சட்ட விரோத மது பார்களும், கழக சர்க்கார்களும்!

-சாவித்திரி கண்ணன்

நீதிமன்றமே கண்டித்துள்ளது. சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களை 18 ஆண்டுகளாக தமிழக அரசே நடத்தி வந்துள்ளதாம்! அதனால், அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டுமாம்!, சமீபத்திய பார் டெண்டர்களும் ரத்தாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் மது கலாச்சாரத்தை அதிகப்படுத்தி வளர்த்து எடுப்பதில் திமுக, அதிமுக இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மது விற்பனையோடு இருந்தால் கூட ஓரளவு மது பழக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், மதுக் கடைகளுடன் பார்களை நடத்துவது தூண்டில் போட்டு குடிகார்களை அழைக்கும் முறையாகும்!

டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களை (Bar) நடத்தும் உரிமங்கள் என்பது ஆட்சியாளர்கள் தன் சொந்தக் கட்சிக்காரர்கள் பிழைப்பதற்கும், கட்சி நிதிக்கும் செய்து வரும் ஒரு ஏற்பாடாகும்! இதில் பல சட்டவிதிமுறைகள் இருந்தாலும், பெரும்பாலும் அவை ஆளும் கட்சி அரசியல்வாதிகளால் பின்பற்றப்படுவதில்லை.

மதுக்கடைகளோடு இணைந்த பார்கள் மூலமாக குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது! குடிப்பதை குற்றமாகக் கருதும் குடும்பத்தினரிடம் இருந்து குடிகாரர்களுக்கு பாதுகாப்பை அரசே ஏற்படுத்தித் தரும் அணுகுமுறையே ‘டாஸ்மாக் பார்கள்’!  ”ஆகவே, பார்களை உருவாக்கி குடிகாரர்களையும், குடிப்பழக்கத்தையும் வளர்க்காதீர்கள் பார்களை அனுமதிக்கக் கூடாது” என சமூக ஆர்வலர்கள்  தொடர்ந்து போராடி வந்தனர்.

மதுவுக்கு அடிமையானவர்களை மேன்மேலும் வளர்தெடுப்பதால் தமிழகத்தில் அளவுக்கு அதிகமான குடும்ப வன்முறைகள் வெடிப்பதும் பல கொலைகள் அரங்கேறி வருவதும் நாள் தோறும் நடக்கின்றன! சின்னஞ் சிறு குழந்தைகள் தாயையோ, தகப்பனையோ இழந்து அனாதையாகின்றன! பள்ளிக் குழந்தைகளின் படிப்பு பாழாகிறது. ஆனபோதிலும் தீயாக மது விற்பனையை குறிகோளாகக் கொண்டு அரசு இது நாள் வரை சட்டவிரோதமாக மதுபார்களை நடத்தி வந்துள்ளதை நீதிமன்றமே அம்பலப்படுத்தி உள்ளது;

குடித்து விழுந்து கிடந்த தகப்பனை போராடி எழுப்பும் மாணவி

”தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ன்பிரிவு 4 -ஏ வின் படி  ஒருவர்  பொது இடத்தில் மது அருந்தக் கூடாது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இந்த விதிக்கு புறம்பாக பார்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது விற்பனையில் ஏகபோக உரிமையாளராக திகழ்வதால் தமிழகத்தில் புற்றீசல் போல் பார்கள் திறக்க தமிழ்நாடு அரசே அனுமதித்து உள்ளது! தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்திற்கு எதிராக அரசுக்கு வருவாய் வருகிறது என்பதற்காக சட்ட விதிகளுக்கு எதிராக பொது இடத்தில் பொது மக்களை மது அருந்த வைப்பதை நியாயப்படுத்த முடியாது. அதை அனுமதிக்கவும் முடியாது.

எனவே, பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு அதிகாரம் இல்லை. பார் குத்தகை வழங்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 14- தேதி அறிவிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பு ரத்து செய்ய வேண்டும். தமிழக டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களை 6 மாதங்களுக்குள் மூடவேண்டும்

மேலும், டாஸ்மாக் நிறுவனம் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வதற்கு மட்டும்தான் சட்டப்படி அனுமதிக்கப்படுகிறது. பார்களை திறப்பதற்கு டாஸ்மாக் நிறுவனத்துக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. அதாவது, இதுபோன்ற பார்களை ஏலம் விட்டு, பார்களை திறந்து பொது இடத்தில் மக்களை மது அருந்த அனுமதிப்பதற்கு அதிகாரம் இல்லை’’ என உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்!

அதிமுக ஆட்சியின் போது சுமார் 4,500 பார்கள் வரை தமிழகத்தில் இருந்தன. அவற்றில் சுமார் 2000 பார்கள் கட்சிக்காரர்களால் அரசு அனுமதியின்றி நடத்தப்பட்டவை! ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் துணிச்சலில் போலீசாருக்கு சற்றே கவனித்துக் கொண்டு நடத்தினர். காலப்போக்கில் கடும் நடவடிக்கை எடுத்து அவற்றில் கணிசமானவை இழுத்து மூடப்பட்டன!

திமுக தற்போது ஆட்சி பொறுப்பு ஏற்றதும், பார்களின் எண்ணிக்கை அங்குமிங்குமாக அதிகரித்தது. டாஸ்மாக் பார்களில் 2022 ஜனவரி  முதல் 2023 டிசம்பர் வரை தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி மதுப்புட்டிகளை சேகரிப்பதற்கான உரிமங்களை வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி, 30-ஆம் தேதி வரை பெறப்பட்ட அணுகுமுறைகளில் கூட தற்போது கட்சிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளிடம் அவை மொத்தமாக ஒப்படைக்கப்பட்டு மொத்தமாக ஆட்சியாளர்கள் மாதம் தோறும் கமிஷன் பெறுவதற்கான ஏற்பாடு நடப்பதாக திமுகவினரே கொந்தளித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார்கள்!

மதுவின் விலையை உயர்த்தி விற்பது,  சைட் டிஷ் என்ற திண்பண்டங்கள் தொடங்கி தண்ணீர் பாட்டில், அசைவ உணவு வகைகள், காலி மதுபாட்டில்கள் ஆகிய அனைத்தையும் ஆட்சியாளர்கள் கணக்கு செய்து அரசு வருவாயை அதிகரிப்பதற்காகவல்ல – கையூட்டுக்காக – பேரம் பேசிய நிகழ்வுகள் வெளியாயின!

தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 7 ஆயிரத்திற்கும் கூடுதலான மதுக்கடைகளும், 4500க்கும் அதிகமான பார்களும் இருந்தன. திமுக தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்த நிலையில் 5,402 மதுக் கடைகள், 2,808 மது பார்கள் என்பதே நிலவரம்! இவற்றிலும்  தற்போது 5,387 மதுக்கடைகளும், 2,168 பார்களும் தான் அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. நியாயப்படி அந்தப் பார்களுக்கு மட்டும் தான் உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை டாஸ்மாக் கேட்டிருக்க வேண்டும்.

ஆனால், அவற்றுடன் கூடுதலாக 1551 பார்களுக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. மேற்கண்ட 1551 பார்களும் ஏற்கனவே சட்டவிரோதமாகச் செயல்பட்டு, அரசாங்கத்திற்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் செயல்பட்டு வந்தவையே! அப்படியிருக்க, அவற்றை தவிர்க்க வேண்டியது தானே ஒரு நல்லாட்சியாளரின் அணுகுமுறையாக இருந்திருக்க முடியும். ஆனால், அவற்றை தற்போது சட்டப்பூர்வமாக்கி உரிமம் வழங்குவதாக அமைச்சரே சொல்வதை எப்படி புரிந்து கொள்வது?

அரசுத்துறை வட்டாரத்தில் இது குறித்து விசாரித்த போது, ”இதெல்லாம் , அதாவது கோர்ட் தீர்ப்பெல்லாம் ஒரு மேட்டரே இல்லை நாங்கள் சுப்ரீம் கோர்ட் வரை மேல் முறையீடு செய்து விலக்கு பெறுவோம்” என்றனர்!

இந்த அளவுக்கு மது விற்பனையில் ஆர்வம் காட்டி பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்படும் ஆட்சியாளர்கள் தமிழகத்தில் பல லட்சம் ஆண்கள் மது போதைக்கு அடிமையாகி முற்றிலும் செயல்பாடு இழந்து நாட்டும், வீட்டுக்கும் பாரமாக மாறியுள்ளதையும், அவர்களுக்கான மறு வாழ்வு மையங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் காதிலே கூட போட்டுக் கொள்ளவில்லையே!

ஆனால், 2016 சட்டமன்ற தேர்தலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கிற்கானதாக இருக்கும் என்று சொல்லிய கட்சி தான் திமுக! அன்றைய நிலைமையை விட, இன்று தமிழகச் சூழல் மிகவும் மோசம்! ‘இந்தியாவிலேயே மதுவால் மிக அதிகமாக விதவையான பெண்கள் தமிழ் நாட்டில் தான்’ என்பது கூட உங்கள் நெஞ்சை உலுக்கவில்லையா?

தமிழக அரசின் லட்சினையில் ‘வாய்மையே வெல்லும்’ என போட்டுள்ளது. ஆட்சியாளர்களே, தாய்மையின் சாபங்களே  உங்கள் ஆணவத்தைக் கொல்லும், ஓர் நாள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time