உயிர்காக்கும் மருத்துவத் துறை ஊழல்மயமாவதா…? மன உளைச்சலில் தமிழக அரசு மருத்துவர்கள்..!

-சாவித்திரி கண்ணன்

ஆபத்தான வகையில் ஆளைக் கொல்லும் கொரோனாவுக்குப் பிறகு தான் அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவம் மற்றும் அரசு மருத்துவர்களின் சேவை ஆகியவை தமிழகத்தில் கவனம் பெற்றன! முதல் மூன்று  மாத காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டிருந்தன. சாதாரண நோய்க்குக் கூட தனியார்கள் அப்போது மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டனர். அதே சமயம் அரசு மருத்துவர்கள் அஞ்சாமல் களம் கண்டனர். இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கொரானா தொற்றுக்கு ஆளானார்கள்.. இதில் மதுராந்தகம் டாக்டர் சுகுமாறன், தூத்துக்குடி டாக்டர் கல்யணராமன் ஆகிய இருவர் பலியானார்கள்.ஆனபோதிலும் அரசு மருத்துவர்கள் பின் வாங்காமல் தங்கள் மருத்துவ சேவையை அர்ப்பணிப்புடன் தருகின்றனர்! இதனால், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு குறைவாக உள்ளதோடு, பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சாதாரண காலத்தில் சேவை செய்வதைக் காட்டிலும் கொரானா காலத்தில் வேலை செய்வது அரசு மருத்துவர்களுக்கு ஒரு  சவாலாகவே உள்ளது. ஏனென்றால், பி.பி.இ.கிட் எனப்படும் பாதுகாப்பு உடையணிந்து நீண்ட நேரம் பணி செய்யும் மருத்துவர்கள் குறித்த நேரத்தில் தண்ணீர் குடிக்க முடியாமலும், சிறுநீர் கழிக்க முடியாமலும், தங்களை வருத்திக் கொண்டு பணி செய்கின்றனர். நீண்ட நேரம் முகக்கவசம் அணிவதால் காதுகளில் வலியுடனும், தழும்புகளுடனும் உள்ளனர். கோவிட் பணி, குவாரண்டைன் என பல நாட்கள் மருத்துவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து, பல சிரமங்களுடன் பணி செய்து வருகின்றனர். இதே நிலையைத் தான் சுகராத்துறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் சந்திக்கின்றனர்.மேலும் எவ்வளவு பாதுகாப்போடு பணி செய்தாலும், நூறு சதவீதம்  நோய்த்தொற்று ஏற்படாது என சொல்ல வாய்ப்பில்லை.

இருப்பினும் இந்த அளவு உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும்   நாட்டிலேயே குறைவான, அவமானகரமான ஊதியம் தரப்படுகிறது. நியாயமான ஊதியம் மறுக்கப்பட்ட டாக்டர்களும், செவிலியர்களும் செய்த சாதனைகளை தனக்கான பெருமையாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு விருதுகளும், பாராட்டுகளும் பெறும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறையில் பணிபுரியும் டாக்டர்கள் உட்பட அனைவரையுமே கொத்தடிமைகள் போல நடத்த முயற்சிக்கிறார்.

அதாவது மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட,  மாத ஊதியம் 40 ஆயிரம்  முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை குறைவான ஊதியம் இங்குள்ள மருத்துவர்களுக்குத்  தரப்படுகிறது. அதிலும் குறிப்பாக மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியத்தை விட குறைவாக, இங்குள்ள எம்.பி.பி.எஸ்., ஸ்பெஷலிஸ்டு மற்றும் சூப்பர் ஸ்பெஷலிஸ்டு மருத்துவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் பேரணியில் கலந்துக் கொண்டபொழுது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் நான்கு வகைப்படும்.  அரசு மருத்துவமனைகள்  மருத்துவ கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள்-24,

மாவட்ட தலைமை மருத்துவமனைகள் -29,

தாலுகா மருத்துவமனைகள் -273

ஆரம்ப சுகாதார நிலையங்கள் -1806

இவை DPS.DMS,DME  ஆகிய மூன்றுதுறைகளின் கீழ் வரும். ஒவ்வொரு துறையின் கீழும் தலா 6,000 மருத்துவர்கள் தான் உள்ளனர்.இதில் சுமார் ஆறாயிரம் மருத்துவர்கள் டாக்டர் படிக்கும் மாணவர்களுக்கு பாடமும் நடத்த வேண்டும். மருத்துவமனைகளில் டிரீட்மெண்டும் தர வேண்டும். இதே போல செவிலியர்கள் எண்ணிக்கையும் மிகக் குறைவு மொத்தமே 39,000 செவிலியர்கள் தான் உள்ளனர். ஆனால், நமக்குத் தேவைப்படுவதோ சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள்!

இதே போல கொரானாவை முன்னிட்டு தற்காலிக செவிலியர் பணிக்கு ஓராண்டு ஒப்பந்த பணியாளர்களாக எடுக்கப்பட்ட செவிலியர்களுக்கு அடிமாட்டுச் சம்பளமாக 14,000 நிர்ணயிக்கப்பட்டது. இதையும் முதலில் காண்டிராக்டர் வழிமுறையில் தமிழக அரசு வேலைக்கு எடுக்க முயற்சித்தது. அந்த கண்டிராக்டர்களோ, இதில் மூன்றுமாத சம்பளத்தை கமிஷனாகக் கேட்ட கொடுமையும் அம்பலமானது. கொரானா காலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வேலைக்கு வந்த விளிம்பு நிலை மகளிரிடம் மனசாட்சியில்லாமல் காண்டிராக்ரட் மூலமாக பணம் பறிக்க திட்டமிட்ட ஒரு சுகாதாரத்துறை அமைச்சரை இதுவரையில் தமிழகம் கண்டதில்லை. சுகாதாரத்துறையில் வாங்கப்படும் எந்தவொரு மருத்துவ கருவிகளும்,பொருளுமே அமைச்சருக்கு கமிஷன் போகாமல் வருவதில்லை! அந்த அளவுக்கு சுகாதாரத்துறையைச் சூறையாடி வருகிறார் விஜயபாஸ்கர்.

கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி இல்லாமல் வெளியே இருந்து மருத்துவம் எடுக்கிறார்கள்

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் தான் அரசு மருத்துவமனையை நாடி வரும் மக்கள் அதிகம். ஆனால், அதற்கேற்ப அரசு மருத்துவர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. தற்போது 18,000 மருத்துவர்கள் தான் ஒட்டுமொத்த தமிழக மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர். ஆனால், தேவைப்படுவதோ 40,000 மருத்துவர்கள்! அரசு மருத்துவமனைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. கூட்ட நெரிசலில் சிகிச்சை அளிப்பது பெரும் சவாலாகவே மாறியுள்ளது. மக்களின் தேவைக்கேற்ப மருத்துவமனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கிறதா என்றே தெரியவில்லை! அரசு மருத்துவமனைகளையும் அதில் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரு சுமையாக அரசு பார்க்கிறதோ என்று கூட தோன்றுகிறது. ஏனென்றால், இருக்கும் மருத்துவமனைகளிலேயே கூட அடிப்படை வசதிகளைச் செய்து தருவதிலும், வேலைக்குத் தக்க ஊதியம் தருவதிலும் அரசு ஆர்வம் காட்டுவதில்லை.

படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுத்து இருக்கும் நோயாளிகள்

தனியார் மருத்துவமனைகள் தான் கணக்கின்றி அதிகரித்து வருகின்றன! ஏழைகள் கூட,சில சமயங்களில் அரசு மருத்துவமனைகளின் இடப்பற்றாகுறை காரணமாக தனியார் மருத்துவமனைகளை நாடி பணம் கட்டமுடியாமல்  துன்புறுகின்றனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் மருத்துவர்கள் மேற்படிப்பான எம்.எஸ்,எம்.டி ஆகியவை படிப்பதற்கு 50% ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது. தற்போது தனியார் கல்லூரிகள் முதலாளிகள் செய்த ’லாபி’யால் அது பறிபோய்விட்டது. தனியார் மருத்துவ கல்லூரிகள் வளர்ச்சிக்கும், அதில் படித்து வரும் மாணவர்களின் வாய்ப்புக்கும் தற்போது அரசு அதிக முக்கியத்துவம் தந்து வருகிறது. அரசு கல்லூரியையும், அரசு மருத்துவமனை பணியையும் நம்பி வரும் எளியவர்களை அரசே புறக்கணிக்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு முறை மீடியாக்களிடம் பேசும் போது,’’தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்களுக்கு முப்பதாயிரம், நாற்பதாயிரம் தான் சம்பளமாகத் தரப்படுகிறது. ஆனால்,அந்த சம்பளத்தைக் காட்டிலும் அதிகமாகவே தமிழக அரசு சம்பளம் தருகிறது’’ என எகத்தாளமாகப் பேசினார். இதற்கு அரசு மருத்துவர்கள் தரப்பில் ஆக, அமைச்சர் தனியார் மருத்துவமனைகளை முன்மாதிரியாகக் கொண்டு தான் அரசு டாக்டர்களை மதிப்பிடுகிறாரா? மேலும் அரசு மருத்துவர்களுக்குச் சம்பள உயர்வு தருவதைத் தனியார் மருத்துவமனை முதலாளிகள் தடுத்து வைத்திருக்கிறார்களா? அரசாங்கம் மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் எங்களிடம் வேலை பார்க்கும் மருத்துவர்களும் கேட்பார்கள். ஆகவே தர வேண்டாம் என அமைச்சர் தனியார் முதலாளிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருகிறாரா..? என்றெல்லாம் யோசிக்க வைக்கிறது என்கிறார்கள்!

உண்ணாவிரதம் இருக்கும் மருத்துவர்கள்

தமிழக அரசு மருத்துவர்களைப் பொறுத்தவரை  நியாயமான ஊதியம் வேண்டிக் கடந்த ஐந்து  ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத்துறை அமைச்சர் , நிதித்துறை செயலாளர் மற்றும் துணை முதல்வரை சந்தித்து வேண்டியும் பலனில்லை!.  மேலும் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நீண்ட காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசின் மனம் இரங்கவில்லை. அரசு டாக்டர்கள் என்றாலே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எட்டிக்காயாக உள்ளது என்பது தான் மிகுந்த வேதனையளிக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வாசலில், இரவு,  பகலாக, கொசுக்கடியில், தூசியில், படுத்த படி சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர் மருத்துவர்கள்.. ஒரு தடவையல்ல மூன்று தடவை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டும் அரசாங்கத்தின் மனசாட்சி விழிக்கவில்லை.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 40 பெண் மருத்துவர்கள் உள்பட 118 மருத்துவர்களை 400 கிமீ முதல் 500 கிலோமீட்டருக்கு அப்பால் தண்டனை பணியிடமாற்றம் செய்ததோடு,17 பி குற்றவியல் ஆணையும் பதிவு செய்தது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மருத்துவர் சங்கத் தலைவர் லஷ்மி நரசிம்மன் உயிரிழந்தார்.

உயிரிழந்த அரசு மருத்துவர்கள்

இது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 28 ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இடமாற்றத்தை  ரத்து செய்ததோடு, ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. இருப்பினும் 7 மாதங்களுக்கு பிறகு தான்  அரசு  இடமாற்றத்தை ரத்து செய்தது. இருப்பினும் இன்னுமே 20 மருத்துவர்களுக்கு முந்தைய பணி இடம் தரப்படவில்லை. அதுவும் 17 B  குற்ற குறிப்பாணை  ரத்து செய்யப்படாததால், மூத்த மருத்துவர்கள் பதவி உயர்வு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எந்த கோரிக்கைக்காகத் தமிழக அரசு மருத்துவர்கள் தண்டனை அனுபவித்தார்களோ, அந்த கோரிக்கையை, நீதிமன்றம் வலியுறுத்திய பிறகும் இன்னும் அரசு நிறைவேற்றவில்லை.

இந்த ஆட்சியாளர்கள் தங்களின் (எம்.எல்.க்கள்) சம்பளத்தையும்,சலுகைகளையும் 2017ல் அதிரடியாக இரு மடங்கு உயர்த்திக் கொண்டனர். ஆனால், உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்கள் சம்பளத்தை மட்டும் உயர்த்த மறுத்து தனியார் மருத்துவமனையோடு ஒப்பிடுகிறார்கள்! கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதை விடத் தமிழக எம்.எல்.ஏக்களின் சம்பளம் கிட்டதட்ட இருமடங்காகும்! ஆனால், தமிழக மருத்துவர்களுக்கு   கர்நாடக மாநில அரசு மருத்துவர்களுக்கு வழங்குவதைப் போன்ற ஊதியத்தைத் தரக் கேட்டால் மட்டும் கசக்கிறது! தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும்,சுகாதாரத்துறை பணியாளர்களுக்கும் நியாயமான ஊதியம் வழங்குவதோடு, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளியவர்கள் சிகிச்சைகள் பெற நல்ல வசதிகள் செய்து தர வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time