குற்றவாளிகளை உருவாக்கவா?கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்!

-மாயோன்

20,000 வீடுகளை இடிக்க போகிறார்களாம்!  மாற்று ஏற்பாடுகள் என்ன?  இது நகர்ப்புற மக்கள் வாழ்விட மேம்பாட்டு வாரியமா? உழைக்கும் மக்களை குற்றவாளிகளாக்கி, நரகங்களை உருவாக்கும் திட்டமா..? பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் சமூகத் தணிக்கை செய்ய வேண்டும்!

நகர்ப்புற குடியிருப்பு- நிலவுரிமை கூட்டமைப்பினர் கோரிக்கை!!

“ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்” என்ற பழமொழி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ சென்னை மாநகருக்கு  பொருந்தும்.

சென்னையை  சிங்காரச் சென்னையாக மாற்றுகிறோம், எழில்மிகு சென்னையாக ஆக்குகிறோம் என்கிற பெயரில் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர் நிலை ஓரங்களில் வசித்த மண்ணின் மைந்தர்களை, பூர்வகுடி மக்களை, ஏழை -எளிய, பாட்டாளி  மக்களை, கூண்டோடு அள்ளிச்சென்று சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள- தமிழ்நாடு  குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட கண்ணகி நகர், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புகளில் அள்ளித் திணித்தனர்.

ஏற்கனவே , குறுகலான பகுதிகளில் வசித்து வந்த இந்த மக்களை குப்பைகளைப் போல இங்கு கொட்டிக்குவித்தனர். இதன் விளைவை இந்த மக்கள் அணு அணுவாக அனுபவித்து வருகின்றனர்.

இந்த மூன்று பகுதிகளில் வசிக்கும்  சுமார் இரண்டு லட்சம் மக்களும் கடந்தாண்டு பெய்த பெரு மழையின் போது சொல்ல முடியாத துன்பத்துக்கு ஆளாகினர். தங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்து   இங்கு கொண்டு வந்து தள்ளிய ஆட்சியாளர்களை‌ சாபமிட்டுத் திட்டித் தீர்த்தனர்.

செம்மஞ்சேரி

தமிழக முதல்வராக முதன் முறையாக கருணாநிதி இருந்தபோது   தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தை உருவாக்கினார். குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த ஏழை மக்களுக்கு அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தந்த  அருமையான திட்டம். 1970 களின் தொடக்கத்தில் இங்கு கட்டப்பட்ட ஒரு குடியிருப்பை திறந்து வைக்க வந்த பாபு ஜெகஜீவன்ராம் நாடே பின்பற்ற வேண்டிய ஒரு முன்மாதிரி திட்டம் இது என்று புகழாரம் சூட்டினார்.

அப்போது கட்டப்பட்ட வீடுகள் இன்றும் பலமாக உள்ளன! ஆனால், 1980,90,2000 த்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடிந்து விழக் கூடிய நிலையில் உள்ளன. அந்த அளவுக்கு ஏழை மக்களுக்கான குடியிருப்பு திட்டங்களில் ஊழல் மலிந்து தரமற்ற வீடுகளை கட்டியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக  குடிசையில் வசித்த மக்களை குப்பைக் கூளங்களுக்கு சமமாக ஆக்கிவிட்டது  குடிசை மாற்று வாரியம். தற்போதைய திமுக அரசு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரை நகர்ப்புற மக்கள் வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றம் செய்து விட்டது.

பெயர் மாற்றம் மட்டும் போதுமா!

இந்த மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லையே! தொடர்ந்து சென்னைக்குள் இருப்பவர்களை அள்ளிச் சென்று பெரும்பாக்கம் போன்ற வாழ லாயக்கில்லாத பகுதிகளில் அள்ளிப் போடும் அவலம் நீடிக்கிறது.

இந்த நிலையில், உண்மை நிலவரத்தை உணர்ந்து கொண்ட இந்த மக்கள் இனி அரசை நம்பி பயனில்லை.  நம்மை  நாமே  காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர்‌. சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் நகர்ப்புற குடியிருப்பு- நில உரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டனர்.

அவர்களுடைய ஆலோசனைக் கூட்டம் சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில்  நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஸ்ரீராம், செபாஸ்டின், மோகன், லீலாவதி ,அன்பு வேந்தன் ,காசிநாதன், விமல் முதலானோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

“சென்னையில் தற்போதுள்ள 20 ஆயிரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வீடுகளை  உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.  அந்த எச்சரிக்கை பிரசுரத்தில் “இடிந்து விழுந்தால் நாங்கள் பொறுப்பல்ல” என்று அரசே சொல்லியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு இந்த மக்களை ஓட்டாண்டி ஆக்கி வைத்திருக்கிறது. இந்த நிலைமையில் இப்படி மக்களை அச்சுறுத்தி நெருக்கடி கொடுத்து காலி செய்யும் போக்கை அரசே கையாள்கிறது. கையில் போதிய பணம் இல்லாத அந்த மக்கள் எங்கே போவார்கள்? அவர்கள் மீது கருணை காட்டிடுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

பெரும்பாக்கம்

கொளத்தூர் அவ்வை நகர் ,ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர், குரோம்பேட்டை சிட்லபாக்கம் போன்ற இடங்களில் உள்ள வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை அரசு உடனே நிறுத்திட வேண்டும். கொளத்தூர் அவ்வை நகரில்  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அருகிலேயே பட்டாவுடன் மாற்று இடம் வழங்க வேண்டும்.

திருவொற்றியூரில் இருந்து விழுந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்த குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு  அரசு அறிவித்துள்ள ஒரு லட்சம் போதாது. கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும்.

அன்னை சத்தியவாணி முத்து நகரில்  மாற்று வீடுகள் கேட்டு போராடி வரும் 190 குடும்பங்களுக்கு உடனடியாக புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் வீடுகள் வழங்க வேண்டும்.

சேத்துப்பட்டு எம்எஸ் நகர் ,கோட்டூர்புரம், சைதாப்பேட்டை தாடண்டர் நகர் ஆகிய இடங்களில் 8, 10, 14 மாடிகள் கட்ட கூடாது. 5 மாடி என்ற அளவை தாண்டக்கூடாது.

வியாசர் பாடி சத்யா நகர், பெரம்பூர் ரமணா நகர்,  அசோக் பில்லர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

காசிமேட்டில் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அருகிலுள்ள கார்கில் நகரில் வீடுகள் வழங்க வேண்டும்.

பல ஆண்டுகளாக பட்டா வழங்காமல் இருக்கும் சத்தியமூர்த்தி நகர் போன்ற மேம்படுத்தப்பட்ட  பகுதிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்.

கேபி பார்க்கில் 9,11 மாடி கட்டிடங்களில் பழுதாகிக் கிடக்கும் மின் தூக்கிகளை சரி செய்து இயங்கச் செய்திட வேண்டும்.

தமிழக அரசின் தவறான கொள்கையால் சென்னையில் இருந்து வெளியேற்றப்பட்டு பெரும்பாக்கம், செம்மஞ்சேரி ,கண்ணகி நகர் ஆகிய இடங்களில் குடியமர்த்த பட்டுள்ள பூர்வகுடி உழைக்கும் மக்கள் தங்களின்  வேலை வாய்ப்பு ,கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, பாதுகாப்பு ,என அடிப்படைத் தேவைகளை பறிகொடுத்து விட்டனர்.

இப்பகுதிகளில் சமூக தணிக்கையை (Social Audit) நடத்திட வேண்டும்.

இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சிறப்பு திட்டங்களை அங்கு செயல்படுத்த வேண்டும். மேலும் பெரும்பாக்கத்தில் இனிமேலும் மக்களை குடியமர்த்துதல் கூடாது.

வருகிற 12-ஆம் தேதி, சென்னையில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் தங்கள் பகுதிகளில் பதாகைகளை ஏந்தி அணிவகுத்து நின்று, தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளார்கள்! இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு செய்தவரான  சமூக ஆர்வலர் மோகன் நம்மிடம் கூறியது:

” இந்த மூன்று பகுதிகளிலும் நிலைமை மிக மோசமாக உள்ளது. இவர்கள் தினக்கூலிகள். இவர்களுடைய வாழ்வாதார வேர்கள் சென்னை மாநகருக்குள் உள்ளது. தினமும் சுமார் 60 கிலோ மீட்டர் பயணித்து இவர்கள் வயிற்றுப்பாட்டை கழிக்க வேண்டியிருக்கிறது. இங்குள்ள பள்ளிப் பிள்ளைகளுக்கும் இதே நிலைமை தான்.இவர்களுக்கு பள்ளி சென்று வர பேருந்து வசதி செய்யப்பட்டு இருந்தாலும் அது யானைப் பசிக்கு சோளப்பொறி போன்றுள்ளது.

காவல்துறையினர்  இந்த மூன்று பகுதிகளையும் “பிரைம் கிரைம் ஏரியா” என்ற பட்டியலில் வைத்திருக்கிறார்கள். சென்னை மாநகருக்குள் எங்கு குற்றம் நடந்தாலும் இந்த மூன்று பகுதியில் ஏதாவது ஒரு இடத்தைக் குறிப்பிட்டு “அவன் அங்கு இருப்பான் பிடித்து வாருங்கள்” என்று சொல்கிற நிலைமை உள்ளது.

கண்ணகி நகர்

சூழல் சரியில்லாததால்,  நிறைய சிறுமிகளுக்கு இங்கு திருமணம் நடைபெறுகிறது.பலவீனமான குழந்தைகள் பிறக்கின்றன.அந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு இல்லை.கேட்பாரற்ற நிலை நிலவுகிறது. இந்தப் பகுதியில் வசிப்பவர் என்றால், வேலை தேடும் இளைஞர்களுக்கு  யாரும் வேலை கொடுப்பதில்லை.

படித்த இளைஞர்கள் வேலை தேடும்போது வேறு பகுதியில் உள்ள உறவினர்களின் வீட்டு முகவரியை கொடுக்க வேண்டிய அவலம் உள்ளது.

இங்கு வசிக்கும் 2 லட்சம் மக்களுக்கு அவசர சிகிச்சைக்கு அருகில் உயர் அரசு மருத்துவமனை இல்லை. முப்பது கிலோ மீட்டர் பயணம் செய்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை அல்லது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வரவேண்டும். இதனாலேயே நிறைய மரணங்கள் அங்கு நிகழ்கின்றன.

அரசு போக்குவரத்து இம்மக்களுக்காக பெயருக்கு நடைபெறுகிறது. ஓரிரு பேருந்து வரும்போது அதில் முண்டியடித்து ஏறி ,விழுந்து பஸ் சக்கரங்களில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கிறது. என்றார்  சமூக ஆர்வலர் மோகன்.

ஏழை எளிய மக்களுக்கானஅரசு என்று சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு,

சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்த மூன்று பகுதி மக்கள் நலனுக்காகவும் சிறப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். அம்மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.

கடன் தருகிறது என்பதற்காக  உலக வங்கி ,ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் அடிபணிந்துவிடக் கூடாது. ஏழை எளிய மக்களின் அடிப்படை நலனை பாதுகாக்கும் வகையில் உரிய திட்டம் வகுத்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.!

நேர்காணல்: மாயோன்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time