ஒரு நாடு உண்மையில் நாகரீகச் சிறப்புடன் இருக்கிறதா என்பதை அறிய அந்த நாட்டில் நூலகங்கள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பதே அளவுகோலாகும். தமிழ் நாட்டில் நூலகத்துறை கந்தல் கோலத்தில் கதியற்று கிடப்பதன் பின்னணி என்ன?
பொது நூலகச் சட்டத்திலும் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ள உயர் மட்டக் குழுவை ஒன்றை முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் அமைத்துள்ளது தமிழக அரசு! பொது நூலகச் சட்டம்-1948 இயற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தேவைகளுக்கேற்பப் பொது நூலகங்களின் நடைமுறைகளைச் சீர்திருத்த போகிறார்களாம்! அதற்காக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் உயர் மட்டக் குழு தன்னுடைய வரைவு அறிக்கையை தரக் கூடும் என எதிர்பார்க்கலாம்!
நல்லது! ஆனால், இந்தக் குழு முதலில் எந்த வரைவு அறிக்கையையும் உருவாக்குவதற்கு முன்பு தமிழகத்தில் எந்த லட்சணத்தில் நூலகத் துறை உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு மக்களிடம் கருத்து கேட்பு நடத்தினால் கூட நன்றாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பொது நூலகத்துறை இருப்பது பலருக்குத் தெரியாமல் போகும் அளவுக்கு அந்தத் துறை இயங்கிக் கொண்டுள்ளது. அந்த துறைக்கு சரியான நூலக ஞானம் கொண்ட தலைமை இல்லாத நிலையில் தலைமை அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாத புதிராக கடந்த பல ஆண்டுகளாக தொடர்கிறது.
பொதுவாக ஒரு துறையின் தலைமை சரியாக இருந்தால்தான் அந்தத் துறையின் கீழ் இருக்கும் அலுவலர்களும் அலுவலகமும் முறையாக செயல்படும். ஆனால், நூலகத் துறையில் நூல்கள் வாங்குவதில் தொடங்கி நூலகர்கள் மாறுதல் செய்வது வரை கையூட்டு இல்லாமல் நடக்காது என்ற நிலை இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றுகின்ற நூலகர்களும் உள்ளனர்! அதாவது கிட்டதட்ட தினக் கூலிகள்! தினசரி ரூபாய் 360 தான் சம்பளம்! இது போன்றவர்களை சம்பள விகிதத்தில் பணியாற்றும் நூலகராக பதவி உயர்வு வழங்க பெரும் அளவிற்கு கையூட்டு தரவேண்டும் என்ற நிர்பந்தம் வேறு! இதையெல்லாம் யாரும் தட்டிக் கேட்காத நிலை உள்ளது. நூலக கல்வி படித்தவர்களை நூலகர்களாக முதலில் நியமிக்க வேண்டும்!
பதிப்பாளர்கள் என்ற பெயரில் சிறிதும் பெரிதுமாக 2000 பேருக்கு மேல் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில் லட்சிய நோக்குடன் இயங்கும் பதிப்பாளர்களும் உண்டு! லாபம் ஒன்றே குறிக்கோளாகக் கருதி குப்பை நூல்களை கொண்டு வருபவர்களும் உண்டு. இவர்களில் சிலர் நூலகத்தில் தங்கள் நூல்களை விற்பனை செய்வதற்கு என்னென்ன தகிடுததங்கள் செய்ய முடியுமோ, அவற்றை எல்லாம் செய்து ஆர்டர் வாங்கி அனுப்பி விடுகின்றனர். நூல்கள் ஆர்டர் கேட்டு கொடுக்கும் மாதிரி நூல் ஒருமாதிரியும், ஆர்டர் பெற்ற பிறகு விநியோகிக்கும் நூல் வேறு மாதிரியாகவும் இருக்கும்.
பெரிய பதிப்பாளர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து கொண்டு சிண்டிகேட் அமைத்து அவர்கள் வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பணத்தை அள்ளி இறைத்த காலங்கள் காலாவதியாகட்டும்.
நூலக ஊழல்கள் தொடர்பாக அவ்வப்போது செய்திகள் கசிந்தாலும் உரியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கல்லாக்கட்டும் தொழில் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. கையூட்டு தராதவர்களுக்கு பெயரளவில் ஓரிரு புத்தகங்களுக்கு மட்டும் நூல் வினியோக ஆர்டர் வழங்கி சமாளிப்பார்கள்!
இந்த நிலையில் தற்போது அரசு நூலக சட்டத்தை திருத்துவதற்காக ஒரு உயர்மட்ட குழுவை அமைத்து ஆணை பிறப்பித்துள்ளதாக செய்தி வந்துள்ளது ஆறுதல் தருகிறது!
முதலாவதாக கடந்த 10 ஆண்டு காலமாக நடந்த முறைகேடுகள் பற்றி ஆராய வேண்டும் என்பதே பல பதிப்பாளர்களின் கோரிக்கையாகும். இதற்கு நூலகத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி ஆராய ஒரு புதிய குழு அமைக்க வேண்டும். அறிவை வளர்க்கின்ற ஒரு அருமையான துறையில் லஞ்சம் லாவண்யம் தலைவிரித்தாடிடும் நிலையை களைய வேண்டும்.
சமீப காலமாக நூலக அறிவே இல்லாத பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்களை நூலகத்துறைக்கு பொறுப்பாக்கிவிட்டார்கள்! அறிவார்ந்த பள்ளிகளையே ஒழுங்காக நிர்வகிக்க முடியாத இயக்குநர்கள் நூலகங்களை நிர்வகிப்பதாக பேர் பண்ணி லஞ்ச லாவண்ய செயல்களில் ஈடுபட்டு அந்தத் துறையையே நாசமாக்கி விட்டார்கள். இந்தத் துறைக்கு ஐ.ஏ.எஸ்சைவிடவும் நூலக ஞானமே முக்கிய தகுதியாகும்!
பொதுவாக ஒரு ஊரில் ஒரு நூலகம் இருந்தால் அந்த ஊர் சிறந்து விளங்கும் என்பதில் ஐயமில்லை. அந்த நூலகம் சிறப்பாக செயல்பட்டால் தான் மக்கள் பயனடைவார்கள். ஆனால் இன்றோ நூலகத்தின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. முறையான நூலகப் பணியாளர்கள் இல்லை. ஒரே நூலகரே இரண்டு நூலகத்திற்கு பொறுப்பு ஏற்று காலை ஒரு நூலகம். மதியத்திற்கு மேல் மற்றொரு நூலகம் என இயங்கும் நிலையெல்லாம் பார்த்தாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு நூலகப் பணியாளர் இடங்கள் நிரப்படாத நிலைமை உள்ளது! இருக்கும் நூலகர்களில் பலருக்கு நூலக பயிற்சியும் கிடையாது. நல்ல சம்பளமும் கிடையாது, பணி பாதுகாப்பும் கிடையாது என்றால், அந்த நூலகம் எந்த லட்சணத்தில் இயங்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த நிலை அடியோடு மாற வேண்டும்! ஐதராபாத்தில் இயங்கும் சிட்டி லைப்ரரி பற்றி கேள்விபட்டால் பொறாமையாக உள்ளது!
அதிமுக ஆட்சி ஊழல் நிர்வாகத்தில் நூலகத்திற்காக பத்திரிகை நடத்துபவர்கள் பெருகி விட்டார்கள். அதாவது, இவர்கள் நூலகத்திற்கு அனுப்பி வைக்கும் இதழ்களை கடைகளில் எங்கும் பார்க்க முடியாது. ஏனென்றால், அவற்றை கடைகளில் தொங்கவிட்டால் யாரும் சீண்டமாட்டார்கள்! அவ்வளவு ஏன்? அவற்றை சும்மா கொடுத்தால் கூட படிக்காமல் சுண்டல் விற்பவனுக்கு தந்துவிடுவார்கள். அந்த மாதிரியான கண்றாவியான பருவ இதழ்களை நூலகங்களுக்காக மட்டுமே ரெடி செய்து அனுப்பி பிழைப்பு நடத்தும் கூட்டம் உள்ளது.
அவர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு ஆர்டர் தந்துவிடுகிறார்கள்! இந்த வகையில் சுமார் 300 பருவ இதழ்கள் நூலகங்களுக்காக வாங்கப்பட்டன. இந்த பருவ இதழ்களில் 80% போஸ்டல் கவரை பிரித்து டேபிளில் கூட வைப்பதில்லை நூலகர்கள்! இவற்றில் சுமார் 20% இதழ்களே மக்கள் விரும்பி படிப்பதால் சீண்டுவாரில்லாமல் அவை அப்படியே கிடக்கின்றன. தேவைக்கு அதிகமான அளவில் பருவ இதழ்கள் நூலகங்களில் அடைந்து கிடக்கின்றன. சில நூலகங்கள் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளன!
ஆயிரக்கணக்கான நூலகங்களில் பல இட நெருக்கடியில் உள்ளன. புதிய புத்தகங்களை இந்த நூலகத்தில் அடுக்கவோ, வைக்கவோ கூட இடமில்லை. ஆகவே சில நூலகங்களில் புதிய புத்தகங்கள் அட்டைபெட்டியை பிரிக்காமல் அப்படியே கிடப்பில் வைக்கும் நிலை உள்ளது! பெரிய நூலகங்கள் பலவுமே கூட புத்தகங்களை தலைப்பு வாரியாக சரியாக அடுக்கி வைப்பதில்லை. சிறப்பாக உருவாக்கப்பட்ட அண்ணா நூலகத்தை அதிமுக ஆட்சியில் முடிந்தவரை சீர் குலைத்தார்கள். ஆட்சி மாறியும் அது இன்னும் முழுமையாக சீர்பெறவில்லை.
ஊரக உள்ளாட்சிகளில் புதிதாக 2,400 நூலகங்கள் திறக்கப்பட்டு ஏராளமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன! அந்த நூலகங்கள் எல்லாம் இன்று சீந்துவாரின்றி, சிலந்தி வலைப் பின்னலில் மூடிக் கிடக்கின்றன!
இன்றைய நவீன யுகத்தில் கணிப்பொறியின் பயன்பாடு நூலகத்தில் மிகக் குறைவாக உள்ளது. டிஜிட்டல் முறையில் நூல்கள் சேகரிப்பும், நூல் பரிமாற்றங்களும் நூலகத் துறைக்குள் கொண்டு வர வேண்டும். இந்த வகையில் பழைய நூல்கள் பலவற்றை டிஜிட்டல் முறையில் படிப்பதற்கு கொண்டு வர வேண்டும்.
Also read
கையூட்டு பெறாமல் நூல் ஆணை கிடைக்கும் வகையில் தரமான நூல்களை வாங்க வேண்டும். சிறார்களும்,மாணவர்களும், பொதுமக்களும் நூலகத்திற்கு வருகை புரிவதற்கு ஏதுவாக நவீன உத்திகளுடன் நூலகங்களின் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டும்.
தரமான நூல்கள், பருவ இதழ்கள்,தகுதியான நூலகர்கள் கொண்டு சேவை மனப்பான்மையுடன் நூலகங்கள் செயல்படவேண்டும். இந்தியாவில் ஒரு காலத்தில் நூலகத்துறை முன்னோடியாக திகழ்ந்தது. நூலக ஞானி எஸ்.ஆர்.ரங்கநாதன் வகுத்தளித்த வழிமுறைகளை பின்பற்றி தொலைந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும்.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
அறம் இணைய இதழின் ஆசிரியர் ஐயா சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு….
அருமையான
அற்புதமான கட்டுரை.
இன்றைய நூலகங்களின் நிலை குறித்த உண்மைத் தகவல்களை
எடுத்தியம்பி உள்ளது.
ஊடகங்கள் பெரிதும் கண்டுகொள்ளாத
நூலகத் துறையின் அவலங்களை
அலசி ஆராய்ந்து எழுதியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது…
வாசித்தல் பண்பாடாக வளர்த்தெடுக்கப்பட வேண்டுமானால்…
ஆட்சியாளர்களின் ஊடகங்களின்
பேசுபொருளாக
“நூலகங்களின் மேம்பாடு” மாற்றப்பட வேண்டும்..
இளவேனில்
மயிலாப்பூர்
அறம் இதழில் சீரழிவின் உச்சம் தொட்டுள்ள நூலகத்துறை எனும் கட்டுரை அருமை, அற்புதம். உண்மையின் உரைகல்.
பொது மக்களுக்கும், வாசகர்களுக்கும் பயன்படாத நாளிதழ்கள், பருவ இதழ்களை விதிமுறைகளுக்கு மாறாக, ரூபாய் 54 கோடிக்கு தமிழ்நாடு முழுவதும் வாங்கி குவித்தனர். இதனால் பல மாவட்ட நூலக அலுவலர்கள் ஒவ்வொருவரும் பல லட்சம் ரூபாய் கொள்ளை அடித்தனர். இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உச்ச கட்டமாக அரசுக்கு ஆதரவான சங்கம் என்று சொல்லிக் கொண்டு, இரண்டு சங்கங்கள் ஒன்றிணைந்து, ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் பெற்று தருகிறோம் என்று சொல்லி ஒவ்வொரு ஊர்ப்புற நூலகர்களிடமும் ரூபாய் 75000 வீதம் சுமார் எட்டு கோடி ரூபாய் வசூலித்த வரலாறு கடந்த ஆட்சியில் நூலகத்துறை இயக்குநர்கள் ஆசியோடு நடந்தேறியது.
ஊழல், லஞ்சம், முறைகேடு, அரசு விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை, ஆகியவற்றை நூலகத்துறை இயக்குநர், மாவட்ட நூலக அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் திட்டமிட்டு செயல்படுத்தி கோடி கணக்கில் கொள்ளை அடித்து உள்ளனர்.
தங்களின் கட்டுரை மூலமாக நூலகத்துறை புனிதம் அடையட்டும். நன்றி! நன்றி!!
முக்கியமான கட்டுரை.
நூலகம் என்பது அறிவு வளர்ச்சிக்கு நுரையீரல் போன்றது.
வாசிப்பு, சமூகத்தின் பல்வேறு தரப்பில் பொறுப்பற்ற தனத்தால், படிப்படியாக புறந்தள்ளப் பட்டு விட்டது. ஆனால் மீட்டு எடுக்க இன்னும் காலம், நம்பிக்கை, உழைப்பு உண்டு.
கையூட்டு எப்போதோ இந்தத் துறையில் நியாயப் படுத்தப் பட்டு விட்டது. ஆட்சியாளரின் விசுவாசிகள் எப்போதும் தங்கள் நூல்களை இங்கே கொண்டு தள்ளுவது பல்லாண்டுகளாக நடந்து வருவது.
பள்ளிகளில் கட்டாய நூலக வகுப்பு சொல்லப் பட்டுள்ள இந்த வேளையில், நூலகத் துறை சீர்படுத்த உறுதியான நோக்கம் இருந்தால் போதும்.
உங்களுக்கு அன்பும் வாழ்த்தும்
எஸ் வி வேணுகோபாலன்