செந்தில் பாலாஜியால் கருவறுக்கப்படும் கூட்டணி கட்சிகள்!

-அஜிதகேச கம்பளன்

கரூரில், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செந்தில் பாலாஜி, போட்டி வேட்பாளர்களை சுயேட்சையாக களம் இறக்கி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுக்க பெரிய வெற்றியை பெற்றாலும், கரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு பலத்த அடி கிடைத்தது! மாவட்டத்தின் 12 மாவட்ட கவுன்சிலர்களில் ஒன்பது இடங்களில் அதிமுக வென்றது. மூன்றில் தான்  திமுக வெற்றி பெற்றது.  மொத்தம் உள்ள 115 ஒன்றிய கவுன்சிலர்களில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வென்றர். திமுகவிற்கு  33 கவுன்சிலர்களே கிடைத்தனர். இத்துடன் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களையும் அதிமுக அருதிப் பெரும்பான்மையுடன் வென்றது. இதனால் கரூர் மாவட்ட கவுன்சிலை மட்டும் அல்லாமல் அனைத்து ஒன்றியங்களையும் திமுக இழந்தது.

இதற்கு காரணம், இங்கே திமுக என்ற இயக்கம் செந்தில் பாலாஜி என்ற ஒற்றை மனிதரின் முழு ஆளுமைக்குள் சென்று அதன் ஜனநாயக மூச்சு காற்றை இழந்துவிட்டது தான்! செந்தில் பாலாஜியால் நிறுத்தப்பட்டவர்களில் கணிசமானவர்கள் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்களே!

இந்த அனுபவத்திற்குப் பிறகும் செந்தில் பாலாஜியிடம் தான் கரூர் மட்டுமின்றி கோவை மாநகராட்சி தேர்தல் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கோவை திமுகவும் தற்போது குமுறிக் கொண்டுள்ளது. கோவை முழுவதிலுமுள்ள பூத் கமிட்டிக்கான பொறுப்பை அமைச்சர் கரூர் பைனான்ஸியரிடம் ஒப்படைத்துவிட்டாராம்! கோவை திமுகவிற்குள் ஏற்பட்டுள்ள குமுறல் அதிமுக வெற்றிக்கு ஒரளவு உதவலாம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்!

கரூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் அனைத்து கட்சிகளுக்குமாக வெறும் ஏழு இடங்கள் மட்டுமே தர முடியும் என்றார் செந்தில்பாலாஜி. இதில் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரசுக்கு ஐந்தாறு இடங்களையாவது உறுதி செய்ய முயன்ற காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி அவமானப்படுத்தப்பட்டு வெளியேறியது அனைவரும் அறிந்ததே! அதன் பிறகு செந்தில் பாலாஜி கொடுத்த மூன்று இடங்களை காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. அதிலும் தான் சொல்லும் வேட்பாளர்களை போட்டால் மட்டுமே வெற்றிக்கு உத்திரவாதம் என செந்தில் பாலாஜி சொல்ல, காங்கிரஸ் கடுப்பாகிவிட்டது.

மேற்படி விவகாரங்களை கேள்விப்பட்டு மதிமுகவும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தங்களுக்கான தலா ஒரு தொகுதியையும் திமுகவிடமே திருப்பி தந்துவிட்டனர்! காரணம், ’’எங்க கட்சிக்குள்ள யாரை நிறுத்துவது என்பதை செந்தில் பாலாஜி தான் தீர்மானிப்பார் என்றால், அப்படிப்பட்ட ஒருவரை வெற்றி பெற வைத்து செந்தில் பாலாஜிக்கு தாரை வார்க்க நாங்கள் தயாரில்லை’’ எனக் கூறிவிட்டார்களாம்!

விடுதலை சிறுத்தை ஓரிடம் வாங்கி நிற்கிறது. அதன் வேட்பாளர் வழக்கறிஞர் ஜெயராம் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்! அவருக்கு திமுக தரப்பில் எந்த ஒத்துழைப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு போட்டி வேட்பாளரையும் நிறுத்தி இருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனாலும், சிறுத்தைகள் துணிந்தும், தனித்தும் களம் கண்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு வார்டு ஒதுக்கீடு செய்வதோடு நிறுத்தி கொள்ளாமல், அதில், யார் போட்டியிட வேண்டும் என்று மாவட்ட தி.மு.க.,  நிர்பந்தம் செய்ததால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனால், கரூரில் தி.மு.க., வி.சி.க., கூட்டணி உடைந்து விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டியிடுகிறது. இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்டம் முழுதும்  திமுகவிற்கு எதிராக வேலை செய்யும் நிலை உருவாகி உள்ளது.

அதே போல காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருக்கு எதிராகவும் போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளார் செ.பா.  காங்கிரஸ் கட்சியை வீழ்த்த, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 3 வார்டில் 2 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக  சுயேட்சை வேட்பாளரை நிறுத்தி அவர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

12வது வார்ட்டில் காங்கிரஸ் வேட்பாளர் கிருத்திகாவுக்கு எதிராக, அந்த கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி மனைவி மஞ்சுளா, 16வது வார்ட்டில் காங்கிரஸ் பெரியசாமி எதிராக, தி.மு.க., மாணவரணி தெற்கு நகர  துணை அமைப்பாளர் பூபதி, 41வது வார்ட்டில் மா.கம்யூ., தண்டபாணிக்கு எதிராக தி.மு.க. சேர்ந்த தங்கராஜ் ஆகியோர் சுயேச்சையாக களம் இறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவான பிரச்சாரம் வெளிப்படையாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தி.மு.க., ஆசியுடன்,  இந்த சுயேட்சை வேட்பாளர்கள் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வேலை செய்யாமல், மாவட்ட தி.மு.க. மறைமுக உத்தரவு பேரில், இந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு, திமுகவினர் பணி செய்து வருகின்றனர். சுயேச்சைகளில்  பணிமனைகள் தி.மு.க., கரைவேட்டிகள் அதிகம் காணப்படுகின்றனர்.

இந்தநிலையில், நேற்று மாலை,  16-வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெரியசாமி என்பவருக்கு ஆதரவாக  காங்கிரஸ் எம்பி ஜோதிமணி பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். அப்போது, அந்த வார்டில் உள்ள திமுகவினர் அனைவரும்  சுயேட்சையாக போட்டியிடும் பூபதி என்ற வேட்பாளர் தேர்தல் பணிமனையில் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டு கூட்டமாக இருந்தனர்.

இதனால், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள திமுகவினர் யாரும் வரவில்லை. இதனால், டென்சன் ஆன ஜோதிமணி வேற வழியின்றி 4 மினிடோர் வாகனத்தில் ஆட்களை வரவழைத்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வீடுவீடாக    வாக்கு சேகரித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவருக்கு குழிபறிக்க வேண்டும் என முடிவு எடுத்துவிட்டால், அவர் ஒரே கட்சியில் இருந்தாலும் சரி, கூட்டணி கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி அவரை காலி பண்ணுவது செந்தில்பாலாஜிக்கு கைவந்த கலை!  கடந்த 2016- ல்  அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் இவர் போட்டியிட்ட போது, அங்கு வாக்கு சேகரித்து வெற்றி பெறுவதில் செலுத்திய அக்கறையை விட கரூர் தொகுதியில் அதிமுகவில்  போட்டியிட்ட எம்.ஆர். விஜயபாஸ்கரை தோற்கடிப்பதில் கவனமாக இருந்து உள்ளடி வேலை செய்தவர் என்பது அனைவருக்குமே தெரியும்!

செந்தில் பாலாஜி மீது கோபத்தில் உள்ள அதிமுகவினர் கோவையிலும், கரூரிலும் ஒன்றுப்பட்டு களம் கண்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியே கரூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேரடியாக வந்து பேசிவிட்டு சென்றுள்ளார்.

இதேபோல தஞ்சை, சேலம், தருமபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கூட்டணி கட்சிக்கு எதிராக உள்ளடி வேலை நடந்ததைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் 56 பேர்களை தற்காலிகமாக பொறுப்பில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன். ஆனால், ”கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வளவு உள்ளடி வேலைகள் செய்தும் திமுக தலைமை ஏன் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது” என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது. சமீபத்தில் கரூர் வந்த உதயநிதியும் இந்த சூழல் எதுவும் தெரியாமல் பிரச்சாரம் செய்துவிட்டு போனார்.

இத்தனைக்கு இடையிலும் ராஜேஷ் கண்ணா போன்ற சமூக ஆர்வலர்களும், தங்கள் சேவைக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனித்து களம் கண்டுள்ளனர். ”பணம்,படோபத்தை கடந்து சிறந்த சேவைக்கான வேட்பாளர் குறித்த தேடல் உள்ளவர்களும் கணிசமாகவே உள்ளனர்’’ என்கிறார் ராஜேஷ் கண்ணன்.

செந்தில் பாலாஜியின் நடவடிக்கைகளால் உள்ளூர் திமுகவினரே கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர் என்னவோ பண்ணை முதலாளி போலவும் மற்றவர்கள் எல்லாம் தனக்கு சேவகம் செய்ய வந்தவர்களாகவும் பார்க்கிறார்! பழைய திமுகவினர் எல்லாம் வெறுத்து ஒதுங்கியுள்ளனர். செந்தில் பாலாஜி கட்சியை ஒரு கம்பெனி போலவே நடத்துகிறார். வேலைக்கு ஆள் எடுப்பது போல கவுன்சிலர் பதவிக்கு ஆள் எடுத்துள்ளார்! வெற்றி பெறுவதற்கு அவர் சில பார்முலாக்களை வைத்துள்ளார். சென்ற முறை வெள்ளிக் கொலுசை பரிசளித்தார். அந்த கொலுசு மூன்றே மாதத்தில் கறுத்துவிட்டதாம். ஆகவே இந்த முறை அவர் எந்த பொருள் கொடுத்தாலும் மக்கள் சந்தேகப்படும் நிலையில் தான் உள்ளனர். அதனால், செ.பா. பணத்தை அள்ளி இறைத்து வெற்றிக் கனியை பறிக்கலாம் என நினைக்கிறார். அவர் நினைப்பது பலிக்குமா தெரியவில்லை. ஆனால், கட்சி கட்டமைப்பையே காலி செய்துவிட்டார் என்பது நன்கு தெரிகிறது.

கட்டுரையாளர்; அஜிதகேச கம்பளன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time