மாணவி லாவண்யா விஷமருந்தி உயிர் இழந்தது சம்மந்தமான குற்றப்புலனாய்வை தமிழக காவல்துறையிடமிருந்து , மத்திய புலனாய்வுத்துறைக்கு (CBI) மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை பற்றி ஆதியோடந்தமாக அலசி விமர்சிக்கிறார் நீதிபதி ஹரிபரந்தாமன்!
மாணவி லாவண்யா, தஞ்சை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில். 8 -ஆம் வகுப்பிலிருந்து ஐந்து ஆண்டுகள் அப்பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்தார். ஜனவரி 9 அன்று மாலை அவர் விடுதியில் வாந்தி எடுத்ததற்கு ஆரம்ப சிக்கிச்சை தந்த விடுதி நிர்வாகத்தினர், மாணவியின் தந்தைக்கு தகவல் அளித்து மாணவியை அழைத்து போகும்படி கூறினார்.
ஜனவரி 10 அன்று லாவண்யாவை வீட்டிற்கு அழைத்து வந்த அவரது தந்தை வயிற்று வலிக்கான சிகிச்சையே தந்துள்ளார்!பின்னர், ஜனவரி 15ல் தான் தஞ்சை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு மருத்துவர் சௌந்தர்யா அவர்கள், ஸ்கேன் (Scan) ரிப்போர்ட்டை பார்த்து, அம்மாணவி பூச்சி மருந்து உட்கொண்டதால்தான் நோயுற்று இருக்கிறார் என்பதை கண்டறிந்தார். அம்மாணவி, 9 ந்தேதி பூச்சி மருந்து உட்கொண்டதை, விடுதியில் எவருக்கும் சொல்லவில்லை.வீட்டிலும் தெரிவிக்கவில்லை. தனக்கான துன்பத்தை அவர் இயல்பாக வீட்டில் சொல்லும் சூழல் இல்லாததையே இது புலப்படுத்துகிறது!
இது தற்கொலை முயற்சி என்பதால், திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்திற்கு அரசு மருத்துவமனை தகவல் அளித்தது.
16 ஆம் தேதி காவல்துறை மாணவியின் வாக்குமூலத்தை காவல்துறை பெற்றது. அவ்வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.அதே தினத்தில் மாலை 4.25 முதல் 4.50 வரை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அம்மாணவியிடம் வாக்குமூலத்தை பெற்றார். அந்த வாக்குமூலமும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
அதில், விடுதிக்காப்பாளர் மேல் புகார் கூறியிருந்தார் மாணவி. விடுதிக்காப்பாளரின் பணியை எல்லாம் தன் தலையில் சுமத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார் மாணவி. இதனால் படிக்க முடியாமல் மன உளைச்சல் ஏற்பட்டது என்று கூறியிருந்தார். எனவே, விடுதிக்காப்பாளர் கைது செய்யப்பட்டு 18.ஆம் தேதியன்று நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி, ஜனவரி 19 மாலை 3.30 மணிக்கு லாவண்யா இறந்துவிட்டார்.
அதற்கு அடுத்த நாள் 20 ஆம் தேதி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோ, பள்ளியின் தாளாளர் அம்மாணவியின் பெற்றோரிடம், அம்மாணவியை கிறித்துவ மதத்திற்கு மாற சொல்லி கூறியதாக குற்றம் சுமத்தியது.
மாணவியின் தந்தை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜனவரி21 வெள்ளிக்கிழமை அன்று வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில், புலனாய்வு விசாரணையை தமிழக அரசின் CBCID- க்கோ அல்லது காவல்துறை இயக்குனரின் (DGP) மேற்பார்வையில் வேறொரு சுயேச்சையான அமைப்புக்கோ மாற்ற வேண்டும் என்று கேட்டார்.
அந்த வழக்கு, சிறப்பு நிகழ்வாக கருதி, அன்று மாலையே பல நெருக்கடிகளுக்கு இடையில் முக்கிய வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நீதிபதி திரு G.R. சாமிநாதன் அவர்கள் 21.01.2022 தேதி தந்த உத்தரவில் மாணவியை வீடியோ எடுத்த நபரை துன்புறுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு தடை விதிப்பதாகவும் கூறினார். மேலும், மாணவியின் தற்கொலை சம்மந்தமான சூழல்களை ஆய்வு செய்வதில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும் என்றும், வீடியோ எடுத்தவரின் பக்கம் காவல்துறையின் கவனம் செலுத்தப்படக்கூடாது என்றும் அந்த உத்தரவு கூறியது.
28.01.2022 அன்று மாணவியின் தந்தையின் வழக்குரைஞர், தமிழக அரசின் காவல்துறையின் பேரில் நம்பிக்கை இல்லை என்றும் வழக்கை மத்திய புலனாய்வுக்கு மாற்றும்படியும் வாதிட்டார்.
புலனாய்வு சரியான திசையில் செல்கிறது என்றும், தற்போது மாவட்ட துணை கண்காணிப்பாளராக (DSP) உள்ள Ms. பிருந்தா அவர்கள் புலனாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அரசு வழக்குரைஞர் வாதிட்டார். தடயவியல் அறிக்கை கிடைக்க மேலும் 2 வாரங்கள் ஆகும் என்றும், வீடியோ எடுத்த திரு.முத்துவேலும் மற்றும் மாணவியின் தந்தையும் புலனாய்வுக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் வாதிட்டார்.
மாணவியுடன் வகுப்பில் படித்தவர்களிடமும், மைக்கல்பட்டியில் வசிப்பவர்களிடமும் விசாரித்து புலனாய்வு அதிகாரி வாக்குமூலம் பெற்றுள்ளார் என்றும், கிறித்துவ மதத்திற்கு மாறுமாறு எவரையும் பள்ளி கோரவில்லை என்று அவர்கள் கூறியுள்ளதாகவும் வாதிட்டார். புலனாய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், புலனாய்வு அனைத்து கோணங்களிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் வாதிட்டார். எனவே, மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை என்றும் வாதிட்டார்.
பள்ளியின் வழக்குரைஞர் மாணவியின் அம்மா 8 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டதாகவும், மாணவியின் தந்தை மறுமணம் செய்துகொண்டதாகவும், மாணவியின் சித்தி மாணவியை கொடுமையாக நடத்துவதாகவும் வாதாடினார். மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தை உதவி மையத்திற்கு அம்மாணவி புகார் அளித்ததாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதை விசாரித்ததாகவும் வாதிட்டார்.

ஆயினும் ஜனவரி 31 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், புலனாய்வை மத்திய புலனாய்விற்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு அடிப்படையாக இரண்டு காரணங்களை கூறியுள்ளதாக நான் கருதுகிறேன்.
ஒன்று, மதமாற்றத்தில் பள்ளி ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு பூர்வாங்க விசாரணையில் தெரியவரவில்லை என்று தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் என்பது. மற்றொன்று, 24.01.2022 தேதிய இந்து பத்திரிக்கையில் வெளியான கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களின் நேர்காணலிலும் இதே கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 23 – இல், அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் (Rare and exceptional circumstances) மட்டுமே மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை நீதிபதியே சுட்டிக்காட்டுகிறார்.
குற்றம் சம்மந்தமான புலன் விசாரணை செய்யும் அதிகாரம் மாநில அரசிற்கே உண்டு. இது அரசமைப்புச்சட்டம் வழங்கும் உரிமை. மாநில அரசின் அனுமதியின்றி மத்திய புலனாய்வு அமைப்பு அந்த மாநிலத்தில் குற்ற புலனாய்வு செய்ய இயலாது. ஆனால், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம், அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றலாம்.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 14 – இல், உச்ச நீதிமன்றம் கீழ்கண்ட 5 காரணங்களுக்காக மட்டுமே மாநில காவல்துறை செய்யும் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது அவை :
- புலனாய்வில் நம்பிக்கை உண்டாக்குவதற்கு.
- நியாயமான, நேர்மையான மற்றும் முழுமையான விசாரணைக்காக.
- மாநில காவல்துறை புலனாய்வில் நம்பக தன்மை இல்லாமல் போகும்போது.
- அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் அதிகார பீடம் குற்ற செயலில் ஈடுபட்டு இருத்தல்.
- புலனாய்வு கறைபடிந்ததாகவோ அல்லது பாரபட்சமாகவோ இருத்தல்.
எனவே, நீதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளபடியே, இந்த வழக்கின் புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்புக்கு மாற்றியது சரியல்ல என்று கருதுகிறேன்.
இத்தருணத்தில், அரிதான மற்றும் விதிவிலக்கான சூழ்நிலை என்பதை விளக்குவதற்கு, சமீபத்தில் மேற்கு வங்க தேர்தல் முடிந்த நிலையில் அங்கு நடந்த வன்முறையை நிகழ்த்தியவர்கள் மம்தாவின் ஆளுங்கட்சியை சார்ந்தவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு, மத்திய புலனாய்வுக்கு உத்தரவிட்டது என்பதை சுட்டிக்காட்டலாம்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்து பத்திரிகைக்கு அளித்த நேர்காணலை பரிசீலிக்கையில், அது, இந்த சம்பவத்தை வைத்து மத மாற்றம் நடப்பதாக கூறி, தமிழகம் முழுவதும் பாஜக போராட்டங்கள் நடத்தியத்திற்கான எதிர்வினையே. அந்த நேர்காணலிலும், அனைத்தும் விசாரணையில் பின்னர் தெளிவாகும் என்று அமைச்சர் கூறுகிறார்.
எனவே, இந்த நேர்காணலின் அடிப்படையில், மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றம் செய்தது சரியல்ல.
அமைச்சரோ அல்லது அமைச்சரின் உறவினரோ குற்ற செயலில் ஈடுபட்டு இருப்பதாக பாஜக உட்பட எவரும் புகார் கூறவில்லை. அப்படி புகார் இருக்குமானால், மேற்சொன்ன உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றலாம்.
உதாரணத்திற்கு, விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் திரு. மிஸ்ராவின் மகன் காரை ஓட்டி விவசாயிகளை கொலை செய்தது சம்மந்தமான வழக்கில், சம்மந்தப்பட்ட விவசாயின் குடும்பத்தினர் புலனாய்வை மாற்ற சொல்லி கோரினால், அந்த கோரிக்கையை ஏற்று புலனாய்வை மாற்றலாம்.
அரசின் உயர் அதிகாரிகள், குறிப்பாக காவல்துறையினர் குற்ற செயலில் ஈடுபட்டு இருந்தாலும், மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றலாம்.
உதாரணத்திற்கு, தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்மந்தமான புலன் விசாரணையை மதுரை உயர்நீதிமன்றம், மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றியது. காரணம், துப்பாக்கி சூட்டை நடத்திய குற்றச்செயலை புரிந்தவர்கள் காவலர்கள். மேலும், அதில் 14 பேர்கள் உயிர் இழந்தனர்.
எனக்கு தெரிந்தவரை, எந்த தற்கொலை சம்மந்தமான வழக்கின் புலனாய்வையும் மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிய முன் உதாரணம் ஏதும் இல்லை.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பை காரணம்காட்டி, மத்திய புலனாய்வு அமைப்பிற்கு புலனாய்வை மாற்றுவது சரியல்ல. வாதத்திற்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்போ அல்லது வேறு செயலோ ஏற்புடையதல்ல என்று நீதிமன்றம் கருத்துமானால், CBCID – க்கு மாற்றலாம்.
உதாரணத்திற்கு, ராஜாகண்ணு காவல் நிலையத்தில் மரணமடைந்த வழக்கில் (ஜெய் பீம் திரைப்படம்), சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு புலனாய்வை சம்மந்தப்பட்ட காவல்நிலையம் செய்வதற்கு பதிலாக CBCID – க்கு மாற்றி உத்தரவிட்டது.
தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வழக்கின் முக்கியத்துவம் கருதி, புலனாய்வை சப் இன்ஸ்பெக்டரிடமிருந்து இன்ஸ்பெக்டருக்கும், பின்னர் இன்ஸ்பெக்டரிடமிருந்து துணை காவல் கண்காணிப்பாளரிடமும் மாற்றி உள்ளதை பதிவு செய்கிறது தீர்ப்பு. இப்படி ஒரு உயர் அதிகாரியிடமிருந்து அவரைவிட உயர்ந்த பதவி வகிக்கும் அதிகாரிகளுக்கு புலனாய்வு செய்யும் வகையில் சென்று கொண்டிருக்கும் ஒரு வழக்கை, – புலனாய்வு தொடங்கிய 10 நாட்களுக்குள் – மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் பேரில் நம்பிக்கை இழப்பதற்கு சரியான முகாந்திரங்கள் இல்லை.
மேற்சொன்ன 2 காரணங்கள் – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அமைச்சரின் நேர்காணல் – புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றுவதற்கு உகந்த காரணங்கள் அல்ல.
மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றிய தீர்ப்பில், நீதிபதி அவர்கள் அப்பள்ளியில் மதமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளது என்று கூறுவது சரியல்ல. மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 22- இல், பள்ளி இருக்கும் ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று இருப்பதை ஆய்வு செய்கிறார். இந்த ஊரின் பெயர் மைக்கேல்பட்டி என்று அழைக்கப்படுவதற்கு முன்னர் வேறு பெயரில் அழைக்கப்பட்டிருக்கும் என்கிறார் நீதிபதி. இந்த ஊரின் பெயரே மதமாற்றத்திற்கான முயற்சி நடைபெறலாம் என்பதை ஊகிக்க முடிகிறது என்கிறார். இந்த ஊகம் சரியாகவோ இருக்கலாம் தவறாகவோ இருக்கலாம் என்கிறார்.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 17-இல், புனித பைபிளை (Holy Bible) சுட்டிக்காட்டி, அதில் மத பிரசாரம் செய்வது கிறித்துவர்களின் கடமை என்று கூறியிருப்பதாக சொல்லி மதமாற்றத்திற்கான முயற்சி பள்ளியில் நடைபெற வாய்ப்புள்ளது என்கிறார்.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 18-இல், ‘சீரியஸ் மென்’ என்ற திரைப்படத்தில், கிறித்துவ மதத்திற்கு மாற்றுவது சம்மந்தமான உரையாடல் நிகழ்வதாக கூறி, அந்த உரையாடலை தீர்ப்பின் பத்தி 18-இல் பதிவு செய்கிறார்.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 19-இல், திரைப்பட இயக்குனர் பாலசந்தர் இயக்கிய ‘கல்யாண அகதிகள்’ என்ற திரைப்படம் பற்றிய விவரம் தரப்படுகிறது. அதில், அமுலு என்ற இந்து பெண், ராபர்ட் என்ற கிறித்துவ வாலிபரிடம் காதல் கொள்வதாகவும், அவள் கிறித்துவ மதத்திற்கு மாறி பெயரை எமிலி என்று வைத்துக்கொண்டால் மருமகளாக ஏற்றுக்கொள்வதாக ராபர்டின் பெற்றோர் கூறுவதாகவும், அதை அமுலு மறுத்து,மதம் மாற சொல்லி கேட்பதும் வரதட்சணையின் ஒரு வடிவம் இல்லையா என்று அமுலு கேட்பதாக, தீர்ப்பின் பத்தி 19 கூறுகிறது. மேலும், ராபர்ட் அமுலு பிறந்த மாதத்திற்க்கு விசுவாசமாக இருந்து காதலை முறித்துக் கொண்டு வெளியேறினாள் என்று தீர்ப்பின் பத்தி 19 முடிவடைகிறது.
மேற்சொன்ன தீர்ப்பின் பத்திகள் 17,18 மற்றும் 19, புலனாய்வை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்ற வேண்டுமா வேண்டாமா என்பதற்கு எந்த வகையில் உதவும் என்று புரியவில்லை.
ஏற்கெனவே, வீடியோவை எடுத்த வி.ஹெச்.பி.உறுப்பினர் முத்துவேலை காவல்துறை துன்புறுத்தக்கூடாது என்றதோடு மட்டுமல்லாமல், அவர் வீடியோவை ஏன் எடுத்தார் என்றெல்லாம் புலனாய்வில் விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதி தீர்ப்பில் கூறுவது விந்தையாக உள்ளது.
புலனாய்வை அனைத்து கோணங்களிலும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை விவாதத்திற்கு எதிரானது நீதிபதியின் இந்த கூற்று.
மேலும், முத்துவேல் எடுத்த வீடியோ உண்மையானது மற்றும் நம்பகத்தன்மை உடையது (authenticity) என்று தீர்ப்பின் பல இடங்களில் நீதிபதி அந்த வீடியோவை பற்றி கூறுகிறார். வீடியோவானது, ஆய்வுக்காக பரிசோதனைக்கு செல்போன் மற்றும் சிம் கார்டுடன் அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பின்னரே, அதன் உண்மைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மை பற்றி தெரிய வருகிறது.
மாணவியின் தாயார் ஏற்கெனவே இறந்து விட்டார். மாணவியின் பாட்டி, தாத்தாவிற்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரிப்பதைகூட மேற்சொன்ன தீர்ப்பின் பத்தி 28 – இல் ஆட்சேபிக்கிறார் நீதிபதி.
மாணவி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ, ஏன் உடனடியாக காவல்துறையிடம் முத்துவேலால் ஒப்படைக்கபடவில்லை என்பதெல்லாம் விசாரிக்கக்கூடாது என்பதுதான் நீதிபதி தீர்ப்பின் சாரம்.
மாணவி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ, மாணவி இறந்த மறுநாள்தான் வெளியிடப்பட்டது என்பதும், அதுவும் இந்துமத பற்றாளர்களுக்கு தேவையான முறையில் வெட்டப்பட்டு வெளியிடப்பட்டது என்பதும் புலனாய்வு விசாரணை வளையத்திற்குள் வராது என்பதுதான் நீதிபதியின் தீர்ப்பின் சாரம்.
Also read
எல்லாவற்றிக்கும் மேலாக, புலனாய்வு தொடங்கப்பட்டு, மிகவும் ஆரம்ப நிலையில் உள்ளது. அதாவது, 16.01.2022 அன்றுதான் காவல்துறை குற்ற வழக்கை பதிவு செய்து புலன் விசாரணையை துவக்குகிறது. புலன் விசாரணையில் மாணவியுடன் படித்தவர்கள் மற்றும் பள்ளி இருக்கும் கிராமத்தில் வசிப்பவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் வரவழைத்து பரிசீலனைக்கூட செய்யவில்லை நீதிபதி அவர்கள். அவசர அவசரமாக புலனாய்வு தொடங்கிய பத்தே நாட்களில் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பிற்கு மாற்றியது சரியல்ல.
இந்த தீர்ப்பை நீதிபதி அணுகிய விதமும், தீர்ப்பின் பல இடங்களில் நீதிபதி வெளிப்படுத்தியுள்ள கருத்துகளும் அவரது இந்து மத அபிமானத்தையும், கிறிஸ்துவ மதத்தின் மீதான அவ நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றன!
மாரிதாஸ் தொடர்பான இரண்டு தீர்ப்புகள் உள்ளிட்ட மேலும் சில தீர்ப்புகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்குகளை மின்னல் வேகத்தில் எடுத்துக் கொண்ட விதம், வழக்கை அணுகிய முறை, வழங்கிய தீர்ப்புகளில் வெளிப்பட்ட வார்த்தைகள், அதன் தொனி போன்றவை பல கேள்விகளையும், ஐயத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளன!
கட்டுரையாளர்;
ஹரி பரந்தாமன்,
முன்னாள் நீதிபதி
என்னமோ போடா மாதவா…
NEETHI DEVAN MAYAKKAM
வாங்குற காசுக்கு மேல நீதிபதி கூவுறாரே !
I may need your help. I’ve been doing research on gate io recently, and I’ve tried a lot of different things. Later, I read your article, and I think your way of writing has given me some innovative ideas, thank you very much.