கர்நாடகாவில் கலவரத்தை தூண்டுகிறதா பாஜக?

ஆர்.எம்.பாபு

‘புர்கா அணிந்த மாணவிகளை இனி கல்வி நிறுவனத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்’ என கர்நாடகாவில் ஒரு புதிய கலகத்தை தூண்டியுள்ளது பாஜக! மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டு இருப்பது இந்திய அளவில் பெரும் விவாதமாகியுள்ளது. இது குறித்து இதுவரை நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகள் என்னென்ன?

கர்நாடகாவில் பள்ளியின் 12ஆம் வகுப்புக்கு இணையான பாடமுறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள், புர்காவை அகற்றிய பிறகு வகுப்புகளுக்குச் செல்லுமாறு மாவட்ட உதவி ஆணையர் அந்தஸ்துள்ள அரசு அதிகாரிகள் குழு ஆணையிட்டுள்ளது. ஆனால், மாணவிகள் அதை ஏற்க மறுத்துள்ளனர். தற்போது அவர்கள் வகுப்பறைக்கு வெளியேயும், படிக்கட்டுகளிலும் அமர்ந்து படிக்கிறார்கள்.

இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழக கல்லூரி, புர்கா அணிந்து மாணவிகள் கல்லூரிக்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து தங்களை கல்லூரிக்குள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பொட்டு வைப்பது, புர்கா அணிவது, சிலுவை அணிவது என்பது அந்தந்த மதத்தாரின் விருப்பம். ஆனால், இதைக் காரணமாக்கி மாணவர்களை கல்வி நிலையங்களில் மறுப்பது  பாஜக கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமாகும். விபூதி,குங்கும் சந்தனம் வைப்பதை எப்படி குற்றமாக கருதமுடியாதோ, சீக்கியர்கள் தலைப்பாகை அணிவதை எப்படி குற்றமாக கருத முடியாதோ அதுவே இதற்கும் பொருந்தும் தானே! இதற்காக சிறுபான்மையினருக்கு  கல்வி மறுக்கப்படுவது  கடுமையான ஒடுக்குமுறையல்லவா?

“இந்திய அரசியலைப்பு சட்டப் பிரிவு 25-ன் படி, எவர் ஒருவரும் தனது மத நம்பிக்கைகளை சுதந்திரமாக பின்பற்ற முழு உரிமையு உள்ளது.. ஆனால்,  பாஜக அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து மத ரீதியிலான பிரிவினைகளும், வெறுப்புகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. வழிபாட்டுத் தளங்கள் தொடங்கி தற்போது கல்வி நிலையங்களை நோக்கி அந்த வெறுப்பு வளர்ந்து இருக்கிறது.

கர்நாடகாவில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. பள்ளியைத் தொடர்ந்து, மங்களூருவிலும் இந்து மத அமைப்பினரின்  நிர்பந்தத்தால் அங்குள்ள சில பள்ளிகள் இஸ்லாம் மாணவிகள்  ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்துள்ளன. ஆனால், ஹிஜாப் அணிவதை தங்களது உரிமையாகக் கோரி என பள்ளி வளாகத்துக்கு வெளியே 4 நாட்களாக மாணவிகள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், கர்நாடக பாஜக அரசு இதை பொருட்படுத்தவில்லை. உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும்வரை, தற்போதுள்ள சீருடை தொடர்பான விதிகளைப் பின்பற்றுமாறு கல்வி நிறுவனங்களை கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே முஸ்லீம் மாணவிகளுக்கு போட்டியாக இந்து மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து கல்லூரி வரும் புதிய கலாச்சாரத்தை ஆரம்பித்து உள்ளனர்.

தமிழகத்திலே அரியலூர் மாணவியின் தற்கொலை நிகழ்வின் பின்னணியில் பாஜக செய்த செயல்கள் மனிதாபிமானமற்ற, குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாதவை! அந்த நிகழ்வுகளை தேதிவாரியாக பட்டியலிட்டு உண்மையை ஆராய்ந்தால் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் ஒரு குழந்தையிடம் சங் பரிவார அமைப்பை சேர்ந்த ஒருவர் எடுத்த நேர்காணல் தான் அருவருப்படைய வைக்கிறது.  அதோடு நீதிமன்றத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை ஒய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்ததை பார்த்தோம். இப்போதைக்கு தேர்தல் நடக்கும் அந்த 5 மாநிலங்களிலே “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை” என்ற முழக்கம் முன்னெடுக்கப் பெற்று இருக்கிறது.

கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்தது.  வரும் சட்டசபை தேர்தலில் வெல்வது இயலாது என்று தெரிந்ததாலும், மற்ற 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதாலும் வன்முறையை தூண்டி குளிர்காய நினைக்கிறதோ..?

இதுவரை மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் இஸ்லாமியர்கள் சார்ந்த அல்லது அவர்களை சீண்டும் விதமாகவே அவர்கள் தொடர்ந்து சட்டங்களை இயற்றினார்கள்.

முத்தலாக் – இஸ்லாமியர்களில் குறைந்த பட்சம் விவாகரத்து / மணமுறிவு செய்வதற்கு சொல்லிக் கொண்டாவது செய்கிறார்கள்.  ஆனால் மோடியை போன்றோர்கள் இதுவரை சொல்லாமலேயே அந்த அம்மையாரை அல்லலுக்கு உள்ளாக்கி வருகிறார்.  இதற்கு எந்த சட்டமும் இயற்ற தோன்றவில்லை.

காஷ்மீரில் 370 பிரிவு ரத்து. – இதுவும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரில் இதை கொண்டுவந்து தொடர் ஊரடங்கு மூலம் அங்கே சர்வாதிகார போக்கை நிறுவ முயன்றனர்.  அத்தனை அத்துமீறலுக்கு பின்னரும் அங்கே நடந்த தேர்தலில் இடது சாரிகள் இருக்கும் குப்கார் கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது.

ராமர் கோவில் – உலக வரலாற்றிலேயே இப்படி ஒரு தீர்ப்பை யாராலும் பார்த்துவிட முடியாத மாதிரியான தீர்ப்பை அளித்து அந்த தீர்ப்பிற்கு பிரதிபலனாக தீர்ப்பளித்தவருக்கு பதவிகள் வழங்கப்பட்டன.

NRC / CAA – இதுவும் சிறுபான்மையர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக ஒருதலைப் பட்சமாக சட்டமியற்றப்பட்டது.  அது இன்று கிடப்பிலே இருக்கிறது.

மிகப்பெரிய கலவரத்தை வன்முறையை இந்தியாவில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி பல சட்டங்களை ஆளும் பாஜகவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே தொடர்ந்து செய்து வந்தாலும் இவற்றிற்கு பெரிதாக எதிர்ப்புக்களை காட்டாமல் அமைதி காத்துகொண்டு இருந்த இஸ்லாமியர்கள் NRC / CAA விற்கு ஒன்று கூடி அமைதியான போராட்டத்தை முன்னெடுத்து வந்த போதும் வன்முறையை தில்லியில் இஸ்லாமிய மக்கள் மீது சங் பரிவாரை சேர்ந்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தி அந்த பகுதியை யுத்த பூமியாக மாற்றியதும் மாணவர்கள் மேல் கொலைவெறி தாக்குதல்கள் நடத்தியதும் நாம் பார்த்தோம்.

ஆகவே, மீண்டும் எப்படியாவது இவர்களை இன்னும் ஆக்ரோஷப்பட வைத்து வன்முறையை தூண்ட வைப்பது என்ற முறையில் தான் சமீபத்திய கர்நாடக அரசின் பள்ளிகளில் புர்கா தடை என்ற உத்தரவு.  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 14 & 25 ஆகியவை மதம் சார்ந்த உரிமைகளை மிகவும் தெளிவாக அறுதியிட்டு கூறுகிறது.

இது வரை இந்த மாதிரியான உத்தரவுகளை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பல முறை போட்டு அதை நீதிமன்றம் சென்று ரத்து செய்த கீழ்க்கண்ட தீர்ப்புக்கள் உண்டு:-

WP(C).No. 21696 of 2015 (J) நதா ரஹீம் எனும் மாணவி தாக்கல் வழக்கில் 21-07-2015 அன்றைய தீர்ப்பில் https://indiankanoon.org/doc/68622350/

CENTRAL BOARD OF SECONDARY EDUCATION,

SHIKSHA SADAN, 17, ROUSE AVENUE,

NEW DELHI – 110 002.

OFFICER ON SPECIAL DUTY, ALL INDIA PRE-MEDCIAL/PRE-DENTAL, ENTRANCE EXAMINATION UNIT,

OFFICE OF THE CENTRAL BOARD OF SECONDARY EDUCATION, NEW DELHI – 110 002.

UNION OF INDIA,

REPRESENTED BY SECRETARY,

DEPARTMENT OF EDUCATION,

CENTRAL SECRETARIAT, NEW DELHI – 110 001.

ஆகியோருக்கு AIPMT தேர்வு எழுத முழுக்கை சட்டை, தலையில் ஸ்கார்ப் ஆகியவற்றிற்கு அனுமதி அளித்தது.

# தில்லி உயர்நீதிமன்றத்தில் பர்கா அணிவதை தடை செய்ய கோரி 14-11-2016 அன்று தாக்கல் செய்யப்பட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delhi-high-court-dismisses-pil-for-ban-on-burqa-other-face-veils-in-delhi/articleshow/55434104.cms?from=mdr

# கேரளா உயர்நீதிமன்றம் 25-05-2017 அன்று AIIMS பரீட்சையில் புர்க்கா அணிய அனுமதி அளித்தது. https://www.newindianexpress.com/cities/kochi/2017/may/25/kerala-high-court-allows-muslim-girls-to-wear-hijab-in-aiims-entrance-1608777.html

# சமீபத்தில்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை சகிப்புத்தன்மையோடும் அனுசரிப்போடும் வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்ற தீர்ப்பை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தேவாலயம் கட்ட அனுமதி வழங்கியதற்கு தடை கோரிய வழக்கில் சொல்லி இருக்கிறது.

# நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தல்களை முன்னிட்டு, வாக்குவங்கி அரசியலுக்காக  ஆளும்  பா ஜ க தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதமாகவும் அரசியல் அமைப்பு சட்டத்தை துச்சமாக கருதி நடக்கும் நிகழ்வுகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சியை தருகிறது.

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகளின் உடை சார்ந்த தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மாணவிகள் வழக்கை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.  தீர்ப்பு எப்படி வரும் என்பது நம்மால் சொல்ல இயலாத சூழல். நாம் சட்டத்தை மதிப்பவராக நீதிமன்றங்களின் மேல் நம்பிக்கை வைத்து காத்திருப்போமாக.

கட்டுரையாளர்; ஆர்.எம்.பாபு

இடதுசாரி செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time