ஒரே நாடு, ஒரே தேர்தல்! பேரழிவுப் பாதையில் பாஜக!

-சாவித்திரி கண்ணன்

நீண்ட, நெடிய போராட்டங்களுக்கு பிறகு, 250 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தினோம்! அதன் பிறகு காந்திய சீடர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியா, தற்போது கார்ப்பரேட் ஆதரவு அரசியல்வாதிகளால் மீண்டும் அடிமை அரசியலை நோக்கி சென்று கொண்டுள்ளது! அதற்கு தோதாக நசுக்கப்படுவதே மாநில உரிமைகள்!

மாநிலங்களின் வரிவசூலிக்கும் உரிமைகளில் தலையிட்டு ஜி.எஸ்.டி எனக் கொண்டு வந்தார்கள்! மாநில வருவாயை அபகரித்துக் கொண்டு நம்மை மத்திய ஆட்சியாளர்களிடம் கையேந்த வைக்கிறார்கள்!

மாநிலங்களின் வசமிருந்த கல்வி அதிகாரத்தை மத்திய அரசு கபளீகரம் செய்யும் முயற்சியே புதியகல்விக் கொள்கையும், நீட் தேர்வு திணிப்பும்! புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு இரண்டின் சாரம்சமும் ஒன்றுதான்! கல்விக் கொள்கையை, அதன் தேர்வு முறைமையை அவற்றின் வர்த்தக முதலாளிகளுக்கு சாதகமாக வளைப்பது ஒன்று தான்!

வன வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து வர்த்தகமயமாக்குவதற்கான சட்ட விதிகளை உருவாக்கியதோடு, இந்திய வனச் சட்ட வரைவு,  இந்தியாவின் 7,08,273 சதுர கிமீ வனப் பகுதிகள் மீதான வன இலாகாவின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து அடக்குமுறை ராஜ்ஜியத்தை அறிமுகப்படுத்துகிறது!

குடியுரிமை திருத்த மசோதா ஏன்  கொண்டு வந்தார்கள்..? ‘இஸ்லாமியர் இல்லாத இந்தியா’ என்ற திட்டத்தின் ஆரம்பமே அது!

இப்படியாக இருக்கும் சட்டங்களை எல்லாம் ஒவ்வொன்றாக திருத்தி, நாளுக்கு நாள் நாட்டில் பதட்டம், குழப்பம், கொந்தளிப்பை உருவாக்கி குளிர் காய்வதே இவர்கள் வேலை!

மேலும், மத்திய அரசு உருவாக்கியுள்ள சட்ட விதிகளுடன் மாநிலங்களின் விதிகள் முரண்பட்டால், மத்திய அரசின் விதிகளே செல்லுபடியாகுமாம். அரசமைப்புச்சட்டத்தின்படியான மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த இறையாண்மைக் கொள்கைகளுக்கு எதிரானது இது. அத்துடன்,  “கிராம வனங்கள்” என்ற அமைப்பை முன்மொழிந்திருப்பது அதிகாரப் பரவலாக்க கொள்கைகளை அப்பட்டமாக மீறுவதாகும். ஆகவே, இது மாநிலங்களுக்கும், குடிமக்களுக்கும் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கொள்கைகளை பலவீனப்படுத்துகிறது.

மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசியல் கட்சிகள் பல்லாண்டுகள் உழைக்கின்றன. பாடுபடுகின்றன. அதன் அடிப்படையில் தேர்தலில் நின்று போராடி ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாமல் கவர்னர் என்ற பெயரில் நம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு தனி நபர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கத்தை ஆட்டி வைப்பார் என்றால், இது எப்படி ஜன நாயகமாகும்? கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைத்து நம் தலையின் மீது ஏறி உட்காருவதாக அல்லவா உள்ளது?

மேற்கு வங்காளத்தில் ஒரு கவர்னர் மக்களால் செல்லும் இடமெல்லாம் விரட்டி அடிக்கப்படுகிறார். அத்தனைக்கு பிறகும், முகத்தில் வீசப்பட்ட சாணியை துடைத்துக் கொண்டு அவ்வப்போது தன் அதிகார கரத்தை நீட்டி முழக்குகிறார்!

டெல்லியில் ஒரு கவர்னர் அரவிந்த் கேஜ்ரிவாலை அணுவணுவாக துன்புறுத்தினார்! அதனால், அவர் மீது மக்களுக்கு அனுதாபமே ஏற்பட்டது! அவரது ஆட்சியின் அதிகாரங்களை எல்லாம் ஆனவரை குறைத்து பார்த்தார்கள்! ஆனாலும் மக்கள் அரவிந்த் கேஜ்ரிவாலையே விரும்பினர்.

புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடி என்றொரு கவர்னர் பாஜக உறுப்பினர்களை நியமன எம்.எல்.ஏக்களாக்கி, மாநில அரசு திட்டங்களுக்கு எல்லாம் சதாசர்வ காலமும் முட்டுகட்டை போட்டு இம்சை செய்தார்! திடீரென்று அவர் தூக்கப்பட்டார்.

நாகலாந்தில் ஒரு கவர்னர் மக்களுக்கு எதிராக நாசகார நரித்தன செயல்களில் ஈடுபட்டதால், அங்குள்ள அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகி விரட்டப்பட்ட போது, அந்த மனிதரை தமிழகத்திற்கு கவர்னராக்கிவிட்டார்கள்! அந்த நபரோ தமிழகம் வந்தும் திருந்தாமல், டெல்லி எஜமானர்களின் ஏவலுக்கு சேவகம் செய்து தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

ரயில்வே திட்டங்களில் பாரபட்சம். வட இந்தியாவிற்கு மலையளவு நிதி ஒதுக்கப்பட்டால், தென் இந்தியாவிற்கோ – குறிப்பாக தமிழகத்திற்கோ மடுவளவு நிதி என்றால், ‘இவர்கள் ஆட்சி செய்கிறார்களா? அல்லது நம்மை சுரண்டி கொழுக்கிறார்களா?’ என்றல்லவா கேள்வி எழுகிறது.

வெள்ள நிவாரண உதவி என்றாலும் சரி, வறட்சி நிவாரண நிதி என்றாலும் சரி, அதென்ன பிச்சை போடுவது போன்ற மனநிலையை அல்லவா காட்டுகிறார்கள்.

பிரதமர் என்றால் பிரியத்திற்கு உரியவர் என தமிழகம் கருதிய காலம் ஒன்று இருந்தது. ஜவகர்லால் நேரு, மொரார்ஜி தேசாய், ராஜிவ்காந்தி, வி.பி.சிங், வாஜ்பாய், மன்மோகன் சிங் என பலரும் தமிழகத்திற்கு வந்து சென்ற  போது வராத கொதி நிலை ஏன் மோடி இங்கு வந்தால் நிலவுகிறது? ஏழாண்டுகளுக்கு மேலாகியும் இந்த கோப உணர்வும், கொந்தளிப்பும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

காரணம் நாளுக்கு நாள் மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரதேச வரையறைகளின் பெயரால் மக்களை பிரித்தாளும் ஒரு இயக்கத்தின் கருவியாக பிரதமர் செயல்படுகிறார். அல்லது அந்த இயக்கத்தால் ஆட்டுவிக்கப்படுகிறார் என்பது தான் மக்களின் கோபத்திற்கு காரணமாகும்!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், மோடி

எமர்ஜென்ஸி கொடுமைகளை எதிர்த்து காந்தியவாதி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் உருவாக்கப்பட்ட ஜனதா கட்சிக்குள் ஐக்கியமான ஜனசங்கம் என்ற கட்சியின் வழியாக ஆட்சியாளர்களை அன்று ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆட்டுவிக்க முயன்ற போது,  ‘ஆட்சி அதிகாரத்திற்கு வரும் ஜனசங்கத்தினர் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் பொறுப்பையும், உறவையும் முற்றாக துறக்க வேண்டும்’ என்ற கிளர்ச்சி காரணமாக ஜனதா கட்சியையே அவர்கள் பிளந்து கவிழச் செய்தனர்.

இன்றைக்கு மோடியை, ”ஒரே நாடு, ஒரே தேர்தல்” எனப் பேச வைக்கின்றனர்! அடுத்து, ‘ஒரே மதம்’ என்பார்கள்! கூடவே, ‘ஒரே பேரழிவு’ என்று சேர்த்தே பேசியிருக்கலாமே! இது தானே உங்கள் எண்ணம்!

இத்தகைய ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கத்தை தேசத் தந்தை படுகொலைக்கு பிறகு முற்றாக தடை செய்யாமல் விட்டதன் விளைவைத் தான் இன்று நாடு அனுபவிக்கிறது. இந்திய ஒற்றுமைக்கு கேடான அந்த இயக்கத்தின் சீடரான மோடி, ”மாநில உரிமைகளை மதிக்க வேண்டும்” எனப் பேசிய ராகுல் காந்தியை, ”பிரிவினைவாதி”  என்கிறார் என்றால், அவர் மனம் நிறைய என்ன உள்ளதோ, அதைத் தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார் என நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time