இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திகள்!

-பீட்டர் துரைராஜ்

இன்றைக்கும் காந்தியம் எவ்வளவு வலிமையாக உயிர்ப்புடன் எப்படி எப்படியெல்லாம் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நிதர்சனமாக்கி வரும் அரும்பெரும் காந்திய செயற்பாட்டாளர்கள் 11 பேர் பற்றிய சிலிர்க்க வைக்கும் உயிர்ப்பான பதிவு இது!

இவர்கள் காந்தியின் சிந்தனைகளை,  நடைமுறையாக்கி,  வெற்றி பெற்ற ஆளுமைகள்! இவர்களை ரத்தமும், சதையுமாக பாலசுப்ரமணியம் முத்துசாமி பதிவு செய்துள்ளார். எளிமையும், நேர்மையும், மக்களின்பால் அக்கறையும் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இன்னுமொரு காந்திதான் என்று இந்த நூல் சொல்கிறது.

பாலா என அறியப்படும் பாலசுப்பிரமணியம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்! வேளாண்மை பட்டம் முடித்த பிறகு, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் இருந்த ஊரக மேலாண் கழகத்தில் படித்தவர். அந்த நன்றியுணர்ச்சியின் விளைவாக முதல் கட்டுரையாக வர்கீஸ் குரியனைப் பற்றி எழுதியிருக்கிறார் எனலாம்.

இந்தியாவின் ‘பால் மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் வர்கீஸ் குரியன். பால் உற்பத்தில் Operation Flood போன்ற முன்னெடுப்புகள் மூலம்  தன்னிறைவைக் கொண்டு வந்தவர். ஆவின், அமுல் போன்ற பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் இந்தியா முழுவதும் உருவாகக்  காரணமாக இருந்தவர். கூட்டுறவு உயர் படிப்பிற்காக ‘ஊரக மேலாண் நிறுவனத்தை’  நிறுவியவர்.

விவசாயிகளுக்கு உரிய விலை, காலத்தே பட்டுவாடா, குறைந்த விலையில் தீவனம்,  இடைத்தரகர்களிடமிருந்து விடுதலை, நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் பால், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சேதாரத்தை குறைத்தல், பாலடைக்கட்டி, பால்கோவா, பால்பவுடர் போன்ற உபப்  பொருட்களை உற்பத்தி செய்தல் , ஏற்றுமதி  என  பன்முனைகளில்  சாதனை செய்த குரியனின் வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. இவரை குறித்த  என்று  அத்தியாயத்திற்கு ‘போற்றப்படாத இதிகாசம்’பெயரிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்து ஆட்சிப்பணி தேர்வில் வெற்றி பெற்று பணிபுரிந்தவர் அருணாராய். தன்னுடைய அதிகாரத்தால் மக்களுக்கு பணியாற்ற முடியாததால், எட்டு ஆண்டுகளில் தன் வேலையைத் துறந்து சமூகப் பணியாற்றி வருபவர். 1987 ல்,  வறட்சி நிவாரணப் பணிகளுக்கான அடிப்படைக் கூலியான 11 ரூபாயை ஊழல் இல்லாமல் பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்  18 ஆண்டுகள் நெடிய பயணத்திற்குப் பிறகு,  பரிணமித்து எப்படி தகவல் அறியும் உரிமைச் சட்டமாக உருவெடுத்தது என்று எழுதுகிறார். இதைத் தொடர்ந்து கல்வி உரிமைச் சட்ட உருவாக்கத்திலும், உணவு உரிமைச் சட்ட உருவாக்கத்திலும் அருணாராய் முக்கியப் பங்காற்றி இருக்கிறார். ‘மக்கள் அதிகாரமும் பங்கேற்பு ஜனநாயகமும்’ என்ற பொருத்தமான தலைப்பில் இவரது பணி பேசப்படுகிறது.

“எல்லோரும் வரலாறை மாற்றுவதாகச் சொல்வார்கள். நாங்கள் புவியியலை மாற்றினோம்” என்று சொல்லும் தண்ணீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் இதில் பேசப்படுகிறார். இந்தியாவில் மழைப்பொழிவு குறைவாக உள்ள மாநிலம் ராஜஸ்தான். வறட்சி மிகுந்த இம்மாநிலத்தில் 45 கி.மீ. நீளமான ஆர்வாரி நதியை தூர்வாரி, மழை நீரை சேகரித்து,  72 கிராம மக்களின் வாழ்வை மாற்றி இருக்கிறார் ராஜேந்திர சிங். 1995 லிருந்து இன்றுவரை இந்த நதியில் ஆண்டு முழுவதும் நீர் இருந்து வருகிறது. அந்த மக்களே ‘ஆர்வாரி பாராளுமன்றம்’ மூலம் அதனை நிர்வகித்து வருகிறார்கள். நீருக்கான நோபல் பரிசு என்று சொல்லப்படும் ‘ஸடாக்ஹோம் விருது’ பெற்றவர் ராஜேந்திர சிங்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்று அரவிந்த் கண் மருத்துவமனை. ஓய்வுபெற்ற மருத்துவரான ஜி. வெங்கிடசாமி, ‘அரவிந்த மருத்துவக்  குழுமம்’ மூலம் வரலாற்றில் நிலைபெற்றார்.  “உங்கள் சுயநலம் மிகும்போதோ, சந்தேகம் வரும்போதோ, நான் சொல்லும் ஒரு வழியைச் செயல்படுத்துங்கள். நீங்கள் இதுவரை கண்டதிலேயே மிக ஏழ்மையான மனிதரை உங்கள் கண்முன்னே கொண்டு வாருங்கள். நீங்கள் செய்யப் போகும் செயல், அந்த மனிதரின் நிலையை முன்னேற்ற உதவுமா? பசியிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் அவர்களை விடுவிக்க உதவுமா என யோசியுங்கள். உங்கள் சந்தேகம் மறைந்து போவதைக் காண்பீர்கள்” என்ற காந்தியின் மேற்கோளோடு  இந்த அத்தியாயம் முடிகிறது. இதிலுள்ள கட்டுரைகள் ஒரு  தன்னம்பிக்கை நூல் போலவும் உள்ளது.

சஞ்சித் பங்கர் ராய். அவர்  ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஞ்மீர் மாவட்டத்தில் உள்ள டிலோனியா என்ற கிராமத்தில் ‘வெறும் பாதக் கல்லூரி’ (Bare Foot College) என்ற கல்லூரியை நடத்தி வருகிறார். இதில் வெளிநாடுகளில்  இருந்து மாணவிகள் வந்து தங்கிப் பயில்கிறார்கள். இங்குப் படிப்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை. வாழ்க்கைக்கான செயல்முறைக் கல்வி மட்டுமே, ஆறுமாதம் தரப்படுகிறது. 1972 முதல் இயங்கி வரும் இக்கல்லூரி,  நீர் மேலாண்மை, சுகாதாரம், சூரிய ஒளிச் சக்தி, கைவினைப் பொருட்கள் எனப் பல தளங்களில் செயல்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிற்கு வந்து , 81 நாடுகளின் ஏழை மக்கள் கடைத்தேற்றம் பெற்று வருகின்றனர். காந்தியம் செய்யும் ரசவாதம் இது. இத்துடன் இவர் ராஜஸ்தான் ப்கிராமங்களுக்கு குடி தண்ணீர்,கல்வி,மருத்துவம் ஆகியவை கிடைக்க பாடுப்பட்டது குறித்து சொல்லப்பட்டுள்ளது.  இவர் அருணாராயின் கணவர்!

மருத்துவ தம்பதிகளான அபய் பங், ராணி பங் ஆகியோர் மருத்துவ வசதிகள் முற்றிலும் இல்லாத மகாராஷ்டிராவின் பழங்குடியின மக்கள் மத்தியில் பெரும் மருத்துவ சேவை செய்தது பற்றி எழுதியுள்ளார். இதனால் குழந்தை சிசு மரணம் குறைந்தது. இவர்கள் வழிகாட்டுதலில் பிறகு மகாராஷ்டிர அரசே 2005 ஆம் ஆண்டு முதல் கிராம பொதுநல ஊழியரை ‘ஆஷா’ என்னும் பெயரில் பழங்குடி கிராமங்களுக்கு நியமித்தது.உலகின் மற்ற சில நாடுகளும் இதை பின்பற்றினர். காந்தியம் உலகப் பொதுநலத்துக்கு அளித்த நன்கொடை இந்த ‘ஆரோக்கிய ஸ்வராஜ்’ என்று பெருமையோடு பதிவு செய்கிறார் ஆசிரியர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி லடாக். இங்கு வீட்டில் குழந்தைகள் பேசுவது லடாக்கிய மொழி. ஆனால் பள்ளியில் பயிற்றுமொழியோ உருதுமொழி.பள்ளி இறுதித் தேர்வில் கணிசமான மாணவர்கள் தோல்வி பெற்றார்கள். இதைத் தடுக்க உள்ளூர் படங்கள், செய்முறைகள் மூலம் அவர்கள் வாழ்வை மாற்றிய சோனம் வாங்ச்சுக் (காந்திய தொழில்நுட்பர்) பற்றி ஒரு கட்டுரை உள்ளது. இவர் பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக என்றே ஒரு பள்ளியைத் தொடங்கியதைப் பற்றி விரிவாக சொல்கிறார். மேலும் லடாக் பகுதி நீர்ப்பற்றாக்குறை. பருவநிலை மாற்றங்கள் காரணமாக சிரமப்பட்டது! கோடைக் காலங்களில் பெரும் வறட்சி, திடீர் வெள்ளம் போன்றவை நிகழத் துவங்கின. இதற்கு ஒரு தொழில்நுட்பத் தீர்வைத் தேடிய வாங்ச்சுக்.  உருவாக்கியது தான் பனி ஸ்தூபி என்னும் கண்டுபிடிப்பு! இதன் மூலம் குளிர் காலத்தில், பயன்படுத்தப்படாமல் ஓடி அரபிக்கடலில் கலக்கும் சிந்து நதி நீரின் ஒரு பகுதியைச் சேமித்து, கோடை காலத்தில் உபயோகிக்க ஒரு செலவு குறைந்த வழியாக தீர்வை கொடுத்தார்.

பாலசுப்பிரமணியம் தேவைப்படும் இடங்களில்  யூ டியூப் தளங்களின் சுட்டியை தருகிறார். இதன்மூலம் இந்த ஆளுமைகளின் செயல்பாடு குறித்து, காணொளி மூலமாக  வாசகர்கள் நன்குத் தெரிந்து கொள்ள முடியும்.

‘கரங்களின் கல்வி’ என்று  காந்தி சொல்வதை அமலாக்கிய அரவிந்த் குப்தா மிகக் குறைந்த செலவில் ஆரம்பப் பள்ளிகளில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கிறார். அறிவியலை சாதாரணமாக்குகிறார்; விளையாட்டாக மாற்றுகிறார்; தெருவில் கிடக்கும் குப்பையில் அறிவியலைத் தேடுகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதோடு விடுதலைப் பெற்ற இந்தியாவில்அரும் பெரும் பணிகளை ஆற்றியவர் லஷ்மி சந்த் ஜெயின்! இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது  இந்து- முஸ்லிம் கலவரங்களினால் பாதிப்படைந்த ஆயிரக்கனக்கான அகதிகளின் வாழ்வுக்கு பங்காற்றியவர். கொடும் மதக் கலவரங்களுக்கு இடையில் அகதி முகாம்களில் இன் முகத்துடன் பணியாற்றியவர். இவர் பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்தவும்  பணியாற்றியுள்ளார்.

பெண்களை அதிக அளவில் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள SEWA ( Self-Employed Women’s Association) தொழிற்சங்கம் உருவாகக்  காரணமானவர் இலா பட். இந்தியாவில் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு என இந்தியாவில் எந்த அமைப்பும் இல்லாததால் அவர்கள் மோசமாக சுரண்டப்படுவதை அறிந்து அவர்களுக்கான அமைப்பு உருவாக்கி அவர்களை வலுப்படுத்தினார் குழந்தை திருமணங்களை தடுத்தார். ஆகியோரின் பணிபற்றியும்  கட்டுரைகள் உள்ளன.

இந்த நூலின் இறுதி அத்தியாயத்தில் பொருளியல் பேராசிரியரான ஜான் ட்ரெஸ் குறித்து, the telegraph இதழில் ராமச்சந்திர குஹா எழுதிய ‘ A day with Dreze’  என்ற கட்டுரையின் மொழியாக்கம் வந்துள்ளது. பெல்ஜிய நாட்டு குடியுரிமையை இரத்து செய்துவிட்டு இந்தியாவில் ஒரு துறவி போல வசிக்கிறார். பஞ்சம், பசி, குறைந்த பட்ச ஊதியம் போன்றவை குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார் ஜான் ட்ரெஸ். பொதுமுடக்கக்  காலத்தில்,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, அரசும், பொது சமூகமும்  பாராமுகமாய் இருந்தது குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார். இவரை தற்போது தமிழக அரசு பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமித்து உள்ளது.

கூட்டுறவு அமைப்புகள், எளிய மக்களை அதிகாரப் படுத்துதல், கிராமப் பொருளாதாரம், மகளிர் & குழந்தைகள் நலனை  போன்றவைகளை மையப்படுத்தியே இதிலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன. எளிய வார்த்தைகளில் 200 பக்கங்களில் இந்த நூல் உள்ளது.இந்த நூலுக்கு காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அணிந்துரை எழுதியுள்ளது மிகப் பொருத்தம்! ”காந்தியம் என்பதெல்லாம் காலாவதியாகிப் போன உலகமப்பா இது ” எனப் பேசுபவர்கள் இந்த நூலைக் கண்டிப்பாக வாசித்து தெளிவு பெற வேண்டும்.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

வெளியீடு: தன்னறம் நூல்வெளி

விலை ரூ 200

குக்கூ காட்டுப்பள்ளி,

1530/c, 2 வது தளம், புத்தா நகர் 3 வது தெரு,

வேங்கிகால், திருவண்ணாமலை – 606601

9843870059

.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time