எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு
உள்ளாட்சி தேர்தல்கள் எப்படிப் போய்க் கொண்டுள்ளது?
அடேங்கப்பா! பல உள்குத்துக்களோடு போய்க் கொண்டுள்ளது!
திமுக கூட்டணி தொடர்கிறது. எனினும்,பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை! அடித்தளத்தில் பலம் பொருந்தி நிற்பவனை கட்சிகளின் தலைமைகள் அச்சுறுத்தலோடு தான் பார்க்கின்றன!
அதிமுகவால் கூட்டணி கூட்டணி காண முடியாமல் போனதற்கு முக்கிய காரணம், அந்த கட்சித் தலைமைக்கு யாரும் கட்டுப்படமாட்டார்கள் என்ற கள நிலைமை தான்! அதிமுகவின் அதிருப்தி வேட்பாளர்களை அள்ளீச் செல்வதற்காகத் தான் பாஜக தனித்து களம் கண்டது. அந்த காரியத்தை செவ்வனே செய்கிறது பல இடங்களில்!
அடிமட்டத்து விவகாரங்களில் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைக்க முடியாமல் ஆனாப்பட்ட தலைமைகளெல்லாம் தண்ணிக் குடிக்குது!
ஆர்.ரமேஷ், பெங்களூர்
ஹிஜாப் அணிந்த மாணவிகளை காவி இளைஞர்கள் கலாய்க்கிறார்களே?
இவை தொடர்பான காணொளிகள் சில நெஞ்சை கலங்கடித்தன! ஹிஜாப் அணிவது பிற்போக்குத்தனம் என்றால், அதை அணியக் கூடாது என வன்மம் காட்டுவது காட்டுமிராண்டித்தனம். மற்றவர்களின் உரிமையை மதிப்பது தான் நாகரீகத்தின் அடையாளம்! நாகரீகம் தொலைத்த கும்பலிடம் மிகக் கடுமை காட்ட வேண்டியது அரசின் கடமை!
கோமதி நாயகம், கோவை
கொரோனா திடீரென்று உயர்வதும்,திடீரென்று தாழ்வதும் எப்படி?
அது, ஆட்சியாளர்களின் விருப்பங்களை புரிந்து கொண்ட விஷக் கிருமி போலும்!
க.அப்துல்நாசர், ஹைதராபாத்.
கொரோனா தடுப்பில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் பற்றி..?
கொரோனா ஒன்றும் தற்பொது மக்களுக்கு பிரச்சினையில்லை. அதை காரணமாக்கி ஆட்சியாளர்கள் செய்யும் அலப்பல்கள் மாத்திரமே பெரும் தலைவலியாகிவிட்டது!
மு.ரத்தினவேல், விருதாச்சலம்.
வைரமுத்து இலக்கியம் 50 என்ற இலட்சினையை முதல்வர் வெளியிட்டு உள்ளாரே..?
ஒரு பிரபல கவிஞனின் 50 ஆண்டுகால இடையறாத இலக்கியப் பயணம் என்பது ஒரு இலட்சினை அளவோடு சுருங்கிப் போனதே! அது மக்களின் கொண்டாட்டமாக இல்லாமல் தன் மகன்களோடு மட்டுமே அவர் கொண்டாட முடிந்தது பரிதாபம்!
அதிகார உச்சங்களின் அங்கீகாரத்தை மட்டுமே தேடும் அவரது அடங்காப் பசியின் விளைவு இது!
எஸ்.ராஜலட்சுமி, மதுரவாயில்
ஹிஜாப் அணிவது தொடர்பான குஷ்புவின் கருத்தை படித்தீர்களா?
இதில் பிரச்சினைகளை சந்திக்கும் அப்பாவி இளம் பெண்களின் வலிகளை உணர மறுத்தும், அராஜக ரீதியில் இதை அணுகுபவர்களை கண்டிக்க தவறியும் பேசப்படும் எந்தக் கருத்துமே பாசிசத்தின் சாயல் கொண்டவையே! பணம், பதவி, அதிகாரம் இதற்காக தன்னையே தொலைத்து நிற்கும் குஷ்பு, அறம் தொலைக்கப்படுவது பற்றிப் பேசுவார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
எஸ்.கோபிநாத், ஆத்தூர், சேலம்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து உறுதியாக ஒரு கருத்து சொல்லுங்களேன்?
தேர்தலுக்குப் பிறகு தேடி கண்டடைய வேண்டிய கட்சியாக தேமுதிக இருக்கும்!
ஆர்.தணிகாச்சலம், திருக்கோவிலூர், விழுப்புரம்
கடைசி விவசாயி பார்த்தீர்களா?
கடைசி விவசாயி அல்ல, சுமார் ஒரு லட்சம் புது இயற்கை விவசாயிகளை களத்திற்கு இழுத்து வரும் பேராற்றல் படைத்த மூத்த விவசாயி!
இயக்குனர் மணிகண்டன் தமிழ் சினிமாவின் மணிமகுடம்!
எல்.ஞானசேகரன், ஈரோடு,
அரசு வேலை தருகிறேன் என காசு வாங்கி, பிறகு காசை திருப்பித் தந்துவிட்டதால் செந்தில் பாலாஜியை குற்றமற்றவர் என உயர் நீதிமன்றம் சொல்வதை ஏற்கமுடியாது என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதே?
சரிதானே! அரசாங்க வேலையை கூறுபோட்டு விற்ற மோசடியில் அம்பலப்பட்ட பிறகு காசை திருப்பி தந்துள்ளார்! இப்படிப்பட்டவர் மீண்டும் அமைச்சராக்கப்பட்டால், இனி அகப்பட்டுக் கொள்ளாமல் மோசடிகளை அரங்கேற்றவே செய்வார்!
இவரை அமைச்சராக்கி அழகு பார்க்கும் திமுக, தீராப்பழியை சுமக்க நேரும்!
அ.அறிவழகன், மயிலாடுதுறை
இந்து கோவில்களூக்கு மாற்று மதத்தார் வரக் கூடாது, வேட்டி போன்ற மரபு உடைகள் அணிந்தவர்களைத் தான் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு போட்டுள்ளாரே?
இறைவன் என்பவன் மனித குலம் முழுமைக்குமே பொதுவானவன் மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்குமானவன் என உணர்ந்தவர்களே உண்மையான பக்தர்கள்!
ஆழ்ந்து இறைவனை உள்வாங்கத் தெரிந்தவர்களுக்கு ஆடை ஒரு பொருட்டல்ல.
ரங்கராஜன் நரசிம்மன் போன்ற மதவெறியர்களிடம் மாட்டிக் கொண்டு அந்த கடவுளர்களே படாதபாடு படுகிறார்களே ஐயா, இந்த நாட்டில்!
எஸ்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை
சமீபத்தில் மறைந்த இசைக்குயில் லதாமங்கேஷ்கர் பாடல்களை ரசித்துள்ளீர்களா?
மன்னிக்கவும். நான் இந்திப் பாடல்களை அதிகம் கேட்டதில்லை. தற்செயலாக காதில் விழுந்தவை சில! அவற்றில் எது, லதா மங்கேஷ்கர் குரலுக்கானது என்பது கூடத் தெரியாது. அவர் இறந்த பிறகு நான் கேட்டறிந்த சில பிரபல இந்தி பாடல்கள் அவர் பாடியவை தான் எனத் தெரிந்து கொண்டேன். ஆனால், அவர் பாடல்களை இந்தியில் கேட்டபோது இருந்த ஈர்ப்பு, தமிழில் பாடிய பாடல்களில் இல்லை.
க.செபாஷ்டின்,வேலூர்
சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்து படித்த நாவல் எது?
நான் நாவல்கள்,சிறுகதைகள் ஆகியவை படித்து ஆண்டுகள் பல ஓடிவிட்டன. யதேச்சையாக ‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற வே.இறையன்பு எழுதிய நாவல் படிக்க நேர்ந்தது. இந்தியாவின் சமகால சுற்றுச் சூழல் பிரச்சினையான மாபெரும் அணைகள் உருவாக்குவது, ஆதிகுடிகளை காட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவது போன்ற பிரச்சினையை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்! இந்த பிரச்சினையை மக்கள் கோணத்தில் மட்டுமின்றி ஆட்சியாளர்கள் கோணத்தில் இருந்தும் அலசும் தன்மை அதில் இருந்தது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு மேதாபட்கர் நர்மதை நதியில் அணைகட்டுவது தொடர்பான போராட்டங்களை முன் எடுத்த போது அந்த களத்திற்கே சென்று சில நாட்கள் தங்கி அவர் இந்த நூல் எழுதியுள்ளார்! இதில் ராதா படேங்கர் என்ற சுற்றுச் சூழல் போராளியையும் ,அவருக்கு ஆதரவான சுதிர் என்ற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கதாபாத்திரத்தையும் வடிவமைத்து இருந்தார். கவனத்திற்குரிய படைப்பு!
க. நாகராஜன், அருப்புக்கோட்டை.
ராஜிவ்காந்தியைக் கூட, ‘பிரிவினைவாதி’ என மோடி கூறுகிறாரே?
‘தான் திருடி மற்றவர்களை எல்லாம் திருடி’ என்பாளாம்!
மதத்தால், சாதியால், பிரதேச அளவு கோளால் மக்களை பிரிப்பது ஒன்றே குலத் தொழிலாக கொண்ட கட்சிக்கு சொந்தக்காரர் தேச மக்களை அன்பால் அரவணைக்கும் ராகுலைப் பார்த்து இப்படி சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம்! ‘மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்பவரை ‘பிரிவினைவாதி’ என்றால், மாநில உரிமையை நசுக்குபவரை எப்படி அழைப்பது?
ஃ குரானா பூதம் ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் அற்புத அரசியல் விளக்கு. அந்த விளக்கை அவர்கள் தேய்க்கும் போதெல்லாம் அந்த பூதம் வெளியில் வந்து நம்மை அடக்கி ஆளும் அவ்வளவே ஃ
செந்தில் பாலாஜி போல் ராஜேந்திரபாலாஜி விஷயத்திலும் இது மாதிரியான தீர்ப்பு எதிர்பார்ப்போம்.
ஃ ‘ஆத்தங்கரை’ நாவலில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுக்கு ஆலோசனை கூறியிருந்தால் அவற்றை தற்போதுள்ள தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு அரசாணை அல்லது சம்பந்தப்பட்ட சட்டத்தில் திருத்தம் வெளிவர ஏற்பாடு செய்ய இயலுமா?
வெறும் ஏட்டளவில் எல்லோரும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் அரிதாம் சொல்லிய வண்ணம் செயல்! ஃ
ஃ ஆலயங்களில் கடவுள் சிலைக்கு முன்பாக சேவகம் செய்கின்றவர்கள் முதற்கொண்டு ஆலயத்துள் பிரவேசிக்கும் பக்தர்கள் வரை அரை நிர்வாணத்தில் கீழே ஆடை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் இருப்பது தடைசெய்யும் அளவில் சட்டம் இயற்றப்பட வேண்டும். எல்லோரும் முழு ஆடை அணிந்து கோவிலில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஃ
ஃ ‘வைரமுத்துவின் இலக்கியம் ஐம்பது’
இலட்சனை குறித்தான ஆசிரியரின் பதிலில் தெரியும் பரிதாபத்திற்கு மருந்து, வைரமுத்துவுக்கு ‘அரசவைக் கவிஞர்’ பதவி வழங்கல் தீர்வாக அமையுமா? ஃ