மீண்டும் நீட் தீர்மானம் போதுமானதா?

-சாவித்திரி கண்ணன்

இந்த தீர்மானத்தையும் கவர்னர் கிடப்பில் போடலாம். சட்ட மன்றத்திற்குள் நீட் எதிர்ப்புக்கு நின்ற அதிமுக நாளை பாஜக நிர்பந்தத்தால் காலை வாரலாம்! ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன?

ஒரு விஷயம் தெளிவாகச் சொல்ல முடியும், தமிழ்நாட்டில் பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளும் நீட் எதிர்ப்பில் ஒருமித்த கருத்தில் உள்ளன! ஆக, நீட் வேண்டுமா? வேண்டாமா? என்ற தடுமாற்றம் தமிழகத்தில் பெரும்பான்மையோருக்கு இல்லை எனலாம்!

ஆனால், நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு மட்டும் இந்தியாவில் தனிமைப்பட்டு நிற்கிறது என்பது உள்ளபடியே நமக்கு பின்னடைவு தான்!

நீட்டை தமிழகம் மட்டும் தீவிரமாக எதிர்ப்பதற்கு பல விசேசமான வரலாற்றுக் காரணங்கள் உள்ளன!

அடிப்படையில் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையோர் பொதுமருத்துவமனையை நாடக் கூடியவர்களாக உள்ளனர். இந்தியாவை ஒப்பிடும் போது இங்கு தான் அரசு பொது மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன! இங்கு பொது மருத்துவ சேவை மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. இது பிரிட்டிஷாராலேயே உருவாக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சியிலேயே ஆழமாக காலூன்றியது! அதை கழக ஆட்சியாளர்களும் இயன்றவரை பராமரித்தே வருகின்றனர்.

நீட் தேர்வு திணிக்கப்படும் போது மருத்துவக் கல்வியில் எளிய பிரிவினரிலும், நடுத்தர பிரிவினரிலும் இருந்து மாணவர்கள் வருவது முற்றிலும் தடைபடும். அதனால், அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் கிடைக்க மாட்டார்கள்! இது பொது சுகாதார கட்டமைப்பையே காலி செய்துவிடும். பொது சுகாதார கட்டமைப்பு மாத்திரம் வலுவாக இல்லையென்றால், நாம் கொரானா போன்ற சவால்களை ஒரு போதும் சமாளிக்க முடியாமல் போயிருக்கும்!

நீட் தேர்வின் பின்புலம் என்பது மருத்துவ கல்வி பெருவணிகம் சார்ந்ததாக பார்த்த நிதி ஆதியோக்கின் கண்ணோட்டத்தில் கட்டமைக்கப்பட்டது. இதில் வசதி படைத்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்விக்குள் நுழையும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். அதாவது, ப்ளஸ் டூ மதிப்பெண் போதாது. தனியாக பிரைவேட்டில் படித்து வா, என்பதோடு, மருத்துவ கல்லூரிகளின் பீஸ் ஸ்டெக்சரை அவர்கள் விரும்பிய வண்ணம் உயர்த்திக் கொடுத்துவிட்டனர். அத்துடன் மிகப் பெரிய சலுகையாக மொத்த மதிப்பெண் 700 ல் 135 மதிப்பெண் எடுத்தாலே பாஸ் தான். நீங்க அட்மிஷன் போட்டுக்கலாம் என்ற சலுகையும் கொடுத்துட்டாங்க.

அதாவது, ஒரு எக்ஸாமிலே நீங்க 20%க்கும் குறைவான மார்க் வாங்கினாலே பாஸ் மார்க் போடுவது எப்படி நல்ல தேர்வு அணுகுமுறையாக இருக்க முடியும்? ஆனால், பணக்கார மக்கு பசங்கள் கிட்ட தனியார் கல்லூரிகள் கல்லா கட்டுவதற்காக மருத்துவ கல்வியை தரக்குறைவாக மாற்றியுள்ளது நீட் தேர்வு!

ஆனால், ஒன்று இதை ஆரம்ப நிலையிலேயே வலுவாக எதிர்க்க நாம் தவறிவிட்டோம். எதிர்த்தோம், எதிர்க்காமல் இல்லை. முக்கியமாக நாம் செய்யத் தவறியது என்னவென்றால், இதை தேசிய அளவில் முன்னெடுத்து அம்பலப்படுத்தி இருக்க வேண்டும். இதை தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து கூட செய்திருக்கலாம். மற்ற மாநிலங்களுக்கு இங்கிருந்து கல்வியாளர்கள் குழுவை அனுப்பி பேச வைத்திருக்கலாம்! அங்குள்ள கட்சித் தலைவர்களிடம் லாபி செய்திருக்கலாம் இவை எதுவுமே நடக்கவில்லை.

தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளும் பிளவுண்டு இருப்பதை தேசிய கட்சிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, அவர்கள் ஒரு பிரச்சினையில் ஒரே நிலைப்பாட்டை எடுக்க முடியாதவண்ணம் நிர்பந்தங்களை செய்தே தமிழகத்திற்கு பல அநீதிகளை சாத்தியப்படுத்தி விடுகின்றனர். இப்போதும் பாஜக நிர்பந்தத்தால் அதிமுக முழுமனதோடு எதிர்க்கமுடியாமல் தான் உள்ளது.

பாராளுமன்ற மாநிலங்களவையில் மற்ற தமிழக எம்.பிக்களோடு அதிமுக எம்பிக்கள் எதிர்க்க துணியவில்லை. இப்போதும் கவர்னரை கண்டிக்க தயாரில்லை என்பதையெல்லாம் மறுக்க முடியாது. எனினும், நீட்டை எதிர்க்காவிட்டால் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தால் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் நீட் எதிர்ப்பில் திமுக வெற்றி பெற்றுவிடக் கூடாதே என்ற போட்டி அரசியலும் அவர்களை பிடித்தாட்டுவது அவர்களின் அழுகுணி அரசியலில் நமக்கு தெரிய வருகிறது. எனினும் கூட, அவர்களையும் அரவணைத்தால் மட்டுமே இதை சாத்தியப்படுத்த முடியும் என்பதை திமுக உணர்ந்து செயல்பட்டது இன்றைய சட்டசபை நிகழ்வில் தெட்டென வெளிப்பட்டது. இந்த பக்குவம் மிக முக்கியமாகும்.

மத்திய பாஜக அரசு பெரு முதலாளிகளின் வணிக நலன்களை மட்டுமே கணக்கில் கொண்ட அரசு என்பது பல நேரங்களில் நாம் கண் கூடாக உணர்ந்துள்ளோம். அதிலும் குறிப்பாக, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை தமிழ்மாநில அரசு செயல்படுத்தவிடாமல் அது தடுத்து நிறுத்திய ஒரு உதாரணம் போதுமானது! ஆக, தனியார் மருத்துவ கல்லூரிகள் பண வசூல் செய்து கொழுக்க வேண்டும். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு இன்னும் வளமான எதிர்காலத்தை உறுதிபடுத்த வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து அவர்கள் சுலபத்தில் பின் வாங்கமாட்டார்கள்.

ஆகவே தான், இதில் அகில இந்திய அளவில் ஒரு கருத்தொற்றுமையை உருவாக்கத் தீயாக நாம் களம் காண வேண்டும். அதை சாத்தியப்படுத்தும் போது, பாஜக அரசுக்கு பணிவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை வரும்.

தற்போது கூட, இந்த சிக்கலான சீக்குபிடித்த கவர்னரை அவர்கள் தமிழகத்தின் தலையில் திணித்து நமக்கு சோதனை கொடுப்பதை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் தான் கவர்னர் இங்கிருந்து மசோதாவை அனுப்பி வைப்பார். இவர் மத்திய அரசின் ஒரு கைக்கூலி அவ்வளவே. எய்தவன் இருக்க நாம் அம்பை நொந்து என்ன பயன்? ஆனால், அந்த அம்பு இன்று சட்டமன்றம் ஒருமித்து எடுத்த வரலாற்று தீர்மானத்தால் நொந்து போயிருக்கும் என்பது நிஜம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time