இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!

-சாவித்திரி கண்ணன்

உலக பொருளாதார அறிஞர்களில் முக்கியமானவரும்,இந்தியாவின் முன்னாள் பிரதமரும்,காங்கிரசின் முதுபெரும் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் தனது 88வது பிறந்த நாளை மிக அமைதியாக எதிர்கொண்டார்!

இந்த நாட்டில் ஒரு வார்டு கவுன்சிலராக இருப்பவர் கூட தன் பிறந்த நாளில் போஸ்டர்கள், பேனர்கள்,விழாக்கள் என ஆர்ப்பாட்டமாக எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம்.

மன்மோகன் சிங் எளிமையானவராக இருப்பதால் ஊடகங்களும் அவரது பிறந்த நாளுக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை! ஆனால்,அவர் நாம் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய,பின்பற்ற வேண்டிய ஒரு அற்புதமான முன்னோடி என நான் கருதுகிறேன்!

அவரது பிறந்த நாளன்று பிரதமர் மோடி ஒரு சம்பிரதாய வாழ்த்தை டிவிட்டரில் தெரிவித்தார்!

சிதம்பரமோ, ’’மன்மோகன் சிங்கிற்கு பாரதரத்னா விருது தந்து கௌரவிக்க வேண்டும்’’ என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் மம்தா பானர்ஜி,அரவிந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட முதல்வர்கள் வாழ்த்தினர். ஆனால்,இவர்களைவரைக் காட்டிலும் ராகுல்காந்தியின் வாழ்த்து மனதைத் தொடுவதாக இருந்தது!

’’மன்மோகன்சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு ஆழமாக உணர்கிறது. அவர் நேர்மை,கண்ணியம்,அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உதாரணமானவர்!’’ என ராகுல்காந்தி கூறியுள்ளார்.இது வெற்றுப் புகழ்ச்சியில்லை!

இந்தியாவின் சக்தி வாய்ந்த நிதி அமைச்சராக ஐந்தாண்டுகள் பணியாற்றிப் பல அதிரடி பொருளாதார மாற்றத்திற்கு வித்திட்டவர், பத்தாண்டுக் காலம் பிரதமராக இருந்தவர் என்ற வகையில் அவர் மீது இது வரை ஒரு சின்ன ஊழல் குற்றச்சாட்டு கூட எழுந்ததில்லை! அப்பழுக்கற்ற நேர்மையாளராகத் தன்னை உறுதியாகக் கட்டமைத்துக் கொண்டவர் மன்மோகன் சிங்! பல ஆயிரம் கோடிகளைச் சுலபமாகச் சம்பாதிக்கக் கூடிய இடத்தில் அவர் இருந்தார்! அவர் கேட்காமலே அவருக்குக் கொட்டித்தரப் பல பெருந்தொழில் அதிபர்கள் காத்திருந்தனர்.ஆனால், அந்த எண்ணத்தில் அம்பானிகளோ, அதானிகளோ,டாட்டாக்களோ, பிர்லாக்களோ அவரை நெருங்கக் கூட முடியாத ஒரு நெருப்பு வளையத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் அவர் கட்டமைத்திருந்தார். அதனால் தான் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதியான நரசிம்மராவ் அவர்களே மன்மோகன்சிங்கை பூரணமாக நம்பி அவரது புதிய பொருளாதாரத் திட்டங்கள்,அணுகுமுறைகள் அத்தனையையும் ஆதரித்தார்.

அதே போல நரசிம்மராவ் அவர்களையடுத்து காங்கிரஸின் பிரதமராகும் வாய்ப்பு  சோனியாகாந்திக்கு இருந்தும், அதை ஏற்காமல் தவிர்த்து,’’இதற்கு இன்னார் தான் பொருத்தமானவர்’’ என சோனியா புத்திசாலித்தனமாக ஒரு முடிவு எடுத்து மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார்! இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரானது அதுவே முதல் நிகழ்வாகும்.

அப்போதும் பலர், ’’சும்மா பேருக்குத் தான் சிங் பிரதமர்! ஆனால்,அதிகாரமெல்லாம் சோனியா தான்!கூடிய விரைவில் மன்மோகனை தகுதி இறக்கம் செய்துவிட்டு சோனியா பிரதமராகலாம் எனப் பேசினர்.ஆனால்,கடைசி வரை அது நடக்காதது மட்டுமல்ல,அடுத்த முறையும் முழு ஐந்தாண்டுகள் டாக்டர்.சிங் தான்  பிரதமராகச் செயல்பட்டார்!

அப்போது பாஜகவும்,அவர்களின் ஆதரவாளர்களும், ’’சிங் அதிகாரமற்றப் பிரதமர். சோனியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்’’ என்ற பிரச்சாரத்தைப் பரப்பினர்! ஆனால்,அது முற்றிலும் பொய் என்பது மட்டுமல்ல,  மன்மோகன்சிங், தன்நிகரற்ற சுதந்திர மனிதராக இயங்கினார் என்பது அன்றைய அமைச்சர்கள்,அதிகாரிகள் அனைவருக்கும் நன்கு தெரியும்!

கட்சி அரசியலிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு, அரசு நிர்வாகத்தில் மட்டுமே முழுமையான கவனத்தைச்  செலுத்தியதால் மன்மோகன் மீது அப்படியொரு தோற்றம் உருவானது.அரசியல் தொடர்பான சிக்கல்களோ,கவலைகளோ மன்மோகனுக்கு தராமல் சோனியா காந்தியும் அவரை பாதுகாத்தார். இதன் மூலம் நாட்டுக்கும்,மக்களுக்கும் டாக்டர்.சிங்கின் தொண்டு முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை கருதியது.எனவே, அரசியல் சூதுவாது இல்லாதவராக அவரும் தன் இயல்பு படியே செயல்படமுடிந்தது.

மன்மோகன்சிங் பற்றி மேலதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அவர் இன்றைய பாகிஸ்தானில் இருக்கின்ற மேற்கு பஞ்சாபில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர்.பல மைல்கள் நடந்து சென்று பள்ளிக் கல்வியை கற்றவர்! சிம்னி விளக்கு ஒளியில் படித்து அறிவை வளர்த்தவர்! சிறந்த மாணவனாகத் திகழ்ந்த அவர் உலக புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரம் படித்தார்!

பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலையில் டாக்டரேட் முடித்தார்!பஞ்சாப் பல்கலையிலும்,தில்லி ஜவகர்லால் நேரு பல்கலையிலும் பேராசிரியராக வேலை பார்த்தவர். அதன் பிறகு நிதி அமைச்சகம்,வெளி நாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் ஆலோசகராக இருந்தவர்! ரிசர்வ் வங்கியின் இயக்குநர்,ஆளுனர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

மன்மோகன் சிங் அடம்ஸ்மித்,ஆசியமணி…உள்ளிட்ட பல முக்கிய உலக விருதுகளைப் பெற்றவர்.

மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியின் முக்கிய சாதனையாக தகவல் பெறும் உரிமைச் சட்டம், வன உரிமைகள் அங்கீகரிப்பு சட்டம்,கல்வி உரிமைச் சட்டம், உணவு உரிமைச் சட்டம்,எட்டு ஐ.ஐ.டிக்கள்,ஏழு ஐ.ஐ.எம்கள் முப்பது மத்திய பல்கலைகள் என உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது,ரயில்வே துறையை லாபகரமாக்கியது, தனி நபர் வருமானத்தை 250% அதிகரித்தது உள்ளிட்டவற்றைக் கூறலாம்!

மன்மோகன்சிங்கின் பலவீனமென்று சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்திய நாட்டின் விவசாயம், விவசாயக் கூலிகளின் வாழ் நிலை,அடித்தட்டு மக்களின் வாழ்வியல் குறித்த அடிப்படை புரிதல்கள் இல்லாதவர். உயர்ந்த அந்தஸ்துள்ள அரசு பதவிகளிலேயே உழன்றவர் என்பதால் அதிக ஏழைகளைக் கொண்ட இந்த காந்தி தேசத்தின் கடைக்கோடி மக்களை அவர் அறிந்து கொள்ளாமலே இருந்துவிட்டார்.

தற்போதைய அரசின் தவறான பொருளாதார போக்குகளை,தவறுகளை உடனுக்குடன் சிங் சுட்டிகாட்டி விமர்சிக்கிறார்!  இந்த 88 வயதிலும் தன்னை சுறுசுறுப்பாக,தெளிவாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால்,அவர் பற்றற்றவராக வாழ்வதும் ஒரு காரணமாயிருக்கலாம்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time