கிரிப்டோ கரன்ஸி குறித்த அரசின் அணுகுமுறைகள் கருப்பு பண புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க எப்படி வழிவகுக்கும் என்பதையும், எளிய நடுத்தரப் பிரிவு மக்களை எப்படி நடுத்தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதையும் சற்றே பார்ப்போம்.
ஒரு செயலை சரி-தவறு என்று சொல்வதற்குப் பல வருடங்கள் எடுத்து, இன்னமும் முடிவு எடுக்க முடியாமல், அல்லது எடுக்க விருப்பம் இல்லாமல் அந்த செயலை செய்பவர்களைப் பார்த்து உங்களுடைய செயலுக்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டால்? என்னவென்று சொல்வது.
இதுதான் கிரிப்டோகரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் குழப்படிகள் தான் இருந்தது.
அதாவது பிட்காயின் வாங்குவது சரி-தவறு என்று இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், அப்படி நீங்கள் வாங்கினால் 30% வரி கட்ட வேண்டும் என்று சொன்னார்கள்.
கிரிப்டோகரன்சி என்ற வார்த்தையை நிதியமைச்சர் பயன்படுத்தவில்லை என்றாலும், விர்சுவல் சொத்து (Virtual Asset) என்று குறிப்பிடுகிறார். மற்றும் இவை தொடர்பாக நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று சொன்னார். மிகப் பெரிய அரசாங்கம். ஒரு விஷயத்தில் எது சரி-தவறு என்று முடிவு எடுக்க ஏன் பல வருடங்கள் காலம் கடத்துகிறார்கள்.
அண்டைநாடான சீனா க்ரிப்டோகரன்ஸியை தடை செய்துவிட்டது. அதே நேரம் அந்த நாட்டு மத்திய வங்கி சீனா நாட்டுக்கென டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமன் கிரிப்டோ கரன்சி தடை பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், நமது ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சியை வெளியிடும் என்று அறிவித்து உள்ளார்.
ஏன் கிரிப்டோ கரன்சியை தடை செய்ய இவ்வளவு யோசனை?
மத்திய அரசு, அரசியல்வாதிகள், பெரும் தொழிலதிபர்கள் இடத்திற்குச் சோதனைக்குச் செல்லும்பொழுது அவர்கள் பிட்காயினில் முதலீடு செய்து இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் செய்த சோதனையில் பிட் காயினில் முதலீடு செய்து இருப்பதாக தகவல் வந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், அதில் முதலீடு செய்தவர் எவ்வளவு பிட் காயின் வாங்கி உள்ளேன் என்று சொன்னால்தான் அரசாங்கத்திற்குத் தெரியும். இல்லையென்றால், அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியாது.
இந்தியாவில் பெரும் அரசியல்வாதிகள் முதல், தொழில் அதிபர்கள் வரை இப்படி முதலீடு செய்து இருக்க அதிக வாய்ப்பும் உண்டு. இதில் பலர் அரசுக்கு நெருக்கமானவர்களாகக் கூட இருக்கலாம். அதனால், அரசு தடை செய்யலாமா? அல்லது இன்னும் காலம் தாழ்த்தலாமா என்று பல வருடங்களாக யோசித்து வருகிறதோ, என்னவோ?
ஒவ்வொரு முறையும் ரிசர்வங்கி கிரிப்டோகரன்சி குறித்து அவை ஆபத்தானது. நாட்டிற்கு நல்லதில்லை என்ற கருத்தை முன் வைத்து வருகிறது. கடந்த 10ஆம் தேதி நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெளிவாக கிரிப்டோ கரன்சி குறித்து கருத்துக்களைக் கூறி உள்ளார்.
தனியார் கிரிப்டோ கரன்சியால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அடிப்படையில் அதற்கு எந்தவித மதிப்பும் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் ரிசர்வ் வங்கி டிஜிட்டல் கரன்சி வெளியிட எண்ணியுள்ளோம். ஆனால், இதைப் போலியாக வேறு யாரவது உருவாக்கிக் கூடாது என்பதே எங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது.என்றார்.
ஆக ரிசர்வ் வங்கி தெளிவாக, ’கிரிப்டோ கரன்சியால் நாட்டிற்கு ஆபத்து உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.
யார் வேண்டுமென்றாலும் கரன்சி வெளியிடலாம் என்றால், அதற்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது? அதற்கு எதற்கு அரசாங்கம்? ரிசர்வ் வங்கி? நாட்டில் இவற்றின் இடம் தான் என்ன?.
அடிப்படையாகவே கிரிப்டோ கரன்சிக்கு மதிப்பு இல்லை
ஒரு கரன்சி என்பது அதன் மதிப்பு மாறக் கூடாது. அதாவது 500 ரூபாய் நோட்டு எத்தனை வருடம் ஆனாலும் 500 ரூபாய்தான். ஒரு முறை கூட அது 1000 ரூபாய், 2000 ரூபாய் என்று மாறாது. ஆனால், கிரிப்டோ கரன்சி மதிப்பு நாளுக்கு நாள் உயர்வதும், குறைவதும் என்று இருப்பது தான் கேள்விக்குக் குறியே? அதாவது இது ஒரு சூது போலத்தான்!
இவற்றை உருவாக்கியவரே பிட் காயின் அதன் தன்மையிலிருந்து மாறி,மாறிச் செயல்படுகிறது. அனைவரும் அவை ஒரு பணம் சம்பாதிக்கும் பொருட்களாகப் பார்க்கத் தொடங்கியதால் அவற்றிலிருந்து விலகிவிட்டார். இன்றும் ஒரு பொருள் வாங்குவதற்கு கிரிப்டோ கரன்சி பயன்படுவதில்லை. அவற்றை வாங்கினால் விலை ஏரி லாபம் கொடுக்கும் என்று பணத்தை முதலீடு செய்கிறார்கள். இவற்றை எப்படி ஒரு கரன்சியாக எடுத்துக் கொள்ள முடியும்?
நமது நிதி அமைச்சர் கூட பிட் காயின் போன்ற காயின்களை கொண்டு பொருட்கள் வாங்குவது கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார். அவை குதிரைப் பந்தயம், சீட்டு ஆட்டம் போன்ற ஒரு சூதாட்டம் தொடர்புடைய செயல் அதனால் தான் அவற்றுக்கு அதிகபட்ச வரியான 30% கட்ட வேண்டும் என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
30% வரி பற்றி நிறையக் கேள்விகளை உருவாக்குகிறது?
கிரிப்டோ கரன்சி வரிவிதிப்பில் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி வாங்கி அவை விலை ஏறி, அதனால் வரும் லாபத்திற்கு 30% வரி கட்ட வேண்டும். அதாவது 50,000 ரூபாய் கொடுத்து வாங்குகிறீர்கள் 70,000 ரூபாய் விலை உயருகிறது. இதில் லாபம் 20,000 ரூபாய். அந்த 20000 ரூபாய்க்கு 30% வரியான 6000 ரூபாய் செலுத்தினால் போதும் என்று பலர் நினைத்துக் கொண்டு உள்ளனர்.
கிரிப்டோ கரன்சி லாபத்திற்கு மட்டும் வரி இல்லை. அதை வாங்கினாலே 30% வரி கட்ட வேண்டும். அதாவது, 10,000 ரூபாய் கொடுத்து வாங்கினால், 3000 ரூபாய் வரி கட்ட வேண்டும். 10000 + 3000= 13000 ஆகும்.
லாபத்துக்கு வரி என்று நிதி அமைச்சர் குறிப்பிடவில்லை. மாற்றினாலே(Transfer) அதாவது வாங்கினாலோ, விற்றாலோ வரி என்று தான் அர்த்தம் ஆகும்.
இப்படி இரண்டு வித கருத்துக்கள் இன்னும் தொடர்கிறது. காரணம், தெளிவாக கிரிப்டோ கரன்சி வரி பற்றி சட்டம் உருவாகாததே காரணம் ஆகும். அப்படி வாங்கினாலே வரி என்றால், அவை எப்படி ஒரு நல்ல முதலீடு முறையாகும். இனி வரும் காலத்தில்தான் அரசின் தெளிவான வரி விதிப்பு தெரிய வரும்.
பங்குச்சந்தை தான் சூதாட்டம் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட பங்குச் சந்தையில் கிடைக்கும் லாபத்திற்கு அதாவது பங்கை ஒரு வருடம் கழித்து விற்றால் வரும் லாபத்திற்கு. 10% விகிதம். வரி. அதுவும் முதல் 1 லட்சத்திற்கு வரி இல்லை. 1 லட்சம் மேல் வரும் லாபம் வந்தால்தான் 10% வரி. ஆனால் கிரிப்டோ கரன்சி வாங்கினாலே வரி 30% வரி. என்றால் இவற்றை பெரிய சூதாட்டம் என்று சொல்லலாமா?
கிரிப்டோ கரன்சி மூலம் நஷ்டம் அடைந்தால் ?
பொதுவாக பங்குச்சந்தையில் லாபம் அடைந்தால் வரி கட்ட வேண்டும். அதே நஷ்டம் அடைந்தால் அடுத்து வரும் லாபத்தில் இந்த நஷ்டத்தைக் கழித்துக் குறைந்த வரி கட்டினால் போதும். அதாவது, லாபத்தில் நஷ்டத்தைக் கழித்து மீதிக்கு வரி செலுத்தினால் போதும் இப்படி பெரிய வசதி பங்குச்சந்தையில் உண்டு.
ஆனால், கிரிப்டோ கரன்சி மூலம் நஷ்டம் அடைந்தால் எப்படி பங்குச்சந்தையில் ஏற்படும் நஷ்டத்தை அடுத்து வரும் லாபத்தில் கழித்து வரி கட்டுவதைக் குறைக்க முடியுமோ அதோ போல் க்ரிப்டோ கரன்சியில் குறைக்க முடியாது.
இதில், ஏற்படும் நஷ்டத்தை எதிலும் கழித்துக் கொள்ள முடியது என்று தெரிவித்து உள்ளார் நிதி அமைச்சர். ஆக இவ்வளவு கெடுபிடிகளைப் போட்டு ஒரு கரன்சியை வாங்கி எப்படி லாபம் சம்பாதிக்க முடியும்.
உண்மையில் முறைப்படி நிர்வாகிக்கும் கரன்சிக்கு யாரவது இவ்வளவு வரி போடுவார்களா? 500 ரூபாய் நோட் மற்றவரிடம் இருந்து வாங்கினால் அதற்கு 150 வரி கட்டவேண்டும் என்று சொன்னால் நாம் 500 ரூபாய் நோட்டை ஏன் வாங்கப் போகிறோம்.
30% வரி எதை உணர்த்துகிறது என்றால், கிரிப்டோகரன்சி ஒரு சூதாட்ட வழியாகப் பணம் சம்பாதிப்பது அல்லது அவை ஒரு கடத்தல் பணம் ஆகத் தான் பார்க்க வேண்டியுள்ளது.
கடத்தல் பொருட்களில் லாபமும் அதிகம், அதே வேலை மாட்டிக் கொண்டால் நஷ்டமும் மிக அதிகம். கிரிப்டோ கரன்சி குறித்த அரசின் அணுகுமுறையும் அதே போல் இருப்பதாகவே தெரிகிறது.
Also read
பெரும் அரசியல்வாதிகள்-பெரும் தொழில் அதிபர்கள் எப்படியும் வாழ்வார்கள். ஆனால் நடுத்தர மக்கள் க்ரிப்டோ கரன்சி மூலம் நடுத்தெருவுக்கு வந்துவிட வாய்ப்புகளே அதிகம். இன்னும் தாமதிக்காமல் முடிவு எடுங்கள்!
4 வருடமாக ஒரு முடிவு எடுக்காமல் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்பொழுது இன்னமும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை என்று நிதி அமைச்சர் சொல்வது அபத்தமானது. ஒரு மாணவன் 4 வருடம் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தால், அவன் சிறந்த மாணவன் என்றா சொல்லத் தோன்றும்?
மொத்ததில் சாதண மக்கள் கிரிப்டோ கரன்சியை அரசே அங்கீகரித்தாக நினைத்து அதில் முதலீடு செய்து ஏமாறவும், மற்றொரு பக்கம் கருப்புபணம் வைத்திருப்பவர்களுக்கு சலுகை தருவதாகவுமே அரசின் நடவடிக்கைகள் உள்ளன!
கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்
Leave a Reply