பிரதமர் மோடி திடீரென்று கல்வியாளர் அவதாரம் எடுத்து மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதை இந்தியா முழுமையும் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்! ஆனால், மாணவர்களை இயல்பாக கேள்வி கேட்க விடுகிறார்களா? கேட்டால் என்னவாகும்..?
பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்ததோ, பொதுமக்கள் சார்பான கேள்விகளுக்கு பதிலளித்ததோ இல்லை! அப்படிப்பட்ட பிரதமர் மாணவர்களுடன் ‘பரீக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் (தேர்வு பற்றி ஓர் விவாதம்) 2018 முதல் ஆண்டுதோறும் ஒரு ‘கலந்துரையாடலை’ நிகழ்த்துகிறார். குறிப்பாக ஒன்பதாவது முதல் பிளஸ்2 வரை தேர்வெழுதும் மாணவர்களுடன் அவர்களின் தேர்வு குறித்த பதட்டம், தேர்வின் முக்கியத்துவம் மற்றும் வாழ்க்கையும் தேர்வும் ஆகியன பற்றி பிரதமர் கலந்துரையாடுகிறார் . இது மாணவர்களின் மேல் – எதிர்கால இந்தியாவின் மேல் – பிரதமருக்கு உள்ள அக்கறையைக் காட்டுகிறதாம்!
இது குறித்து பிரபல கல்வியாளர் ரோகித் குமார் தன் சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிடுகிறார்.
“சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பள்ளி மாணவனாக இருந்த சமயத்தில் அன்றைய பிரதமர் திரு. ராஜீவ் காந்தி 1985ல் பிரதமராக பதவியேற்ற சில மாதங்களில் ‘டார்கெட்’ என்ற சிறுவர் இதழ் வேண்டுகோளுக்கிணங்கி பள்ளி மாணவர்களுடன் எந்த ஆயத்தமும் இல்லாமல் கலந்துரையாட சம்மதித்தார்!
அந்த சந்திப்பு அன்று ‘தூர்தர்ஷனி’லும் ஒளிபரப்பானது. மாணவர்கள் பிரதமரிடம் அரசியல்வாதிகள் பற்றியும் கல்வித்தரம் , மதவெறி, ஊழல் மற்றும் ஆற்றலின் அடிப்படையில் வளர்ச்சி (meritocracy) போன்ற பல விஷயங்கள் பற்றி பிரதமரிடம் கேள்விகேட்டனர். அதாவது நாட்டு நடப்பு நிகழ்கால பிரச்சினைகள் பற்றி மிக இயல்பாக கேள்வி கேட்கும் நிகழ்வாக அது அமைந்தது.
இன்று போல அல்லாமல், அன்று சுலபமாக ஆள்பவர்களிடம் குறிப்பாக பிரதமரிடம், மாணவர்கள் கேள்விகள் கேட்கலாம் என்ற நிலை அன்று இருந்தது.
இன்றோ நிலைமை வேறாக உள்ளது . முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உரையாடல்களைத்தவிர( interaction) வேறு எந்த நிகழ்விலும் பிரதமர் பங்கேற்ற தில்லை. அதாவது, மாணவர்கள் கல்விக்கு அப்பால் எதையும் கேட்க முடியாத நிலை இருப்பதாகத் தெரிகிறது!
இத்தகைய சூழலில் இந்த நிகழ்வில் மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதை பெருமையாக நினைக்கும் பிரதமரிடம் மாணவர்கள் சில முக்கியமான கேள்விகளை கேட்டால், அது நாட்டிற்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் பங்களிப்பாக அமையும் என்று தோன்றுகிறது” என்று கூறும் ரோகித் குமார் மாணவர்கள் பிரதமரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்வைக்கிறார்.
# நீங்கள் மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதில் அதிக அக்கறை காட்டுகிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியும் பட்டறிவும் அவசியம் என்று கூறுகிறீர்கள். அது உண்மையானால், கல்விக்கு பட்ஜெட்டில் வெறும் 3% நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளீர்கள் ? ஏன் 6% நிதி ஒதுக்கவில்லை?
# இலவச மதிய உணவு திட்டத்திற்கு’ பிரதமர் போஷான் சக்தி நிரமான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது- இந்த திட்டம் ஏழைஎளிய குழந்தைகளை பள்ளிக்கு இழுத்துவருவதில் பெரும்பங்கு வகிக்கிறது . இத்திட்டத்திற்கு 2020-21ல் ஒதுக்கபட்டதை நிதியை விடவும் 2021-22ல் 1,400 கோடிகளை ஏன் குறைத்துள்ளீர்கள்?
# தற்போது எல்லா அரசு திட்டங்களுக்கும் ஏன் பிரதான் மந்திரி திட்டம் என்று அடைமொழி கொடுக்கிறீர்கள் மோடி அவர்களே?
# பிரதமர் அவர்களே, நாங்கள் அமைதியும், இணக்கமும் நிறைந்த சூழலில்தான் வாழ, வளர விரும்புகிறோம் . ஆனால்,முஸ்லீம்களை கொன்று ஒழிக்க வேண்டும் என்று ஹரித்துவார் தரம் சன்சாத் மாநாட்டில் இந்துவெறி சாமியார்கள் கூறினார்களே அதை தாங்கள் ஏன் கண்டிக்கவில்லை. நீங்கள் இந்த இந்து வன்முறையாளர்களை கண்டித்து உங்களது அதிகாரத்தையும் ஆளுமையையும் காட்டவேண்டாமா.? எனில், உங்கள் மெளனம் சம்மதத்திற்கான அறிகுறியா?
# எங்களுக்கு பாலபாடமாக விவசாயிகள் நமக்கு உணவளிக்கும் அன்ன தாதாக்கள் என்று கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய உழவர்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 27/- ரூபாய்தான் என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உத்திரவாதப்படுத்த ஏன் இதுவரை சட்டம் கொண்டு வரவில்லை? அவ்விதம் செய்வேன் என்று 2014ல் நீங்கள் உறுதி மொழி அளித்ததை மறந்து விட்டீர்களா?
# விவசாயிகள் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்குவேன் என்ற உறுதிமொழியையும் மறந்துவிட்டீர்களா?
# அன்னமிட்ட கைகளான விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலான நடத்திய நீண்ட போராட்டத்தை நிறுத்தி இரண்டு மாதங்கள் கடந்து விட்டன பிரதமரே, தாங்கள் எப்பொழுது MSP க்கான குழுவை அமைக்கப போகிறீர்கள் , விவசாயிகளின் மற்ற பிரச்சினைகளையும் எப்பொழுது தீர்த்து வைப்பீர்கள்?
# 100 ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கபடும் என்று அறிவித்தீர்களே, அவைகள் எங்கே, எங்குள்ளன?
# தாங்கள் எடுத்த தடாலடி நடவடிக்கைகளான பணமதிப்பிழப்பு(Demonetisation) அறிவிப்பு, திடுமென கொண்டுவரப்பட்ட முழுக்கடையடைப்புComplete Lockdown ஆகியவற்றால் கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்து, வாழ்வாதாரத்தை இழந்து பஞ்சை பராரிகளாய் அல்லல் படுகின்றனரே இதற்காக-இந்ததவறான செயல்களுக்காக- ஏன் வருத்தம் தெரிவிக்க தயங்குகிறீர்கள், அது உங்களது தார்மீக கடமையல்லவா பாரத கலாச்சாரத்தின் மேன்மை பற்றி பேசும் நீங்கள் தார்மீக கடமை பற்றி தெரியாமலா இருக்கிறீர்கள்? தவறை உணர்ந்து ஒத்துக்கொள்பவனே மனிதன் என்பதில் தங்களுக்கு நம்பிக்கையில்லையா?
# பிரதமர் மோடி அவர்களே தாங்கள் ஏன் புதிதாக ஒரு பிரம்மாண்ட மாளிகை உங்களுக்காக கட்டுகிறீர்கள் ? ஏன் இப்பொழுது தாங்கள் குடியிருக்கும் வீடு வசதி இல்லாமல் உள்ளதா?
# எங்கள் பெற்றோர், ”சிக்கனமாக இரு, படோபமாக ஒருநாளும் வளராதே” என்று எங்களுக்கு போதித்து வந்துள்ளனர். ஆனால், நீங்கள் ஒரு நாளில் பல்வேறு உடைகளை மாற்றுகிறீர்? அதுவும் விலை உயர்ந்த, படோடாபமான ஆடைகளை அணிகிறீர்கள், விலை உயர்ந்த கண்கண்ணாடிகளும், கை கடிகாரங்களும் நாளுக்கொன்றாக நீங்கள் அணிகிறீர்கள்! இது, படோடாபம் இல்லையா” என்று கேட்க தோன்றுகிறது . பிரதமரே இதற்கு உங்கள் பதில் என்ன?
# தாங்கள் உபயோகிக்கும் இரண்டு விமானங்களுக்காக 6000 கோடி ரூபாய் செலவழித்து புதுப்பிப்பது நியாயமா?
என்பன போன்ற கேள்விகளை மாணவர்கள் பிரதமரிடம் கேட்க வேண்டும் என்று கூறுகிறார் கல்வியாளர் ரோகித் குமார்!
உங்களால் இது போன்ற கேள்விகளை கேட்க முடியுமா? அதற்கு அனுமதி கிடைக்குமா? என்பது தெரியவில்லை, ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் இது போன்றுகேள்வி கேட்க முடிந்தால் எந்த பத்திரிக்கையாளரும் குறிப்பாக கோடி மீடியா கேட்க துணியாத கேள்விகளை கேட்ட பெருமை உங்களைச் சாரும்.
ஒருவேளை பதிலும் கிடைத்துவிட்டால் இந்திய ஜனநாயகமே புத்துயிர் பெற்றது போலாகும் என்று மாணவர்களுக்கான திறந்த மடலில் குறிப்பிடுகிறார் ரோகித்குமார் .
இந்த மடல் ‘தி வயர் ‘ என்ற ஆங்கில இணையவழி இதழில் வெளிவந்துள்ளது.
மாணவர்களுக்கு இது போன்ற கேள்விகள் கேட்க அனுமதி கிடைக்குமா? அப்படி கேட்கும் மாணவனை எப்படி, என்ன செய்வார்களோ..? பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நம்பிக்கைதானே வாழ்வின் அடிநாதம்?
ச. அருணாசலம்
Leave a Reply