தரமற்ற சாலைகள், தகுதியற்ற ஒப்பந்ததார்கள்! ஊழலில் திளைக்கும் எடப்பாடி பழனிச்சாமி…!

-அ.வை.தங்கவேல்

திருச்சி-கரூர் சாலையில் திருச்சி குடமுருட்டி பாலத்திலிருந்து அந்தநல்லூர் வரை 10.80 கி.மீ நீளம்  உள்ள. சாலையை  அகலப்படுத்த 55.75  கோடி ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு சாலை விரிவாக்க வேலைகள் நடக்கின்றன. இந்த வேலைகளைப் பார்க்கும் போது தமிழக நெடுஞ்சாலைத்துறை மனசாட்சியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ஊழலில் திளைக்கிறது என அனைவருக்கும் தெரிய வரும்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு  மிகவும் வேண்டிய வரான திருக்குமரன் என்பவருக்கு  இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

படுமோசமாக இந்த  சாலைப்பணி   நடைபெறுவதால்  அடிப்படைத் தகவல்களைக்  கேட்டு அய்யாரப்பன் என்கிற சமூக ஆர்வலர்  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ் திருச்சி நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு  கோட்டுப்பொறியாளருக்கு மனு அனுப்பியுள்ளார். தகவல்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அய்யாரப்பனின்  நண்பரான சக சமூக ஆர்வலர் சீனிவாசன் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால்,கோட்டுப்பொறியாளர் வடிவேலு, உதவிக் கோட்டுப்பொறியாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் திட்டமிட்டு ஒப்பந்தக்காரர் திருக்குமரனை வரவழைத்துள்ளனர். அங்கே சமூக ஆர்வலர் அதிகாரிகள் முன்பே கடுமையாக எச்சரிக்கப்பட்டதோடு,அவரைத் தாக்கும் முயற்சியும் நடந்துள்ளது.  ஏதோ விபரீதம் ஏற்படப்போகிறது என்பதை உணர்ந்த சீனிவாசன் அங்கிருந்து. வெளியேறி காவல்நிலையத்தில்  புகார் செய்திருக்கிறார். இந்த புகாருக்குப் பிறகே குடமுருட்டி பாலம் அருகே இருபுறமும் சாலைப் பணி குறித்த தகவல் பலகையை வைத்திருக்கிறது திருச்சி நெடுஞ்சாலைத்துறை.

இது போலத் தான் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் ஊழல் அதிகாரிகள் தகவல்களைத் தர மறுப்பதும்,கூடுதல் மதிப்பீடு தயாரித்து ஒப்பந்ததாரர்களுடன் மோசடிக்குத் துணை போவதும் நடக்கின்றன! அரசும் அதிகாரிகளை ஊக்குவித்து,   தன் ஊழல் ரகசியங்களைப் பாதுகாத்து வருகிறது.

நெடுஞ்சாலைத்துறையில் இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக ஊழல்கள் நடைபெறுகின்றன.  மதிப்பீடு தயாரிக்கும் பொழுதே ஊழலும் தொடங்கிவிடுகிறது. உதாரணத்திற்குத்  தார் கலவையின் கனத்தை 50 மில்லி மீட்டாருக்குப் பதில் 100 மில்லி மீட்டர் என்று எழுதி அதற்கேற்றாற்போல வாகனப் போக்குவரத்து எண்ணிக்கையையும் கற்பனையாக உயர்த்திக் காட்டி  ஒரு கோடி ரூபாயில் முடியும் வேலைக்குக் கூட 2 கோடி,  3 கோடி ரூபாய் என மதிப்பீடு  தயாரித்து அரசியல்வாதிகள், ஒப்பந்தக்காரர்கள், அதிகாரிகள் என்று அத்தனை பேரும்  பகிர்ந்து கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

சாலையைப் பலப்படுத்துவதற்கு மதிப்பீடு தயாரிக்கும்பொழுது இருக்கிற சாலையின் தன்மை எப்படி இருக்கிறது என்று சோதிப்பது வழக்கம். இருக்கிற சாலை உறுதியாக இல்லாமல் இருந்தால் அந்த சாலையைக் கொத்தி எடுத்துவிட்டு ஜல்லியையும் கற்களையும் கொண்டு புதியதாக அமைத்து அகலப்படுத்துகின்ற  பகுதியோடு இணைப்பது வழக்கம்.  ஆனால் அந்த சாலை மீது தார் கலவையை மட்டும் போட்டு அகலப்படுத்தும் பகுதியோடு இணைத்து விடுவது தற்போது நடைபெறுகிறது.  இதனால் செலவு குறைவதால் கொள்ளை லாபம் கிடைக்கிறது.மக்களுக்கோ தரமற்ற சாலையே கிடைக்கிறது.

திருச்சி-கரூர் சாலையின்  தென்புறம் ரயில்வே பாதையும்  வலதுபுறம் காவிரி ஆறும் உள்ளது. ஆகவே இந்தச் சாலையின் இருபுறமும் பாதுகாப்பு  தடுப்புச் சுவர் கட்டுவது அவசியம். ஆனால் தடுப்புச்சுவரும் இல்லை . ஆபத்தான வளைவு என்கிற போர்டும் இல்லை என்பது இந்த புகைப்படத்தில் தெரிய வரும்!

இந்தச் சாலை மிகவும் பழங்காலத்துச் சாலை என்பதால் அங்கங்கே மிகக் குறுகலான வளைவுகள் அமைந்துள்ளன. அந்த வளைவுகளை நேர்  செய்தால்தான் விபத்துகள் குறையும். அந்த வளைவுகளில் உள்ள கட்டங்களையும்   ஆக்கிரமிப்புகளையும்  அகற்றுவது மிகவும் அவசியம். ஆனால் ஆக்கிரமிப்புகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு சாலையில் தார் பணிகளை மட்டும் அவசர அவசரமாக மேற்கொள்வதைப்  பார்க்க முடிகிறது.  தரமற்ற முறையில் தார் பணிகளை  அவசரமாக முடித்து விட்டால்,   பில் பணத்தைப் பெற்று விடலாம் என்ற காரணத்தைத் தவிர வேறு ஒன்றையும்  சொல்ல முடியாது.

இது போன்ற சாலை அகலப்படுத்தும் பணிகள் தொடங்குவதற்கு முன் தார்ச் சாலையை ஒட்டி மிகவும் நெருக்கமாக அமைந்துள்ள மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள்    போன்றவற்றைப் பாதுகாப்பாக அகற்றிவிட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகளைத் தொடங்குவது கட்டாயம். ஆனால் எதுவுமே செய்யவில்லை!  இப்படிச் செய்வது சாலையில் விபத்துகளை இன்னும் அதிகரிக்கவே செய்யும். விபத்துகள் அதிகரித்து மனித உயிர்கள் பலியானால் அதற்கு நெடுஞ்சாலைத்துறையின் அதிகாரிகளும்  அந்த ஒப்பந்தக்காரருமே பொறுப்பாக வேண்டும்.

பணிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக அவசரகதியில் நடக்கின்றன. தரத்தினை பரிசோதனை செய்ய,  சாலையின் கனத்தை அளக்கப் பொறியாளர்கள் யாராவது வருகிறார்களா என்றே தெரியவில்லை.  தார்ச் சாலையின் கனத்தில் தார் பாதி கூட இல்லை என்றே தெரிகிறது.

55.75 கோடி ரூபாய் திட்ட மதிப்பிலான இந்தச் சாலைப் பணியில்  எப்படியும்  சரிபாதி அளவிற்காவது  ஊழல் நடைபெற்றிருக்கும் என்றே தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட சாலைக்கான மதிப்பீட்டை,  தான் சொல்கின்றபடி  தயார் ‌செய்வதற்கு ஒத்து வராத கோட்டப் பொறியாளரையே தூக்கி எறிந்துவிட்டு தனக்கான பொறியாளர் ஒருவரை திருக்குமரன் கொண்டு வந்தார்.  அந்த அளவிற்கு ஒப்பந்தக்காரர் திருக்குமரன் எல்லா இடத்திலும் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார்.

ஒப்பந்தக்காரர் திருக்குமரன் நெடுஞ்சாலைத்துறையில் தினக்கூலி அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளராக  வாழ்க்கையைத் தொடங்கியவர். இன்று அவருடைய பிள்ளைகள் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது லண்டனில் அவரை கவனித்துக் கொண்டவர் இந்த ஒப்பந்ததாரர்!

நடுநிலை தவறாத வேறு மாநில பொறியாளர்கள், புகழ்பெற்ற பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் இப்படி திறமை மிக்கவர்கள் மதிப்பீடுகளை, ஒப்பந்தக் கோப்புகளை, வேலை நடைபெற்ற இடங்களை நன்கு ஆய்வு செய்து ஊழலை வெளிக் கொண்டு வந்தால்தான் இந்த ஊழல்வாதிகள் சிக்குவார்கள்.

தகவல் உரிமைச் சட்டம் நெடுஞ்சாலைத் துறையில் ஏனோ செல்லுபடியாவதில்லை. ஒவ்வொரு துறையும்   தாமாக முன்வந்து வலைத்தளத்தில் எல்லா விவரங்களையும் வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டம் குறிப்பிடுகிறது.  ஆனால் நெடுஞ்சாலைத் துறையின் வலைத்தளத்தில்  எந்த விபரமும் இருப்பதில்லை. தற்போது தமிழகத்தில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல்  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் எந்தப் பணி எவ்வளவு மதிப்பீட்டில் எங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற  விவரங்களை எல்லாம் மிகத் திறமையாக நெடுஞ்சாலைத்துறை இருட்டடிப்புச் செய்து வைத்திருக்கிறது.   இவையெல்லாம் முதலமைச்சரின் விருப்பத்திற்கேற்ப நடக்கின்றன!

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time