அருணாராய் மிகச் சிறந்த சமூக சேவகர்!. மஸ்தூர் கிசான் ஷக்தி சங்கதான் இயக்கத்தின் வழி நமக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 தில் பெற்றுத் தந்தவர். பல கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பை தந்த, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இவரது முயற்சியின் பலனே! 40 ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் பலவற்றில் இயங்கி வரும் அருணாராய் சென்னையில் தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்து, வட இந்தியாவில் வளர்ந்தவர்! ‘தி வயர்’ இணைய தளத்தில் வெளியான அவரது ஆங்கில நேர்காணலின் சாரம்சம்!
ஆரம்ப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து கூற முடியுமா?
சுதந்திரம் கிடைப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் நான் பிறந்தேன். நான் தில்லியில் வளர்ந்தேன்! எனது குடும்பம் முற்போக்கானது! யாவரும் உயர்ந்த கல்வி வாய்ப்பு பெற்றவர்கள். என் தந்தை சாந்தினிகேதனுக்குச் சென்றிருக்கிறார். என் பாட்டி கேம்பிரிட்ஜில் படித்திருக்கிறார். சமத்துவம் என்பது எங்களது வாழ்வின் அன்றாட வழக்கங்களில் ஓன்றாக இருந்தது. எந்த சாதி, வகுப்பு, கல்வித் தகுதி வாயந்தவராக இருந்தாலும் அனைவரும் ஒன்றாக வந்து அமர்ந்து ஒரே இடத்தில் தேநீர் அருந்தினோம். மிக சிறந்த மனிதர்களின் கதைகளை கேட்டும், எல்லா பண்டிகைகளையும் கொண்டாடியும் தான் நான் வளர்ந்தேன்.
பரத நாட்டியம் மற்றும் கர்நாடக சங்கீதம் கற்க நான் சென்னையில் உள்ள கலாஷேத்ராவிற்கு அனுப்பப்பட்டேன். பிறகு 1967ல் தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தேன். ஒரு வருடம் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றினேன். 1968ல் குடிமை பணியில் யூனியன் பிரதேச கேடரில் இணைந்தேன். முதலில் பாண்டிச்சேரியிலும் பின்பு தில்லியில் பணியமர்த்தப்பட்டேன். இராஜஸ்தானில் உள்ள ஏழை மக்களோடு இணைந்து பணியாற்றுவதற்காக 1975ல் எனது ஐ.ஏ.எஸ் வேலையை ராஜினாமா செய்தேன்.
என் வாழ்நாள் முழுவதும் நான் பல பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதற்கு வெவ்வேறு காரணங்கள் உண்டு. என் அம்மா அதிபுத்திசாலி மற்றும் திறமையான பெண்மணி. இருப்பினும் அவர் பொது வாழ்க்கையில் பங்கேற்கவில்லை. இது அவரை விரக்தி அடைய செய்தது. ஆனால், ஆண்களின் உலகில் பெண்கள் எப்போதுமே வீட்டு பழக்கவழக்கங்களை காப்பதற்காகவே வந்தவர்களாக பார்க்கப்பட்டார்கள். இது என் அம்மாவிற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இவைகள் அனைத்தும் என்னுள்ளே ஒரு பெண் வீட்டை தாண்டி வெளி உலக வாழ்க்கையை பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக விதைத்தது.
ஓரு பெண் சுதந்திரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்ள ஒரு தளம் இருக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். இதுவே எனது வாழ்வில் நான் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக வடிவமைத்துக் கொண்டவை. என்னுடைய முதல் அரசியல் பணி பெண்ணியம்! இரண்டாவது சாதி ஒழிப்பு. என்னுடைய அப்பா, தாத்தா, பாட்டி என்று குடும்பத்தில் பலர் சாதி தொடர்பான பாகுபாட்டை எதிர்த்து போராடினார்கள். சாதி, தீண்டாமை, அவற்றின் மாறா கடினமான தன்மை ஆகியவற்றை எதிர்ப்பது நான் வளர்ந்து வரும் வேளையில் என் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறியது. பிரிவினைக்குப் பிறகு நான் தில்லியில் வளர்ந்ததால், மதப்பாகுபாடு, வன்முறை, அவை ஏற்படுத்தும் அழிவுகள் ஆகியவை எனது நினைவோட்டத்தில் நீங்கா பகுதிகளாக இருக்கின்றன.
நான் குடிமைப் பணியை(ஐ.ஏ.எஸ்) விட்டு வெளியேறியதும், ராஜஸ்தானில் திலோனியாவில் உள்ள சமூகப் பணி மற்றும் ஆராய்ச்சி என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தில் பணியாற்ற ஆரம்பித்தேன்.அந்த ஒன்பது வருடங்களில் நான் ஏற்கனவே கற்றிருந்த அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக்கொண்டேன். பல தரப்பட்ட கலாசாரத்தை சேர்ந்த மக்களிடம் தொடர்பு கொள்வது பற்றியும், ஏழ்மை, சாதி மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பற்றி பாதிக்கப்பட்டவர்களின் உடனிருந்து கற்றுக் கொண்டேன். ஏழைகள் வளர்ச்சியடைவதை தடுப்பது எது என்று நான் புரிந்துக்கொண்டேன். மிகவும் புத்திசாலித்தனம் வாய்ந்த தொழிலாளவர்க்க ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் நிறைய கற்றுக் கொண்டேன்.
குறிப்பாக நவுர்தி என்னும் தலித் பெண்ணிடமிருந்து நான் கற்றவைகள் ஏராளம். அவளும் நானும் நாற்பது வருடங்களாக நண்பர்களாக இருக்கிறோம். என்னை விட இளையவள். நாங்கள் முதலில் சந்தித்த போது அவள் ஒரு கூலித் தொழிலாளி. அதன் பின் நன்றாக படித்து, நியாயமற்ற குறைந்த ஊதியங்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தொழிலாளராகவும், பெண்ணுரிமைக்காக போராடும் அங்கீகாரம் பெற்ற தலைவராகவும், கனினியை இயக்குபவராகவும் மற்றும் கிராமத்தின் தலைவராகவும் (சர்பன்ச்) பல்வேறு பரிநாமங்கள் எடுத்தார். குறைந்தபட்ச ஊதியம் குறித்த அவரது பிரச்சாரத்தில் நானும் கலந்துக்கொண்டேன். நான் சட்டம் சார்ந்த விழிப்புணர்வினை ஒரு நிகழ்ச்சி மூலம் அவளிடம் கொண்டு சென்றேன், அவரும் மக்களை ஒருங்கிணைத்தார். இறுதியாக 1983ல், உச்ச நீதிமன்றம் குறைந்தபட்ச ஊதியம் பற்றிய ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கி, அரசியலமைப்பின் 14 மற்றும் 23 ஆம் பிரிவை செயல்படுத்தியது. நவுர்தி சிறப்பாக எங்களுடன் பணிபுரிந்து, சாதி மற்றும் கற்பழிப்புக்கு எதிராகவும், தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் – MGNREGA மற்றும் பிற உரிமைகள் சார்ந்த திட்டங்களுக்காகவும் ஒன்றாகப் போராடினார். அவர் மிகவும் தைரியமான பெண், நாங்கள் தொடர்ந்து எவ்வித பாகுபாடுமின்றி சிறந்த நண்பர்களாக இருக்கிறோம்.
திலோனியாவில், இயக்கங்களில் பங்கேற்பவர்களை திறம்பட நிர்வகிப்பதற்கான ஒரு கட்டமைப்பு இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டேன். சமத்துவத்துடன் செயல்படும் ஜனநாயக வழிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம். முதல் கொள்கையாக நாம் கொள்ள வேண்டியது யாதெனில், நடப்பவைகளை கவனிக்க தொடங்க வேண்டும், பிறகு எதிர்ப்பினை ஏற்க வேண்டும். ஒருமித்த கருத்தினை அடைய, நீங்கள் எதையாவது விட்டு கொடுக்க வேண்டும். இவையெல்லாம் எப்பொழுது நடக்குமென்றால் அதற்கான கட்டமைப்பு சரியாக இருக்கும் பொழுது தான்.
அரசியலில் நான் முன்னேறியப் போது, வளர்ச்சியை நாடுபவளாக நான் இருக்க கூடாது என்று உணர்ந்தேன். அரசியலமைப்பு உரிமைகளைப் பெறுவதற்கான போராட்டங்களில் நான் ஒரு பங்கேற்பாளியாக இருக்கவே விரும்பினேன். நான் மத்திய இராஜஸ்தானுக்கு சென்று ஓத்த மனம் கொண்ட நண்பர்களான ஷங்கர் சிங் மற்றும் நிகில் டே ஆகியோருடன் இணைந்து மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் என்ற அமைப்பை நிறுவினேன். அது போராட்டம் நிறைந்த ஒரு அமைப்பு. தேவதுங்ரியில் ஒரு மண் குடிசையில் அமைந்துள்ளது. எந்த நிறுவனத்திடமிருந்தும் நிதி உதவி பெறுவதில்லை. மற்ற போராட்டங்களைப் போலவே ஆர் டி ஐக்கான கோரிக்கையும் இங்கு தான் உருவானது. இது ஒரு நீண்ட பயணம். தற்போது, நாங்கள் ஒரு பொறுப்பேற்றல் (Accountability) சட்டத்தை கொண்டு வருவதற்கு போராடிக்கொண்டிருக்கிறோம்.நான் இன்றும் உழைக்கிறேன், போராடுகிறேன்.
அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இயக்கத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை நாட்டுக்குக் காட்டியிருக்கிறீர்கள். நிறுவன நிதி இல்லாத போது, ஒரு இயக்கத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் நிலை நிறுத்துவது?
நிதி உதவியளிக்கப்பட்ட இயக்கம் ஒரு வரம்பிற்குள் நின்றுவிடுகிறது. ஏதோ ஆதாயம் கருதி நிதிஉதவி செய்பவர்களிடம் நிதி பெற்றுவிட்டோம் என்ற குற்றசாட்டிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கக் கூடாது என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். யாருக்காக போரிடுகிறோமோ, யாரெல்லாம் அந்த இயக்கத்திற்கும், பிரச்சாரத்திற்கும் ஆதரவளிக்கிறார்களோ அவர்களிடமிருந்தே நிதி வரவேண்டும். சமத்துவத்துக்கான பிரச்சாரம் என்பதை ஒரு திட்டம் (ப்ராஜக்ட்) போல பார்க்கக் கூடாது.
மக்கள் பங்கேற்க கூடிய இயக்கங்கள் மற்றும் பிரச்சாரங்கள் பல காரணங்களால் பாதிக்கப்படுகின்றன. அரசாங்கம் போராடுபவர்களை சிறையில் தள்ளலாம், மாஃபியாக்கள் அவர்களை அடிக்கலாம், எப்பொழுது என்ன நடக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஒரு பிரச்சாரத்தின் முடிவு என்ன என்பதை உங்களால் கணிக்க முடியாது.
மக்களுடன் பணிபுரியும் போது மூன்று வகையான வேலைகள் இருக்கின்றன: மக்கள் நலன் சார்ந்த சேவை. பசித்தோருக்கு உணவு வழங்குவது, நோய்வாய்ப்பட்டோர்களை பராமரிப்பது, இரண்டாவது மேம்பாடு, பள்ளிகள் நடத்துவது, பெண்களுக்கான திறமைகளை வளர்ப்பது. மூன்றாவது போராட்டம். எம்.கே,எஸ்.எஸ்ஸின் பணியானது மூன்றாவது வகையில் வரும். இது ஜனநாயகப் பங்கேற்பின் கட்டமைப்பிற்குள் அரசியலமைப்பில் உள்ள உரிமைகளைக் கேட்பது – இதை விவரித்து விளக்க வேண்டுமெனில் இது ஒரு அரசியல் செயல்பாடேயாகும்.
ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கு மூன்று விதமான வழிகளும் தேவை. எம்.கே.எஸ். எஸ் மற்றும் நர்மதா பச்சாவோ அந்தோலன் போன்ற அமைப்புகளால் செய்யப்படும் உரிமைகள் கோரும் பணிகளுக்கு பெரிய பட்ஜெட் தேவை இல்லை. நாம் அதை மக்களிடம் இருந்தே திரட்டி கொள்ள முடியும்.
சமத்துவத்திற்கான அனைத்துப் போராட்டங்களும் அரசியல் புரிதலில் வேரூன்றியவை என்று நம்புகிறோம். இது அரசியல் தான் ஆனால் அதிகாரத்திற்காக போட்டியிடும் அரசியல் அல்ல, அரசியலமைப்பு உரிமைகளை பெறுவதற்கான அரசியல். இந்தப் போரில் போராடுவதற்கு அரசியலமைப்பு ரீதியாக யாருக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அது கட்டாயமும் கூட! போராடுவதால் நாங்கள் நீதித்துறைக்கோ, சட்டமன்றத்திற்கோ, நிர்வாகத்திற்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால் இவையெல்லாம் மக்களுக்காக, அரசியலைப்பு நெறிமுறைகளின் படி செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் கோருகிறோம்.
நாங்கள் சுமார் 20 பேர் ஒரு சிறிய குழுவாக செயல்படுகிறோம். 31 ஆண்டுகளுக்கு மேலாக இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நாங்கள் எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அந்த மக்களின் கஷ்டங்களை புரிந்துக்கொள்ள அவர்களைப் போலவே எளிமையாக வாழ்கிறோம். நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களிடம் பணம் கேட்கிறோம். அவர்களிடம் கேட்பது என்பது அவர்களை விட நாங்கள் சிறந்தவர் என்று நம்பாத ஒரு பண்பினை கொடுக்கின்றது. மக்கள் இல்லாமல் நாங்கள் இல்லை அவர்களுடைய பங்களிப்பு அவர்களுக்கு கண்ணியத்தை கொடுக்கின்றது. கையிலெடுத்த போராட்டத்தை தங்களுடைய பிரச்சனையாக அது நினைக்க வைத்து அவர்களை நெருக்கமாக்குகிறது.அவர்கள் எங்களை மதிப்பிட்டு, பொறுப்பேற்க வைக்கிறார்கள். நாங்கள் செயல்பட வில்லையென்றால், அவர்களின் ஆதரவு கிடைக்காது.
மக்களின் பங்கேற்பை விட பணம் முக்கியமல்ல. 1996ல் பீவாரில் நடந்த 40 நாள் நீண்ட அமைதியான தர்ணா ஆர்டிஐக்கான போராட்டத்தின் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது. அதோடு மட்டுமன்றி அது மக்கள் பங்கேற்பிற்கான ஒரு முன்னுதாரணம். நாங்கள் 400 கிராமங்களுக்கு நடந்து சென்று எங்களை ஆதரவு திரட்டினோம். ஒவ்வொரு குடும்பமும் எங்களுக்கு 5 கிலோ தானியங்களை வழங்கி, நான்கு முதல் ஆறு நாட்கள் வரையிலான அவர்கள் நேரத்தையும் கொடுத்து எங்களுடன் இணைந்து தர்ணாவில் பங்கேற்றனர். அந்த நகரத்தின் முக்கிய நிகழ்வாக அது மாறியது. அங்கு அவ்வளவு ஆற்றல் நிரம்பி இருந்தது. நாங்கள் அங்கு சாப்பிட்டோம், வாழ்ந்தோம், கவிதை வாசித்தல், பாபாசாஹேப் அம்பேத்கரின் பிறந்த தின கொண்டாட்டம், தொழிலாளர் தினம் என்று பல நிகழ்ச்சிகள் நடத்தினோம்.
ஊழலுக்கு எதிராகவும், தவறான அதிகாரத்திற்கு எதிராகவும் போராட ஆர் டி ஐ வேண்டும் என்பதற்காகவும் துவங்கப்பட்டதே இந்த இயக்கம்! இது ஒரு உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கையாகும். இது ஜனநாயகச் செயல்பாட்டிற்கான முக்கியத்துவத்தையும், அரசியல் சாசனத்திற்கு உண்டான மதிப்பையும் கொண்டது.. “இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமாக உணரப்பட்டது. ஏனெனில் ஆர் டி ஐ மூலம் நீங்கள் பொருளாதார, சமூக மற்றும் மனித உரிமைகளை பெற முடியும்”
போராடுவதற்கு வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியம்! கூட்டாக குரலெழுப்புவதின் சக்தி – மக்கள் ஒன்றிணைவது. பிரச்சனையை நாம் கையிலெடுக்கும் போது அது நம் சொந்த போராட்டமாக மாறும், இந்த மாற்றம் ஏற்படும் போது மக்கள் இறுதிவரை போராட்டத்தில் நம்முடன் இருப்பார்கள்.
பல தரப்பட்ட மக்களை எவ்வாறு பெறமுடியும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு லட்சியத்துடன் இருப்பார்கள், உங்களுடைய இலக்கில் அவர்களை எப்படி ஒருங்கிணைக்க முடியும்?
முதலாவது, ஒருவரின் வெளிப்படைத்தன்மையும், பொறுப்பேற்கும் தன்மையும் பொது வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும். எனது பிறப்பு மற்றும் கல்வியின் அடிப்படையில் நான் ஒரு சலுகை பெற்ற வகுப்பிலிருந்து தான் வந்திருக்கிறேன். நான் மிகவும் பின் தங்கிய மக்களுடன் வேலை செய்கிறேன். ஒருவர் ஒரு பொறுப்பில் இருக்கும் போது, உரையாடலை தங்களுடைய வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மைதன்மையையும் குறித்தே துவங்க வேண்டும். உதாரணத்திற்கு, பிவரில் நடந்த தர்ணாவில் தினசரி கிடைத்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அங்கு இருந்த ஒரு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இரண்டாவதாக நாம் சமத்துவத்தை பற்றி பேசுபவராக இல்லாமல் அதை பின்பற்ற வேண்டும்.
எல்லோரும் சமமானவர்கள். அனைவருக்கும் வாழ்வதற்கும், சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் உரிமை இருக்கிறது என்பதை நாம் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான அடிப்படை கொள்கைகளை பின்பற்றாதவர்களிடம் நீங்கள் பேசும் போது ஒரு குழப்பம் எழுகிறது. சாதியை நம்பும் ஒருவருடன் நான் விவாதத்தில் ஈடுபட்டால், சாதி எவ்வளவு முற்றிலும் நியாமற்றது என்பதைப்பற்றி அவர்களுடன் உரையாடலைத் தொடங்கும் திறன் எனக்கு இருக்க வேண்டும். ஆனால் நாம் ஒரு உரையாடலை துவங்க வில்லையெனில், உண்மையான ஈடுபாடு, நட்பு, பங்கேற்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை எதுவுமே இருக்காது.
சமத்துவத்தை எந்த வகையில் வெளிப்படுத்தினாலும் அது போராட்டத்தையும், எதிர்க்கும் தைரியத்தையும் தான் குறிக்கிறது என்பதை தலித்துகளும், ஏழைகளும் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார்கள்.
சமூகத்தின் குரல் கேட்கப்பட வேண்டுமெனில், சிவில் சமூக அமைப்புகள் தற்போதைய அரசாங்கத்துடன் தீவிரமாக இணைந்து செயல்படுவதற்கு எத்தகைய பங்கினை ஆற்ற வேண்டும்?
நாம் போராடுவதற்கும், எதிர்ப்பை தெரிவிப்பதற்கும் பொது இடங்களை பயன்படுத்தும் உரிமையைக் கூட இழந்து வருகிறோம். பொதுவெளிகளில் கூடி பிரச்சனைகளை பேசி அலசி ஆராய உரிமை இல்லையெனில், ஜனநாயகத்தின் அர்த்தம் என்ன?.
ஜனநாயகத்தில் அனைவரும் கருத்து வேறுபாடு கொள்வதற்கும், நம் குரல்கள் கேட்கப் படுவதற்குமான உரிமையை நாம் கோர வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் பிரச்சனை யாதெனில், கோடிக் கணக்கான வாக்காளர்கள் இருந்தாலும், முடிவெடுப்பவர்களின் எண்ணிக்கை சிறியதாக உள்ளது. மேல்மட்டத்தோடு அது நின்று விடுகிறது. கீழ்மட்டத்தில் உள்ள குரல்கள் கேட்கப்படுவதில்லை. உண்மையில் கோடிக் கணக்கான மக்களை பாதிக்கும் முடிவுகள் பாராளுமன்றத்திலோ, அமைச்சரவையிலோ இல்லாமல் ஒரு சிலரால் மட்டுமே எடுக்கப்படுகிறது.
நாங்கள் நமது தெரு தான் பாராளுமன்றம் என்றும், திட்டங்களை வகுப்பதற்கான அறை என்றும் நம்புகிறோம். அங்கு தான் போராடவும், உரையாடவும் செல்கிறோம். நீங்கள் தெருவில் இருக்கும் போது, உங்கள் பிரச்சாரத்தில் அல்லது இயக்கத்தில் இல்லாத மக்களிடம் தொடர்பு கொள்ள முடிகிறது. பொது மக்கள் கூடிய சமூக இயக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டியதின் தூண்டுதல் இதுவே ஆகும். ஜந்தர் மந்தருக்கு மீண்டும் செல்ல உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தோம், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பொது இடங்களை போராட்டம் நடத்த மீண்டும் பயன்படுத்துவதில் வெற்றியும் கண்டோம்.
என்னுடைய தலைமுறை அதிர்ஷ்டம் செய்த தலைமுறை! ஏனெனில், கருத்து சுதந்திரத்திற்கான உரிமை எங்களுக்கு மறுக்கப்படவில்லை. நாம் என்ன விரும்பினோமோ அதை வெளியில் சொல்லலாம். இன்று, ஜனநாயகத்தின் ஆணி வேரான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்கும் அரசாட்சியை பெற மீண்டும் முதலில் இருந்து முயற்சித்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..
தகவல் அறியும் உரிமை இயக்கம் – ஊடகங்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உள்ளடக்கியது. நூறு நாள் வேலைத்திட்டம் பிரபாத் பட்நாயக், ஜீன் டிரேஸ், ஜெயந்தி கோஷ், (Jean Drèze, Jayati Ghosh, Prabhat Patnaik) போன்ற பொருளாதார வல்லுனர்கள் இல்லையென்றால் வந்திருக்காது. அவர்கள் தான் ‘பணம் இல்லை’ என்று அரசாங்கம் பாடும் தொடர்ச்சியான பல்லவிக்கு எதிராக நிதி தொடர்பான விவாதங்களை எடுத்துவைத்தவர்கள்.முன்னாள்உச்சநீதிமன்ற நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான நீதிபதி பி பி சாவந்த் தான் ஆர் டி ஐ சட்டத்தை இயற்றினார்.
நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால், பல தரப்பட்ட மக்களை ஈடுபடுத்த வேண்டும். உங்கள் கருத்துகளை அவர்கள் ஏற்று கொள்ளச் செய்ய வேண்டும். அது பொது வெளியில் நடக்கும் தகவல் பரிமாற்றமாக இருக்க வேண்டும். சிவில் சமூகம் தான் இப்பொழுது குறிவைக்கப்படுகின்றது. ஏனெனில், அது தான் நீதி மற்றும் சமத்துவத்தின் குரல்களை வலுப்படுத்துகிறது. சிவில் சமூகம் என்பது ஒரு பெரிய குடையை போன்றது அதில் சமூக போராளிகள் மட்டும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது நடைமுறையில் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களையும் உள்ளடக்கியது. ஏனெனில், அரசாங்கத்தையும் சந்தையையும் தவிர மற்ற அனைவரும் சிவில் சமூகத்தினர் தான். தற்போது இருப்பவற்றை தக்க வைத்துக்கொள்ள நாம் போராட வேண்டும்.
இந்தியாவின் இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன? நீங்களும் உங்களுடன் பயணித்தவர்களும் கொடுத்த பாரம்பரியத்தை நாங்கள் வீணாக்காமல் இருப்பதை எப்படி உறுதி செய்வது?
கருத்துச் சுதந்திரம் என்பது அனைவரின் நல்வாழ்விற்கும் அடிப்படை. இந்த உரிமையை அடக்கி ஒடுக்க முயற்சிக்கும் எந்தவொரு அமைப்பும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பு உரிமையையும் மட்டுமல்லாது மனித உரிமையையே மறுக்கிறது என்றுதான் அர்த்தம். வாழ்வதற்கான உரிமையையும், சுதந்திரத்தையும் மறுக்கிறது. எனவே, இன்று நம்மில் பலருக்கு, இந்தியாவின் ஜனநாயகம், உலகளாவிய ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் ஆகியவையே முக்கிய கவலையாக உள்ளது. இதன் காரணமாக பல இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேச்சு சுதந்திரம் மற்றும் சமத்துவத்துடன் கூடிய கருத்துகளை வெளிபடுத்தும் உரிமை கடந்த ஏழு வருடங்களில் அழிக்கப்பட்டவைகளில் மிக முக்கியமான ஒன்று. இது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியாகும். மற்றும் உண்மையான ஜனநாயகத்தின் உத்தரவாதமாகும். இன்று நாம் எதை இழந்தோமோ அதை மீண்டும் பெற வேண்டும், மேலும் சிறந்த எதிர்காலத்திற்காக நம்மிடம் உள்ள அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எதில் ஈடுபட்டுள்ளீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் ஒரு சிறிய அல்லது பெரிய அமைப்பில் இருக்கிறீர்களா என்பது முக்கியமல்ல, நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை தான் நம் விடுதலைக்கான அடிப்படை என்பதை நாம் உணர வேண்டும்.
இந்த புதிய, சமகால இந்தியாவில், இந்த உரிமையை மீண்டும் பெற இளைஞர்கள் ஒரு பெரிய போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். ஆர்டிஐ மிகவும் முக்கியமானது. பொது வாழ்வில் நேர்மையை நிலை நாட்ட ஒரு பிரச்சாரம் மிக நெருக்கமாக இருக்கிறதென்றால் அது ஆர் டி ஐ தான். அதே போல் நூறு நாள் வேலைத் திட்டத்தில் சமூக தணிக்கையை (social audit) கொண்டு வந்ததின் மூலம் வெளிப்படைதன்மையும், பொறுப்பேற்றலும் எல்லோர் மத்தியிலும் பரவியது. இரண்டு மிகப்பெரிய பிரச்சாரங்களிலும் நான் பங்கேற்பதோடு நிற்கவில்லை, அவற்றை கொள்கை ரீதியாக மட்டுமே இல்லாமல் நடைமுறை படுத்தப்படும் திட்டமாகவும் மாற்றினேன்.
‘என் வேலை’,‘உங்கள் வேலை’ என்று எதுவும் இல்லை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். செய்வதற்கு வேலைகள் இருக்கின்றன அவ்வளவு தான். நமது தனிப்பட்ட சுயத்தை விட சுற்றியிருக்கும் பிரச்சினைகள் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒரு பிரச்சினையை வெளியில் கொண்டுவரும் கருவிகள். நாம் அனைவரும் நமக்கு அங்கீகாரம் கிடைக்கவும், நாம் பிறரால் ஏற்றுக்கொள்ளபட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம் – இது மனிதர்களிடையே தோன்றுவது தான். ஆனால் இதற்கு நாம் கொடுக்க வேண்டிய விலை என்ன? ஒருவரின் தனிப்பட்ட நன்மை என்பது பொது நன்மைக்குள் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம்.
நிறைவாக எங்களுக்கு ஏதேனும் கருத்துகளை கூற விரும்புகிறீர்களா?
மத சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். ஒதுக்கப்பட்ட மக்களின் குரலுக்கு வலு சேர்க்கும் சிவில் சமூகமும் தாக்குதலுக்கு உள்ளாகிறது. உரையாடலுக்கும், விவாதத்திற்கும் பதிலாக வன்முறையை கையிலெடுப்பது என்பது மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. ஆனால், இருப்பதிலேயே மிகவும் மோசம் எதுவென்றால், வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு அரசின் மறைமுகமான மற்றும் வெளிப்படையான ஆதரவு இருப்பது தான்.
அகிம்சை கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். அகிம்சை என்பது சகிப்புத்தன்மை, தைரியம் மற்றும் வாழ்க்கையின் மீதான மரியாதை ஆகியவற்றிலிருந்து பிறக்கிறது. இது ஒரு சிறந்த இந்திய பாரம்பரியம்! கருத்துப் பரிமாற்றம் மற்றும் உரையாடலுக்கான தளங்களை நாம் உருவாக்க வேண்டும், அதுதான் அரசியலமைப்பின் ஜனநாயகம்.
Also read
அரசியலமைப்பு வகுத்த நெறிமுறைளின் நான்கு மூலைகளுக்குள் அச்சமின்றி இளைய சமூகம் செயல்பட, அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்ய அனுகூலமான, சுதந்திரமான ஒரு திறந்த மனதுடன் கூடிய சமூதாயத்தை நான் விரும்புகிறேன்.
இறுதியாக, எனது வளர்ச்சிக்கு பங்களித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். மனித நேயத்தில் நன்மை இருக்கிறது என்றும், நாம் வெறும் மனிதர்கள் தான் நாம் அனைவரும் சமமானவர்களாக ஏற்கவேண்டிய பாத்திரங்கள் உள்ளன என்ற உறுதிப் பாட்டினையும், ஆதிக்க வர்கத்திற்கும் தாழ்த்தபட்டவர்களுக்குமான இடைவெளியை சீர் செய்யும் பாலம் அமைக்க முடியும் என்பதையும் அவர்களிடமிருந்து தான் நான் பெற்றேன். நான் வாழபோகும் நாட்களில் அதிகார வர்க்கத்திடம் உண்மையைப் பேசுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்.
நன்றி ; ‘தி வயர்’
மொழியாக்கம்; – நா.ரதி சித்ரா
வாகை வனம்
Important interview