கெடுபிடிகளுடன் புத்தகக் கண்காட்சி சாத்தியமா? சவாலா?

- அஜித கேசகம்பளன்

கொரானா பீதியைக் காட்டி சட்டமன்ற தேர்தல்களோ, உள்ளாட்சி தேர்தல்களோ தள்ளிப் போடப் படுவதில்லை. புத்தகக் கண்காட்சியை மட்டும் தடுத்துவிட்டு, ஏகப்பட்ட கெடுபிடிகளோடு தற்போது நடத்தச் சொல்கிறார்கள்! உற்சாகத்தோடு நடத்த வேண்டிய விழாவை, உறுத்தலோடு நடத்தச் செய்கிறார்கள்!

தமிழ் பதிப்பகங்களின் ஒரே நம்பிக்கை வருடத் தொடக்கத்தில் வரும் சென்னை புத்தக கண்காட்சி தாம்! இந்த வருடம் தொடக்கத்தில் நடக்க இருந்ததை, கோவிட் பரவலை காரணமாக்கி, தமிழக  அரசு நடத்தக் கூடாது என்று தடை விதித்துவிட்டது! இந்த கடைசி நேர அறிவிப்பால் ஜனவரி 6 தொடங்க இருந்த சென்னை புத்தகக் கண்காட்சி நிறுத்தப்பட்டது!

இந்த நேரத்திற்குள் அனைத்து பதிப்பாளர்களும் புத்தக காட்சிக்குத் தயாராகிக் கொண்டு இருந்தார்கள். பலர் தயாராகிவிட்டார்கள். அரசின் இந்த அறிவிப்பு மிகப் பெரிய இடியாக அமைந்தது பதிப்பாளர்களுக்கும், மற்றும் புத்தக காட்சியை நடத்தும் பபாசிக்கும்!

வருடம் முழுவதும் பதிப்பகத்தை நடத்த தமிழக பதிப்பாளர்கள் பெரிதும் நம்பி இருப்பது சென்னை புத்தக காட்சியை மட்டுமே. பொங்கலை ஒட்டி வரும் இந்த புத்தக கண்காட்சி மிகப் பிரபலமாகும். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருந்தும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த புத்தக காட்சிக்கு வருகை தந்து புத்தகம் வாங்கி செல்வார்கள். பள்ளி,கல்லூரி, நூலகங்கள் படை எடுத்து வருவார்கள்! பதிப்பகங்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த ஆண்டு இந்த வாய்ப்பு கொரானா பயத்தால் தள்ளிப்போனது!

அடுத்து எப்பொழுது நடக்கும் என்று புரியாத நிலை. புதிதாகப் பதிப்பித்த புத்தகங்கள் குடோனில் வந்து சேர்ந்துவிட்டது. பெரும்பாலான பதிப்பாளர்கள் கடன் வாங்கி புத்தகங்களை பதிப்பிப்பவர்கள். பொங்கல் ஒட்டி வரும் புத்தக காட்சிதான் அவர்களுக்கு பெரும் பலமே. மக்களும் ஜனவரி மாதம் சென்னை புத்தக காட்சி நடக்கும் என்று தமிழகம் முழுவதும் தெரிந்து இருக்கும்.

புத்தக காட்சி தள்ளிப் போனதால் மார்ச், அல்லது ஏப்ரல் உலக புத்தக தினத்தை ஒட்டி சென்னை புத்தக காட்சி நடக்கும்  என்று அனைவரும் பேசிக் கொண்டு இருந்தனர். , அரசின் கட்டுப்பாடுகள் இன்னும் முழுவதும் தளர்த்தவில்லை, மற்றும் பள்ளி, கல்லூரி தேர்வும் தொடங்கிவிட்டது.

நிலைமை இப்படி இருக்கக் கடந்த வாரம் பப்பாசி நிர்வாகிகள் முயற்சி எடுத்து தமிழக முதல்வரை சந்தித்து கோடிக்கணக்கான ரூபாய் போட்டு புத்தகம் அச்சடித்து இருக்கிறது அதனால் புத்தக காட்சி நடத்த அனுமதி தாருங்கள் என்று கேட்டு உள்ளனர். தலைமைச் செயலாளரிடம் கலந்து பேசியுள்ளனர். மறுநாளே தமிழக அரசு இந்த மாதம் Feb 16 முதல் March 06 வரை நடத்த அனுமதி கொடுத்துவிட்டது.

ஆனாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பரப்புரை பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் சூழல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பார்க்கும் போது கண்காட்சி நடந்தாலும் கூட்டம் வருமா?  நஷ்டம் இல்லாமல் தப்ப முடியுமா? என்ற அச்சம் பதிப்பாளர்களிடம் எழுந்துள்ளது.

பிப்ரவரி 6 ல் நடந்த விருதாசல விருதகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

ஏற்கனவே கொரானா பீதியைப் பரப்பி சமூக இயக்கத்தையே முடக்கி பல தொழில்களை படுக்க வைத்துவிட்டது அரசாங்கம். இந்த அச்சத்தையெல்லாம் நொறுக்கி ஒருபுறம் டாஸ்மாக் பார்கள், காய்கறி கடைகள், மீன் சந்தைகள், ஏகப்பட்ட கோவில் கும்பாபிசேஷகங்கள், மெரீனா வளாகம் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது! ஆனால்,இங்கு பாவப்பட்டவன் புத்தகச் சந்தை நடத்தும் பதிப்பாளர்கள் தான் போலும்.

புத்தக காட்சி நடத்த அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை  பார்ப்போம்;

#  65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்து இருப்பவர்களைப் புத்தக காட்சிக்குள் அனுமதிக்கக் கூடாதாம்!.அப்படியானால் பல எழுத்தாளர்களும், பதிப்பாளர்களுமே அரங்கத்திற்குள் வர முடியாதே! முதலமைச்சர் உள்ளிட்ட நிறைய அமைச்சர்கள் வர முடியாது. குழந்தைகளோடு வரக் கூடாது என்பது குடும்பத்துடன் வருபவர்களை தடைபடுத்தும் ஆயுதமாகக் கூடாது! புத்தகம் வாங்குபவர்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கணிசமாக உள்ளனர்.

#  ஒரு அரங்கில் 3 வாசகர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். அவர்கள் சென்ற பிறகு அடுத்தவர்களை அனுமதிக்க வேண்டும். இது நடைமுறை சாத்தியமில்லாதது. தடுக்கப்பட்ட வாசகர் அடுத்து காலியாக இருக்கும் அரங்கை தேடி சென்றுவிடுவார்.


#  ஒவ்வொரு வாசகருக்கும் புத்தகங்களைப் பார்வையிட, வாங்க அதிகபட்சம் 15 நிமிடம் அனுமதி கொடுக்கலாம்.சிலர் தங்கள் நூலகத்திற்கு, கல்வி நிறுவனத்திற்கு புத்தகம் வாங்க வருவார்கள். அவர்களுக்கு இந்த நேரம் போதுமானதாக இருக்காது.

# ஒவ்வொரு அரங்கிலும் இரண்டு வாயில் அமைக்க வேண்டும். ஒரு வாயிலில் உள்ள சென்று மற்றொன்றில் வெளியே வர வேண்டும். ஒரேயோரு சிறிய அரங்கை எடுத்தவர் எப்படி இரு வாசல் தரமுடியும்? அப்படியானால் அவர் புத்தகத்தை எங்கே அடுக்குவார்?

#  காலை 10 மணி முதல் மாலை 8 மணிக்குள் புத்தக காட்சி நடத்த வேண்டுமாம்! இந்த நேரக் கட்டுபாடுகள் வெளியில் நடக்கும் எந்த கடைக்கும், சந்தைக்கும் இல்லாத போது புத்தகக் கண்காட்சிக்கு மட்டும் ஏன்? 7 மணிவாக்கில் தான் பலர் கண்காட்சிக்குள் நுழைவார்கள். அவர்கள் இரவு 9.30 வரை தேடியலைந்து வாங்கிச் செல்வார்கள்.

இப்படி அரசின் கட்டுப்பாடுகளுடன் அறிவிப்பு பத்திரிகைகளில் வெளிவந்த போதே மக்களுக்கு எரிச்சலாகிவிட்டது. மிகப் பெரும் விருந்து வைத்துவிட்டு, தலை வாழை இலையில் வரிசையாக பரிமாறிவிட்டு, ”வாயை மூடிக் கொண்டு, சீக்கிரமாக சாப்பிடு” எனச் சொல்வது போல உள்ளது.

இந்த கெடுபிடிகள் கண்காட்சிக்கு செல்ல ஆசைப்படும் கணிசமானவர்களை தடுத்துவிடுவதாக உள்ளது. இவ்வளவு நெருக்கடிகளுக்கு பணிந்து பப்பாசி  நடத்தத் தான் வேண்டுமா..? என்ற கேள்வி ஸ்டால் எடுத்தவர்கள் மனதில் எழுந்துள்ளது.

புத்தகம் வாங்குவது என்பது மளிகை பொருட்கள் வாங்குவது போல் அல்ல. எவ்வளவு பெரிய வரிசை நின்றாலும் கடைசி வரை நின்று வாங்கி செல்வதற்கு.பணமதிப்பு இழப்பு ஏற்பட்ட போது நாள் கணக்காக வரிசையில் நின்று பணத்தை எடுத்து செல்வது போல் அல்ல புத்தகம் வாங்குவது.

ஆங்கில புத்தக விற்பனையே குறைந்து இருக்கும் சூழலில் அரங்கில் 3 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் மேற்பட்டவர்கள் வெளியே காத்திருந்து அவர்கள் வெளியே சென்ற பிறகு உள்ள செல்லவேண்டும் என்ற விதி புத்தகம் ஒன்றும் ATMல் எடுக்கும் பணமோ, அடுத்த வேலை உணவுப் பொருட்களும் அல்ல.


அப்படி எந்த வாசகரும் காத்திருந்து வாங்கி செல்வது என்பது நடக்காத காரியம் ஆகும்.  புத்தக விற்பனை என்பது விறுவிறுப்பாக நடக்கும் வியாபாரமும் இல்லை. 10 பேர் உள்ளே வந்தால் 3 நபர்கள் வாங்குவார்கள் சில நேரம் 10 நபர்களும் வாங்காமல் செல்லவும் வாய்ப்பு உண்டு.

சினிமா எடுப்பதைவிட அதை வெளியீடும் தேதி, மாதம் மிக முக்கியம் என்று சொல்வார்கள்.

கிரிக்கெட் போன்று பெரிய நிகழ்வு நடக்காத நாள், மாணவர்களுக்குத் தேர்வு நடக்காத நாள், தேர்தல் நடக்காத நாள் என்று அனைத்தும் பார்த்து வெளியிடுவார்கள். அப்படித்தான் புது படங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை வெளியிடுவார்கள் அடுத்து இரண்டு நாள் விடுமுறை என்பதால்  கூட்டம் வரும் என்று எண்ணத்தில் அப்படி பல படங்கள் ஓடியுள்ளது.

இவை எல்லாம் பழுத்த அனுபவமுள்ள பப்பாசி நிர்வாகிகளுக்கு தெரியாததல்ல!

குறிப்பாக, பெருந்திரள் மக்கள் பங்கு பெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை உச்சத்தை தொட்டுள்ள நேரத்தில் கண்காட்சியை தொடங்கி இருக்கிறார்கள். அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கவனம் எல்லாம் உள்ளாட்சி தேர்தலை மையமாக்கி குவிந்திருப்பதை பப்பாசி ஏன் கவனம் கொள்ள தவறிவிட்டது எனத் தெரியவில்லை.

கோடிக்கணக்கான ரூபாய் முடங்கி உள்ளது என்று சொல்லும் பப்பாசி, உளள்ளட்சி தேர்தல், மாணவர்கள் தேர்வு, அரசு முழுவதும் விலக்காத கட்டுப்பாடுகள் என்று இருக்கும்பொழுது எப்படி புத்தக விற்பனை நன்றாக நடைபெறும் என்று சற்று யோசித்திருக்கலாம்.

இந்த மாதம் புத்தக காட்சியை நடத்தலாமா? அல்லது மார்ச் ஏப்ரலில் நடத்தலாமா? என்று பதிப்பாளர்கள் கூட்டம் போட்டு  பப்பாசி கருத்துக் கேட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

இன்னும் ஒரு மாதம் கடந்தால் அரசும் கட்டுப்பாடுகளை முழுவதும் நீக்கி இருக்கும், மாணவர்கள் தேர்வும் முடிந்து இருக்கும். தேர்தலும் இருக்காது. அவசரத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது. புத்தக விற்பனைதான் முக்கியமே தவிர, அவசரம் அவசரமாக உடனே நடத்தவேண்டும் என்பது கட்டாயம் இல்லையே ?

பப்பாசி, பதிப்பாளர்கள் நலனுக்காக  இந்த முடிவை எடுத்தார்களா? அல்லது நெருக்கடியில் எடுத்தார்களா? புத்தகக் கண்காட்சி நன்றாக நடந்தாலும்- இல்லையென்றாலும் பப்பாசிக்கு அமைப்புக்கான வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், பதிப்பாளர்களுக்கு ?

சமீபத்தில் பல பதிப்பகங்கள் இந்த தொழிலிருந்தே விலகி வருகிறார்கள். இன்னும் சிலர் விலக நாள் பார்த்துக் கொண்டுள்ளனர். பெரிய பதிப்பகமான Westland பதிப்பகத்தை நடத்துவது அமேசான் நிறுவனமாகும். ஆனால் அமேசானாலே நடத்த முடியாமல் பதிப்பகத்தை மூடப் போவதாக அறிவித்துள்ளது. ஆங்கில புத்தகத்தின் நிலைமை இப்படி இருக்கத் தமிழ் பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.  மின் புத்தகங்களின் வரவு, டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் வீச்சு பதிப்பகத்துறையை கடுமையாக பாதித்து உள்ளது.

எப்படியோ எல்லாம் நல்லபடியாக நடந்து வாசகர்களும், பதிப்பாளர்களும் பலனடைந்தால் மகிழ்ச்சி தான்!

கட்டுரையாளர்; அஜித கேசகம்பளன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time