கண்களை குளமாக்கும் கவித்துவமான ‘கடைசி விவசாயி’

-பீட்டர் துரைராஜ்

விவசாயிகள் இன்று சந்திக்கும் பிரச்சினைகளை அடி முதல் நுனி வரை அதன் உண்மைத் தன்மையுடன் பேசும் படம்! 80 வயது விவசாய தாத்தா கதாநாயகனாக நம் மனதில் பதிகிறார். இயற்கையை நேசிக்க கற்றுத் தரும் படம், அதிகாரத்தின் பொய் முகங்களை அம்பலப்படுத்துகிறது!

இது வரை வந்த படங்களிலேயே விவசாயத்தை இவ்வளவு உயிர்ப்பான மண் வாசனையுடன் வெளிப்படுத்திய படம் இதுவாகத்தானிருக்கும்! விவசாயம் எவ்வளவு சிக்கலானது, விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் என்னவென்பதை கவித்துவமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.  இது இயற்கை விவசாயம், மரபணுமாற்றுப் பயிர்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் நிலத்திற்காக செய்யப்படும் கொலைகள் போன்ற விஷயங்களைப் பற்றி யதார்த்தமாகப் பேசுகிறது.

மாயாண்டியைச் சுற்றியுள்ள அனைவரும் தங்கள் நிலங்களை விற்றுவிட்டனர். விவசாயிகளை ஏமாற்றி, நிலங்களை பெரு முதலாளிகளுக்கு கைமாற்றும் உள்ளூர் இடைத்தரகர்களின் செயல்பாடுகள் துல்லியமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கிராமத்தார் தற்போது வேறு தொழில்களைச் செய்கிறார்கள், ஆனால், இந்த கடைசி விவசாயியான முதிய மனிதர் மாயாண்டி, தனது கால்நடைகளை எடுத்துக் கொண்டு வயலை உழுகிறார். நம்பிக்கை சிறிதும் தளராத விவசாயி!

”நிலத்து மண்ணை தோண்டக்கூடாது” என்று காவலர்களை போட்டிருக்கிறார்கள். அவர்களிடமே போய் கோவில் திருவிழாவிற்கு குதிரை செய்ய மண் தோண்ட வேண்டும் என்று கேட்கிறார்கள். ”அடுத்த மாதம் 25ந் தேதி நாங்கள் தேர்தல் வேலையில் இருப்போம். எங்களுக்கு தெரியாமல் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று காவலர் பதில் அளிக்கிறார். கிட்டத்தட்ட இந்த ரீதியில்தான்  படம் செல்கிறது. வன்முறையைக் காட்டும் கதை இல்லை. ரத்தம் சொட்ட அடிக்கும் கதாநாயகனோ, காவலரோ இல்லை.

பயிர் முளைக்கும் விதம், அதை எப்படி பாதுகாப்பது, மரம், செடி, கொடி உயிர்களை எப்படி நேசிப்பது என்பதெல்லாம் மாயாண்டி தாத்தாவின் கதாபாத்திரம் அழகாக நம்முள் கடத்துகிறது! நெற்பயிர் ஒவ்வொன்றையும் தனித்தனி உயிராகப் பார்க்கும் மாயாண்டி, நமக்கு புதிய பார்வையை தருகிறார்!  இயக்குவதுடன், கேமிராவையும் உயிரோட்டத்துடன் கையாண்டுள்ள மணிகண்டன் தனி முத்திரை பதிக்கிறார்.

இந்தப்படத் தயாரிப்புக்கு விஜய் சேதுபதி உதவியதோடு, முருகபக்தனாக சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உசிலம்பட்டி அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இந்தக் கதை நடக்கிறது. கிட்டத்தட்ட 80 வயதான உண்மையான விவசாயி ஒருவர்தான் இதில் கதாநாயகன். இவர் வயலில் இருந்து நெல் விளைவித்து, கிராமத்து, குலதெய்வ  திருவிழாவை கொண்டாடுவதற்குத் தர வேண்டும். ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’    என்ற பாடலோடு தொடங்கும் கதை, கோவில் திருவிழாவோடு முடிவடைகிறது. கதாநாயகன் ஒரு விவசாயியாக, சாதாரணமாக வாழ்ந்துள்ளார். இதை நடிப்பு என வகைப்படுத்த முடியாது. மற்ற பாத்திரங்களும் அவ்வாறே உள்ளனர்.

ஒரு ஆண் மயில், இரண்டு பெண் மயில் இறந்து போகிறது. இதற்கு காரணம் அவரது நிலத்தை வாங்கத் துடிக்கும் ஒருவரா? சரியாகத் தெரியவில்லை. (முருகனின் வாகனம் மயில். அவனுக்கு இரண்டு மனைவிகள் என்பது குறியீடாக இருக்கலாம்).இறந்துபோன மயில்களை அடக்கம் செய்த மாயாண்டி குற்றவாளியா !  மாயாண்டி இதனை  எதிர்கொள்ள வேண்டும். கதை சூடு பிடிக்கிறது. மயிலைக் கொன்றால் குற்றவாளி ! ”கடந்த ஆண்டு ஒரு நாயை புதைத்து இருக்கிறேன். அதுவும் குற்றத்தில் வருமா ?” என்று கேட்கிறார் மாயாண்டி. பொய் வழக்கில் மாயாண்டியை சிக்கவைக்கும் போலீசார், வெள்ளேந்தியான மாயாண்டியின் பதிலால் கோர்ட்டில் தலை குனிய நேர்வது அருமையான பதிவாகும்!

நீதித்துறை நடுவரோ ஒரு பெண். இப்போதுதான் பதவிக்கு வந்துள்ளார். இன்னமும் வழமையான நீதிபதியாக மாறவில்லை. இவர் வயதான, காதுகேட்காத, வெள்ளந்தியான ஒரு விவசாயியை விசாரிப்பதை  அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். சட்டத்தையும் மீறமுடியாமல், காவலரையும் கடிந்து கொள்ள முடியாமல் நீதிபதி அவஸ்தைப் படுகிறார். இதனை அற்புதமான உடல்மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்பாத்திரத்தில் ரெபேக்கா ரேச்சேல் என்பவர் நடித்துள்ளார். இவர் ஒரு மருத்துவராம். திரையுலகத்திற்கு ஒரு உயிர்ப்பான நடிகையை இயக்குநர் அடையாளம் காட்டியுள்ளார். ‘அப்பாவி விவசாயி மாயாண்டி ஏன் சிறைப்பட வேண்டும்’ என்ற கோபம் பார்வையாளனுக்கு வருகிறது. விவசாயிகளுக்கு  ஆதரவு இல்லை. ஆனால் செலவு செய்து, இயற்கை விவசாயம் செய்ய இப்போது  மக்கள் விரும்புகிறார்கள்.

வசனங்கள் எளிமையாக உள்ளன. ”நவீன ரக தக்காளிக்கு விதை கிடையாது” என்று கூறுகிறார் பூச்சி மருந்து வியாபாரம் செய்பவர். ”இந்த தக்காளியை உற்பத்தி செய்பவர் மகனுக்கு விதை இல்லாத பிள்ளை பிறக்கும் என்று சொன்னால்,  அவர் என்ன நினைப்பார்” என்று பதில் கேட்கிறார் மாயாண்டி. இப்படி படம் முழுவதும் போகிற போக்கில் கேள்விகள் வருகின்றன.

மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் வருகிறது. தலை வழுக்கையாக உள்ளவன்,  முடி வளர்வதற்காக எடுக்கும் முயற்சிகள் நகைச்சுவையோடு வருகின்றன.

நூறுநாள் வேலைத்திட்டத்தை படம் முற்பாதியில் எள்ளல் செய்கிறது; பிற்பாதியில் அதற்கு தீர்வு பிறக்கிறது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நீதிமன்றம் யதார்த்தமாக உள்ளது. கிளைச் சிறையும் அவ்வாறே உள்ளது. இதனை வடிவமைத்துள்ள கலை இயக்குநர் பாராட்டப்பட வேண்டும். இயற்கை மீது மரியாதை கொள்ள வைக்கும் படம் இது. மாயாண்டி போன்றோரிடம் மரபு வழியிலும், அனுபவத்திலும் சேர்ந்த பட்டறிவு அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுமா? சென்று சேருமா? அதை பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறதா இந்த சமூகம்?

இது திரைப்படமா என ஐயுறும் அளவுக்கு இயல்பாகச் சென்று கதை முடிகிறது. இதற்கு 8.2 IMDb ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் நாயகனாக மாயாண்டியாக நடித்த நல்லாண்டி இறந்துவிட்டார் என்பதைக் கேட்கும்போது மனது வலிக்கிறது. படத்தில் இயல்பாக வரும் தொடக்கம், சிக்கல், உச்சகட்டம், தீர்வு என்ற வரிசையில் கதையோட்டம் அமையவில்லை. மனநலம் பிறழ்ந்த விஜய் சேதுபதியின் பாத்திரமும், வயலை வித்து யானையை வாங்கி வைத்திருக்கும் யோகி பாபுவும் ரசிகர்களை குழப்புகிறார்கள். இதை நீக்கிப் பார்த்தால், ஒரு இயல்பான கிராமத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்தியுள்ளார்  மணிகண்டன்.

இந்­தத் திரைப்­ப­டத்­திற்கு இசை­ய­மைப்­பா­ளர் இளை­ய­ராஜா இசை­ய­மைத்த நிலை­யில் சில கார­ணங்­க­ளால் பாதியில் வில­க நேர்ந்ததாக ஒரு தகவலும் படக் குழு அவரிமிருந்து விலகிவிட்டதாக மற்றொரு தகவலும்  வெளி வந்தன! இதனால், இளையராஜா இசை முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு, சந்­தோஷ் நாரா­ய­ணன் இந்­தப் படத்­திற்கு இசை­ய­மைப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார். சந்­தோஷ் நாரா­ய­ணன் தனது டுவிட்­ட­ரில், “நான் பார்த்த படங்­க­ளி­லேயே ‘கடைசி விவ­சாயி’ மிகச்­சி­றந்த படமாகும். மகத்­தான இந்­தப் படம் நிச்­ச­யம் வெற்றி பெறும்,” என்று பதிவிட்டுள்ளார்.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time