‘வேண்டாம் வெறுப்பரசியல்’ – பெண்கள் அமைப்புகள் கூட்டறிக்கை!

-பீட்டர் துரைராஜ்

இந்தியா முழுமையும் ‘ஹிஜாப்’ விவகாரம் பற்றி எரிகிறது! இந்த நிலையில் இதை எப்படி அணுகுவது, புரிந்து கொள்வது… என்பது குறித்து இந்தியாவின் மிக முக்கிய பெண்கள் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கூட்டாக ஒரு அறிக்கை வெளியிடுள்ளனர்.

மாணவர்களிடையே  பொருளாதாரரீதியில் வேறுபாடு தெரியக்கூடாது என்பதற்காகத்தான் சீருடை  கொண்டுவரப்பட்டது;  கலாச்சார ஒற்றுமையை உருவாக்க அல்ல’

ஹிஜாப் அணியாத பெண்களை குறிவைத்தும், முஸ்லிம் மாணவிகளை தடுத்தும் நடக்கும் வெறுப்பு அரசியலை எதிர்த்து, பெண்ணிய அமைப்புகளும், ஜனநாயக அமைப்புகளும், தனிநபர்களும் விடும் கூட்டறிக்கை:

# கடலோர கர்நாடக பகுதியில், வகுப்பறையிலும்,  வளாகத்திலும் ஹிஜாப் அணிவதற்கு தடை என்பதும், அதனையொட்டி நடக்கும் மிரட்டல்களும் வெறுப்பு அரசியலாகும். மாட்டுக்கறி, கூட்டு வழிபாடு, பாங்கு , தொப்பி, உருது என்ற சாக்குகளைச் சொல்லி இந்துத்துவவாதிகள் முஸ்லிம்களை அடித்துக்கொலை செய்தல், பிரித்து வைத்தல், புறக்கணித்தல் போன்றவைகளை செய்துவருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிஜாப் என்ற சாக்கைச் சொல்லி,  முஸ்லிம் பெண்களின் மீது தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, அந்த இந்துத்துவவாதிகள் முஸ்லிம் பெண்களை “இணைய ஏலத்தில்” விட்டார்கள்; அவர்களை பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தும்படி  உரையாற்றினார்கள்.

# கர்நாடகா மாநிலம், மாண்டியா பகுதியில் காவித்துண்டு அணிந்த கும்பல்  ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவியை மிரட்டியுள்ளது. இதன்மூலம் ஹிஜாப் என்ற வேறொரு சாக்கைச் சொல்லி  முஸ்லிம்களை தாக்கலாம் என்று தெரிகிறது.

# பள்ளிகளும், கல்லூரிகளும் பன்மைத்துவத்தை வளர்த்தெடுக்க  வேண்டுமென்று  அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ளது என்பதை நாங்கள் நம்புகிறோம். சீருடை என்பது, அந்த நிறுவனங்களில் சமமற்ற, வேறுபட்ட  பொருளாதார பிரிவினரிடையே நிலவும் வேறுபாடுகளை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்டது.  பன்மைத்துவம் வாய்ந்த ஒரு நாட்டில் கலாச்சார ஒற்றுமையை கொண்டுவருவதற்காக சீருடை முறை கொண்டுவரப்பட வில்லை. அதனால்தான் சீக்கியர்கள் வகுப்பறையிலும் டர்பன் கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். காவல்துறையிலும், இராணுவத்திலும் கூட அனுமதிக்கப்படுகிறார்கள். இந்து மாணவர்கள் பொட்டு, திலகம், விபூதி போன்ற அடையாளங்களோடு, எந்த விமர்சனமும், எதிர்ப்புமின்றி பள்ளிகள், கல்லூரிகளுக்கு  சீருடைகளில் செல்கிறார்கள்.

# உடுப்பியில் உள்ள கல்லூரிகளில் ஒன்று, அந்தக் கல்லூரிச் சீருடை நிறத்தை ஒத்த, ஹிஜாப் அணிந்து வர தடையில்லை என்று தெரிவித்துள்ளது. ஹிஜாப் அணிவதால், கல்வி நிறுவனங்களில் பிரச்சினை இல்லை. மாறாக, காவித்துண்டு அணிந்த இந்துத்துவவாதிகள், ஹிஜாபை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்வதால்தான் இப்போது பிரச்சினை எழுந்துள்ளது. ஹிஜாபையும், காவித்துண்டு அணிவதையும் தடை செய்வது என்பது நியாயமான, சரியான தீர்வு அல்ல. சில முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதும்,  காவித்துண்டு அணிவதும் ஒன்று அல்ல. முஸ்லிம் பெண்களை மிரட்டுவதற்காகவும், அதன்மூலம் ஹிஜாப் அணிவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் இப்போது காவித்துண்டு போடுகிறார்கள்.

# ஹிஜாப் அணிந்த மாணவிகளை தனி வகுப்பறையில் அமருமாறு செய்வதும், படிக்கும் கல்லூரியை விட்டுவிட்டு முஸ்லிம்கள் நடத்தும் கல்லூரிக்கு செல்லுங்கள் என்று சொல்லுவதும் மதவெறி அரசியலே. இந்துத்துவவாதிகள் 2008 ஆம் ஆண்டிலிருந்தே, கடலோர கர்நாடகாவில் இத்தகைய வன்முறை மூலம் இந்து-முஸ்லிம் மாணவர்கள், நண்பர்கள், காதலர்கள் ஒன்றாக இருப்பதை எதிர்த்து வெறுப்பரசியலை செய்து வருகிறார்கள். இதே போன்ற தாக்குதலை பொது விடுதிகளுக்குச் செல்லும், மேற்கத்திய ஆடை அணியும், முஸ்லிம் இணையரை காதலிக்கும், திருமணம் செய்யும் இந்துப்பெண்கள் மீதும் நடத்துகிறார்கள். இந்துப் பெண்கள் மீதும், இஸ்லாமியர் மீதும் நடைபெறும் இத்தகைய குற்றங்கள், இந்துத்துவ, ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படுபவைகளாகும்.

# ஹிஜாப் அணிந்த பெண்களின் தொலைபேசி எண்களை விசாரித்து “தீவிரவாத குழுக்களோடு” அவர்களுடைய “தொடர்பு பற்றி விசாரிக்க” உத்தரவிட்டுள்ள கர்நாடக உள்துறை அமைச்சரின்  நடவடிக்கை குறித்து நாங்கள் அதிர்ச்சி அடக்கிறோம். நேற்றுவரை, பாகுபாடு நிறைந்த குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதற்காகவும், வேறுசில பாகுபாடுகளை எதிர்த்தமைக்காகவும் “தீவிரவாதிகள்” என்றும் “சதிச்செயல்” என்றும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இப்போது இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்தமைக்காக சதி செய்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இதே நாட்டில்தான், இதே காரணங்களுக்காக இந்துப் பெண்களும், சீக்கியப் பெண்களை தலையில் முக்காடு போடுகிறார்கள். இந்தியாவின் முதல் முதன்மை அமைச்சரும், குடியரசுத் தலைவரும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் புடவையால் தங்கள் தலையில் முக்காடு போட்டிருந்தார்கள்.

# மாணவிகளும், பெண்களும் எந்தவித வெட்கம் இல்லாமல், தண்டிக்கப்படாமல் கல்வி பெறும் சூழல் இருக்க வேண்டும். மாணவர்களின் தலையின் உள்ளே என்ன இருக்க வேண்டும் என்றுதான் கல்வி நிறுவனங்கள் பார்க்க வேண்டுமே ஒழிய, வெளியே என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டியதில்லை.ஜீன்ஸ் அணிந்தாலோ, அரைக்கால்சட்டை அணிந்ததாலோ, ஜிஹாப் அணிந்தாலோ கல்லூரிக்குள்  அனுமதிக்கப்படாத மாணவிகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்.

# ஹிஜாப் அணிந்தாலும், அணியவில்லை என்றாலும் நாங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு ஆதரவாக உறுதியோடு இருக்கிறோம். அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும். அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. கர்நாட முஸ்லிம் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஹிஜாப் அணிகிறார்கள். அது மதிக்கப்பட வேண்டும்.

# பெண்கள் எதை அணிய வேண்டும் என்பதோ, அவர்கள் தலையை மூட வேண்டுமா, வேண்டாமா என்பதோ அவரவர் ‘விருப்பமாகும்’. பணிவானவரா, பணிவற்றவரா என்பதற்கு இது அளவீடு அல்ல. ஆணாதிக்க மத வழிமுறைகளே எங்கும் சுமத்தப்படுகிறது என்பது உண்மையாகும். மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் என்றால் இவ்வாறு உடையணிய வேண்டும் என்று பெண்களுக்குச் சொல்லுவதை நிறுத்துங்கள். மாறாக, எத்தகைய உடை அணிந்தாலும் அவர்களை மதியுங்கள். “அவளை உடலை அதிகமாகக் காட்டுகிறாள்” என்றோ ” இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ,சீக்கியப் பெண்ணைப் போல” அவள் உடை அணியவில்லை என்று நினைத்தால், அதற்கு உங்களுடைய ஆணாதிக்க மனநிலைதான் பிரச்சினையாகும்; உரிமை சார்ந்த மனநிலைதான் பிரச்சினை. ஆணாதிக்கத்தை எதிர்ப்பதில் ஒவ்வொரு பெண்ணின் வழி என்னவென்பதை அவளே முடிவு செய்துகொள்ளட்டும். அவளுடைய நம்பிக்கைக்கு ஒத்தபடி என்ன நடைமுறைகளை மேற்கொள்வது அல்லது மேற்கொள்ளாது இருப்பது என்பதை அவளே முடிவு செய்துகொள்ளட்டும்; இதுதான் பெண்ணிய, ஜனநாயக கொள்கைகளாக இருக்க முடியும்.

#  மாண்டியா முஸ்லிம் பெண்மீது வன்முறையை நடத்திய, ஏவிவிட்ட அமைப்புகள் மீதும், கும்பல் மீதும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். நாடு முழுவதும் ஹிஜாப் அணிந்த பெண்கள் மீது தொடுக்கும் மிரட்டல்களை தடுக்க அரசாங்கங்கள் காவல்துறைக்கு உரிய வழிகாட்டுதல் அளிக்க வேண்டும். பொதுமக்களும் விழிப்போடு இருக்க வேண்டும்.

அரசின் ஆதரவோடு, இந்துத்துவ மேலாதிக்க அடியாட்கள் தொடுக்கும் மிரட்டல்களை தீரமுடன் எதிர்கொண்டு போராடிவரும் கர்நாடக மாணவிகளை நாங்கள் வணங்குகிறோம். இவர்களின்  இந்து, கிறிஸ்தவ நண்பர்களும் இவர்களோடு இணைந்து  போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்கள் என்பதைக் கேட்டு மகிழ்வடைகிறோம்.

மாணவிகள், பெண்கள் மீது “இந்த உடை” உடுத்தவேண்டும்  என்று கட்டாயப்படுத்தும் ஆணாதிக்கவாதிகளையும், இஸ்லாமிய வெறுப்பை உமிழ்பவர்களையும் எதிர்த்து நிற்க  வேண்டும் என்று மாணவர்களையும், குடிமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம்,

அகில இந்திய முற்போக்கு மாதர் சங்கம்,

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் போன்ற மாதர் அமைப்புகளும்,

மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL)  போன்ற 10 ஜனநாயக அமைப்புகளும்,

கவிதா கிருஷ்ணன், ஆனி ராஜா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீரேந்திர குரேவர் போன்ற  பிரபலங்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

மொழிபெயர்ப்பு: பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time