எல்லைகளுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும் .உக்ரைன் நாட்டை நேட்டோ ஒப்பந்தத்திற்குள் இழுப்பதையோ, நேட்டோ படைகளும் மேற்கத்திய அரசுகளும் எங்களை சுற்றி வளைத்து ராணுவதளங்களை நிறுவுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நெற்றியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

சதாம் உசைன்

இவர்  கூற்றில் உள்ள நியாயத்தை உணரும் முன்னர் ,இராக் அதிபர் சதாம் உசைன் மனித குலத்திற்கெதிரான பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்துள்ளார். WMD  என்று பச்சைப் பொய்யை பரப்பி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான நேட்டோ படையும் ஈராக் நாட்டை தாக்கி சின்னாபின்னமாக்கியதை நாம் மறக்க இயலுமா? அப்போதைய ஐ நா பொதுச்செயலாளர் கோபி அன்னானும் மற்ற சில நாடுகளும் இந்த ஈராக் யுத்தத்தை சட்டவிரோதமானது, சர்வதேச விதிகளுக்கு , ஐ நா வின் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் அறிவித்ததை தான் யாரும் மறைக்க முடியுமா?

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட உலக சூழ்நிலைகளில் போரை தவிர்க்க – நாடுகளுக்கிடையான அமைதியை நிலைநாட்ட – ஐக்கிய நாடுகள் அமைப்பு என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆளுமையை எந்த நாடும் மீறாவண்ணம் உத்தரவாதம் அளித்தன இரு அணிகள் எனலாம் . ஆம், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் ஓரணியிலும் சோவியத் யூனியன் தலைமையில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகளும் மற்றொரு அணியாக திரண்டு இரு வேறு அணிகளாக ஐ நாவின் செயல்பாட்டிற்கு உலக அமைதிக்கு உத்தரவாதமளித்தனர்.

ஹிட்லர் – முசோலினியின் நாசகார நாஜி மற்றும் பாசிச படைகளுக்கு எதிராக சோவியத் யூனியனுடன் இணந்து போராடிய மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் போருக்குப்பின் சோவியத் யூனியனின் மதிப்பும், செல்வாக்கும் பெருமளவு உயர்ந்ததை பொறுக்காமல் சில காய்களை சர்வதேச அரங்கில் நகர்த்தினர்.தங்களுடைய ஆளுமையையும் செல்வாக்கையும் நிலைநிறுத்தவும், விரிவு படுத்தவும் ராணுவ கூட்டமைப்புகளை ஏற்படுத்தினர் . இப்படியாக ஏற்படுத்தப்பட்டது தான் ஐரோப்பாவை மையமாக கொண்ட நார்த் அட்லான்டிக் ட்ரீட்டி ஆர்கனைசேஷன் என்ற நேட்டோ அமைப்பாகும்!  (North Atlantic Treaty Organisation NATO)

இவ்வமைப்பு தற்காப்பு அமைப்புதான் என்று கூறிக்கொண்டாலும், இந்தப்படைகள் ஈராக்கிலும், சிரியாவலும் ஆப்கானிஸ்தானிலும் நுழைந்தது நமக்கு வேறுபல விஷயங்களை உணர்த்துகிறது.

கம்யூனிச எதிர்ப்பு, சோவியத் எதிர்ப்பு என்ற புள்ளியில் தொடங்கிய இந்த மேற்கத்திய கூட்டமைப்பு சோவியத் யூனியனை அழித்து நிர்மூலமாக்கவதில் பெரும் வெற்றியடைந்தன.

1990ல் சோவியத் யூனியன் சிதறிய வேளையில் அப்போதைய சோவியத் அதிபர் மிக்கேல் கோர்பச்சேவிடம் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் நேட்டோ கூட்டமைப்பு விரிவாக்கப்பட மாட்டாது என்ற உறுதி மொழியை அளித்தார் . இது 1994ல் புடா பெஸ்ட் குறிப்பாணை (Budapest Memorandum 1994)  மூலம் உறுதிசெய்யப்பட்டது.

ஆனால். அவையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டது.

இன்று முன்னாள் சோவியத் அமைப்பைச்சார்ந்த பல நாடுகள் நேட்டோவில் சங்கமாகி உள்ளனர் . நேட்டோ படைகளும், ராணுவ தளங்களும் ரஷியாவை சுற்றியுள்ளன. ஏழு நிமிடங்களில் ரஷ்யாவை தாக்கும் ஏவுகணைதளங்கள் இந்த நாடுகளில் உள்ளன. 13 கி.மீ தூரம் தான் இத்தளங்களுக்கும், ரஷ்ய எல்லைக்கும் உள்ள தூரம்  என்பதை புரிந்து கொண்டால் யார் கூற்றில் உண்மைபொதிந்துள்ளது என்பது விளங்கும்.

சோவியத்யூனியன் 1962களில் கியூபா கேட்பதற்கிணங்க ஏவுகணைகளை கியூபாவில் அமைத்தபோது, கொதித்தெழவில்லையா அமெரிக்கா? தனக்கொரு நியாயம் ரஷியாவிற்கு ஒன்றா?

சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு உலகின் தனிப் பெரும் ஆளுமையாக தன்னை பாவித்துக் கொண்ட அமெரிக்கா தன் ஆதிக்கத்தை கொண்டு செலுத்துவதில் எந்த குறுக்கீட்டையும் சகித்துக்கொள்ளும் நிலையில் இல்லை . தாங்கள் நினைத்ததே சட்டம் அல்லது உலக நியதி என்று கொக்கரிக்கும் அமெரிக்கா எடுத்த மோசமான முடிவுகளை நாம் ஈராக்கிலும், ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலிலும் பின்னர் சிரியாவிலும் பாரத்தோம்.

சென்ற இடமெல்லாம் சீரழிவும், பெரும் உயிர் சேதமும், பொருட் சேதமும் ஏற்படுத்தியது அமெரிக்க ராணுவம்! எதற்காக ராணுவ நடவடிக்கை என்றனரோ, அந்தப் பிரச்சினைகளை மேலும் பூதாகரமாக வளர்த்தார்களே ஒழிய தீர்க்கவில்லை. இன்று ஆப்கானிஸ்தானிலிருந்து  ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று வெளியேறிய அமெரிக்க பற்றும் நேட்டோ படைகள் அதன் கூட்டாளிகள் மத்தியில் கலக்கத்தையும் நம்பிக்கையின்மையையும் விதைத்துள்ளது.

சோவியத் யூனியன் சிதைவுண்ட பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வார்சா கூட்டமைப்பும் நொறுங்கியது, மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு முன்னேற்றமும் வளரச்சியும் கிடைக்கவில்லை. மேற்கத்திய சந்தை பொருளாதாரத்திற்கேற்ற லேபர் மார்க்கெட்டாக இந்நாடுகள் மாறின. அதுவரை, சோவியத் ரஷ்யாவை எதிர்த்து நிழல் யுத்தம் நடத்திய மேறகத்திய நாடுகள் தங்களுக்கு வேண்டாத நாடுகளின் ஆட்சியை குலைக்க ராணுவ சர்வாதிகாரிகளையும், ஏஜன்ட்களையும் பயன்படுத்தின.

ஆனால், அதற்குப் பின் -சோவியத் வீழ்ச்சிக்குப்பின்- ஜனநாயகம், முன்னேற்றம் போன்ற கோஷங்களை கையிலெடுத்துக்கொண்டு தங்களுடன் இணக்கமில்லாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கலர் ரெவல்யூஷன் வண்ணப்புரட்சிகளை கட்டவிழ்த்து விட்டனர் . 2003 ரோஸ் புரட்சி ஜியார்ஜியாவிலும், 2004 ஆரஞ்சு புரட்சி உக்ரைனிலும் 2005ல் கிரிகிஸ்தானில் டுலிப் புரட்சியும் பெரியண்ணன் அமெரிக்காவின் மேற்பார்வையில் நடந்தது.

இவைகளின் நோக்கமெல்லாம் ஆட்சிமாற்றமும் தனது கைப்பாவைகளை ஆட்சியில் அமர்த்துவதும் தான்.

இப்பொழுது தமிழ்நாட்டில் மாணவி லாவண்யா மரணத்தை வைத்து எத்தனை தளங்களில் எத்தனை வித்தகர்கள் தங்கள் பங்கை அளித்து ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த விழைகின்றனரோ, அது போலவே இந்த வண்ணப்புரட்சி பரிணமித்து பூத்தது. வேண்டியதெல்லாம் குழப்பமும் ஆட்சி மாற்றமும்தானே ஒழிய பிரச்சினைக்கு தீர்வல்ல.

நேட்டோ படைகளினால்  அகதிகளாக ஆக்கப்பட்ட மக்களை தங்கள் நாட்டெல்லையில் தடுத்து நிறுத்தும் மேலை நாட்டு ஆட்சியாளர்கள்  பரிசுத்தவான்களா? பயங்கரவாதிகளா?

இவர்கள் தங்களை ஐனநாயகவாதிகள் என பறைசாற்றுவதும் ஜனநாயகத்திற்கான  சர்வதேச மாநாடு கூட்டுவதும் விந்தையிலும்  விந்தை.

சோவியத் ஆட்சி வீழ்ச்சிக்குப்பிறகு ரஷ்யா ஒரு பலமிழந்த அனாதை நாடாக ஆகிவிடும் என்று மனப்பால் குடித்த அமெரிக்க ஆட்சியாளர்களுக்கு விளாதிமிர புடினின் செயல்பாடுபெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. ரஷ்யாவையும், புடீனையும் பலவீனப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் இன்றைய ரஷ்யா தன்னையும், தன் பொருளாதாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள பல்வேறு முயற்சிகள் செய்து இன்று சாப்ட் பவராகவும் ,ஸ்மார்ட் பவராகவும் தன்னை மாற்றிக்கொண்டு நிமிர்ந்து நிற்கிறது.

ஆயுத தளவாடங்கள் உற்பத்தியிலும், அணுசக்தி உபயோகத்திலும் முன்னணியில் உள்ள ரஷ்யா எரிவாயு உற்பத்தியிலும் அதன் வினியோக குழாய் பதிப்புகளில் ஒரு முக்கிய பங்கை உலகில் வகிக்கிறது. ரஷ்ய எரிவாயுவின் ஸ்பாட் விலை சர்வதேச சந்தையில் மிகக் குறைவாகும். ஆகவே அதில் கொடிகட்டிப் பறக்கிறது!

இதனால் வயிற்றெரிச்சல் அடைந்துள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ரஷ்யாவை சுற்றி வளைப்பதன் மூலம் , பதட்ட சூழலை விதைத்து ரஷ்யாவை எப்படியாவது சண்டைக்கு இழுத்துவிட பகீரத முயற்சிகள் செய்கின்றனர்.

உக்ரைன் நாட்டை அதற்கு ஆடுகளமாக மாற்ற முயலுகின்றனர் . உக்ரைன் நாட்டுமக்களும் அந்நாட்டு அரசும் ஏதோ ரஷ்யாவின் பரம எதிரிகள் போலவும் மேற்கத்திய ஊடகங்களால் சித்தரிக்கப்படுகின்றனர் . ஆனால் உக்ரைன் உண்மையில் ஒரு தேசமல்ல, அது ஒரு நாடு பல்வேறு இன மக்களை தன்னகத்தே கொண்ட நாடு என்கிறார் முன்னாள் அமெரிக்க தூதர் ஜாக் எப் .மேடலாக்.

மேலும் உக்ரைன் நாடு ஸ்டாலினால் பல்வேறு இன மக்களை உள்ளடக்கிய பல்வேறு மொழிபேசும் மக்களை உள்ளடக்கிய ஒரு நாடாக ஏற்படுத்தப்பட்டது. அப்பொழுதிருந்தே கிரிமியா தனி அந்தஸ்துடன் தனி அதிகாரங்களுடன் உக்ரைனின் பகுதியாக அறிவிக்கப்பட்டது. உக்ரைன் நிலப்பரப்பில்  பாதிக்கு மேற்பட்ட பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்களே அதிகமுள்ளனர் . இவர்கள் ரஷ்யாவுடன் சுமூக உறவையே வளர்த்தெடுக்க விரும்புகின்றனர். சண்டையை அல்ல!

அடுத்து ரஷ்யாவிற்கெதிராக ஏவுகணைகளையோ அந்நிய துருப்புகளையோ ரஷ்யாவிலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள உகரைன் பகுதிகளில் நிறுவுவதற்கும் எதிர்க்கின்றனர் அங்கு வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்கள். இத்தகைய மக்களின் ஏகோபித்த ஆதரவால் வெற்றி பெற்ற விக்டர் யானுகோவிச்  என்ற உக்ரைன் நாட்டு அதிபரை அமெரிக்கா சி ஐ ஏ மூலம் கவிழ்த்துவிட்டு, அமெரிக்க கைப்பாவையான இருப்பார் என்ற நினைப்பில் விளாதிமிர் ஜெலனஸ்கீ யை அதிபராக ஆக்கியது. இன்று இவர் தனது நிலையை தினமும் மாற்றுகின்றவராக திகழ்கிறார்.

விக்டர் யானுகோவிச்,                             விளாதிமிர் ஜெலன்ஸ்கி

இது தவிர ரஷ்ய மொழி பேசும் சில பகுதியினர் தாங்கள் உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைந்து கொள்ளவும் தயாராக உள்ளனர் . அத்தகையவர்கள் மீது உக்ரைன் அரசோ அல்லது அமெரிக்காவின் கூலிப்படைகளோ தாக்குதல் நடத்தினால் ரஷ்யா பார்த்துக்கொண்டு வாளாவிருக்காது. நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றுவிடும் என்ற அச்சம் உக்ரைன் மக்களிடம் நிலவுகிறது.

உக்ரைன் நேட்டோ குடையின் கீழ் வருவதையோ, உக்ரைனை நேட்டோ படைகள் உபயோகிப்பதையோ, ரஷ்ய எல்லைகளுக்கருகில் நேட்டோ படைகள் நெருங்குவதையோ ரஷ்யா ஒருநாளும் அனுமதிக்கப் போவதில்லை. பதட்டத்தை ஏற்படுத்தி எரிவாயு தொழிலை நசுக்குவதன் மூலம் ரஷ்யாவை பணிய வைப்பது ஒருநாளும் முடியாத காரியம். ரஷ்ய நாட்டிடம் பணக் கையிருப்பு அதிகம் உள்ளது, இரண்டு ஐரோப்பாவில் எரிவாயு வினியோகம் தடைபட்டால் சீனா, தென் கொரியா, ஜப்பான் ஏன் இந்தியா கூட மலிவான விலையில் கிடைக்கும் எரிவாயுவை வாங்க தயாராயுள்ளனர்.

இப்பொழுது சீனா ரஷ்யா உறவுகள் மேம்பட்டுள்ளன, பாதுகாப்பு ஒப்பந்தமும் இவ்விரு நாடுகளும் தங்களுக்கிடையில் ஏற்படுத்தியுள்ளனர் .நிலைமை 1970 1980 போல் இல்லை என்று அமெரிக்கா உணர்ந்திருந்தாலும் அப்படி உணர்ந்தவர்கள் கை இன்று ஓங்கியில்லை.விளாதிமீர் புடினை கட்டுப்படுத்த கவிழ்க்க பராக் ஒபாமா மற்றும் ஹிலாரி கிளின்டன் போன்ற தலைவர்கள் தலைகீழ் நின்று பார்த்தும் முடியவில்லை.

அன்று துணை அதிபராக இருந்த உக்ரைன் ஆட்சிக்கவிழ்ப்பை முன்னின்று தன் கண்காணிப்பில் நடத்தியவர்தான் இன்றைய அமெரிக்க அதிபரான ஜோ பைடன்.

நேட்டோ நாடுகளிடையே ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஒற்றுமையான குரலோ, உடன்பாடான கருத்தோ இல்லை , நேட்டோ உறுப்பினர்களும் இதில் உறுதியாய் இல்லை. எந்தவொரு தவறான நடவடிக்கையால் தீ பற்றிக்கொண்டால் பெரிதும் பாதிப்படைவது ஐரோப்பாதான் என்பதை அமெரிக்கா உணர்ந்ததோ இல்லையோ  ஐரோப்பிய நாடுகள் பல-பிரிட்டனை தவிர்த்து- உணர்ந்துள்ளன.

நேட்டோவிற்கு ‘எதிரி’என யாரும் இல்லையென்றால், நேட்டோ கரைந்துவிடும் என்பதும் அனைவரும் அறிந்த ரகசியம்தான். ஆகவே, ” போர் மூளும், ரத்த ஆறு ஓடும், பிணங்கள் குவியும்” என்று அவ்வப்போது பாச்சா காட்டுவது அவர்கள் வாடிக்கை! அந்தப் பாச்சா ரஷ்யாவிடம் ஒரு போதும் பலிக்காது!

யதார்த்த நடவடிக்கைகளுக்குப் பேர் போன ரஷ்யர்கள் இன்று நிதானமாக “நாங்கள் இதற்கு மேல் பின் வாங்கப் போவதில்லை” என்கின்றனர். ரஷ்யாவின, அதிகபட்ச தேவையும் குறைந்தபட்ச எதிர்பார்ப்பும் ஒன்றே ஒன்றுதான்.

“எங்களுக்கு பின்வாங்கும் எண்ணமே இல்லை.நாங்கள் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம்.. இதற்கு மேல் நாங்கள் உங்களை நோக்கி சொல்ல விரும்புவது ‘நிறுத்து’ என்ற ஒரே சொல்தான் என்று கூறுகிறார் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புடீன்.

விளாதிமிர் புடீன் கூறுவது அமெரிக்காவுக்கு விளங்குகிறதா என்பதற்கு காலம்தான் பதில் கூறும்.

கட்டுரையாளர்; ச. அருணாச்சலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time