இன்னும் எத்தனை காலம் தான் அரசு துறைகளில் எந்த ஒரு சேவை பெறுவதற்கும் கையூட்டையோ, கால தாமதத்தையோ எதிர்கொள்வது? இதற்கு முடிவுகட்ட சேவை பெறுவதை உரிமையாக்கவும், குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை வழங்குவதை அரசின் கடமையாக்கவுமான சட்டத்தின் தேவையை பேசுகிறது இக்கட்டுரை!
அறப்போர் இயக்கம், பொதுமக்கள் 2000 பேரிடம் ஒரு இணையவழி ஆய்வு நடத்தியது. அரசுத் துறைகளின் சேவையைப் பெறும் பொழுது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்று 93% பேரும், கசந்த அனுபவங்களைப் பெற்றதாக 82% பேரும், குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சூழலில்தான் சேவை பெறும் உரிமைச் சட்டம் இன்றியமையாதது ஆகிறது.
நம் நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி பெறும் உரிமைச் சட்டம் என்று பல உரிமைச் சட்டங்கள் உள்ளன. அவற்றினால் பல நல்ல பயன்கள் விளைந்து உள்ளன. அந்த வகையில் நாம் சேவை பெறுவதையும் உரிமையாக்கும் சட்டத்தை அமல்படுத்தக் கோருகிறோம்.
சேவை பெறுவதை உரிமையாக்கும் சட்டம்
2011ஆம் ஆண்டு அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு, மக்கள் சேவை பெறும் மசோதாவைக் கொண்டு வந்தது. இதன்படி பொதுமக்கள் தரும் கோரிக்கை மனுவை, அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு குறிப்பிட்ட நாட்களுக்குள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மன்மோகன் சிங் அரசில் அன்றைய அமைச்சர் நாராயணசாமி கொண்டு வந்த இந்த மசோதா, அந்த மக்களவையின் ஆயுட்காலம் முடிவடைந்ததால், நிறைவேற்றப்படாமலேயே காலாவதியாகிவிட்டது.
பிறப்பு, இறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், உணவுப் பங்கீட்டு அட்டை வழங்குதல், அதில் மாற்றங்கள் செய்தல், வாரிசுரிமைச் சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், நிலப் பரிவர்த்தனை தொடர்பான சான்றிதழ்கள், மின் இணைப்பு, குடிநீர் இணைப்புச் சான்றிதழ்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சேவைகளைப் பெற மக்கள் அன்றாடம் அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி வருகின்றனர். சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் அரசுத் துறை அலுவலர்களுக்குப் பொறுப்புடமையும், கடமையுணர்வும் கொண்டு வரப்படுகிறது. மக்கள் அலைக்கழிக்கப்படுவதும், அரசுத் துறை அலுவலகங்களின் ஒவ்வொரு கதவையும் தட்டித் தட்டித் தளர்ச்சி அடைவதும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு மெளனிக்கிறது;
சேவை பெறும் உரிமைச் சட்டம், இதுவரை பஞ்சாப், கர்நாடகா, கேரளா, ஹரியானா, பீகார் என்று 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன. ஹரியாணா போன்ற மா நிலங்களில் இதை எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த சுய ஆய்வுக் கூட்டங்களை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு அளவில், இந்தச் சட்டம் அமலாக வேண்டும் என்று முயன்றார், மத்திய பாஜக அமைச்சராக இருந்த திரு சதானந்த கவுடா! அவர் பிரதமர் மோடிக்கு ஜூன் 10, 2015 அன்று கடிதம் எழுதியுள்ளார். அது, இன்னும் கூட வேண்டுகோள் நிலையிலேயே இருப்பது துர் அதிர்ஷ்டமே!மத்திய அரசுத் துறைகளில், இது இன்னும் இந்த சேவை சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. தற்போதைய பாஜக அரசு இதை, இன்னும் காலம் தாழ்த்தாமல் உடனே நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு எதிர்த்தது
இந்த நிலையில், இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு 2015இல் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்றைய தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘ மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது தமிழகத்தில் சிறப்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சாதிச் சான்றிதழ் தொடங்கி மின் இணைப்பு,குடி நீர் இணைப்பு எதுவும் இங்கு தாமதமின்றி குறிப்பிட்ட காலத்திர்குள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, சேவை பெறும் உரிமைச் சட்டத்தைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தத் தேவை ஏற்படவில்லை என்பது அரசு முடிவு ‘ என்று கூறப்பட்டது.
மேலும், ‘ இந்த சட்டத்தைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது ‘ என்றது தமிழக அரசு. ‘அரசின் கொள்கை முடிவில் நீதித்துறை தலையிட முடியாது ‘ என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்ததைத் தமிழக அரசு சுட்டிக் காட்டியது. அதனால் தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் பெறுவது தடைபட்டது. தமிழகத்தில் இன்றைக்கும் மக்கள் உணவுப் பங்கீட்டு அட்டைக்காகவும், வாக்காளர் பட்டியலில் பதிவதற்காகவும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
தொடர் முயற்சிகள்;
சேவை பெறும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வரும் சூழலில், மக்களிடம் கோரிக்கை மனுவை பெறும் அரசு அலுவலர் ஒரு தேதியைக் குறிப்பிட்டு ஒப்புதல் தருவார். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் சேவை நிறைவேற்றப்படாவிட்டால், 2 மேல் கட்ட முறையீடுகளுக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு சேவையை நிறைவேற்றத் தவறிய அலுவலர்களுக்கு அபராதக் கட்டணம், அதிகபட்சமாக ரூபாய் 5000 வரை விதிக்கப்படுகிறது. மக்கள் இயல்பாகப் பெற வேண்டிய சேவையை, இப்படிப் பெற வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்பது வருத்தத்திற்கு உரியது.
தமிழகத்தில் இந்தச் சேவை உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக அறப்போர் இயக்கமும், சட்டப் பஞ்சாயத்து இயக்கமும், சில சமூக ஆர்வலர்களும், போராடி வருகின்றனர். 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. ஆனால், அதிமுக அரசு பரிசீலித்து கொண்டுவரவில்லை.
திமுக அரசு ஏன் தாமதிக்கிறது?
திமுக, தேர்தல் அறிக்கையில், ”சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று வாக்குறுதி அளித்திருந்தது; இதனை, திமுக அரசு பொறுப்பு ஏற்றதும் நடந்த முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரின் ஆளுநர் உரையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஏனோ, எட்டு மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் காலம் தாழ்த்திக் கொண்டே உள்ளது. எனவே, மேலும் தாமதிக்காமல், அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலாவது கொண்டு வரவேண்டும்.
கூட்டத் தொடர் தாமதம் ஆகுமானால், மக்கள் நலன் காக்க, அவசரச் சட்டம் கொண்டு வருவதில் தவறு ஏதும் இல்லை. இந்தச் சட்டம் தீவிரமாகப் பின்பற்றப்படுமானால், ‘ உரிய நேரத்தில் சான்றிதழ் கிடைப்பதில்லை, பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது, இடைத் தரகர்கள் தலையீடு இருக்கிறது ‘ என்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் முடிவுக்கு வரும். மக்கள் நலன் என்று சொல்வதெல்லாம், பொது மக்கள் நலன்தான் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். உண்மையிலேயே மக்கள் நலன் விரும்பும் அரசுகள் இதை மக்கள் அழுத்தம் தராமலே தங்கள் கடமையாக செய்ய வேண்டும். இதனால் ஊழல், லஞ்சம் மட்டுப்படும். மக்கள் பெரும் பலனடைவர்.
Also read
‘நான் உங்களுக்கெல்லாம் ஒரு மந்திரத் தாயத்து அளிக்கிறேன். ஒரு முடிவு எடுக்கையில், நீங்கள் பார்த்துள்ள ஏழ்மையான, மிக மிக நலிவுற்ற முகத்தை நினைவில் கொண்டு வாருங்கள். செய்ய இருக்கும் செயல், தீட்ட இருக்கும் திட்டம், எடுக்க இருக்கும் நடவடிக்கை அந்தப் பரம ஏழைக்கு ஏதாவது ஒரு வகையில் உதவுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்காலத்தையும் வளமாக்கிக் கொள்ள உதவுமா? என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்கள் சுய நலங்களும், ஐயங்களும் கரைந்து, மறைந்து போவதைக் காண்பீர்கள் ‘ இப்படிச் கூறியவர், மகாத்மா காந்தியடிகள்.
மகாத்மா காந்தி குறிப்பிட்டதை அனைத்து அரசியலாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் ஒழுங்காகப் பின்பற்றி இருந்தால், இந்தச் சேவை சட்டங்களுக்கானத் தேவையே இல்லாது அல்லவா போயிருக்கும்!
கட்டுரையாளர்; பா குமரய்யா,
மாநிலப் பொதுச் செயலாளர்,
காந்திய மக்கள் இயக்கம்.
தொடர்புக்கு: 98410 20258
Good