‘ஹிஜாப்’ முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா?

-சாவித்திரி கண்ணன்

‘பாஜகவிடம் ஆட்சியைக் கொடுத்தால் என்னவாகும்’ என்பதற்கு கர்நாடகமே கண்கண்ட சாட்சியாகிறது! அமைதியான கல்வி நிலையங்கள் அல்லோலகலப் படுகின்றன! ‘ஹிஜாப்’ என்பது முஸ்லீம் பெண்களின் அடிப்படை உரிமையா? அல்லது அடிமைப்படுத்தும் உடையா? என்ற வாதங்களும் வலுப்பெற்றுள்ளன!

இது நாள் வரை இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்து வருவது சாதாரண நிகழ்வாக இருந்த கல்லூரி, பள்ளிகளில் எல்லாம் இன்றைக்கு அப்படி அணிந்து வந்த மாணவிகள் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர்! இதனால்,சில மாணவிகள் இன்று தேர்வு எழுத அனுமதி இல்லாமல் திருப்பி அனுப்பபட்டு உள்ளனர். இந்த நிகழ்வுகள் மாநில அரசின் மனநிலை மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வதே நிர்வாக ரீதியாக தங்களுக்கு பிரச்சினை வராமல் தவிர்க்கும் வழி என தனியார் பள்ளிகளும்,கல்லூரிகளும் சிந்திக்க ஆரம்பித்துள்ளதையே காட்டுகிறது!

திடீரென்று இஸ்லாமிய பெண்களின் உடைகள் மீது நிர்பந்தங்களை உருவாக்கி இருப்பது ஏன்? அந்த சமூகத்தில் கடந்த ஒரிரு தலைமுறைகளாகத் தான் பெண்கள் கல்விக் கூடத்திற்கே வர ஆரம்பித்துள்ளனர். அந்த வாய்ப்புக்கு இந்த உடையணிவது உதவியுள்ளது என்ற ரீதியில் பெண் கல்வியை ஆதரிக்கும் நாம் பாசிடிவ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது. கால வெள்ளத்தில் நாகரீக வளர்ச்சியில் இந்த உடையை அவர்களாகவே கைவிடும் சூழல் உருவாகலாம். நன்றாக படித்து தேறிய பெண்ணுக்கு ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் போது அப்போது அவராகவே அதை கைவிட்டுவிடுவார்.

இன்றைக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர்கள் வைத்த சில வாதங்கள் கவனத்திற்கு உரியன;

# இந்த உடை அணிந்து செல்வதால் பொது நலன் எதுவும் பாதிக்கப்படுகிறதா? என்றால் இல்லை.

# மற்றவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒருவர் உடையணிய நிர்பந்திக்கபடுவதா?

# மத்திய அரசின் கேந்திரிய வித்தியாலயா உள்ளிட்ட பள்ளிகளில் இதற்கான அனுமதி தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

# கல்விச் சூழலில் விரும்பத்தகாத, அமைதியற்ற சூழல் வலிந்து உருவாக்கப்படுவது ஏன்?

எனக் கேட்கப்பட்டு உள்ளது. இவை கனத்திற்குரிய கேள்விகள்!

அதே சமயம் ஹிஜாப் அணிவதை தடுப்பது அடிப்படை உரிமையை தடை செய்வதாகாது என்ற விவாதம் எழுந்துள்ளது. நம்மை பொறுத்த வரை கண்ணியமாக உடை அணிவது என்பது ஒருவரின் அடிப்படை உரிமையே! அதை மறுப்பது அநாகரீகம், அராஜகம் என்பதில் மாற்று கருத்து இல்லை. சென்ற நூற்றாண்டில் திருவனந்தபுரம் ராஜா ஆட்சியில் குமரி மாவட்ட பெண்கள் தோள் சேலை அணிவது, அதாவது மார்பகத்தை மூடுவது சட்டம் போட்டு தடுக்கப்பட்டதும், அப்போது காவலர்கள் மார்பகத்தை உடையால் மூடி வரும் பெண்கள் உடையை அகற்றிய அராஜகம் நடந்தேறியதும் நினைவுக்கு வருகிறது. அது தான் தற்போது வேறு வடிவில் நடக்கிறது. ஹிஜாப் அணிந்த பெண்களை இந்து இளைஞர்கள் சூழ்ந்து வம்பளப்பதும், தண்ணீர்வாறி இறைப்பதும், எதிர்ப்பாக கோஷமிடுவதும் பார்க்கும் பொது நெஞ்சம் பதறுகிறது.

இது தான் பாஜக விரும்பிய பாரத கலாச்சாரமா? இவை நிச்சயமாக தண்டனைக்கு உரிய குற்றங்களே. இப்படி செய்தவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என கர்நாடக காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். ஹிஜாப் அணிந்து பெண்கள் சாலையில் சுதந்திரமாக நடக்க முடியவில்லை என்றால், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய அரசும், காவல்துறையும் கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இதே போலத்தான் டெல்லி ஷாகீன்பாக்கில் போராடிய இஸ்லாமிய சகோதரிகள் மீது இந்து வெறியாளர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்லாமிய பெண்களின் புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு ஏலம் அறிவித்த அநாகரீக செயலை செய்தனர். நாகரீக சமுதாயம் வெட்கி தலைகுனியக் கூடிய இவை எவற்றையும் பாஜக ஆதரவாளர்களே கூட ஏற்கமாட்டார்கள்! அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருப்பார்கள் தானே!

மேற்படி விவகாரத்தில் ஹிஜாப் அணிவதை அராஜகமாக தடுப்பதை நாம் கடுமையாக எதிர்க்கும் அதே  நேரத்தில் ஹிஜாப் அணிவதை வரவேற்கிறோம் என பொருள் கொள்ளக் கூடாது. நம்மை பொறுத்த வரை  பாரதியார் கூறிய, நிமிர்ந்த நன்நடை, நேர் கொண்ட பார்வையோடு எல்லா பெண்களும் இந்த சமூகத்தில் வளைய வரும் சூழல் உருவாக வேண்டும் என்றே உளமாற விரும்புகிறோம். அப்போது தான் அவர்கள் பார்வையும், அறிவும் விசாலப்படும். குடியுரிமை மசோதாவை எதிர்ப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகளில் வீதிக்கு வந்து போராடிய வீரப் பெண்கள் இஸ்லாத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் போது காலப் போக்கில் தாங்களாகவே ஹிஜாப்பை களைய நேரிடலாம். ஆனால், அது மற்றவர்களின் கட்டளையால் நிகழக் கூடாது!

இஸ்லாத்தில் உள்ள ஆண்களும் பெண்கள் விஷயத்தில் தங்கள் பத்தாம்பசலித்தனமான பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும். எல்லா ஆடை நிர்பந்தங்களும் ஆண்களை மையப்படுத்தி நிர்பந்திக்கபடுவதில்லை. அவை பெண்களை மட்டுமே நிர்பந்திக்கும். கோவில்களிலும், சர்ச்களிலும் உள்ளது போல மசூதிகளில், தர்காக்களில் பெண்கள் நடமாட்டத்தை அனுமதிக்க வேண்டும். பொது வெளியில் நடக்கும் மெகா தொழுகை நிகழ்வுகளில் அவர்கள் பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவை வெகு சில இடங்களில் மட்டுமே தற்போது சாத்தியப்பட்டு உள்ளது.

 

பொதுவாக ஆன்மீக வெளியில் பெண்களுக்கான இடத்தை எல்லா மதங்களும் எளிதில் தந்துவிடுவதில்லை. ஆனால், இந்த நூற்றாண்டில் ஆன்மீக வெளியில் பெண்களுக்கு உள்ள இடத்தை வழங்குவதில் ஒருவித நெகிழ்வுத் தன்மையை எல்லா மதங்களுமே செய்யத் தொடங்கிவிட்டன. அது இஸ்லாத்திலும் நிகழ்வதை காலம் தீர்மானிக்கட்டும்!

அதுவரை கண்ணியத்துடன் பொது வெளியில் இஸ்லாமிய பெண்கள் நடமாடுவதற்கு எந்த குந்தகமும் விளைவிக்க அனுமதிக்க கூடாது. அப்படி செய்ய நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினால் மட்டுமே சமூகம் அதன் இயல்புத் தன்மையுடன் இயங்கும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணை இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time