இராமானுஜர் சிலை சொல்லும் அரசியல் என்ன?

- சாவித்திரி கண்ணன்

மிகப் பிரம்மாண்ட 216 அடி இராமானுஜர் சிலையின் உள் நோக்கம் என்ன? பெருமாளுக்கு இல்லாத பெருமையை இராமானுஜருக்கு ஏன் தருகிறார்கள்? அவர் உண்மையில் சீர்திருத்தவாதியா? எனில், அவரை பின்பற்றும் ஜீயர்களும், ஆச்சாரிகளும் ஏன் சமத்துவம் பேணவில்லை? இராமானுஜரை முன்னெடுக்கும் சமூக, கலாச்சார, அரசியல் என்பது என்ன?

1,400 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டத்தை முன்னெடுத்து ஐம்பொன்களால் ஆன சிலை, அதன் பீடத்தில் 54 தாமரை இதழ்கள், தலா 18 சங்குகள்,சக்கரங்கள், 36 யானைகள்,இசை நீரூற்று, 108 கோவில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு உள்ளன. இவ்விழாவிற்காக யாகங்கள், வேள்விகள் நடத்த, மந்திரங்கள் ஓத தெலங்கானா மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பிராமண வேத பண்டிதர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளனர்.

பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கி வரும் 14-ம் தேதி வரை 12 நாட்கள் யாக பூஜைகளில் லட்சுமி நாராயணா மகா யாகம் தொடர்ந்து நடைபெறுகிறது. இதில், 108 திவ்ய தேச சன்னதிகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், தங்க ராமானுஜர் சிலை பிரதிஷ்டை என அமர்க்களப்பட்டுக் கொண்டுள்ளது. இவற்றில் மிக ஆடம்பரமாக ஒரு லட்சத்து 50 அயிரம் டன்கள் நெய் 1035 குடங்களில் ஊற்றப்பட்டு இடையறாது எரியூட்ட பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல அங்குள்ள 114 யாக சாலைகளில் எத்தனை ஆயிரம் டன்கள் தேன், பால், தயிர் உள்ளிட்ட உணவு பொருட்கள் எவ்வளவு பிரம்மாண்டமாக செலவழிக்கப்பட்டு வருகின்றன என்ற தகவல்களை கேட்டால் மலைப்பாக உள்ளது.

தற்போது அங்கே தினசரி 4 வேதங்களுக்கான பாராயணம், 10 கோடி அஷ்டாக் ஷரி மகா பூஜை, புராண, இதிகாச, ஆகம பாராயணம் போன்றவை நடைபெற்ற உள்ளது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.

ஹைதராபாத்தில் இருந்து இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் அனைத்து தடங்களும் புதுப்பிக்கப் பட்டுள்ளது. ராமானுஜரின் சிலை இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து மிரட்டுகிறது. இவை தவிர உள்ளே முழுக்க, முழுக்க தங்கத்தாலான 120 கிலோ  இரானுஜர் சிலை உள்ளது!

மேற்படி நிகழ்வுகளுக்கும் பக்தி, ஆன்மீகத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா தெரியவில்லை. நடந்து கொண்டிருப்பது ஆன்மீகமல்ல, மிகப் பெரும் ஆடம்பரங்கள் என்பதை எந்த பக்தனும் எளிதாக உணர முடியும்!

இராமானுஜரை சமத்துவத்திற்கானவர் என்று சொன்னால், அங்கே, அதற்கான எந்த அடையாள நிகழ்வோ, கருத்தாக்கமோ இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அங்கே முழுக்க, முழுக்க பிராமணர்களின் சடங்குகளே கோலோச்சுகின்றன! மக்களாட்சி தத்துவமே பின்னுக்கு தள்ளப்பட்டு மன்னராட்சி கால சடங்குகள் அதே தொனியில் நிகழ்கின்றன!

இது ஒருபுறமிருக்க இராமானுஜர் என்ற தத்துவஞானி தாழ்த்தப்பட்டவர்களுக்கானவராக உருவகப்படுத்தப் படுகிறார். ஆனால், நடைமுறையில் அவர் தாழ்த்தப்பட்டவர்களால் கொண்டாடப்படவில்லை. அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சொர்க்கத்திற்கு போகும் மந்திரத்தை உரைத்ததாக் சொல்லப்படுகிறது. அப்படி அவர் உரைத்த மந்திரம் ஓம் நமோ நாராயணாய என்பதே! இதை ராமானுஜர் உரைப்பதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே பகிரங்கப்படுத்தியவர் திருமழிசை ஆழ்வார் எனும் போது இதிலும் ஒரு புதுமை தெரியவில்லை.

இராமானுஜர் என்பவர் பற்றி சுருக்கமாக பார்ப்போம்!

இந்தியத் தத்துவ வரலாற்றில் அத்வைதத்திற்கு ஆதிசங்கரர், துவைதத்திற்கு மத்துவர் என்பது போல விசிஷ்டாத்வைத்திற்கு  இராமானுஜர் என்பது நாம் அறிய வேண்டியதாகும்! இவர்கள் மூவரும் பிரம்ம சூத்திரம் என்ற நூலுக்கு உரை எழுத நேர்ந்ததில் மூன்று வகை தத்துவக் கோட்பாடுகள் உருவாகிவிட்டது என்பதே நிதர்சனம்!

இராமானுஜர் காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பெரும்புதூரிலே பிறந்தவர், வளர்ந்தவர். பிறகு ஸ்ரீரங்கத்தில் நிலைபெற்றவர்.

சமஸ்கிருதத்திலும், தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞான பண்டிதர்களை ஒன்று திரட்டி, வேத உபநிஷத்துக்கள் குறித்தும், பிரபந்தம் குறித்தும் வாதம் செய்து ஆராய்ச்சிகள் நடத்தினார். தாமே சிலவற்றிற்கு பாஷ்யங்களும் செய்தார்.

இவர் தனது சக்தி அனைத்தையும் ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரகத்தில் புகுத்திவிட்டு திவ்யமந்திரத்தை உச்சரித்தபடியே பெருமாள் திருவடி எய்தினார் என்பது சொல்வழக்காக உள்ளது. ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்ததில், முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவற்றால் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என்பது வரலாறு. இவர் ஒரு சில வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்துள்ளார்.

நியாயப்படி தமிழக மண்ணில் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இராமனுஜருக்கு இங்கு தான் இந்த சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் ஏன் என்று தெரியவில்லை. தங்களின் இந்த அரசியல் தமிழகத்தில் செல்லுபடியாகாது என நினைத்திருக்கலாம்!  ஹைதராபாத், தற்போது இஸ்லாமியர்கள் மிக அதிகம் வாழும் இந்திய பெருநகரம் என்பது கவனத்திற்கு உரியது!

இராமானுசர் இந்தியா முழுமையும் யாத்திரை செய்து வைணவத்தின் பெருமையை எங்கும் பறை சாற்றினார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்று வைணவத்தின் 78 மடங்களை நிறுவினார் என்று சொல்லப்பட்டாலும், இதில் எத்தனை மடங்களில் பிராமணரால்லாதவர்கள் தலைமை பொறுப்புக்கு வந்தார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை. இவர் ஸ்ரீரங்கத்திலுள்ள கோயிலுக்கும், மடத்திற்கும் தலைமைக்கு   வரவேண்டிய விதி முறைகளை வழிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றில் இன்னும் பிராமணர் ஆதிக்கம் மட்டும் தானே கொடிகட்டி பறக்கிறது?  அவரது நூல்கள் பலவற்றிலும் பிராமணர்களை உயர்வாக சித்தரிக்கும் அணுகுமுறையே அதிகம் உள்ளது.

ஆனால், இராமானுஜரை பொறுத்த அளவில் அவர் தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய தன்மைகளோடு இருந்துள்ளார் என்பதை நாம் புறம் தள்ள வேண்டியதில்லை. தாழ்த்தப்பட்டோரை”திருக்குலத்தார்” என்று அழைத்தார். அதற்கு காரணம், அவர் திருக்கச்சி நம்பி போன்ற தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவரிடமிருந்து ஞானம் பெற்றது மட்டுமல்ல, அவர்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று கருதியதும் தான்!

தமிழ் நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து உயிர் நீத்த போதிலும் இராமனுஜர் எந்த ஒரு நூலையும் தமிழில் எழுதவில்லை. அனைத்தும் சமஸ்கிருதமே. அதனால் தான் இந்திய அளவில் அவர் பெரிதாக மதிக்கப்பட்டார்.

# வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் பிரபலமான படைப்பாகும். இது வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல்.

இதைத் தவிர இராமானுஜர் இயற்றியவை:

# உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்லும் வேதாந்த சங்கிரகம்.

# பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகளான வேதாந்த சாரம்வேதாந்த தீபம்

# கீதைக்கு விசிட்டாத்துவ கோணத்தில் எழுதப்பட்ட உரை, கீதா பாஷ்யம்.

# அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும் விளக்கும் நித்யக்கிரந்தங்கள்.

# சரணாகதி, கத்யம்,  பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றி உரைகளான கத்யத்ரயம்.

# ஸ்ரீரங்கநாதனிடம் தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டும் ஸ்ரீரங்க கத்யம்!

# மகாவிஷ்ணுவின்  வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிக்கும் வைகுண்ட கத்யம் .

இவை தற்கால சமூக வாழ்வியலில் எந்த தாக்கத்தையுமோ, பயன்பாட்டையோ நிகழ்த்த உதவாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரபல தொல்லியல் ஆய்வாளரான நாகசாமி தனது ‘இராமானுஜர் மித் அண்ட் ரியாலிட்டி’ என்ற ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூலின் முன்னுரையில் இராமானுஜரைப் பற்றிப் புனையப்பட்ட புனைவுகளும், மரபுக் கதைகளும்  வரலாற்றுச் சான்றுகள் இல்லாதவை என்று குறிப்பிடுகிறார். அத்துடன் தம் நூலானது கல்வெட்டு, ஆவணங்களின் துணையுடன் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுல்லாமல் ராமானுஜர் எழுதிய ஸ்ரீ பாஷ்யத்தில், ”ஆன்ம விடுதலை என்பது அந்தணர், வைசியர்,சத்ரியர் என்ற மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. அது சூத்திரர்களுக்கு என்றும் வாய்க்காது’என்று கூறியிருக்கின்றார் என்பதை வைத்து பார்க்கும் போது இவர்  சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் காட்டியவரே இல்லை. அடிப்படையில் அவர் ஒரு வேதாந்தி மட்டுமே” என ஆணித்தரமாக சொல்கிறார்!

இராமானுஜர் வரலாறை எழுதிய கிருஷ்ணசாமி அய்யங்காரும் இராமானுஜர் வரலாற்றில் சொல்லப்படும் பல கதைகள் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளாக இருக்கவே வாய்ப்புள்ளது என்கிறார். இராமனுஜர் குறித்து ஒரு ‘சமத்துவ பிம்பம்’ வலிந்து கட்டமைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கிறார். ”அவை உண்மையாக இருப்பின், அவர் மரபில் இன்று சூத்திரகளுக்கான இடம் முற்றிலும் இல்லாமல் போனது எப்படி?” என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

பிரபல வரலாற்று ஆய்வாளரும் தமிழ் அறிஞருமான பொ.வேல்சாமி அவர்களிடம் பேசிய போது, ”இராமனுஜர் மற்ற பிராமண மடாதிபதிகளை போல இல்லாமல் சூத்திரர்களிடம் இயல்பாக பழகியுள்ளார். இன்று கருப்பாக இருக்கும் பிராமணர்களில் பலர் அவரால் பிராமணராக்கப்பட்ட பிராமணரால்லாதவர்களாக இருக்க கூடும் என்பது ஒரு நம்பிக்கையாகும்! அதே சமயம் 1908 ஆம் ஆண்டு வெளிவந்த யசோதரகாவியம் என்ற நூலை எழுதிய வெங்கட்ராம அய்யர் என்பவர் ‘இராமனுஜர் வைணவத்தை நிலை நாட்ட சமணர்களை கொன்ற பாவி’ என்று எழுதியுள்ளதை படித்த போது அதிர்ச்சியாக இருந்தது! ஆனால், விவேகானந்தருக்கு இராமானுஜர் மீது ஒரு மரியாதை இருந்தது என்கிறார். இராமானுஜர் பற்றிய இருவேறு கருத்துகளுமே வலுவாக உள்ளன’’ என்கிறார்.

எது எப்படியாயினும் தற்போது இராமனுஜருக்கு சிலை எழுப்பியவர்கள் இராமனுஜரை உண்மையாக நேசிப்பவர்கள் என்றால், 1,400 கோடி ரூபாயை எளிய மக்களின் கல்விக்கும், மருத்துவத்திற்கும், வறுமையை போக்கவும், வயிற்றுக்கு சோறிடவும் அல்லவா பயன்படுத்தி இருக்க வேண்டும்! தற்போது இராமானுஜரை முன் நிறுத்தி இருப்பதில் பலன் பெறுபவர்கள் யார் என்பதை உணர்ந்தால் இதற்கு விடை கிடைக்கும்! இராமானுஜரின் சீடரான துளசிதாசர் எழுதிய இராமாயணம் வட இந்தியாவில் எவ்வளவு படு பிற்போக்குத்தனமான மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பக்தி கலாச்சாரத்தை வளர்த்து எடுத்தது என அம்பேத்கார் விரிவாகவே எழுதியுள்ளார்! பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு பலம் சேர்க்கவும், பெருமாளைவிட, பிராமணர்களின் இமேஜை வலுப்படுத்தவும்  இந்த இராமானுஜர் பிம்பம் பயன்படும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time