வங்கத்தின் பெண் சிங்கம் மஹீவா மொய்த்ரா..! திரிணமுள் எம்.பி

-சாவித்திரி கண்ணன்

பாராளுமன்றத்தில் தன் அறிவார்ந்த, துணிவான பேச்சுக்களால் பெரும் கவனம் பெற்றுள்ளார் திரிணமுள் எம்.பி மஹீவாமொய்த்ரா! அநீதிகளைச் சாடுவதில் காட்டாற்று வெள்ளமென பொங்கி பிரவிக்கும் மொய்த்ரா இந்திய அரசியலின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுகிறார்! இவரது பின்னணி தான் என்ன?

மஹீவா மொய்த்ராவின் பேச்சுக்கள் எப்போதுமே ஆவேசமாக அமைந்துவிடுகின்றன! அதற்கு அவர் மட்டுமல்ல, அவர் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டும் ஒரு காரணமாகிவிடுகிறது. வங்க மண்ணில் ஒரு பெண் சிங்கமாக மம்தா கர்ஜித்துக் கொண்டிருக்க அதே மண்ணில் மற்றொரு பெண் சிங்கமாக தில்லி பாராளுமன்றத்தில் கர்ஜித்து வருகிறார் மொய்த்ரா!

ஆவேசமாகப் பேசும் போதும் கூட அர்த்தம் பொதிந்த வார்த்தைகளையே உச்சரிக்கிறார். ஒவ்வொரு சப்ஜெக்டையும் பேசும் முன்பு முழுமையாக அது சம்பந்தமாக ‘ஹோம்வொர்க்’ செய்து விடுகிறார். எதிர்ப்புகளுக்கு அஞ்சுவதும் இல்லை.  மக்கள் நலன் சார்ந்த அவரது பேச்சுக்கள் பொய்மைக்கும், அநீதிக்கும் எதிரானதாக உள்ளது.

யார் இந்த மஹீவா மொய்த்ரா?

மேற்கு வங்கத்தில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர்! கொல்கத்தாவில் பள்ளிக் கல்வி முடித்து மேற்படிப்பை அமெரிக்காவில் படித்தவர். பிறகு ஒரு தனியார் வங்கியாளராக இலண்டனிலும், அமெரிக்காவிலும் கை நிறைய சம்பாத்தியத்துடன் வாழ்ந்தவர். இந்திய அரசியலில் பாஜக வலுவாக காலூன்றத் தொடங்கிய காலகட்டத்தில் சமூகத்தில் ஒரு அமைதியின்மையும், இணக்கமின்மையும் மெல்ல தலை எடுக்கத் தோன்றிய நிலையில், ‘சொந்த தாய்நாடு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது நாம் இப்படி வெளிநாட்டில் கை நிறைய சம்பாத்தியத்துடன் வாழ்கிறோமே’ என்ற குற்றவுணர்வு மேலிட்டதால் அரசியலுக்கு வந்ததாகச் சொல்கிறார்.

2008ல் இந்தியா வந்து காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். 2009ல் தன் அனைத்து வெளிநாட்டு வேலைகளையும் உதறிவிட்டு, காங்கிரசில் முழு நேர அரசியல்வாதியாகிறார். இவரது அறிவையும், ஆற்றலையும் பார்த்து இளைஞர் காங்கிரசில் மாநிலத் தலைவர் பொறுப்பு தருகிறார் ராகுல் காந்தி. எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் ராகுல் காந்தி இவரை கணித்து தன் நம்பிக்கைக்கு உரியவராகவே வைத்திருந்தார்.

ஆனால், மேற்குவங்க காங்கிரசில் பழம் தின்று கொட்டை போட்ட பெரும் தலைகள் இவர் வளர்ச்சியை விரும்பாமல் கடும் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தி வந்தனர்! இதனால் பெரும் மனச் சோர்வுக்கு உள்ளான மொய்த்ரா 2010 ஆம் ஆண்டு ஒரு நாள் மம்தாவைப் பார்த்து திரிணமுள்ளில் தன்னை இணைத்துக் கொண்டார். மம்தாவும், மொய்த்ராவை அரவணைத்து கட்சியின் ‘ஸ்போக்ஸ்பெர்சனாக’ நியமித்தார். அதை சிறப்பாகவே செய்து மம்தாவிடம் நல்ல பெயர் எடுத்தார்.

அந்த வகையில் மூன்றாண்டுகள்( 2016-19) சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு பெற்றார்! அந்த காலகட்டத்தில் தொகுதி மக்கள் குறைகளை உடனுக்குடன் சரி செய்தார். அத்துடன் கட்சியின் ஸ்போக் பெர்சனாக மீடியாக்களில் சிறப்பாக பணியாற்றினார். இதனால், கிருஷ்ணா நகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றார்.

பாராளுமன்றத்தில் தன் கன்னிப் பேச்சிலேயே கவனம் பெற்றார்.என்.ஆர்.சி கொண்டு வந்த போது, ”இங்கே இந்த அவையில் சில அமைச்சர்கள் கல்லூரியில் படித்ததாகச் சொல்கிறார்கள்! ஆனால், அவர்களிடம் அதற்குரிய சான்றிதழ்களைக் கேட்டால் முழிக்கிறார்கள். ஆனால், நீங்களோ இந்த நாட்டின் கோடானுகோடி மக்களிடம், ‘நீ இங்கு பிறந்தவன் தானா? அதற்கான சான்றைக் காட்டு’  என்றால் என்ன செய்வார்கள்..? இந்த நாடு ஆபத்தான பாதையில் பயணிக்கிறது. பாசிசத்தின் ஆரம்ப அடையாளங்கள் தென்படுகின்றன! தேசபக்தியின் பெயரால் மூடத்தனங்களை, வெறுப்புகளை, குறுகிய நோக்கத்தில் பரப்பி வருகிறீர்கள்!” என்று விளாசித் தள்ளினார்.

அடுத்ததாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன் மீதான பாலியல் வழக்கை தானே விசாரிக்கும் நாடகத்தை நடத்தியதையும், பாஜக அரசுக்கு அனுசரணையாக நடந்து கொண்டதால் அவருக்கு ஓய்வுக்கு பிறகு மூன்றே மாதத்தில் மாநிலங்களவை எம்.பி பதவி தரப்பட்டதையும் கேள்விக்கு உள்ளாக்கினார்.

இந்த அளவுக்கு தன் மனதில் தோன்றியதை சமரசமில்லாமல் பேசி வரும் மொய்த்ரா தன் தொகுதியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறார். தொகுதி மக்களுக்கான வேலைகளை தொய்வின்றி செய்து வருகிறார். கல்வி,பெண்கள் தொடர்பானவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்.

சொந்த வாழ்க்கையில் இவர் கணவரிடம் விவகாரத்து பெற்று சுயேட்சையாக வாழ்கிறார். யோகா செய்வதில் மிக ஆர்வம் உள்ளவர்! தன் வாழ்க்கையை கட்டுபாடாக வைத்திருக்க யோகா உதவுவதாகச் சொல்கிறார். இவர் குறித்து எந்த கிசுகிசுக்களுக்கும் ஆன வரைக்கும் இடம்தராமல் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.

அசாமில் என்.ஆர்.சி விவகாரமாக மொய்த்ராவைத் தான் மம்தா அனுப்பி வைத்தார். ஆனால், அவர் அசாம் விமான நிலையத்திலேயே பெண் காவலர்களால் ‘போர்ஸ்சாக’ தடுக்கப்பட்டார். கோவாவில் தற்போதைய சட்டமன்ற தேர்தல் வேலைகளுக்கும் மொய்த்ரா தான் மம்தாவால் அனுப்பபட்டு உள்ளார். பொதுவாக ஒரு பெண் அரசியல்வாதி மற்றொரு திறமையான பெண் அரசியல்வாதி முக்கியத்துவம் பெறுவதை விரும்புவதில்லை. ஆனால்,மொய்த்ரா விஷயத்தில்  அவரது திறமை கட்சிக்கும், நாட்டுக்கும் பயன்பட வேண்டும் என எண்ணுகிறார், மம்தா! மேற்குவங்க மாணவர்கள், இளைஞர்கள், பெண்களிடையே செல்வாக்கான தலைவராக வளர்ந்து வருகிறார் மொய்த்ரா!

இன்றைய இவரது பாராளுமன்ற பேச்சின் இடையே குறுக்கிட்ட மக்களவை துணைத் தலைவர் ரமா தேவி, “அன்புடன் பேசுங்கள். இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று கூறினார்.

அப்போது  அதற்கு  எதிர்வினையாக மொய்த்ரா, கவிஞர் ராம்தாரி சிங் தின்கர் கவிதை ஒன்றை நினைவூட்டினார். “இந்த உலகம் சகிப்புத்தன்மை, மன்னிப்பு, இரக்கம் ஆகியவற்றைக் கொண்டாடும். ஆனால் எப்போது அவற்றின் பின்னால் அதிகாரத்தின் பிம்பம் இருக்கிறதோ அப்போது அவற்றைக் கொண்டாடும்’’ என்பதைச் சொல்லி, ‘எளியவர்களின் வலியை எப்படி அன்பாக பேச முடியும்?’ என சூசகமாக உணர்த்தினார்!

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போதே தனது அனல் பறக்கும் பேச்சால் அவையை அதிர வைத்தவர். “அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரசாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது” என்று பேசினார்.

சமீபத்தில் கூட தன் டிவிட்டரில், ”கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். இன்று மாலை நான் அவையில் பேசுகிறேன்” என பாஜகவினருக்கு சவால் விடுத்தார்!

கொரானாவை அரசு கையண்டவிதம் குறித்த விவாதத்தில், ”விவசாய மரணங்கள் குறித்து எந்தத் தரவும் இல்லை என்கிறது அரசு. இதற்கு முன்பு புலம்பெயர் தொழிலாளர் மரணம் குறித்துத் தரவுகள் இல்லை என்றது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் குறித்த தகவல்களும் இல்லையாம். அதனால், அரசு சொல்லும் எண்ணிக்கையை நாம் எடுத்துக்கொள்வதைவிட, அதிகாரபூர்வமற்ற எண்ணிக்கையையே நாம் எடுத்துக்கொள்ளலாம்” என்றவர் தொடர்ந்து, கொரோனாவின் தொடக்க காலத்தில் இந்த அரசு தட்டுகளைத் தட்டச் சொன்னது, விளக்குகளை ஏற்றச் சொன்னது. இதற்கு முன் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட்டதில்லை. 700 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர். இரண்டாம் அலையின்போது பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். உத்தராகண்ட்டில் கும்பமேளா நடைபெற்றுக்கொண்டிருந்தது” என உண்மைகளை பட்டவர்த்தனமாக எடுத்துரைத்தார்.

நேற்றைய பேச்சிலோ, எதிர்காலத்தை நினைத்து அச்சப்படும் இந்த அரசு வரலாற்றைத் திரிக்க நினைக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய குடியரசுத் தலைவர் பேசியது வெறும் உதட்டுப் பேச்சு மட்டுமே. உண்மையில் இந்தியாவின் கடந்த கால கண்ணியம், பன்மைத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை இந்த அரசாங்கம் மிகவும் பாதுகாப்பற்றதாக ஆக்குகிறது. வல்லபாய் படேலையும்,பகத்சிங்கையும் இன்று கையிலெடுத்துள்ள பாஜக அரசு, அவர்கள் கொள்கைகளின் வரலாறுகளை மாற்றுகிறது.

குடியரசுத் தலைவர் உரையில் பல சந்தர்ப்பங்களில் நேதாஜியை நினைவுபடுத்தினார். அனைத்து மதத்தினரிடமும் நடுநிலையும் பாரபட்சமற்ற அணுகுமுறையையும் இந்திய அரசு கொண்டிருக்க வேண்டும் என்று கூறியவர்  நேதாஜி என்பதை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். மேலும், பாடப்புத்தகங்களில் இருந்து இந்த அரசால்அழிக்கப்பட்ட திப்பு சுல்தானின் புலி சின்னத்தைதான் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்தின் (INA) சின்னமாக வைத்திருந்தார். நேதாஜி இன்று இருந்திருந்தால் முஸ்லிம் இனப்படுகொலைக்கான அழைப்பு விடுத்த ஹரித்வார் தரம் சன்சாத்தை அப்படி பேச அனுமதித்திருப்பாரா?

நேதாஜியின் ஐஎன்ஏவின் பொன்மொழிகள் மூன்று உருது வார்த்தைகள்: எதிஹாத், எட்மாட் மற்றும் குர்பானி . இதன் அர்த்தம்… ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் தியாகம் ஆகும். இதே உருது மொழியை மாற்றி ஜம்மு காஷ்மீரின் முதல் மற்றும் அதிகாரபூர்வ மொழியாக இந்தியை கொண்டுவர முயல்கிறது.

நம் அனைவரையும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான கேள்வியைக் கேட்க நான் இன்று இங்கு நிற்கிறேன். நாம் விரும்பும் குடியரசு என்ன, இன்று நாம் இருக்கும் இந்தியா என்பது என்ன?

வேளாண் சட்டங்களைக் கொண்டு வர வேண்டாம் என்று உங்களிடம் பலமுறை கூறிய எங்கள் விவசாயிகளை நீங்கள் நம்பவில்லை. அவற்றை நீங்கள் திரும்பப் பெற்றது தேர்தலுக்காகத் தான்!, மேற்கு உ.பி.-யில் 70 இடங்களை இழக்க நேரிடும் என்ற உங்கள் பயம் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்காக நீங்கள் உணர்ந்த வருத்தத்தை விட அதிகமானது.

உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 142வது இடத்தைப் பெற்றுள்ளது. இதன் அர்த்தம் இன்று பத்திரிகையாளர்களுக்கு உலகளவில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது என்பதாகும். இந்த அரசு நம் குடியரசின் ஆன்மாவையே நம்பவில்லை. அதனால்தான் ஆதார் அட்டையுடன் வாக்குரிமையை இணைக்கும் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்” என்றார் மஹுவா மொய்த்ரா.

இது போன்ற துணிச்சலான அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல் வளையை  நெறித்து விட முடியாது என்ற் நம்பிக்கை பிறக்கிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time